வெள்ளி, 15 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 256

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பதாவது அத்தியாயம்

(அக்ரூரன் ஸ்ரீக்ருஷ்ணனை ஸ்தோத்ரம் செய்தல்)

அக்ரூரன் சொல்லுகிறான்:- ஸமஸ்த ப்ரபஞ்சத்திற்கும் காரணங்களான மஹத்து முதலிய தத்தவங்களுக்குக் காரணனும், நாராயணனென்று அஸாதாரணமான நாமம் பெற்றவனும், ஆதிபுருஷனும் (தனக்குத் தானே காரணமாகி வேறு காரணமற்றவனும்), விகாரங்களற்றவனுமாகிய (மாறுபாடுகள் இல்லாதவனுமான) உன்னை நமஸ்கரிக்கின்றேன். 

இந்த பிரபஞ்சமெல்லாம் எவனிடத்தினின்று உண்டாயிற்றோ, அப்படிப்பட்ட ப்ரஹ்மதேவன் உன்னுடைய நாபியாகிற தடாகத்தில் முளைத்த தாமரை மொக்கினின்று உண்டானான். (வ்யஷ்டி ஸ்ருஷ்டியை ப்ரஹ்மதேவன் மூலமாகவும், ஸமஷ்டி ஸ்ருஷ்டியை நீயே நேராகவும் நடத்துகின்றாயாகையால் காரணங்களுக்கும் காரணன் நீயேயென்பதில் ஸந்தேஹம் உண்டோ) ஜகத் ஸ்ருஷ்டிக்குக் (உலக படைப்புக்குக்) காரணங்களான பூமி, ஜலம், அக்னி, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களும், இவற்றிற்குக் காரணமான அஹங்காரமும், அதற்குக் காரணமான மஹத்தும், அதற்குக் காரணமான மூல ப்ரக்ருதியும், ஸாத்விக அஹங்காரத்தின் கார்யங்களான ஜ்ஞானேந்தரிய, கர்மேந்த்ரியங்களும், மனமும், அவற்றிற்கு அபிமானிகளான தேவதைகளும், அவ்விந்த்ரியங்களின் விஷயங்களான சப்தாதிகளும் ஆகிய இவையெல்லாம் உனக்குச் சரீரங்கள். (நீ மூல ப்ரக்ருதியைச் சரீரமாகக்கொண்டு, மஹத்து முதலிய தத்வங்களைச் சரீரமாகவுடைய நீயாய் விரிகின்றாயாகையாலும், மூலப்ரக்ருதியையும், மஹத்து முதலியவற்றையும் சரீரமாகக் கொண்டு அவற்றை நியமித்துக் கொண்டிருக்கின்றாயாகையாலும், ஜகத்திற்க்கு உபாதான காரணம் (material cause – மண் குடத்திற்கு மண் போல்), நிமித்த காரணம் (efficient cause - மண் குடத்திற்கு குயவன் போல்) ஆகிய இரண்டு காரணங்களும் நீயே.) 

உன் சரீரங்களான மூலப்ரக்ருதி முதலியன ஜடங்களாகையால் (அறிவற்றவையாகையால்)  அந்தராத்மாவான உன்  ஸ்வரூபத்தை அறியாதிருப்பது போல, ஜ்ஞான ஸ்வரூபர்களான ஜீவாத்மாக்களும், உன்னை அறிகிறதில்லை. ஏனென்றால், அவர்கள் ஆத்மாவல்லாத தேஹத்தை (உடலை) ஆத்மாவாகவும், உனக்குப் பரதந்த்ரர்களான (உனது நியமனத்திற்கு உட்பட்ட) தங்களை ஸ்வதந்த்ரர்களாகவும் (தன்னிச்சையாக செயல்படுபவர்களாகவும்) ப்ரமித்து, தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணர்களும் (வேறானவர்களும்), உனக்குச் சேஷப்பட்டிருப்பவர்களுமான (உடைமையாய், அடிமையாய் இருப்பவர்களுமான) தங்கள் ஸ்வரூபத்தையே அறிகிறதில்லை. இனி, உன்னை எவ்வாறு அறியப்போகிறார்கள்? 

ப்ரஹ்மதேவனும்கூடத் தன் சரீரத்திற்குக் காரணங்களான ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களால் தொடரப்பட்டு, ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), அவற்றிற்கு நியாமகனுமாகிய (நியமிப்பவனுமான) உன் ஸ்வரூபத்தை அறிகிறதில்லை. மற்ற ஜீவாத்மாக்கள் எவ்வாறு அறிவார்கள்? (ஆனால், ஒருவரும் அறியார்களாயின், பரமாத்ம ஸ்வரூபம் முயல்கொம்போடு (இல்லாத ஒன்று) ஒத்ததேயாகுமென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அவிவேகமுடையவர்களின் (பகுத்தறிவு அற்றவர்களின்) கட்கண்ணுக்கு (புறக்கண்ணுக்கு) அறியக் கூடாதவனாயினும், யோகத்தினால் பரிசுத்தமான மனமுடையவர்களுக்கு அறியத்தகுந்தவனே.) சில யோகிகள், மஹா புருஷனும், ஸர்வேச்வரனுமாகிய உன்னையே நேரில் உபாஸிக்கிறார்கள். சில ஸாதுக்கள், ஸூர்யன், இந்த்ரன் முதலிய தேவதைகளுக்கு அந்தராத்மாவான உன்னையும், சிலர் தங்கள் சரீரங்களின் அவயவங்களான (உருப்புக்களான) கண், ஹ்ருதயம் முதலிய இடங்களில் இருக்கின்ற உன்னையும், சிலர் ஸமஸ்த பூதங்களிலும் அந்தராத்மாவாயிருக்கின்ற உன்னையும் உபாஸிக்கின்றார்கள். 

யாகாதி கர்மங்களில் மன விருப்பமுற்ற சில அந்தணர்கள், உன் சரீரங்களான இந்திரன் முதலிய பற்பல தேவதைகளின் நாமங்களையுடைய வேதத்தின் பூர்வ பாகமாகிற வித்யையினால் அறிவிக்கப்பட்ட பல யாகங்களால், அந்தத் தேவதைகளுக்கு அந்தராத்மாவாகி அவர்களைச் சரீரமாகவுடைய உன்னை ஆராதிக்கின்றார்கள். 

பகவானுக்குச் சேஷப்பட்டிருக்கையையே (உடைமையாய், அடிமையாய் இருப்பதே) முக்ய ரஸமாகவுடைய ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையை அறிந்த சில ஜ்ஞானிகள், அஹங்கார, மமகாரங்களை உட்கொண்டிருக்கையால், ஆத்ம ஸ்வரூபத்திற்கு இணங்காதவைகளான கர்மங்களையெல்லாம் துறந்து, சப்தாதி விஷயங்களில் இவை போக்யங்களென்னும் (அனுபவிக்கத் தக்கவை என்னும்) புத்தி ஒழியப்பெறுகையாகிற உபசாந்தியை (அமைதியை) அடைந்து,  ஜ்ஞான ஸ்வரூபனான உன்னை ஜ்ஞான யோகத்தினால் ஆராதிக்கின்றார்கள். நீ மொழிந்த பாஞ்சராத்ர ஆகமத்தில் சொன்னபடி தாபம் முதலிய பஞ்ச ஸம்ஸ்காரங்களால் பரிசுத்தமான தேஹங்களை உடையவர்களும், உன்னைப் பற்றின அறிவு மாறாதிருக்கப் பெற்றவர்களுமான சில பெரியோர்கள், வ்யூஹ, விபவங்களால் பல மூர்த்தியும், பரமாத்ம ரூபத்தினால் ஏகமூர்த்தியுமாகிய உன்னைப் பாஞ்சராத்ரத்தில் சொல்லப்பட்ட தர்மங்களால் நேராக ஆராதிக்கின்றார்கள். 

ஷாட்குண்ய பூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே)! வேறு சிலர், காபாலிகன், காலாமுகன், சைவன், பாசுபதன் முதலிய பலவகையான ஆசார்யர்களால் ஏற்பட்ட ஆகார (உருவ) பேதத்தை (வேற்றுமையை) உடையதும், சிவனால் மொழியப்பட்டதுமாகிய சைவம் முதலிய ஆகமத்தில் சொல்லப்பட்ட விதியின் படி, சிவ ரூபனான உன்னையே ஆராதிக்கின்றார்கள். (அவர்களுக்கு, உன்னையே ஆராதிக்கிறோமென்கிற எண்ணம் இல்லாமற் போயினும், அவர்கள் செய்யும் உபாஸனை உன்னிடத்திலேயே வந்து முடிகின்றது. ஆனால், அந்த உபாஸனம் விதியை முன்னிட்டுக்கொண்டிருப்பதன்று; ஆனது பற்றியே நச்வரமான (அழியக்கூடிய) பலனைக் கொடுக்குமன்றி, அழிவில்லாத பரம புருஷார்த்தமான முக்தியைக் கொடுக்காது) 

ப்ரபூ! தேவதாந்த்ர (உன்னைத் தவிர மற்ற தேவதைகளின்) பக்தர்கள், பரமாத்மாவான உன்னைக் காட்டிலும் வேறுபட்ட அந்தத் தேவதைகளிடத்தில் மன விருப்பமுற்று, அவர்களை உபாஸிக்கின்றார்கள். ஆயினும், அவர்கள் அனைவரும், ஸமஸ்த தேவதைகளையும் சரீரமாக உடையவனாகையால் ஸமஸ்த தேவதா ஸ்வரூபனும் (எல்லா தேவதைகளாயும் இருப்பவனும்), அவர்களுக்கு நியாமகனுமாகிய (நியமிப்பவனுமாகிய) உன்னையே உபாஸிக்கின்றார்கள். ஆகையால், அவர்கள் செய்யும் உபாஸனைகள் உன்னைச் சேர்ந்தவவைகளே. 

ப்ரபூ! பர்வதங்களினின்று உண்டான நதிகளெல்லாம், மேகம், மழை பெய்கையால் வெள்ளம் நிறைந்தவைகளாகி, ஸமுத்ரத்தில் போய் விழுவது போல, அவரவர்கள் செய்யும் உபாஸனங்களெல்லாம், கடைசியில் உன்னையே அடைகின்றன. ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸு என்னும் இவை உன் சரீரமாகிய ப்ரக்ருதியின் குணங்கள். ஸ்தாவரம் முதல் ப்ரஹ்மதேவன் வரையிலுள்ள ப்ராக்ருதங்களான (முலப்ரக்ருதியின் மாறுபாடுகளான) ஸமஸ்த வஸ்துக்களும், அக்குணங்களில் கோக்கப்பட்டவை போன்றிருக்கின்றன. (ப்ரஹ்மன் முதலிய ஜீவாத்மாக்களால் அதிஷ்டானஞ் செய்யப்பட்ட (படைத்து வைக்கப்பட்ட) தேஹங்களெல்லாம் உன் சரீரமான குணமய (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற குணங்களோடு கூடிய) ப்ரக்ருதியின் கார்யங்களாகையால், உனக்கு உட்பட்ட ஸத்தாதிகளை (இருப்பு, நீடிப்பு, செயல் ஆகியவற்றை உடையவை.)

நீ, ப்ரஹ்மன் முதலிய ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும், அந்தராத்மாவாயிருப்பவன். நீ, அவர்களைச் சரீரமாகவுடையவனாயினும், அவர்களைப் போல் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமிக்கும் தன்மையனல்லை. நீ எல்லா அறிவுகளையும் நேரே அறிகின்றவனாகையால், உன்னிடத்தில் தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அவிவேகங்களுக்கு (அறியாமைக்கு) இடமில்லை. தேவர், மனுஷ்யர், திர்யக்கு (விலங்கு) என்னும் தேஹங்களையுடைய ஆத்மாக்களுக்கு, ஸத்வாதி குணங்களின் ப்ரவாஹ ரூபமான (வெள்ளப் பெருக்கான) இந்த ஸம்ஸாரம் உன்னுடைய மாயையினால் ஓயாமல் நடந்து வருகின்றது. அத்தகைய உனக்கு நமஸ்காரம். 

அக்னி உன் முகம். பூமி உன் பாதம். ஸூர்யன் உன்னுடைய நேத்ரம். ஆகாசம் உன்னுடைய நாபி. திசைகள் உன் செவி. ஸத்ய லோகம் உன் சிரஸ்ஸு. இந்த்ராதி தேவதைகள், உன் புஜங்கள். ஸமுத்ரங்கள் உன் வயிறு. காற்று உன் ப்ராணனும் பலமும். வ்ருக்ஷங்களும் (மரங்களும்) ஓஷதிகளும் (செடி கொடிகளும்) உன் ரோமங்கள். மேகங்கள் உன் தலைமயிர்கள். பர்வதங்கள் உன் எலும்புகள். 

பரமனே! இரவும் பகலும் உன் இமைகள். ப்ரஜாபதி உன்னுடைய ஆண் குறி. மழை உன் வீர்யம். இவை இவ்வாறு உன்னால் படைக்கப்பட்டன. மற்றும் யோகிகள் அக்னி முதலியவற்றை உன் முகம் முதலிய அவயவங்களாக த்யானிக்கின்றார்கள். என்றும் மாறாமல் ஒருவாறாயிருக்கும் ஸ்வரூபமுடையவனே! பல ஜீவாத்மாக்களால் நிறைந்திருப்பவைகளும், இந்த்ராதி லோக பாலர்களோடு கூடினவைகளுமாகிய ஸமஸ்த லோகங்களும், பரிசுத்தமான மனத்தினால் அறியத்தகுந்தவனும், பரமபுருஷனுமாகிய உன்னிடத்தில் படைக்கப்பட்டு, ஜலத்தில் ஸுக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான) ஜந்துக்கள் (பிராணிகள்) ராசி ராசியாய் (கூட்டம் கூட்டமாய்) ஸஞ்சரிப்பது போலவும், அத்திப் பழத்திற்குள் கொசுகுகள் (பல சிறு சிறு புழுக்கள்) போலவும் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. 

நீ விளையாட்டிற்காக எந்த எந்த உருவங்களை ஏற்றுக் கொள்கின்றனையோ, அவ்வுருவங்களை அனுஸந்திக்கையால் (த்யானிக்கையால்) ஆத்யாத்மிகம் முதலிய {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான} தாபங்களையெல்லாம் துன்பங்களையெல்லாம்) துறந்து, ரஸம் அறிந்த ஜனங்கள் உன் புகழைப் பாடுகிறார்கள். காரணத்திற்காக மத்ஸ்ய உருவங்கொண்டு, ப்ரளய ஸமுத்ரத்தில் ஸஞ்சரித்த உனக்கு, நமஸ்காரம். 

ஹயக்ரீவாவதாரஞ் செய்து, மது கைடபர்களை ஸம்ஹரித்த உனக்கு, நமஸ்காரம். பெரிய கூர்ம உருவம் தரித்து, மந்த்ர பர்வதத்தைத் தாங்கின உனக்கு நமஸ்காரம். வராஹ உருவங்கொண்டு, பூமியை மேலுக்கெடுக்கையாகிற விளையாடலை நடத்தின உனக்கு நமஸ்காரம். அற்புதமான ஸிம்ஹ உருவம் கொண்டு ஸாது லோகங்களின் பயத்தைப் போக்கின உனக்கு நமஸ்காரம். வாமனாவதாரம் செய்து மூன்று லோகங்களையும் அளந்த உனக்கு நமஸ்காரம். ப்ருகு வம்சத்தவர்களில் சிறந்த பரசுராமனாக அவதரித்து, கொழுத்த க்ஷத்ரிய குலமாகிற வனத்தைச் சேதித்த (வெட்டிய) உனக்கு நமஸ்காரம். ரகுவம்சத்தில் ஸ்ரீராமனாக அவதரித்து, ராவணனைக் கொன்ற உனக்கு நமஸ்காரம். வாஸுதேவனென்றும், ஸங்கர்ஷணனென்றும், ப்ரத்யும்னனென்றும், அனிருத்தனென்றும் நான்கு வ்யூஹ அவதாரங்கள் செய்த உனக்கு நமஸ்காரம். ஸாதுக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்பொழுது ராம க்ருஷ்ணர்களாக அவதரித்த உனக்கு நமஸ்காரம். புத்தாவதாரம் செய்து, வேதம் அப்ரமாணமென்று (ஏற்கத்தக்க சான்று அன்று என்று) உபதேசித்து, தைத்யர்களையும்), தானவர்களையும் (கச்யபரின் மனைவிகளான திதி மற்றும் தனுவின் புதல்வர்களான அஸுரர்களையும்) மதிமயங்கச் செய்தவனும், பரிசுத்தனுமாகிய உனக்கு நமஸ்காரம். கல்கி அவதாரம் செய்து, ம்லேச்சர்களைப் போன்ற க்ஷத்ரியர்களின் குலத்தை அழிக்கப் போகிற உனக்கு நமஸ்காரம். 

ஷாட்குண்ய பூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே)! இவ்வுலகத்திலுள்ள ஸமஸ்த ஆத்மாக்களும், உன்னுடைய மாயையினால் மதி மயங்கி அஹங்கார மமகாரங்களாகிற அஜ்ஞானத்தினால் சப்தாதி விஷயங்களை நிறைவேற்றிக் கொடுப்பவைகளான கர்ம மார்க்கங்களில் சுழல்கின்றனர். நானும், ஸ்வப்னத்தில் (கனவில்) கண்ட வஸ்துக்கள் போல அநித்யங்களான (நிலையற்றவையான) பிள்ளை, மனை, மனைவி, பணம், பந்துக்கள் முதலியவற்றை நித்யமென்று ப்ரமித்து, அவற்றில் உழன்று கொண்டிருக்கின்றேன். 

நான், அநித்யமான (நிலையற்ற) வஸ்துக்களை நித்யங்கள் (நிலையானவை) என்றும், ஆத்மாவல்லாத தேஹத்தை ஆத்மாவென்றும், துக்க ரூபங்களான சப்தாதி விஷயங்களை ஸுகங்களென்றும் ப்ரமித்து, சப்தாதி விஷய ஸுகங்களைப் பற்றி நேரும் துக்கங்களையும் ஸுகமாகவே நினைத்து, அஜ்ஜானத்தினால் (அறியாமையால்) சூழப்பட்டு, ஆத்மாவுக்கு ப்ரியனான உன்னை அறியாதிருக்கின்றேன். 

ஓரிடத்தில் ஜலம் இருப்பினும், அதினின்று முளைத்த புற்களால் அது மறைக்கப்பட்டிருக்கையால், அங்கு ஜலம் இருக்கிறதென்பதை அறியாமல், ஜலம் போலத் தோற்றுகிற கானலைத் தேடியோடுவது போல, நானும் மேம்பட்ட புருஷார்த்தமும், அதற்கு ஸாதனமுமாயிருக்கின்ற உன்னைத் துறந்து, தேஹாதிகளில் மனஞ் செல்லப் பெற்றிருக்கின்றேன். சப்தாதி விஷயங்களில் தாழ்ந்த மதியுடைய நான், காமத்தினாலும், கர்மத்தினாலும் கலக்கப்பட்டு, வலிவுடையவைகளான இந்த்ரியங்களால் மூலைக்கு மூலை இழுக்கப்படுவதுமாகிய மனத்தை, தடுக்க முடியாதிருக்கின்றேன். இத்தகைய நான், அஸத்துக்களுக்கு (உலகியல் இன்பங்களில் நாட்டமுடையவர்களுக்கு) அடைய முடியாததான உன் பாதார விந்தத்தைச் சரணம் அடைந்தேன். அதுவும் உன்னுடைய அருளென்றே நினைக்கின்றேன். 

ஜகதீசனே! ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவான நீயே என்னைத் தூண்டி உன்னைச் சரணம் அடையும்படி செய்தாய். இவ்வாறு நீ அருள் செய்யாத பக்ஷத்தில், எனக்கு அந்த எண்ணமே உண்டாகாது. தாமரை உந்தியனே (தாமரை போன்ற நாபிக்கமலம் உடையவனே)! இவனை ஸம்ஸாரத்தினின்று கரையேற்ற வேண்டுமென்று நீ எப்பொழுது அருள் புரிகின்றனையோ, அப்பொழுதுதான் சேதனனுக்கு (ஜீவாத்மாவிற்கு) உன்னைப் பணிய வேண்டுமென்னும் புத்தி உண்டாகின்றது. கேவலம் ஜ்ஞானானந்த ஸ்வரூபனும் (அறிவு, இன்ப வடிவானவனும்), எல்லோர்க்கும் ஜ்ஞான ப்ரதானஞ் செய்பவனும் (அறிவை அளிப்பவனும்), ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்கள்) புருஷர்களுக்கு (ஜீவாத்மாக்கள்) நியாமகனும் (நியமிப்பவனும்), அளவற்ற ஸ்வரூப ஸ்வபாவங்களுடையவனும், அளவற்ற சக்திகளுடையவனுமாகிய உனக்கு நமஸ்காரம். ஸமஸ்த பூதங்களுக்கும் ஆதாரமாகி வாஸுதேவனென்னும் பெயர்பெற்ற உனக்கு நமஸ்காரம். இந்த்ரியங்களுக்கு நியாமகனே! உனக்கு நமஸ்காரம், வேறு கதியற்று, உன்னையே சரணம் அடைந்த என்னை, பாதுகாப்பாயாக. 

நாற்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக