49. மாரீச மான் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

49. மாரீச மான் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

மாரீசன் ராவணனைப் பார்த்துச் சொன்னான் :

“ராக்ஷச மன்னனே! நீ சொன்னதையெல்லாம் கேட்டேன். உன் பேச்சைக் கேட்டு எனக்கு எல்லையற்ற துக்கம் உண்டாகிறது. யோசனை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது கேட்பதற்கு இனிமையான வார்த்தைகளைப் பேசுவது சுலபம். ஆனால் பிரியப்படாத ஹிதத்தைக் கண்டிப்பாகச் சொல்லுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள்; சொன்னாலும் யாரும் கேட்பார் இல்லை. எப்படியாயினும் உனக்கு நன்மையைச் சொல்ல விரும்புகிறேன். தித்திப்பாகப் பேசிவிட்டு உன்னைத் திருப்தி செய்து விட்டு, உன்னை அபாயத்தில் தள்ளிக் கெடுத்து விடுவது எனக்கு இஷ்டமில்லை.


“ராமனைப் பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறவர்கள் உண்மையைச் சொல்லவில்லை. அறியாதவர்களுடைய பேச்சைக் கேட்டு ஏமாந்து போகாதே! ராமன் மகாவீரன். உத்தம குணங்கள் வாய்ந்தவன். அவனுடைய கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டு குலமும் லங்காபுரியும் அழிந்து போவதற்கு வழி தேடாதே. சீதை உன்னை நாசம் செய்வதற்காகவே அவதரித்தாளோ என்னவோ! உன்னை அரசனாகக் கொண்ட அரக்கர் குலமும் லங்காபுரியும் சீக்கிரத்தில் ராமனால் நாசம் செய்யப்படும். உலகத்திலுள்ள ராக்ஷச குலமே நிர்மூலமாவதற்கு வழி தேடுகிறாய்! யார் உனக்கு இந்த எண்ணத்தைத் தூண்டியது? பெரும் விபத்துக்கு உன்னையும் உன் ராஜ்யத்தையும் உன் குலத்தாரையும் ஆளாக்கவே இந்தக் கெட்ட உபதேசம் யாரோ செய்திருக்கிறார்கள்.


ராமனுடைய தந்தை அவனிடம் குற்றம் கண்டு அவனைக் காட்டுக்குத் துரத்தவில்லை. அவனைப் பற்றி நீ சொன்னதெல்லாம் தவறு. அரசன் தன் மனைவி கைகேயிக்குக் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றித் தருவதற்காக ராமன் தானாக வனம் சென்றான். தந்தையின் சத்தியத்தைக் காப்பதற்காக ராஜ்யம், போகம் எல்லாவற்றையும் தானாகவே விட்டுவிட்டு தண்டகாரண்யம் சென்றான். சிற்றின்பக்காரன், மோசக்காரன் என்றெல்லாம் உனக்கு யார் சொன்னது? சுத்தப் பொய். ராமன் தருமமே உருவெடுத்த புருஷன். அறவழியில் பராக்கிரமம் செலுத்துகிறவன். தேவர்களுடைய உலகத்தில் இந்திரனைப் போல் இந்த உலகத்து மக்களில் ராமன் முதன்மையிடம் பெற்ற வீரன். அவன் மனைவியை நீ ஆசைப்படலாமா? இது நடக்கும் காரியமா? அவள் உன் வசப்படுவாளா? சூரியனை ஏமாற்றிச் சூரியனுடைய ஒளியைத் திருட முடியுமா? ஜனக புத்திரி சீதையின் தேஜஸை நீ தீண்ட முடியுமா? எரிந்து போவாய்! ராமனுடைய பாணங்களுக்கு இரையாகாதே. அவனை உனக்கு ஒரு யமனாகச் செய்து கொள்ளாதே! அவனால் காக்கப்படும் இந்த நெருப்பைத் தீண்டப் போகாதே. உன் சர்வ நாசத்துக்கு வழி தேடிக் கொள்ளாதே.


பூரணமாக யோசிக்காமல் ஒரு காரியத்தில் பிரவேசிக்கலாகாது. ராமனுடன் யுத்தம் செய்து நீ வெற்றி பெறமாட்டாய். அரக்கர்களின் அரசனே! நான் சொன்னதைப் புறக்கணிக்காதே. முன்னாள் நான் தேக பலங்கொண்ட செருக்கினால் ரிஷிகளைக் கொன்று தின்று அவர்களுடைய விர தங்களையும் வேள்விகளையும் அழித்து வந்தேன் அல்லவா? அந்தக் காலத்தில் விசுவாமித்திர முனிவர் செய்த வேள்வியைக் கெடுக்கப் போனேன். இந்த ராமன் அந்த நாளில் சிறுவனாக இருந்தவனை விசுவாமித்திர முனிவர் தசரதனைக் கேட்டுத் தன் வேள்வியைக் காக்க அழைத்து வந்திருந்தார். அந்த முனிவருக்கு இவனுடைய சௌரியம் அப்போதே தெரிந்திருந்தது. நான் வேள்வித் தீயை அழிக்கச் சென்றேன். இந்த பாலன் தன் வில்லை வளைத்துச் செலுத்திய பாணமானது என்னைச் சமுத்திரக்கரையில் கொண்டு போய்த் தள்ளி, வெகு நேரம் பிரக்ஞை இழந்து கிடந்தேன்.


இவனுடைய கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதே. செல்வமும் சிற்றின்பங்களும் அடைந்து சுகமாக இருக்கும் உன் அரக்கர் குலத்திற்கு நாசத்தைத் தருவித்துக் கொள்ளாதே. சீதையை அடையப் போய் அழகும் செல்வமும் நிறைந்திருக்கும் உன் நகரத்தை வீணாகப் பாழாக்கி மரணம் அடையாதே. நீ அடையப் போகும் நாசம் இப்போதே என் மனக் கண் முன் நிற்கிறது. எரியும் லங்கையைப் பார்க்கிறேன். பெரும் பாவத்தில் இறங்கப் பார்க்கிறாய், வேண்டாம். உன்னுடைய கோபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதாயின் ராமனுடன் நேராக யுத்தம் செய். அக்கிரம மோசத்தில் உன்னை இழக்காதே. உன் மனைவிகளுடன் சுகமாக இரு. நூற்றுக்கணக்காக வைத்திருக்கிறாயே, அது போதாதா? உன் பந்து மித்திரர்கள் அனைவருக்கும் வினாசம் தருவித்துக் கொடுத்து நீயும் அழிந்து போவதற்கு வழி தேடாதே! யமனை அழைக்காதே!”


இவ்வாறு ராவணனுடைய நன்மையைக் கருதி மாரீசன் வெகு நேரம் பேசினான். அது ராவணனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. காமத்தால் தூண்டப்பட்டவனுக்கு நல்ல யோசனை சொல்லி என்ன பயன்? நோயாளி மருந்தை வேண்டாம் என்பதுபோல் ஒரே பிடிவாதமாக ராவணன், “நீ சொல்லுவது சரியல்ல, நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று மாரீசனுடைய புத்திமதியைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.


“அரசன் ஒருவனிடத்தில் போய் இன்னது செய்யலாமா, வேண்டாமா என்று யோசனை கேட்டால் அதைப் பற்றி அவன், லாபா லாபம் ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் உன்னிடம் நான் யோசனை கேட்க வரவில்லை. ‘இதைச் செய்யத் தீர்மானித்தேன். இதற்கு நீ இந்த உதவி செய்ய வேண்டும்’ என்று அரசன் கேட்கும்போது அரசனிடம் நடந்துகொள்ள வேண்டிய மரியாதையை மறந்து, ‘நீ செய்யப் போவது தவறு’ என்று சொல்லுகிறாய். நான் இந்த விஷயத்தில் முற்றிலும் ஆலோசித்து முடிவுக்கு வந்து விட்டேன். இந்த மானிடப் பதருடன் நான் யுத்தம் செய்யலாகாது. ஊரிலிருந்து துரத்தப்பட்டவன், அதமன். ஒரு ஸ்திரீயின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு ராஜ்ய பதவியை இழந்த முட்டாள், இவனோடு நான் சமான எதிரியாக நின்று போர் செய்வேனா? அது முடியாது. இத்தகைய ஆளுக்குச் சரியான தண்டனை அவன் மனைவியைத் தூக்கிப் போய் அவனை அவமானப்படுத்துவதே. இது தீர்மானித்து விட்ட சங்கதி. அதைப்பற்றி உன்னைக் கேட்கவில்லை. நான் சொல்லுவதை நீ செய்ய வேண்டும். நீ ஒரு விசித்திர மாய மான் வடிவம் எடுத்துக்கொண்டு சீதையின் கண்ணைக் கவர்ந்து இழுக்க வேண்டும். இதைத்தான் நான் கேட்கிறேன். மானைப் பிடிக்க சீதை ராமனை அனுப்புவாள். நீ ராமனைத் தூரமாக இழுத்துச் சென்று 'ஹா சீதா! ஹா, லக்ஷ்மணா!' என்று ராமன் குரலில் கூப்பிட வேண்டியது. அதைக் கேட்டு ராமனுக்கு ஏதோ ஆயிற்று என்று சீதை லக்ஷ்மணனை ராமனுக்குச் சகாயமாக அனுப்பி விடுவாள். நான் அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீதையைத் தூக்கிக் கொண்டு லங்கைக்குப் போவேன். இந்தக் காரியத்தில் நீ உதவி செய்துவிட்டுப் பிறகு உன் இஷ்டப்படி போகலாம். இல்லையென்றாயாகில் இங்கேயே என்னால் வதம் செய்யப்படுவாய்” என்றான்.


எவ்வளவு சொல்லியும் ராவணன் கேளாமலிருப்பதைக் கண்டு, ‘இவன் யமன் வீட்டுக்குப் போவதற்கு அவசரப்படுகிறான். காமத்தால் தூண்டப்பட்டு மாள்வது இவன் விதியாக இருக்கிறது. இவனால் கொல்லப்பட்டு என் உயிர் போவதைவிட ராமனாலேயே கொல்லப்படுவது நலம். பகைவனால் கொல்லப்பட்டால் தோஷமில்லை' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மாரீசன் ராவணன் சொன்னதைச் செய்ய ஒப்புக் கொண்டான்.


“ராவணா! நான் உனக்கு இதத்தைச் சொல்லிப் பார்த்தேன். நீ கேட்கவில்லை. நீ சொன்னது போல் நான் செய்தால் என் உயிர் போவது நிச்சயம். உன் உயிரும் அதற்குப் பின் சீக்கிரத்தில் போவதும் நிச்சயம். லங்கை அழிவதும் நிச்சயம். உன் குலம் நிர்மூலமாவதும் நிச்சயம். உன்னுடைய க்ஷேமத்தை விரும்பாத எவனோ ஒரு சத்துரு உன்னை இந்தக் காரியத்தில் பிரவேசிக்கத் தூண்டி விட்டிருக்கிறான். உன் பேரில் யாருக்கோ பொறாமை. அவன் உனக்குத் துராலோசனை சொல்லியிருக்கிறான். நீ பிடிவாதம் செய்கிறாய். உன்னால் மாள்வதைவிட பகையாளிக்கு என் உயிரைக் கொடுத்து விடுவதே மேல். தண்டகாரண்யம் போகலாம், எழு” என்றான் மாரீசன்.


ராவணன் மகிழ்ச்சியடைந்து மாரீசனைத் தழுவிக் கொண்டு, “பழைய மாரீசனைக் கண்டேன்” என்றான்.

*

இருவரும் ரதம் ஏறி தண்டகாரண்யம் நோக்கிச் சென்றார்கள். பல பட்டணங்களையும் காடுகளையும் மலைகளையும் ஆறுகளையும் அநேக ராஜ்யங்களையும் பார்த்துக் கொண்டே ஆகாய மார்க்கமாகச் சென்றார்கள். சீக்கிரமாகவே தண்டகாரண்யத்தில், ஒரு வாழைத்தோட்டத்தின் மத்தியில் ராமனுடைய ஆசிரமத்தைக் கண்டார்கள்.


பூமியில் இறங்கி ராவணன் மாரீசனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, “அதோ ராமனுடைய ஆசிரமம் இருக்குமிடம் காணப்படுகிறது. யோசித்தபடி எல்லாம் செய்வாயாக” என்றான். 


உடனே மாரீசன் தன் சரீரத்தை மாற்றிக் கொண்டு மான் உருவம் தரித்துவிட்டான்.


மானின் அழகே அழகு. அதன் உடலில் ஒவ்வொரு அங்கமும் விசித்திர அழகு. ஆகாயத்தில் மழை நின்றபோது காணப்படும் வானவில்லின் பல வர்ணங்களோடும் கண்ணைக் கவரும் விதத்தில் அந்த மான் விளங்கிற்று. தங்கமும் வெள்ளியும் வைடூரியமும் பலவித மணி ரத்தினங்களும் புஷ்பங்களும் போல் அதன் உடலில் மாறி மாறிக் காணப்பட்டது. தங்கப் பிரதிமையில் ரத்தின மணிகள் இழைத்து உயிருடன் ஓடினதுபோல் விளங்கிற்று. அதுவரையில் உலகத்தில் காணாத மானாக அந்த மாயமான் ஆசிரமத்துக்கு முன் இங்குமங்கும் நடந்தது, படுத்தது, எழுந்து துள்ளிக் குதித்தது. கொஞ்ச நேரம் புல் மேயும், சில சமயம் தலையைத் தூக்கிச் செடிகளிலுள்ள இளந்தளிரைத் தின்னும், சில சமயம் ஆசிரமத்தை நெருங்கிப் போய் மெள்ள நடக்கும், பிறகு திடீர் என்று துள்ளித் தூர ஓடும். மற்ற மான் கூட்டங்களோடு சில சமயம் சேர்ந்து நடக்கும். சில சமயம் அவற்றை விட்டு விலகும். மற்ற மான்கள் அதை மோந்து மோந்து பார்த்துச் சந்தேகப்பட்டு விலகும்.


சீதை அச்சமயம் வனத்தில் புஷ்பம் பறித்துக் கொண்டிருந்தவள், இந்த மானைப் பார்த்து, 'ஓ என்ன அழகு!' என்று கண் கொட்டாமல் பார்த்து நின்றாள். அப்போது மானும் அவளைப் பார்த்து அவளுக்கு எதிரில் இங்குமங்கும் ஓடியதானது வனத்துக்கே புது அழகு தந்ததைப் போலிருந்தது.

*

“ஓடி வாருங்கள், ஓடிவாருங்கள்!” என்றாள் சீதை, தான் பார்த்துக் கொண்டிருந்த மானை ராமனும் லக்ஷ்மணனும் பார்க்கவேண்டுமென்று.


“சீக்கிரம் வாருங்கள், வாருங்கள்” என்றாள் மறுபடியும்.


அவர்களும் வந்து அந்த விசித்திர மானைப் பார்த்து வியந்தார்கள். 


லக்ஷ்மணனுக்குச்சந்தேகம் உண்டாயிற்று. ‘இது மானல்ல, மாரீசன்’ என்று உடனே அவனுக்குத் தோன்றிற்று. அதற்கு முன் மாரீசன் மானாக உருவம் தரித்துக் கொண்டு காட்டில் வேட்டையாட வந்த பலரை ஏமாற்றிக் கொன்று தின்று கொண்டிருந்தது ராம லக்ஷ்மணர்களுக்குத் தெரியும்.


லக்ஷ்மணன் “இத்தகைய மிருகம் இயற்கையில் கிடையாது. இது ராக்ஷசனுடைய மோசம்” என்றான். 


“இந்த மானைப் பிடித்து வாருங்கள், இதை ஆசிரமத்தில் கட்டி வளர்க்கலாம். நான் காட்டில் பார்த்த அத்தனை மிருகங்களிலும் இது மிக அழகாக இருக்கிறது. ஐயோ! அதைப் பாருங்கள். என்ன நிறம், என்ன விளையாட்டு, இதற்குச் சமானம் ஏதுமில்லை” என்று சீதை மானைப் பார்த்துத் தாங்க முடியாத ஆசை மேலிட்டு அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். “இதை எப்படியாவது பிடித்துத் தாருங்கள்” என்று மிக வேண்டினாள்.


“நாம் ஊருக்குத் திரும்பும் காலம் கிட்டி வந்து விட்டது. இதை அயோத்திக்குக் கொண்டு போவோம். காட்டிலிருந்து ஏதாவது விசித்திரப் பொருள் நம்முடைய அந்தப்புரத்துக்குக் கொண்டு போகவேண்டுமல்லவா? பரதன் இதை மிகவும் அனுபவிப்பான். இதை நான் அவனுக்குத் தரவேண்டும். எப்படியாவது, நாதா, இதைப் பிடித்து வாருங்கள்” என்று ராமனை வருந்திக் கேட்டாள்.


லக்ஷ்மணனுக்கு விஷயம் பிடிக்கவில்லை என்று கண்டு, ராமனை இன்னும் அதிகமாக வருந்திக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தாள். ஒரு ஆசை மனத்தைப் பலமாகப் பற்றிக் கொண்டுவிட்டால் அதைத் தடுக்கும் நம்முடைய பந்து மித்திரர்கள் மேல் எவ்வளவு பிரியமானவர்களானாலும் கோபம் உண்டாகி விடுகிறது. இதை பகவான் கீதையில் எவ்வளவு பரிஷ்காரமாகச் சொல்லி யிருக்கிறார், அது அன்று சீதையின் உள்ளத்தில் நிகழ்ந்துவிட்டது.

*

“அதோ தங்கமாகவே இருக்கிறது, பார்! அதோ வெள்ளி மயமாகவே இருக்கிறது, பார்! இதைப் பிடிக்க முடியாமல் போனால் அம்பு எறிந்து, தோலையாவது ஊருக்குக் கொண்டு போவோம். இதைப் போன்ற விசித்திரமான தோல் நாம் பார்க்கப் போவதில்லை. கீழே விரித்து உட்காருவதற்கு எவ்வளவு வினோதமாக இருக்கும்! போய்விடும்! போய்ப் பிடித்து வாருங்கள், அல்லது தோலையாவது எனக்குத் தரவேண்டும்” என்றாள்.


“ஐயோ, அதன் கொம்பைப் பாருங்கள்! இப்படிக் கேட்கிறேனே என்று என் மேல் ஆயாசப் படவேண்டாம்! எனக்கு இதன் பேரில் அவ்வளவு ஆசை. தருவீர்களா, இல்லையா?” என்று விடாமல் ராமனைக் கேட்டுக் கொண்டாள். “நக்ஷத்திரங்கள் போல் பிரகாசிக்கிறது, பாருங்கள்!” என்றாள்.


இவ்வாறு சீதை ஆசைப்படுவதைப் பார்த்து ராமன் நிச்சயம் செய்து கொண்டான். 'லக்ஷ்மணன் சொன்னதில் உண்மை இருந்த போதிலும் ராக்ஷசனாயிருந்தாலென்ன, கொன்று விடுவது நலம்தானே. இதில் பயம் என்ன? பிடிக்க முடியாமல் போனால் அம்பு செலுத்தி மானை அடித்து, சீதைக்குத் தோலைத் தரலாம். அவள் இவ்வளவு பிரியப்படும் பொருளை நான் அவளுக்குச் சம்பாதித்துத் தரவேண்டாமா?' என்று தீர்மானித்துக் கொண்டு, லக்ஷ்மணனுக்குச் சமாதானம் சொல்லி, “வில்லும் அம்பும் கொண்டு வா” என்றான்.


லக்ஷ்மணனுக்குச் சம்மதமில்லை. ஆயினும் ராமன் வில்லும் கையுமாக மானைத் தொடர்ந்து சென்றான்.


லக்ஷ்மணா, ஜாக்கிரதை! சீதையைப் பார்த்துக் கொள். மானைக் கொன்றுவிட்டுச் சீக்கிரம் கொண்டு வந்து விடுகிறேன். கவலைப்படாதே. ராக்ஷசனாயிருந்தாலுமென்ன? வாதாபியின் கதி இந்த ராக்ஷசனுக்கும் ஆகும். மோசம் செய்ய வந்திருந்தால் அகஸ்தியரைப் போல் நானும் மோசக்கார ராக்ஷசனை அவன் மோசத்துக்கே அவனை இரையாக்கிவிட்டு ஒழிப்பேன். என்னை இந்த மான் என்ன செய்யும்? மானாயிருந்தாலும் சரி, அரக்கனாயிருந்தாலும் சரி” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.


“ஜாக்கிரதை! சீதையைப் பார்த்துக் கொள். எந்தச் சமயத்தில் எது நேருமோ என்று வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அலட்சியமாக இருக்காதே!” என்று போகும்போது சொல்லிவிட்டுப் போனான்.


தெய்வம் எல்லாவிதத்திலும் விபத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டது. சாதாரணமாக லக்ஷ்மணன் பரபரப்பாக இருப்பான். இந்தச் சமயம் அவனுக்குச் சந்தேகம் உண்டாகி எச்சரிக்கை செய்தான். அதற்கு எதிரிடையாக, எப்போதும் மிக ஜாக்கிரதையாக இருந்த ராமச்சந்திரன் இந்தச் சமயம் சீதையின் இஷ்டத்தை, சிறிய விஷயத்திலும் பூர்த்தி செய்யவேண்டும் என்று லக்ஷ்மணன் சொன்னதைத் தட்டி மாய மானைத் தொடர்ந்து போய்விட்டான்.

*

ராவணனுக்குப் போதிய அவகாசமும் சந்தர்ப்பமும் தருவதற்காகக் கைக்குச் சிக்குவது போலவே காட்டிக் கொண்டு மானானது ராமனை வெகு தூரம், விதி மனிதனை இழுத்துப் போவது போல், இழுத்துக் கொண்டு போய்விட்டது.


மெல்ல மெல்லக் கால் எடுத்து வைக்கும், ஓடாமல் அங்கே நின்று வெறித்துப் பார்க்கும். திடீர் என்று பயந்தாற்போல் மேலே குதிக்கும். காதை நீட்டும். உடனே நாலு குளம்புகளையும் மார்போடு சேர்த்து மேலே துள்ளும். ஒரே பாய்ச்சலாகக் காட்டிற்குள் காற்று வேகமாக ஓடி மறையும்.


மிதித்தது மெல்ல மெல்ல வெறித்தது, வெருவிமீதில்க் 

குதித்தது, செவியை நீட்டிக் குரபதம் உரத்தில்க் கூட்டி 

உதித்தெழும், ஊதை உள்ளம் என்றிவை உருவச் செல்லும் 

கதிக்கொரு கதியும்வேறே காட்டிய(து) ஒத்த தன்றே. 


மறைந்த மாதிரி கொஞ்ச நேரம் இருந்து திடீர் என்று ஒரு உயர்ந்த இடத்தில் நின்று தன் அழகைத் தனியாகக் காட்டும். மேகங்கள் ஆகாயத்தில் உலாவ அவற்றோடு கலந்து காட்சி தரும். பிடித்துவிடலாம் போல் கிட்ட நிற்கும் - கிட்டப் போனால் தூரமாகப் போய்விடும். நின்றது போல் இருக்கும், அப்படியே மறைந்துவிடும்.


குன்றிடை இவரும் மேகக் குழுவிடைக் குதிக்கும், கூடச் 

சென்றிடின் அகலும், தாழில்த் தீண்டலாம் தகைமைத் தாகும்

நின்றதே போல நீங்கும் நிதிவழி நேயம் நீட்டும் 

மன்றலங் கோதை மாதர் மனம் எனப்போயிற் றம்மா! 


மாரீசனுக்கும் மரணம் கிட்டியது என்று பட்டு விட்டது. அதே கணத்தில் ராமனும் 'இனிப் போதும் தொடர்ந்தது' என்று வில்லை வளைத்து அம்பைச் செலுத்தினான். மாரீசன் “ஐயோ, சீதையே! ஐயோ, லக்ஷ்மணா!” என்று ராமன் குரலில் உரக்கக் கத்தி விட்டு மாண்டான். மாளும் சமயம் நிஜ வடிவம் வந்து விட்டது. மலை போன்ற சரீரத்துடன் மாரீசன் ரத்தம் பெருகப் பூமியில் விழுந்து புரண்டு இறந்தான்.


“லக்ஷ்மணன் சொன்னது மெய்யாயிற்று” என்றான் ராமன். மோசத்தைக் கண்டான்.


“இந்தக் கூக்குரலைக் கேட்டு சீதை என்னெனவோ எண்ணிப் பயப்படுவாளே!” என்று யோசித்தான்.


பிறகு ‘ஆனால் பயம் என்ன? லக்ஷ்மணன் பக்கத்திலிருக்கிறானல்லவா?' என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.


வெய்ய வன்தன் உருவொடு வீழ்தலும்

செய்ய(து) அன்றெனச் செப்பிய தம்பியை 

'ஐயன் வல்லன்! என் ஆருயிர் வல்லன்! நான் 

உய்ய வந்தவன் வல்லன்!' என்றுன்னினான்.


“எத்தகைய தம்பியை நான் பெற்றேன்! வனத்தில் எனக்கு எத்தகைய துணைவனைப் பெற்றேன்!” என்று ராமன் தன் அன்புக்குரிய இளைய பெருமானை நினைத்து நினைத்து மனத்தில் பாராட்டுகிறான். அடுத்த கணம் தம்பிக்கு என்ன நேரிடுகிறது, அவன் காதில் எத்தகைய நாராச மொழிகளைக் கேட்க வேண்டியதாகிறது என்பதை அறியான் ராமன். விதியோவிதி!


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை