வியாழன், 14 ஜனவரி, 2021

ஶ்ரீமன் நாதமுனிகளும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் - திருப்பதி மா.வரதராஜன்

ஸ்ரீய பதியான ஸர்வேச்வரன் உலக மக்கள் உய்யும் வகை அறிய ஓடி ஓடி பல அவதாரங்கள் எடுத்தும் திருந்தாமையாலே, மானைக் கொண்டு மானைப் பிடிப்பாரைப் போலே, உலக மக்கள் உய்யும் வகை செய்ய வேதப் பயன் கொள்ளவல்ல ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் அவதரிக்கச் செய்தான்.


வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான சர்வேச்வரனை அடைவதற்காக ஆழ்வார்கள் திவ்யப் பிரபந்தங்களை அருளிச் செய்தார்கள். சுமார் கி. பி. 9-ம் நூற்றாண்டில் தான் இத்திவ்யப் பிரபந்தத்திற்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டது. இப்புத்துணர்ச்சிக்குக் காரணமானவர் ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமன் நாதமுனிகள் என்னும் மகாபுருஷர். நாவீறு படைத்த இவ்வந்தணரின் அளவிலாப் பரிவும், பக்தியும், இடையறா முயற்சியும், இத்திவ்யப் பிரபந்தம் வையமறிய வாய்ப்பைத் தந்தது. ஸ்ரீமன் நாதமுனிகள் அவதாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் சீர்மையை இன்று நாம் அனுபவிக்கக் காரணமாயிற்று. அவ்வாறு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பேணிக் காத்து, இயலும் இசையும் தொடுத்து முதலாயிரம், பெரிய திருமொழி, இயற்பா, திருவாய்மொழி என்று வரிசைப்படுத்தி அருளின நாதமுனிகளின் அவதாரச் சிறப்பையும், இப் பிரபந்தத்தில் அவருக்கு உள்ள ஈடு பாட்டையும் கீழ் அறிவோமாக.


சுமார் கி. பி. 9-ம் நூற்றாண்டில், அதாவது, முதல் பராந்தகச்சோழன் ஆட்சி காலத்தில், ஆனி மாதம், அனுஷ நட்சத்திரத்தில் வீரநாராயணபுரம் (இப்போது காட்டு மன்னார் கோவில் என்று அழைக்கப்பெறுவது) என்ற கிராமத்தில் ஈச்வரபட்டருக்கு அவதரித்தவர் நாதமுனிகள். இவருக்குத் திருத்தகப்பனார் இட்ட திருநாமம் ஸ்ரீரங்கநாதன் என்பது. வீரநாராயணபுரத்தின் எம்பெருமானின் இசைவின்படி, அவ்வூரில் உள்ள மன்னனாருக்குக் கைங்கர்யம் செய்து வந்தார்.


ஒரு சமயம் மன்னனாரைச் சேவிக்க வேற்று நாட்டிலிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் “ஆராவமுதே” என்கிற திருவாய்மொழியை மன்னனார் திருமுன்பே சேவிக்க, அதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் பக்தி மேலிட்டு, அவர்களைப் பார்த்து இப்பிரபந்தத்தின் எஞ்சியட் பகுதி எவ்விடத்தில் உள்ளது என்றும், இதற்கு ஏதாவது ஓலைச்சுவடிகள் உண்டோ - என்றும் வினவினார். அவர்கள் நாதமுனிகளைப் பார்த்து, ''எங்களுக்கு இவ்வளவே தெரியும், வேறொருவிடத்திலும் ஓலைச்சுவடி இல்லை. சடகோபன் அவதரித்த தீருக்குருகூரான ஆழ்வார் திருநகரில் உண்டாக வேணும்'' என மொழிய, பின்னர் நாதமுனிகள் அவர்களுக்கு மன்னனாரின் தீர்த்த ப்ரஸாதங்களைக் கொடுத்து அனுப்பினார்.


பின்புதான் ஆழ்வார்திருநகரிக்குச் சென்று, அங்கு பொலித்து நின்ற பிரானையும், ஸ்ரீ சடகோபரையும் வணங்கா நின்றார். அங்கு வசிக்கும் ஸ்ரீமதுரகவிகளின் சீடரான ஸ்ரீபராங்குஸ தாஸரை அடி பணிந்து விசாரித்தார். ஸ்ரீபராங்குஸ தாஸரும் தனது கூடஸ்தரான ஸ்ரீமதுரகவிகள் அருளிய ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' என்னும் பதினொரு பாக்களைப் பன்னீராயிரம் உரு அநுசந்தித்தால் மற்ற எல்லாவற்றையும் ஆழ்வார் அருளுவர் என்று பெரியோர் கூறுவர் என்று கூறினார். அதைக்கேட்ட நாதமுனிகளும் ''கண்ணிநுண்சிறுத்தாம்பை" அவரிடம் உபதேசம் பெற்று நம்மாழ்வார் (சடகோபர்) திரு முன்பே பன்னீராயிரம் உரு அநுசந்திக்க, ஆழ்வார் நாதமுனிகள் நெஞ்சில் தோன்றி அவருக்கு வேண்டியதைக் கேட்க, நாதமுனிகள் திருவாய்மொழி முதலான திவ்யப்பிரபந்தங்களைத் தமக்கு அருளும்படி வேண்ட, ஆழ்வாரும் அன்பினால் அசரீரிவாணியாய், நாதமுனிகளுக்குத் திருவாய்மொழி முதலான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும், ரஹஸ்யங்களையும், அவற்றின் பொருளையும் ப்ரஸாதித்தார்.


பின்னர், ஆழ்வாரின் அருளினால் கற்ற திவ்பப் பிரபந்தங்களை, மன்னனாரின் அருளால் கானமாகத் தாளத்தைக் கொண்டு இயலும் இசையும் தொடுத்துப் பாடினார். மேலும் இவ்விருள் தருமா ஞாலத்தில் மக்கள் இன்புற்று வாழ்வதற்காக ஆழ்வார்களின் அருளிச் செயல்களை மன்னனாரின் இசைவின் பேரில் தமது மருமக்களான மேலையகத்தாழ்வாரையும், கீழையகத்தாழ்வாரையும் கொண்டு இப்பிரபந்தங்களுக்குத் தேவகானத்தாலே ராகம் தாளம் முதலியவற்றை அமைத்து பல திவ்ய தேசங்களுக்குச் சென்று பாடச் செய்து பரப்பி வந்தார். நாதமுனிகளின் முக்கிய சீடர்கள் உய்யக்கொண்டாரும், குருகை காவலப்பனுமாவர். அவர்கள் மூலமாகத் திவ்யப் பிரபந்தத்தையும், ரகஸ்யங்களையும் பிரசாரம் செய்வித்து. தம்முடைய திருப்பேரனான ஆளவந்தாருக்கு உபதேசம் செய்யும்படி அருளி 93 வருடம் வாழ்ந்தார்.


இவ்வாறு ஸ்ரீமன் "நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை ஒன்று திரட்டி, இயலும் இசையும் தொடுத்து வரிசைப்படுத்தியது. அவருக்குப் பின் அவதரித்த ஆசார்யர்களுக்கு வெகுசுலபமாக வ்யாக்யானங்கள் செய்ய உதவியாக இருந்தது. ஆழ்வார்களின் ஏற்றத்தையும், அவர்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் ஏற்றத்தையும் புத்துயிர்ப்பித்த ஸ்ரீமன் நாதமுனிகளின் ஞானம் தான் என்னே!


இந்நானிலத்தில் ஆசார்ய பரம்பரைக்குக் காரணமான ஸ்ரீமன் நாதமுனிகள் முதல், இப்போது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு அவதரித்த பூர்வாசாரியர்களுள் கடைக்குட்டியான ஸ்ரீமணவாள மாமுனிகள் வரையில் உள்ள ஆசார்யர்களின் அற்பதங்களை இந்நூற்றாண்டிலும், பிற்காலத்திலும், நாடோறும் வணங்குவோமாக.


நன்றி - சப்தகிரி 1979

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக