ஶ்ரீமத் பாகவதம் - 255

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்தொன்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன், அக்ரூரனால்  கம்சனுடைய அபிப்பிராயம் அறிந்து மதுரைக்குப் புறப்படுவதைக் கண்டு கோபிகைகள் வருந்துவதும், நடுவழியில் யமுனையில் ஸ்னானம் செய்கின்ற அக்ரூரனுக்கு ஸ்ரீக்ருஷ்ணன் தன் திவ்யமங்கல விக்ரஹத்தைக் காட்டுதலும்) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அக்ரூரன், ராம க்ருஷ்ணர்களால் மிகவும் வெகுமதிக்கப்பட்டு, படுக்கையில் ஸுகமாக உட்கார்ந்து, வழியில் தான் விரும்பின விருப்பங்களையெல்லாம் பெற்றான். ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமாயிருப்பவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன், அருள் புரிவானாயின் எதுதான் கிடைக்க அரிது? எதுவும் அரிதன்று. மன்னவனே! ஆயினும், அவனுடைய பக்தர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள். அப்பொழுது, மஹானுபாவனாகிய தேவகியின் புதல்வன், ஸாயங்கால போஜனம் செய்து, தன் அன்பர்களான வஸுதேவாதிகளிடத்தில் கம்ஸன் இருக்கும் நிலையையும், அவன் செய்ய நினைத்திருப்பதையும் வினவினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அப்பா! நல்லியற்கையுடையவரே! வந்தீரா? உமக்கு நல்வரவாகுக! உங்களுக்கு க்ஷேமம் உண்டாகுக. நம்முடைய ஜ்ஞாதிகளும் (பங்காளிகளும்), பந்துக்களும் ஒரு கெடுதியுமின்றி ஆரோக்யத்துடன் க்ஷேமமாயிருக்கின்றார்களா? மாமனென்னும் பெயர்பூண்டு, நம் குலத்திற்கு வியாதி போன்ற கம்ஸன் வளர்ந்து கொண்டிருக்கையில், நம் பந்துக்களுக்கும், அவர்களுடைய ப்ரஜைகளுக்கும் என்னவென்று க்ஷேமம் விசாரிப்பேன்? க்ஷேமமாவென்று நான் கேட்பதும் கூட அழகன்று. பூஜிக்கத்தக்கவர்களும், நிரபராதிகளுமாகிய தாய், தந்தைகளுக்கு எங்கள் நிமித்தமாக பெருந்துக்கம் உண்டாயிற்று. எங்களைப் பற்றியல்லவோ எங்களுக்கு முன் தோன்றல்களான பிள்ளைகள் அனைவரும் மரணம் அடைந்தார்கள்? எங்களை பற்றியல்லவோ அவர்கள் சிறையில் அடைப்புண்டார்கள்? அது கிடக்கட்டும். நல்லியற்கையுடையவரே! எங்களுக்கு மிகுந்த பந்துவாகிய உம்மைப் பார்க்கவேண்டுமென்று நெடுங்காலமாய் விரும்பிக் கொண்டிருந்தேன். அது இப்பொழுது நேரிட்டது. இது எங்களுக்கு மிகவும் ஆனந்தத்திற்கு இடமாயிருக்கின்றது. அண்ணா! நீர் வந்த காரணத்தைச் சொல்லுவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பகவானால் வினவப்பெற்ற மது வம்ச அலங்காரனாகிய அவ்வக்ரூரன், கம்ஸன் யாதவர்களிடத்தில் வைரம் (பகைமை) மாறாமல் தொடர்ந்து வருவது, அவன் வஸுதேவனை வதிக்க வேண்டுமென்று முயன்றிருப்பது, முதலிய எல்லாவற்றையும் விஸ்தாரமாகச் (விவரமாகச்) சொன்னான். கம்ஸன் தனுர் யாகமென்னும் வ்யாஜத்தைச் (சாக்கைச்) சொல்லி அழைத்துக்கொண்டு வரச் சொன்னதையும், அவன் தன்னை எதற்காகத் தூதனுப்பினானோ அதையும், வஸுதேவனிடத்தினின்று ஸ்ரீக்ருஷ்ணன் பிறந்ததைப் பற்றி நாரதர் கம்ஸனுக்குச் சொன்ன விவரத்தையும் சொன்னான். சத்ரு (எதிரி) வீரர்களை அழிக்கும் திறமையுடைய ஸ்ரீக்ருஷ்ணன் பலராமன் இவ்விருவரும் அக்ரூரன் சொன்ன செய்தியைக் கேட்டுச் சிரித்து, தந்தையாகிய நந்தகோபனைக்  குறித்து ராஜாவான கம்ஸன் கட்டளையிட்டதையெல்லாம் விண்ணப்பம் செய்தார்கள். அந்த நந்தகோபனும், கோகுலத்திலுள்ள கோபர்களுக்கெல்லாம் மேல்வருமாறு ஆஜ்ஞாபித்தான் (கட்டளை இட்டான்). “பால், தயிர் முதலியவற்றையெல்லாம் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். மேலான வஸ்துக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். வண்டிகளில் எருதுகளைப் பூட்டி, ஸித்தப்படுத்துங்கள். நாளைய தினம் எல்லாரும் மதுரைக்குப் போகவேண்டும். ராஜனாகிய கம்ஸனுக்குப் பால், தயிர், நெய் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். அந்த மதுராபுரியில், தனுர் யாகம் நடக்கிறதாம்; அதையும் பார்க்கலாகும். நாட்டுப்புறத்து ஜனங்கள் பலரும் அவ்விடம் போகிறார்களாம் (அவர்களையும் பார்க்கலாம்). இவ்வாறு நந்தகோபன் தன் கோகுலத்தில் முழுவதும் ஸூதனைக் (காவல் அதிகாரியைக்) கொண்டு கோஷமிடுவித்தான்.” 

மன்னனே! அந்தக் கோகுலத்திலுள்ள கோபிகைகள், அப்பொழுது அக்ரூரன் ராம க்ருஷ்ணர்களை அழைத்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறானென்று கேள்விப்பட்டு, வருத்தமுற்றார்கள். சில கோபிகைகள், அந்த ஸமாசாரம் (செய்தி) கேட்டதனால் மனத்தில் தாபம் (வேதனை) உண்டாகப் பெற்று, அதனால் உஷ்ணமாய் வருகின்ற மூச்சுக்காற்றினால் முகத்தின் ஒளி மழுங்கப் பெற்றார்கள். சில கோபிகைகள், அரையில் தரித்திருந்த வெண் பட்டாடையும், கைவளைகளும் நழுவி, தலைச்சொருக்கும் அவிழ்ந்தலையப் பெற்றார்கள். வேறு சில கோபிகைகள், பகவானுடைய த்யானத்தினால், கண், காது முதலிய ஸமஸ்த இந்திரியங்களின் வ்யாபாரங்களும் (செயல்களும்) ஓயப்பெற்று, ஆத்ம ஸாக்ஷாத்காரம் (ஆத்மாவை நேராகப் பார்ப்பது) பெற்ற யோகிகள் போல, இவ்வுலகத்தையும் (தேஹத்தையும்) அறியாதிருந்தார்கள். வேறு சில கோபிகைகள்,  ப்ரேமத்தினால் உண்டான புன்னகையுடன் மொழியப் பட்டவைகளும், மனத்திற்கு இனியவைகளும், விசித்ரமான பதங்கள் அமைந்தவைகளுமான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய உரைகளை நினைத்து, மோஹித்தார்கள். வேறு சிலர், மேல்வரப்போகிற பிரிவை  நினைத்துப் பயந்து, தழ தழப்புற்று, முகுந்தனுடைய நடையழகையும், ராஸக்ரீடை முதலிய விளையாடலையும், ஸ்னேஹம் நிறைந்த புன்னகை அமைந்த கண்ணோக்கத்தையும், சோகத்தைப் போக்க வல்லவைகளான பூதனாவதம், சகடாஸுரவதம் முதலிய செயல்களையும், படுத்தல், கிடத்தல், புசித்தல் முதலிய கம்பீரமான சரித்ரங்களையும் நினைத்து, அவ்வச்சுதனிடத்தில் மனம் குடிகொண்டு, முகத்தில் கண்ணீர் நிரம்பப்பெற்று, ஆங்காங்குக் குவியல் குவியலாகச் சேர்ந்து இவ்வாறு மொழிந்தார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- ஓ தெய்வமே! உனக்கு எங்கும் தயை கிடையாது. ஆ! இதென்ன வருத்தம்! நீ ஹிதம் (நன்மை) செய்யும் தன்மையோடும், விச்வாஸத்தோடும், ப்ராணிகளை ஒன்று சேர்த்து, ப்ரயோஜனம் கைகூடாதிருக்கும் பொழுதே, அவர்களைப் பிரித்து விடுகின்றாய். குழந்தைகளின் நடத்தை போல உன் செயலெல்லாம் பயனற்றதே. (உன்னைப்போன்ற மூர்க்கன் ஒருவனும் இருக்கமாட்டான்). கறுத்த முன்னெற்றி மயிர்களால் மறைக்கப்பட்டிருப்பதும், அழகிய கபோலங்களும் (கன்னங்களும்), உயர்ந்த மூக்கும் சோகத்தைப் போக்கவல்ல புன்னகையும் அமைந்து அழகியதுமான முகுந்தனுடைய முகத்தை எங்களுக்குக் காட்டி, மீளவும் அதைக் கண்மறையக் கொண்டு போகின்றாயாகையால், உன் செயல் நன்றன்று. நீ எங்களுக்குக் கண்ணைக் கொடுத்து, மீளவும் அதை நீயே அக்ரூரனென்னும் பெயர் பூண்டு வந்து, அறியாதவன் போலப் பறித்துக்கொண்டு போகின்றாய். ஆகையால் நீ பெருங்கொடியன். (“தத்தாபஹாரஞ் செய்வதைக்காட்டிலும் மற்றொரு கொடுமை உண்டோ!”), (தத்தாபஹாரம் - கொடுத்த வஸ்துவைப் பறித்துக் கொள்ளல், தத்தம் - கொடுக்கப்பட்ட வஸ்து). 

நீ கொடுத்த கண்ணால் ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருமேனியில், திருமுகமண்டலம் முதலிய ஒவ்வோரிடத்திலும் உன்னுடைய ஸ்ருஷ்டி ஸாமர்த்யம் முழுவதையும் கண்டோம். (அப்படிப்பட்ட கண்ணனை நீ கொண்டு போகின்றாயாகையால், எங்கள் கண்ணையும் கொண்டு போனாற் போலவே). அவன் போன பின்பு, எங்கள் கண்கள் இருந்து என்ன ப்ரயோஜனம்? உன்னுடைய ஸ்ருஷ்டி ஸாமர்த்ய ரஹஸ்யத்தையெல்லாம் நாங்கள் அறிந்து கொண்டோமென்னும் பொறாமையால், ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரித்து, நீ எங்களைக் குருடிகளாகச் செய்கின்றாய். கோபிகளே! நந்தகுமாரன் க்ஷணகாலமும் கூட நிலை நில்லாத நட்புடையவன், நாம் வீடு, வாசல்களையும், பந்துக்களையும், பிள்ளை, பெண்களையும், கணவர்களையும் துறந்து நேரே தனக்குப் பணிவிடை செய்ய வந்து, தன்னுடைய புன்னகை முதலிய இனிய செயல்களால் மனம் பறியுண்டு, ஸ்வாதீனமற்று, தன் பாதமூலத்திலேயே விழுந்திருப்பினும், அவன் நம்மைக் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டான். 

அவன், புதியதில் ப்ரியமுடையவன். (புதியவர்களான பட்டணத்து மடந்தையர்கள், அவன் மனத்தை இழுக்கின்றார்கள்). ஆகையால், அவன் நம்மைத் துறந்து போய்விடுவான். ஆ! நமக்கு என்ன வருத்தம் நேரிட்டது! மதுராபுரியிலுள்ள மடந்தையர்களுக்கு, இவ்விரவு நல்ல பொழுதாக விடிந்தது. அவர்களுடைய மன விருப்பங்களெல்லாம் உண்மையாகப் பலித்தன. இது நிச்சயம். ஏனென்றால், அந்தப் பட்டணத்து மடந்தையர்கள், பட்டணத்தில் நுழைகின்ற ஸ்ரீக்ருஷ்ணனுடைய முகத்தைக் காணப் போகிறார்களல்லவா? 

கடைக் கண்ணோக்கத்தினால் வளர்ந்த புன்னகையாகிற மகரந்தம் பெருகப் பெற்றதாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய முகாரவிந்தத்தைக் (தாமரை முகத்தைக்) கண்களால் பானம் செய்வதைக்காட்டிலும் மேலான பயன் என்ன இருக்கிறது? ஆகையால், ஸ்ரீ க்ருஷ்ணனுடைய முகாரவிந்தத்தில் (தாமரை முகத்தில்) கடைக் கண்ணோக்கத்தினால் வளர்ந்து வருகின்ற புன்னகையாகிற மகரந்தத்தைப் பானம் செய்ய நேரப்பெற்ற பட்டணத்து மடந்தையர்களின் பாக்ய மஹிமையை என்னென்று வர்ணிக்க முடியும்? 

பெண்களே! ஸ்ரீக்ருஷ்ணன், தான் மன உறுதியுடையவனாயினும், அந்தப் பட்டணத்து மாதரசிகளின் தேன் மொழிகளால் மனம் பறியுண்டு, ஸ்வாதீனமற்று, திறமையற்ற சேரிப் பெண்களாகிய நம்மிடம் எவ்வாறு திரும்பி வருவான்? லஜ்ஜையும் (வெட்கமும்), புன்னகையும் அமைந்த அம்மடந்தையர்களின் விலாஸங்களால் (விளையாட்டுக்களால்) கட்டுண்டு, அவ்விடத்திலேயே சுழன்று கொண்டிருப்பானன்றி, திரும்பி வரவேமாட்டான். இப்பொழுது, அந்தப் பட்டணத்திலுள்ள தாசார்ஹர், போஜர், அந்தகர், வ்ருஷ்ணிகள், ஸாத்வதர் ஆகிய இவர்களின் கண்களுக்கு மஹோத்ஸவம் உண்டாகப் போகின்றது. மற்றும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனும் (கணவனும்), கல்யாண குணங்களுக்கு ஆதாரனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனை, வழியில் எவரெவர் பார்க்கப் போகிறார்களோ, அவர்களுடைய கண்களுக்கும், இப்பொழுது உத்ஸவம் நேரிடப் போகின்றது. இது நிச்சயம்.

இத்தகைய செயலுடையவனாகையால், மன இரக்கமில்லாத இவனுக்கு அக்ரூரனென்னும் பெயர் பொருந்தாது. மிகவும் கொடியனாகையால், க்ரூரனென்னும் பெயரே இவனுக்குத் தகும். இவ்வக்ரூரன், மிகவும் வருத்தமுற்றிருக்கின்ற நம்மை ஆச்வாஸப்படுத்தாமலே (ஆறுதல் கூடச் சொல்லாமலே) ப்ரீதிக் கிடமான, ப்ராணனைக்காட்டிலும் ப்ரியனான, ஸ்ரீக்ருஷ்ணனை நமக்கெட்டாத வெகு தூரத்திற்குக் கொண்டு போகப் பார்க்கிறானல்லவா? இதைக் காட்டிலும் வேறு கொடுஞ்செயல் என்ன வேண்டும்? 

இந்த ஸ்ரீக்ருஷ்ணனும், ஈரமில்லாத மதியுடையவனாகி, ரதம் ஏறுகின்றான். கொடிய மதமுடைய இந்தக் கோபர்களும், அவனை அனுஸரித்து, அவனை த்வரைப் (அவசரப்) படுத்துகிறார்கள். பெரியோர்களும் உபேக்ஷித்து (இதை பொருட்படுத்தாது) அவனை வேண்டாமென்று தடுக்காமல், வெறுமனே இருக்கின்றார்கள். தெய்வமும்கூட இப்பொழுது நமக்கு விபரீதமாக நடக்கின்றது. (தெய்வம் நமக்கு அனுகூலமாய் இருக்குமாயின், இவனுடைய ப்ரயாணம் விக்னங்களால் (இடையூறுகளால்) தடைபடும்; இப்பொழுதே திடீரென்று இடைச்சேரியில் ஏதேனும் ஒரு கெடுதி உண்டாகும். அதுவொன்றும் இல்லை. ஆகையால், தெய்வமும் நமக்கு ப்ரதி கூலமாயிருக்கின்றது). 

தோழிகளே! நாம் அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடம் சென்று, “நீ போகக்கூடாது” என்று தடுப்போம். சேரியில் பெரியோர்களாவது, பந்துக்களாவது, ஒரு நிமிஷமும் கூட விடமுடியாத ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸஹவாஸத்தினின்று (தொடர்பிலிருந்து), தெய்வத்தினால் பிரிக்கப்பட்ட மனமுடைய நமக்கு, என்ன செய்யமுடியும்? இத்தகைய நமக்கு, மரணத்தினின்றும் கூடப் பயமில்லை. மரணத்திற்கு மேற்பட ஒரு கெடுதியும் ஒருவரால் செய்ய முடியாது. ஆகையால், துணிந்த  நாம் ஸ்ரீக்ருஷ்ணனிடம் போய்த் தடுப்போம். 

இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ரேமம் நிறைந்த அழகிய புன்னகைகளும், இனிய உரைகளும், விலாஸங்கள் அமைந்த (அழகிய அசைவுகளுடன் கூடிய) கடைக்கண்ணோக்கமும், ஆலிங்கனங்களும் அளவற்றிருக்கப்பெற்ற ராஸ கோஷ்டியில் (குரவை கூத்தில்) நாம் பல ராத்ரிகளை ஒரு க்ஷணம் போலக் கடந்தோம். அப்படிப்பட்ட இந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரிந்து, நாம் பிரிவினாலுண்டான துக்கத்தை எவ்வாறு கடப்போம்? எவ்விதத்திலும் கடக்கமுடியாது. ஆகையால், நாம் அவனைப் போகவேண்டாமென்று தடுப்பதே நலம். மற்றும், இந்த ஸ்ரீக்ருஷ்ணன், பலராமனோடு கூடி மற்றும் பல கோபர்களாலும் சூழப்பட்டு, மாலை வேளையில் பசுக்களின் குளம்புகளால் கிளம்பின தூட்கள் படிந்த முன்னெற்றி மயிர்களுடையவனாகி, இடைச்சேரியில் நுழையும் பொழுது, வேணுகானம் (குழல் இசை) செய்து கொண்டு, புன்னகை அமைந்த கடைக் கண்ணோக்கத்தினால் நம் மனத்தைப் பறிப்பானல்லவா? அத்தகையனான இந்த ஸ்ரீக்ருஷ்ணனை பிரிந்து நாம் எவ்வாறு ஜீவித்திருக்கமுடியும்? ஆகையால், அவனைப் போகவேண்டாமென்று தடுப்பதே நலம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு மொழிந்து கொண்டு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் ஆழங்கால் பட்ட மனமுடையவர்களும், அவனுடைய பிரிவை நினைத்து வருந்துகின்றவர்களுமாகிய கோபிகைகள், வெட்கத்தைத் துறந்து, “கோவிந்த! தாமோதர! மாதவ!” என்று இனிய குரலுடன் உரக்க அழுதார்கள். கோபஸ்த்ரீகள் இவ்வாறு அழுது கொண்டிருக்கையில், ஸூர்யோதயம் ஆயிற்று. அப்பால், அக்ரூரன், ஸூர்ய உபஸ்தானம் முதலிய தினக்கடனை முடித்து, கோபர்களிடத்தில் ஸ்னேஹத்தை வெளியிட்டு, தேரை தட்டினான். பிறகு நந்தன் முதலிய கோபர்கள், தயிர், நெய், பால் முதலிய கோரஸங்கள் (பசுவிலிருந்து கிடைக்கும் இனிய பொருட்கள்) நிறைந்த குடங்களையும், அளவற்ற உபஹாரங்களையும் (பரிசுப் பொருட்களையும்) எடுத்துக்கொண்டு, அந்தத் தேரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். 

அப்பொழுது கோபிகைகள், ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்து, அவனால் ஆச்வாஸப்படுத்தப்பட்டு (ஆறுதல் சொல்லப்பட்டு), அவனுடைய மறுமொழியை எதிர்பார்த்து, அவ்விடத்திலேயே ஒன்று சேர்ந்திருந்தார்கள். யாதவ ச்ரேஷ்டனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தான் புறப்பட்டுப் போவதைப்பற்றி அவ்வாறு பரிதபிக்கின்ற அந்த கோபிகளைப் பார்த்து சீக்கிரம் வருகிறேனென்று தூதர் மூலமாய்ச் சொல்லியனுப்பின வசனங்களால் ஸமாதானப்படுத்தினான். 

அப்பொழுது, ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்து செல்லும் மனமுடைய அக்கோபிகைகள், எதுவரையில் ரதத்தின் த்வஜமும் (கொடியும்), தூளும் புலப்பட்டுக் கொண்டிருந்தனவோ, அதுவரையில் அதே இடத்தில் சித்ரத்தில் (ஓவியத்தில்) எழுதின ப்ரதிமைகள் (பொம்மைகள்) போல நின்றிருந்தார்கள். அப்பால், கோவிந்தன் வெகுதூரம் போகையால், அவன் ரதத்தினுடைய தூளுங்கூடக் கண்ணுக்குப் புலப்படாமல் மறைகையில், கோபிகைகள் இனி ஸ்ரீக்ருஷ்ணனை நம்மால் திருப்ப முடியாதென்று அவ்விஷயத்தில் ஆசையற்றவர்களாகி, மீண்டு போய் அன்பனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய சரித்ரங்களைப் பாடிக்கொண்டு, அதனால் சோகமற்றவர்களாகி, நாள்களைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். 

மன்னவனே! மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், பலராமனோடும், அக்ரூரனோடும் கூடி, வாயு வேகம் போன்ற வேகமுடைய ரதத்தில் ஏறிக்கொண்டு, பாபங்களைப் போக்கவல்ல யமுனையைச் சேர்ந்த புண்ய தீர்த்தமாகிய ஒரு நீர்நிலை அருகில் சென்றான். ஸ்ரீக்ருஷ்ணன், அம்மடுவில் இறங்கி, சாணை பிடிக்கப்பட்டு (நன்கு தீட்டப்பட்டு) ஜ்வலிக்கின்ற இந்த்ர நீலமணியின் ஒளிபோன்ற ஒளியுடைய ஜலத்தைப் பருகி, ஆசமனீயமும் செய்து, குவியல் குவியலாய் அடர்ந்திருக்கின்ற வ்ருக்ஷங்களின் (மரங்களின்) இடையே சென்று, ராமனுடன் ரதத்தில் ஏறிக்கொண்டான். 

அப்பொழுது, அக்ரூரன் சத்ருக்களிடத்தினின்று பயந்து, அந்த ராம க்ருஷ்ணர்களை ரதத்தின் மேல் உட்கார வைத்து, விடைபெற்றுக் கொண்டு, மாத்யாஹ்னிகக் கடன்களைச் செய்வதற்காக யமுனையின் மடுவில் இறங்கி, அங்கு விதிப்படி ஸ்னானம் செய்யத் தொடங்கினான். அவ்வக்ரூரன், அம்மடுவின் ஜலத்திற்குள் முழுகி, அனாதியான பரப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை அறிவிக்கிற ப்ரணவத்தை ஜபித்துக் கொண்டிருக்கையில், அங்கு அந்த ராம க்ருஷ்ணர்கள் இருவரும் சேர்ந்திருக்கக் கண்டான். அவ்வாறு கண்ட அவ்வக்ரூரன் “வஸுதேவ குமாரர்களான அந்த ராம க்ருஷ்ணர்கள் ரதத்தின் மேல் இருக்கின்றார்களல்லவா? இங்கு எப்படி புலப்படுகின்றார்கள்? ஆனால் அவர்கள் ரதத்தினின்று இறங்கி இங்கு வந்திருப்பார்களாயின், அங்கு ரதத்தின்மேல் இல்லையா என்ன? போய்ப் பார்க்கிறேன்” என்று தனக்குள் சிந்தித்து, ஜலத்தினின்று மேற்கிளம்பி, கரையேறிப் பார்த்தான். அங்கும் அவர்கள் முன் போலவே உட்கார்ந்திருக்கக் கண்டு, “ஆனால்  நான் அவர்களை ஜலத்திற்குள் கண்டது பொய்யோ? மெய்யோ? மீளவும் போய்ப் பார்க்கிறேன்” என்று சிந்தித்து, மீளவும் ஜலத்திற்குள் முழுகினான். அவன் மீளவும் அந்த ஜலத்திற்குள் நாக ராஜனாகிய ஆதிசேஷனைக் கண்டான். 

ஸித்தர்களும், நாகச்ரேஷ்டர்களும், அஸுரர்களும், தலை வணக்கமுற்று அவனைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வாதிசேஷன், ஆயிரந்தலைகளும், ஆயிரம் பணங்களும் (படங்களும்), ஆயிரம் கிரீடங்களும் அமைந்து, கறுத்த வஸ்த்ரம் தரித்து, தாமரைத் தண்டின் நூல் போல் வெளுத்து, பல சிகரங்களோடு கூடின வெள்ளி மலைபோன்று விளக்கமுற்றிருந்தான். 

அவ்வாதிசேஷனுடைய மடியில் நீலமேகம் போல் கறுத்துப் பொன்னிறமான பட்டு வஸ்த்ரம்தரித்து,  நான்கு புஜங்கள் அமைந்து, தாமரையிதழ் போல மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட பெரிய கண்களும், தெளிந்தழகிய முகமும், அழகான புன்னகையும், அத்தகைய கண்ணோக்கமும், அழகிய புருவங்களும்,  உயர்ந்த மூக்கும், அழகான காதுகளும், அழகிய கபோலங்களும் (கன்னங்களும்), சிவந்த கனிவாயும், முழந்தாள் வரையில் தொங்குகின்ற பருத்த புஜதண்டங்களும் (கைகளும்), உயர்ந்த தோள்களும், அகன்ற மார்பும், அம்மார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மியும், சங்கம் போல் மூன்று ரேகைகள் அமைந்த அதிக நீளமும், அதிக குருக்கமுமின்றிப் பருத்த கண்டமும் (கழுத்தும்), ஆழ்ந்த கொப்பூழும், மூன்று வரிகள் அமைந்து அரசிலை போன்ற உதரமும், அகன்ற கடித்தடமும் (இடையும்), கரபம் (யானையின் துதிக்கை) போன்ற திருத்துடைகளும், அழகிய முழந்தாள்களும், நீண்ட கணைக்கால்களும், சிறிது உயர்ந்த குதிகால்களும் அமைந்து, அருள் பெருக்குடன் திகழ்கின்ற பரமபுருஷனைக் கண்டான். 

அவன் சிவந்த கால் நகங்களின் காந்திகளாலும், அழகிய விரல்களும் கட்டை விரல்களுமாகிற புதிய இதழ்களாலும் திகழ்கின்ற பாதார விந்தங்களுடையவனாகி, விலையுயர்ந்த ரத்னங்கள் நிரை நிரையாய் இழைக்கப்பட்ட கிரீட மகுடம், தோள் வளை, அரை நாண் மாலை, யஜ்ஞோபவீதம், முத்து மாலை, தண்டை, குண்டலம் முதலிய ஆபரணங்களால் திகழ்வுற்று, ஒரு கையில் தாமரை மலரையும், மற்ற மூன்று கைகளில் சங்கம், சக்கரம், கதை இவைகளையும் தரித்து, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் திருமறுவும், கௌஸ்துப மணியும் திகழப் பெற்று, வனமாலையும் அணிந்து, மிகவும் அழகனாயிருந்தான். 

ஸுநந்தர், நந்தர் முதலிய பார்ஷதர்களும் (சேவகர்களும்), ஸனகாதி மஹர்ஷிகளும், ப்ரஹ்ம ருத்ராதி தேவ ச்ரேஷ்டர்களும், பண்டிதர்களான மரீசி முதலிய ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களும், பரிசுத்தமான மனமுடையவர்களாகி ஸர்வ சேஷியென்றும் (எல்லொருக்கும் தலைவன் என்றும்), பரப்ரஹ்மமென்றும், ஸர்வகாரணனென்றும் (அனைத்துப் பொருட்களுக்கும் காரணம் என்றும்), ப்ரஜாபதியென்றும் (ப்ரஜைகளை ஸ்ருஷ்டித்தவன் என்றும்) வெவ்வேறு கருத்துடைய வசனங்களால் அவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். ஸம்பத்து, புஷ்டி, வாக்கு, காந்தி, கீர்த்தி, துஷ்டி, இளை, ஊர்ஜை, வித்யை, அவித்யை, சக்தி, மாயை என்னும் பன்னிரண்டு சக்திகளும் உருவத்துடன் அவனைப் பணிந்து கொண்டிருந்தன. அக்ரூரன் இத்தகைய பரமபுருஷனைக் கண்டு, மிகவும் ஸந்தோஷம் அடைந்து, மிகுந்த பக்தியுடன் கூடி, மயிர்க் கூச்சம் உண்டாகப்பெற்று, ப்ரீதியின் மிகுதியால் மனம் உருகி, கண்கள் பனிக்கப் பெற்று, தைர்யத்தை ஏற்றுக்கொண்டு, தழதழத்த உரையுடன், மெல்ல மெல்ல ஸ்தோத்ரம் செய்தான். 

முப்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை