சனி, 16 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 257

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் மதுராபுரியில் நுழைதலும், வண்ணான், கூனி முதலியவர்களை அனுக்ரஹித்தலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு துதி செய்கின்ற அக்ரூரனுக்கு ஜலத்தில் தன்னுடைய திவ்ய உருவத்தைக் காட்டி, நடன ஆட்டமாடுவதற்காக ஏற்றுக்கொண்ட வேஷத்தைக் காட்டி மறைப்பது போல மறைந்தான். அந்த அக்ரூரனும், அவ்வுருவம் மறைந்ததைக் கண்டு ஜலத்தினின்று மேல் கிளம்பி, த்வரையுடன் (விரைவாக) அவச்யமாக (கட்டாயமாக) அனுஷ்டிக்க வேண்டிய மாத்யாஹ்னிகம் முதலிய  நித்ய கர்மத்தையெல்லாம் செய்து முடித்து, வியப்புடன் ரதத்தின் மேல் ஏறினான். ஸ்ரீக்ருஷ்ணன் அவ்வக்ரூரனைப் பார்த்து, “அண்ணா! நீ ரதத்திலாவது, பூமியிலாவது, ஆகாயத்திலாவது, ஜலத்திலாவது ஏதேனும் அற்புதம் கண்டீரா? உம்மைப் பார்த்தால் ஏதோ ஒரு அற்புதம் கண்டவர் போல் தோற்றுகிறது” என்று வினவினான். அதைக் கேட்டு அக்ரூரன், ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்துப் பூமியிலாவது, ஆகாயத்திலாவது, ஜலத்திலாவது எவ்வளவு ஆச்சர்யங்கள் உண்டோ அவையெல்லாம் விச்வரூபனாகிய உன்னிடத்தில் இருக்கின்றன. அத்தகைய உன்னைக் காண்கின்ற நான் என்ன கண்டேன்? உன்னிடத்தில் இல்லாத அற்புதம் ஒன்றையும் நான் காணவில்லை. 

அளவற்ற ஸ்வருப, ஸ்வபாவங்களுடையவனே! எவனிடத்தில் எல்லா அற்புதங்களும் அமைந்திருக்கின்றனவோ, அத்தகைய உன்னைக் கண்ட நான், பூமியிலாவது, ஆகாயத்திலாவது, ஜலத்திலாவது என்ன அற்புதம் கண்டேன்? உன்னையொழிய வேறொரு அற்புதமும் நான் காணவில்லை என்று மொழிந்து, காந்தினியின் புதல்வனாகிய அவ்வக்ரூரன், ரதத்தை ஓட்டிக்கொண்டு சென்று, மாலை வேளையில் ராமனையும், க்ருஷ்ணனையும் மதுரையில் சேர்த்தான். 

மன்னவனே! வழியில் ஆங்காங்கு க்ராமத்து ஜனங்கள் வந்து, ராம க்ருஷ்ணர்களைக் கண்டு, மிகவும் ஸந்தோஷம் அடைந்து, வைத்த கண்ணை வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அக்ரூரன் ராம க்ருஷ்ணர்களை மதுரையில் கொண்டு சேர்ப்பதற்குள்ளாகவே நந்தன் முதலிய கோபர்கள் உபவனத்தில் சென்று, ஸ்ரீராம க்ருஷ்ணர்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மஹானுபாவனும், ஜகதீச்வரனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அவர்களுடன் கலந்து, தன் கையினால் வணக்கமுடைய அக்ரூரனை கையில் பிடித்துப் புன்னகை செய்து கொண்டு, மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- நீர் தேரை ஓட்டிக்கொண்டு பட்டணத்திற்குள் நுழைந்து முன்னதாகவே மாளிகைக்குப் போய்ச் சேருவீராக. நாங்கள் இங்கு இறங்கியிருந்து, நாளை உதயத்தில் உங்கள் பட்டணத்தைப் பார்க்க வருகின்றோம்.

அக்ரூரன் சொல்லுகிறான்:- ப்ரபூ! உங்களை விட்டு  நான் தனியே பட்டணத்திற்குள் நுழைய மாட்டேன்,  நாதா! உன் பக்தனாகிய என்னைக் கைவிடலாகாது. நீ பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம் (கன்றிடம் தாய் பசுவிற்கும், குழந்தையிடம் தாய்க்கும் உள்ள பரிவு, அன்பு, ப்ரீதி) உடையவனல்லவா? ஆகையால், என்னைத் தனியே விடவேண்டாம். இந்த்ரியங்களால் விளையும் அறிவுகளுக்கு எட்டாத பரமனே! நீயும் இப்பொழுதே என்னுடன் புறப்பட்டு வருவாயாக, நாமெல்லோரும் போவோம். தேவச்ரேஷ்டனே! உன் தமையனான பலராமனோடும், கோபாலர்களோடும், நண்பர்களோடும் வந்து நீ எங்கள் க்ருஹத்தை நாதனோடு கூடினதாகச் செய்ய வேண்டும். எந்தப் பாததூளியை அலம்பின ஜலத்தைப் பருகினும், சிரத்தில் தரிப்பினும், எங்கள் பித்ருக்களும், அக்னிகளும், தேவதைகளும் த்ருப்தி அடைகின்றார்களோ, அத்தகைய உன் பாத தூளியால், நீ க்ருஹஸ்தர்களான எங்கள் க்ருஹத்தைப் புனிதம் செய்வாயாக. 

பலி சக்ரவர்த்தி உன் பாதங்களை அலம்பிப் புகழத் தகுந்தவனும், பெருங் குணங்களுடையவனுமானான்; மற்றும், உன் ஸங்கல்பத்தினால், நிகரில்லாத ஐச்வர்யத்தையும், அனன்ய ப்ரயோஜனர்களான (பகவானைத் தவிர வேறு பலனை விரும்பாத, வேண்டாதவர்களான) உன் பக்தர்கள் பெறும்படியான பரமகதியையும் பெற்றான். உன் பாதார விந்தங்களை அலம்பின ஜலம் மிகவும் பரிசுத்தமானது; அதுவே கங்கையாகப் பெருகி, மூன்று லோகங்களையும் புனிதம் செய்தது. ருத்ரன், அந்த ஜலத்தைத் தன் தலையால் தரித்தான். மற்றும், அந்த ஜலத்தினால், ஸகர புத்ரர்கள் ஸ்வர்க்கம் அடைந்தார்கள். ப்ரஹ்மன் முதலிய தேவர்களுக்கும் தேவனே! ஜகத்திற்கெல்லாம் நாதனே! உன்னைக் காதால் கேட்கிலும், வாயால் சொல்லினும், அவர்களுக்கு அவை புண்யத்தை விளைக்கும். புண்யமான ச்ரவண (கேட்கக்கூடிய) கீர்த்தனங்களை உடையவனே! யாதவர்களில் சிறந்தவனே! சிறப்புடைய ப்ரஹ்மாதிகளாலும் புகழப்படும் பரமனே! உத்தமச்லோகனே! (சிறந்த புகழுடையவனே!) நாராயணா! உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- யாதவர்களின் குலத்திற்கெல்லாம் துரோஹம் செய்கின்ற கம்ஸனைக் கொன்ற பின்பு, தமையனுடன் கூடி, உம்முடைய க்ருஹத்திற்கு நான் வரப்போகிறேன். மற்ற நண்பர்களுக்கும் ப்ரியம் செய்யப் போகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பகவானால் மொழியப்பட்ட அவ்வக்ரூரன், சிறிது மன வருத்தமுற்றவனாகவே மதுராப்புரியுள் நுழைந்து, ராம க்ருஷ்ணர்களை அழைத்துக் கொண்டு வந்தமையாகிற தான் செய்த கார்யத்தைக் கம்ஸனுக்குத் தெரிவித்து, தன் க்ருஹத்திற்குச் சென்றான். பிறகு, மற்றை நாள் காலையில் மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், பலராமனோடு கூடி, கோபர்களால் சூழப்பட்டு, மதுராப் புரியைப் பார்க்க விரும்பி, அதற்குள் நுழைந்தான். ஸ்படிக ரத்னங்களால் இயற்றின உயர்ந்த கோபுர வாசற்களும், மற்ற வாசற்களும் அமைந்து ஸ்வர்ணத்தினால் இயற்றப்பட்ட பெரிய கதவுகளும், தோரணங்களும், செம்பு, பித்தளை இவைகளால் இயற்றப்பட்ட தான்ய சாலை முதலிய கொட்டாரங்களும், உத்யானங்களும் (தோட்டங்களும்), அழகிய உபவனங்களும் நிறைந்து, அகழிகளால் நுழைய முடியாததுமான அம்மதுராபுரியை ஸ்ரீக்ருஷ்ணன் கண்ணுற்றான்.  

அந்நகரம், ஸ்வர்ணமயமான நாற்சந்தி வீதிகளாலும், வீட்டின் புழைக்கடைத் தோட்டங்களாலும்,  அம்மட்டன், வண்ணான், கருமான், தட்டான், முதலிய கைத்தொழிலர்களின் இருப்பிடங்களாலும், மற்றும் பல க்ருஹங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, வைடூர்யம், வஜ்ரம், ஸ்படிகம், இந்த்ர நீலம், பவழம், முத்து, மரகதம் இவை இழைக்கப் பெற்ற கொடுங்கைகளிலும், திண்ணைகளிலும், சாளரங்களின் அந்த்ரங்களிலும், கல்படுத்த பூமிகளிலும் உட்கார்ந்து புறாக்களும், மயில்களும் குலாவப்பெற்று, ராஜ மார்க்கங்களும், கடைத்தெருவுகளும், நாற்சந்தி வீதிகளும் தெளித்து, ஆங்காங்குப் புஷ்பங்களும், தளிர்முளைகளும், பொரிகளும், அக்ஷதைகளும் இறைத்து, தயிர், சந்தனம் இவை பூசின பூர்ண கும்பங்களாலும், புஷ்பங்களாலும், கொடி விளக்குகளாலும், தளிர்களாலும், குலைகளோடு கூடின வாழை மரங்களாலும், அத்தகைய பாக்கு மரங்களாலும், த்வஜங்களாலும், பட்டு வஸ்த்ரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட வீட்டுவாசற்களை உடையதுமாகி, மிகவும் அழகாயிருந்தது. (அந்நகரத்தில், வீட்டு வாசல்கள் தோறும் திண்ணைகளில் இருபுறத்திலும் தண்டுலங்களைப் (அரிசியைப்) பரப்பி, அவற்றின் மேல் பூர்ண கும்பங்களை அமைத்து, அவற்றில் தயிரையும், சந்தனத்தையும் பூசி, அதன் மேல் அக்ஷதையை அப்பி, அந்தப் பூர்ண கும்பங்களைச் சுற்றிப் புஷ்பங்களை இறைத்து, கும்பங்களின் கழுத்தில் பட்டு வஸ்த்ரங்களைச் சார்த்தி, அவற்றின் வாயில் மா முதலிய தளிர்களைச் சேர்த்து, அந்த மாவிலைகளின் இடையில் தீபங்களை வரிசை வரிசையாக ஏற்றி வைத்து, அருகாமையில் குலையோடு கூடின வாழை மரங்களும், பாக்கு மரங்களும், த்வஜங்களும், தோரணங்களும் நாட்டப்பட்டிருந்தன. இத்தகைய அந்த மதுராப்புரியுள் நண்பர்களோடு கூடி ராஜ மார்க்கத்தினால் நுழைகின்ற வஸுதேவ குமாரர்களான அந்த ராம க்ருஷ்ணர்களைப் பார்க்கப் பட்டணத்து மடந்தையர்கள் விரைந்தோடி வந்து, ஆங்காங்கு நிறைந்தார்கள்.  

மன்னவனே! சிலர், மிக்க ஆவலுடன் உப்பரிகைகளின் மேல் ஏறினார்கள். சிலர், வேகத்தில் விவேகமற்று, ஆடைகளையும், ஆபரணங்களையும், விபரீதமாகத தரித்து வந்தார்கள். சிலர், இரட்டையாகத் தரிக்க வேண்டிய கை வளை முதலியவற்றில் ஒன்றை அணிந்து, மற்றொன்றை மறந்து வந்தார்கள். சிலர், ஒரு காதில் ஓலையும், ஒரு காலில் தண்டையும் அணிந்து, ஒரு கண்ணுக்கு மையிட்டு, இரண்டாம் கண்ணுக்கு மையிட மறந்து, வந்தார்கள். போஜனம் செய்து கொண்டிருந்த சிலர், அதை அப்படியே துறந்து, ஸ்ரீக்ருஷ்ணனைக் காண்கையாகிற மஹோத்ஸவத்தை அனுபவிக்க ஓடி வந்தார்கள். எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்த சிலர்,  ஸ்னானம் செய்யாமல், அப்படியே ஓடிவந்தார்கள். தூங்கிக்கொண்டிருந்தவர், சப்தத்தைக் கேட்டு, திடீரென்று எழுந்து வந்தார்கள். குழந்தைக்கு முலை கொடுத்துக் கொண்டிருந்த தாய்மார்கள், அக்குழந்தைகளை விட்டு விரைந்தோடினார்கள். 

மதித்த யானையின் நடை போன்ற நடையுடையவனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு மனக்களிப்பை விளைப்பவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், தன் திறமைகளை வெளியிடவல்ல லீலைகளாலும், புன்னகைகளாலும் கண்ணோக்கங்களாலும், அப்பட்டணத்து மடந்தையர்களின் கண்களுக்கு மஹாநந்தத்தை விளைத்துக் கொண்டு, அவர்களின் மனங்களைப் பறித்தான். 

சத்துருக்களை அழிப்பவனே! அந்த ஸ்ரீக்ருஷ்ணனை வெகு நாளாகக் கேள்விப்பட்டிருந்தார்களாகையால், அவனைத் தொடர்ந்த மனமுடைய அப்பட்டணத்து மடந்தைகள், அம்மஹானுபாவனைக் கண்டு, அவனுடைய கண்ணோக்கத்தினாலும், புன்னகையாகிற அம்ருதப் பெருக்கினாலும், வெகுமதி கிடைக்கப் பெற்று, கண்வழியால் மனத்தில் புகுந்திருக்கின்ற ஆநந்த மூர்த்தியாகிய அப்பரமபுருஷனை அணைத்து, உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகப்பெற்று, நெடு நாளாக அவனைக் காண நேராமையால் உண்டான அளவற்ற மன வருத்தத்தைத் துறந்தார்கள். 

ஸந்தோஷத்தின் மிகுதியால், தாமரை மலர் போன்ற முகம் மலரப்பெற்ற அம்மடந்தையர் மணிகள்,  உப்பரிகைகளின் நுனிமேல் ஏறி, புஷ்ப ஸமூஹங்களை ராம க்ருஷ்ணர்களின் மேல் இறைத்தார்கள். ஆங்காங்கு ப்ராஹ்மண பத்தினிகள், மிகவும் ஸந்தோஷமுற்று, தயிர், அக்ஷதை, ஜலம் நிறைந்த குடங்கள், பூமாலை, சந்தனம் இவைகளாலும், உபஹாரங்களாலும், ராம க்ருஷ்ணர்களைப் பூஜித்தார்கள். அப்பட்டணத்து மடந்தையர்கள், ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து, “ஆ! கோபிகைள் என்ன பெருந்தவம் செய்தார்களோ? ஏனென்றால், அந்தக் கோபிகைகள், மனுஷ்ய லோகத்திற்கு மஹோத்ஸவத்தை விளைக்கின்ற இந்த ராம க்ருஷ்ணர்களைக் கண்டு களிக்கின்றார்களல்லவா? இது ஸாதாரணமாய்க் கிடைக்கக் கூடியதன்றல்லவா? ஆகையால், அவர்கள் பெரிய தவம் செய்திருக்க வேண்டும்” என்று ஒருவர்க்கொருவர் மொழிந்து கொண்டார்கள். 

அப்பொழுது, மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், வழியில் வஸ்த்ரங்களை வெளுப்பவனும்,  சாயந்தோய்ப்பவனுமாகிய ஒரு வண்ணான் வரக்கண்டு, “ஓ வண்ணானே! மேன்மைக்குரியவர்களான எங்களுக்குத் தகுந்த வஸ்த்ரங்களைக் கொடுப்பாயாக! கொடுப்பாயாயின், உனக்கு மேலான நன்மை உண்டாகும் இவ்விஷயத்தில் ஸந்தேஹம் இல்லை” என்று சலவை செய்து அற்புதமாயிருக்கின்ற வஸ்த்ரங்களைத் தனக்குக் கொடுக்கும்படி அவ்வண்ணானை வேண்டினான். 

எல்லாவற்றிலும் பூர்ண காமனான (விருப்பங்கள் முழுமையாக அடையப்பெற்றவனான) பகவானால் வேண்டப்பெற்ற அவ்வண்ணான், ராஜாவான கம்ஸனுடைய ப்ருத்யனும் (சேவகனும்), கொடிய மதம் (செருக்கு) உடையவனுமாகையால், அவ்வாறு கேட்டதற்குக் கோபமுற்று, “அட துர்மார்க்கர்களே (கெட்ட வழியில் நடப்பவர்களே)! பர்வதத்திலும் (மலையிலும்), வனத்திலும் (காட்டிலும்) ஸஞ்சரிக்கின்ற நீங்கள் இத்தகைய வஸ்த்ரங்களைத்தான் உடுத்துக் கொள்கின்றீர்களோ? உங்கள் அதிகாரத்தை ஆலோசிக்காமல்,  ராஜாக்களுக்கு உரிய வஸ்துக்களை விரும்புகிறீர்களே. இதென்ன மதி (புத்தி) கேடு. மூடர்களே! விரைந்தோடிப் போவீர்களாக. ஜீவிக்கவேண்டுமென்னும் விருப்பம் உளதாயின், இவ்வாறு ப்ரார்த்திக்கவேண்டாம். இவ்வாறு ப்ரார்த்திப்பீர்களாயின், ராஜபுருஷர்கள், துஷ்டர்களான உங்களைக் கட்டியடித்து, உங்கள் சொத்தையும் பிடுங்கிக்கொள்வார்கள்” என்று எடுத்தெறிந்தாற்போல் அலக்ஷ்யமாக மொழிந்தான். 

இவ்வாறு வண்ணான் பிதற்றிக் கொண்டிருக்கையில், மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் கோபித்து, கை நுனியால் அவன் தலையைச் சரீரத்தினின்று கீழே விழத் தள்ளினான். அப்பால், அவ்வண்ணானைத் தொடர்ந்தவர்கள் அனைவரும், துணி மூட்டைகளைப் போட்டு  நாற்புறத்திலும் ஓடிப்போனார்கள். அச்சுதன், தங்களுக்கு வேண்டிய வஸ்த்ரங்களை எடுத்துக்கொண்டான். அப்பொழுது, பலராமனும் ஸ்ரீக்ருஷ்ணனும், தங்களுக்கு இஷ்டமான வஸ்த்ரங்களை உடுத்து, மற்றவைகளைக் கோபர்களுக்குக் கொடுத்து, சிலவற்றை அவ்விடத்திலேயே போட்டுப் போனார்கள். 

அப்பால், ஒரு சேணியன் (தையற் கலைஞன்) பல வர்ணங்களையுடைய ஆடைகளாகிற ஆபரணங்களால் அவர்களுக்குத் தகுந்தபடி ப்ரீதியுடன் அலங்காரம் செய்தான். அப்பொழுது, பலவகை அலங்காரங்களை அணிந்து, உத்ஸவ காலங்களில் நன்கு அலங்கரிக்கப்பட்ட வெளுப்பும், கறுப்புமான இரண்டு பால கஜங்கள் (யானைக்குட்டிகள்) போல் விளங்கினார்கள்.

அனந்தரம் (பிறகு), மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்தச் சேணியனுக்கு (தையற் கலைஞனுக்கு) அருள்புரிந்து, மோக்ஷம் கொடுத்தான். மற்றும், அவனுக்கு இவ்வுலகில் மேலான ஸம்பத்தையும், பலத்தையும், ஐச்வர்யத்தையும், தன்னை பற்றின நினைவு மாறாதிருக்கையையும், இந்த்ரியங்களின் உறுதியையும், கொடுத்தான். பிறகு, ஸுதாமனென்னும் பெயருடைய மாலாகாரனுடைய ( பூமாலை கட்டுகிறவன்) க்ருஹத்திற்குச் சென்றார்கள். அவனும், அவர்களை தூரத்திலேயே எழுந்து, எதிர்கொண்டு வந்து, பூமியில் தலை சாய்த்து, நமஸ்காரம் செய்தான். அம்மாலாகாரன், அவர்களுக்கு ஆஸனம் கொண்டு வந்து கொடுத்து, பாதங்களில் பாத்யமும் ஸமர்ப்பித்து, அர்க்யம் முதலிய பூஜா த்ரவ்யங்களால் அவர்களையும், அவர்களோடு கூட வந்தவர்களையும் பூஜித்தான். மற்றும், அவன் அந்த ராம க்ருஷ்ணர்களை நோக்கி, “உங்கள் வரவினால் எங்கள் ஜன்மம் பயன் பெற்றது; எங்கள் குலமும் பரிசுத்தமாயிற்று. எங்கள் பித்ருக்களும், தேவதைகளும், ரிஷிகளும் ஸந்தோஷம் அடைந்தார்கள். நீங்கள் ஸமஸ்த லோகங்களுக்கும் மூல காரணமாயிருப்பவர்கள், இத்தகைய நீங்கள் ஸாதுக்களின் யோக க்ஷேமங்களை நிறைவேற்றும் பொருட்டு, ஸங்கல்பத்தினால் இவ்வுலகத்தில் அவதரித்தீர்கள். நீங்கள் ஜகத்திற்கு அந்தராத்மாவாயிருப்பவர்கள்; ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பர்களாயிருப்பவர்கள். ஆகையால், உங்களுக்கு விஷம த்ருஷ்டி (வேற்றுமை பாராட்டும் பார்வை) கிடையாது (சம நோக்கு உடையவர்கள்). நீங்கள் ஸமஸ்த பூதங்களிடத்திலும் ஸமமாயிருப்பவர்கள்; மற்றும், தங்களை எவர்கள் பணிகிறார்களோ, அவர்களை ப்ரீதியுடன் தொடரும் தன்மையுடையவர்கள். (பக்தர்களை அனுக்ரஹிப்பது பக்ஷபாதத்தினாலன்று (வேண்டியவன், வேண்டாதவன் என்கிற என்ணத்தினால் அன்று). தன்னை அடுத்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிற கல்ப வ்ருக்ஷத்திற்குப் பக்ஷபாதமென்று (ஓரவஞ்சனை என்று) சொல்ல முடியாதல்லவா. பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) இல்லாமைக்காகவே, ப்ராணிகளின் பணிவிடையாகிற வ்யாஜத்தை எதிர்பார்க்கின்றீர்கள். ப்ருத்யனாகிய என்னை உங்களிஷ்டப்படி  நியமிப்பீர்களாக. நான், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? உங்களால் இஷ்டப்படி நியமிக்கப்படுகையாகிற இதுவே, ஜீவாத்மாவுக்கு நீங்கள் செய்யும் அனுக்ரஹமாம்” என்று மொழிந்தான். 

ராஜச்ரேஷ்டனே! இவ்வாறு  விண்ணப்பம் செய்கின்ற அந்த ஸுதாமன், அவர்களுடைய அபிப்ராயத்தை அறிந்து, ஸந்தோஷமுற்ற மனமுடையவனாகி, சிறந்த மணமுடைய புஷ்பங்களால் கட்டின மாலையை அவர்களுக்குக் கொடுத்தான். வரம் கொடுக்க வல்லவர்களாகிய அந்த ராம க்ருஷ்ணர்கள், அப்பூமாலைகளால் அலங்கரித்துக் கொண்டு, சரணம் அடைந்த அம்மாலாகாரனுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார்கள். மஹானுபாவனாகிய அந்த ஸுதாமனும், சேதனா சேதன ரூபமான ஸமஸ்த ப்ரபஞ்சத்திற்கும் அந்தராத்மாவாகிய அந்தப் பகவானிடத்தில் மாறாத பக்தியையும், அவனுடைய பக்தர்களிடத்தில் ஆனுகூல்யத்தையும் (நட்பையும்), அவனுக்குச் சரீரங்களான பூதங்களிடத்தில் பிறர் துக்கங்களைப் பொறுக்காமையாகிற மேலான மன இரக்கத்தையும் வேண்டினான். ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு அவன் வேண்டின படி வரங்களைக் கொடுத்து, அவன் வேண்டாதிருப்பினும், வம்ச வ்ருத்தியுடைய (வாழையடி வாழையாக குலம் முழுவதையும் வாழவைக்கும்) ஸம்பத்து (செல்வம்), பலம், ஆயுள், புகழ், காந்தி இவைகளையும் கொடுத்து, தமையனாகிய பலராமனுடன் புறப்பட்டுப் போனான். 

நாற்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக