புதன், 13 ஜனவரி, 2021

திருப்பாவை - 30 - கோமான் ஶ்ரீ பாலாஜி

முப்பதாவது பாசுரம்

(இப்பாசுரம் திருப்பாவையின் இறுதிப் பாசுரம். இத்திருப்பாவையை கற்பாருக்கும் கேட்பாருக்கும் ஏன் எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய பலனை சொல்லும் பாசுரம். சென்ற பாசுரத்தில் பறை என்பதன் அர்த்தத்தை சொன்ன ஆண்டாள், அப்பறையை அடைவதன் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய பாக்யத்தை பலனை இப்பாசுரத்தில் சொல்கிறாள்.)


கண்ணன் ஆண்டாளை மிக மகிழ்ச்சியுடன் பார்த்து இவ்வாறு கேட்க ஆரம்பிக்கிறான்.


“ஆண்டாள், வெகு பிரமாதம் இப்பாவை நோன்பு. என்னிடம் ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ என்கிறாய். நான் காமங்களுக்கு அப்பாற்ப்பட்டவன் தானே. எதற்கு ‘நம்’ என்று என்னையும் சேர்த்தாய்.”


“ஐயனே, காமம் என்பது வெறும் ஆசையைத் தூண்டி சிற்றின்பத்தை அடைவது மட்டுமல்ல. ஒரு தாய்க்கு தன் குழந்தையின் மேல் வருவது அக்கறை காமம். ஒரு செல்வந்தனுக்கு பணத்தின் மேல் வருவது பேராசை காமம். ஒரு கட்டிளம் காளைக்கு வீரத்தின் மேல் காமம். ஒரு மன்னனுக்கு நாட்டு மக்கள் மேல் கொண்ட பாதுகாப்பு காமம். இப்படி எண்ணற்ற காமங்கள் உண்டு கண்ணா. உனக்கு மட்டும் இல்லையா என்ன, எங்களைப்போன்ற பக்தர்களை பாதுகாத்து அவனுக்கு மோட்சத்தை அளிக்க வேண்டுமே என்ற ‘பரிவு’ ஒரு காமம்தானே கண்ணா. அதனால் தான் நம் காமங்கள் என்றேன். தவறா கண்ணா, மாதவா.


“ஆண்டாள் உன்னை ‘சொல்லின் செல்வி’ என்றே அழைக்கலாம். சரி உன்னிடம் ஒரு கேள்வி என்னுடைய மற்ற எல்லா அவதாரங்களையும் பாடியுள்ளாய், ஆனால் கூர்ம அவதாரம் பாடினாயோ.”


“கண்ணா, அடுத்தப் பாசுத்திற்கு நீயே எடுத்துக் கொடுத்துவிட்டாய். ‘வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை’...


ஆண்டாளின் தோழிக்கு மறுபடியும் சந்தேகம் வந்துவிட்டது.


“கோதே, நம் மாதவன் கடல் கடைந்தாரா, தேவாசுரர்கள் தானே கடைந்தார்கள் அமிர்தத்திற்காக.”


“ஆம் பாவாய், நம் நாரணன் கடல் கடைந்தார். அதுவும் யாருக்காக, நமக்கு சிபாரிசு செய்வதற்குத் பிராட்டியார் வேண்டுமே, அதற்காக மந்தர மலையை முதுகில் தாங்கி வாசுகியை கயிறாக்கி பாற்கடலை கடைந்தார்கள் தேவாசுரர்கள். நம் பகவான் ஆமை வடிவில் மலைக்கு முட்டுக் கொடுத்து கடலைக் கடைய உதவி செய்தார். அதில் தோன்றியவள் தானே மகாலட்சுமி தாயார். அவரை ‘அகலகில்லேன் இறையுமென்று' தன் திருமார்பிலே பொருத்திக்கொண்டார் நம் நாரணன். திருமழிசையாழ்வாரும் ‘ஆமையான கேசவா’ என்று அருளியுள்ளார். அதனால் இறுதியாக கேசவத் திருநாமம். ‘திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி’ இங்கு நம்மைத் தான் குறிக்கிறேன், நாம் அனைவரும் நீராடி, அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து, சந்திரனைப் போன்று குளிர்ச்சியாக இருக்கும் நம் கண்ணனைக் காண அவரிடமே வந்தோமல்லவா, அப்படி வந்ததால் நமக்கு என்ன கிடைத்தது ‘பறை’ எனும் பகவத் சம்பந்தம். ஒரு நிமிடம், கண்ணா நீ கோபித்துக் கொள்ளக் கூடாது.”


“என்னாயிற்று ஆண்டாள். எனக்கு ஏன் கோபம் வரப்போகிறது அதுவும் உங்களிடம்.”


“கண்ணா, நாங்கள் உன்னை சந்திக்க வருமுன் ‘சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்’ என்று பாடிக் கொண்டே வந்தோம். உண்மையில் நான் தெற்கே திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவள். என் தந்தை பட்டர்பிரான் விஷ்ணுசித்தர்.”


“ஆகா எனக்கு பல்லாண்டுப் பாடிய பெரியாழ்வாரின் மகளா, அதனால் தான் அவரைப் போன்று நீயும் பல்லாண்டு பாடினாயோ.”


“ஆம் கண்ணா, நான் இதுகாறும் பாடிய ‘சங்கத் தமிழ்மாலை முப்பதும்’ தப்பாகவே ஆகாது. அழகிய ரத்தினங்களால் செய்யப்பட்ட ஒரு மணியினில் ஒரு ரத்தினம் குறைந்தாலும் அதன் அழகு கெட்டுவிடும். அதேபோன்று என் பாசுரங்களில் ஒன்று பிழையென்றாலும் அது பேரழிவாய் கொள்ளப் படும். இவ்வாய்ப்பாடியில் உள்ள அனைவரும் உன் அருகாமையால் பயனுற்றார்கள். அதேபோன்று இப்பூமியில் உள்ள அனைவரும் உன் கருணை கடாட்சத்தால் நற்பேறு பெறவேண்டும். இதனை படிப்பவர்களுக்கு, உயர்ந்த தோள்களையுடையவனும், அழகிய திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியான திருமகளை தன் மார்பில் வைத்திருப்பவனுமாகிய ஶ்ரீமந் நாராயணனான உன் திருவருள் பெற்று எங்கும் இன்புற வேண்டும். 


ஆண்டாள், என்னை ஆண்டவளே அப்படியே செய்கிறேன். “எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.”


வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக