“ஐயோ சீதா! ஐயோ லக்ஷ்மணா!” என்று மாரீசன் கதறியதைக் கேட்ட சீதை, அது ராமன் கதறியதே என்று எண்ணி விட்டாள். பெருஞ்சுழற் காற்றில் அகப்பட்ட வாழை மரத்தைப் போல் நடுங்கிப் பதைபதைத்து, “லக்ஷ்மணா! அதோ அண்ணன் குரல் தெரிய வில்லையா? ஓடு, ஓடு” என்றாள்.
தாங்க முடியாத திகிலடைந்து லக்ஷ்மணனைப் பார்த்து, “நாயகனுடைய துயரக் குரல் கேட்கிறதே! ஐயோ, என் உயிர் நிற்காது, நான் மாய்வேன்! போ! போ! நிற்காதே!” என்று பொறுக்க முடியாத துயரத்திலும் பயத்திலும் தத்தளித்துக் கதறினாள்.
“காட்டில் ஏதோ அபாயத்தில் சிக்கி விட்டான். பெரும் கூச்சல் போட்டானே, கேட்கவில்லையா? இன்னும் இங்கே நிற்கிறாயே!” என்று அழுதாள்.
“ராக்ஷசர்களிடையில் உன் அண்ணன் அகப்பட்டுக் கொண்டு கதறுகிறான். ஒரே பாய்ச்சலாக ஓடி அவனைக் காப்பாற்ற வேண்டாமா? சும்மா நிற்கிறாயே!” என்று கதறினாள்.
அரக்கர்களுடைய மோசத்தை அறிந்த லக்ஷ்மணன் அண்ணன் இட்ட ஆணையை நினைவில் கொண்டு அசையாமல் நின்றான்.
ஜானகிக்கு உண்டான கோபமே கோபம்! வயிற்றில் இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்டு, “சுமத்திரையின் மகனே! சத்துருவாகி விட்டாயா? இவ்வளவு நாளும் வேஷம் போட்டாயா? ராமனுடைய மரணத்துக்கா இவ்வளவு நாள் காத்திருந்தாய்? அவன் இறந்தால் அவனுக்குப் பின் என்னை அடைந்து விடலாம் என்று எண்ணி இத்தனை நாள் ஏமாற்றினாயா? துஷ்டனே, ராமன் கதறிக் கூவுவதைக் கேட்டும் போகாமல் இங்கே நிற்கிறாயே? அண்ணனிடம் நீ காட்டிக் கொண்ட பிரியமெல்லாம் பெருஞ் சூழ்ச்சியா? துன்மார்க்கனே!” என்றாள்.
லக்ஷ்மணன் காதுகளை மூடிக் கொண்டான்.
துயரத்தால் துடிதுடித்துக் கொண்டு, உடலெல்லாம் கண்ணீரில் தோய்ந்து புத்தி முற்றிலும் இழந்து போய் இப்படிப் பேசிய சீதையைப் பார்த்து லக்ஷ்மணன் மெதுவாகச் சொன்னான் :
“வைதேகி! உன் புருஷன் தேவ அசுர மானுட ஜாதிகளில் எவன் எதிர்த்தாலும் அவனுடன் போர் செய்து கொன்று விட்டுத் திரும்பி வருவான், இது நிச்சயம். பயப்படாதே! என் அம்மையே! புத்தியை சுவாதீனப் படுத்திக்கொள். பயப்படவேண்டாம்! நம் ராமனை எந்த அரக்கனும் எந்த மிருகமும் எந்தப் பட்சியும் எந்தப் பேயும் எந்தக் கந்தர்வனும் எந்த தேவனும் எந்த அசுரனும் தீண்டமுடியாது. நீ இப்படிப் பேசலாகாது, என் அருமைத் தாயே! ராமனுடைய பலம் எனக்குத் தெரியும். மூன்று உலகத்தில் யார் வந்து அவனை எதிர்த்தாலும் ராமனுடைய வெற்றி நிச்சயம். நீ துயரப்பட வேண்டாம். கொஞ்ச நேரத்தில் உன் நாயகன் அந்த மானைக் கொன்று விட்டு எடுத்துக் கொண்டே வருவான், நீயே பார்ப்பாய்! இந்தக் குரல் அவனுடைய குரல் அல்ல. இது ராக்ஷசனுடைய மாயை. அதனால் நீ ஏமாந்து துயரப் பட வேண்டாம். உன்னை அண்ணன் என்னிடம் ஒப்புவித்து விட்டுப் போயிருக்கிறான். உன்னைத். தனியாக விட்டு விட்டு என்னைப் போகச் சொல்ல வேண்டாம். அண்ணன் ஆணையை நான் மீறலாகாது. ஜனஸ்தான ராக்ஷசர்களை நாம் கொன்றதனால் பழி வாங்க இப்படி ராக்ஷசர்கள் பலவித மோசம் செய்து வருகிறார்கள். அவர்கள் போடும் வேஷங்களையும் மாற்றுக் குரல்களையும் நம்பலாகாது. இது ராமன் போட்ட கூக்குரல் அல்ல; நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம்” என்றான்.
இப்படி லக்ஷ்மணன் சொன்ன போதிலும் சீதை கண்கள் சிவந்து போய்ப் பெரும் கோபமடைந்து சொல்லத் தகாத வார்த்தைகளைச் சொன்னாள் :
“அண்ணன் ஆணை என்று சமாதானம் சொல்லி, அண்ணன் கதறிக் கூவினாலும் போகாமல் அவனைச் சாக விடுகிறாயா? ஆகா, உன்னை நம்பி என்ன மோசம் போனோம் ராமனும் நானும்! நீசனே! துஷ்டனே! ராமனுக்குப் பகையாய் வந்த வஞ்சகனே! ராமனுக்கு ஆபத்து வந்தது என்று மகிழ்ச்சி அடைகிறாயா? ஏமாற்றப் பார்க்கிறாயா? ராமனோடு நீ வனத்துக்கு, வந்த நோக்கத்தை இப்போது நான் கண்டு கொண்டேன். அடே பாவி! பரதனுடைய தூண்டுதலா இது? எல்லாரும் என் நாயகனுடைய சத்துருக்கள் ஆகி விட்டீர்களா? நீங்கள் எல்லாரும் சேர்ந்து என்ன செய்ய யோசிக்கிறீர்கள் ? ராமனோடு வாழ்ந்த நான் உங்களைக் கண்ணெடுத்தும் பார்ப்பேனா? ராமன் இறந்த பிறகு ஒரு நிமிஷம் உயிருடன் இருக்க மாட்டேன், அறிவாய்!” என்றாள்.
மயிர்க் கூச்சமெடுக்கும்படியான இந்த வார்த்தைகளைக் கேட்டு லக்ஷ்மணன் இரண்டு கைகளையும் கூப்பி, “தாயே! என் தெய்வமே! ஜனகருடைய புத்திரியே! இத்தகைய மொழிகள் உன் வாயிலிருந்து வரலாமா? பழுக்கக் காய்ச்சின இரும்பு போல் காதுகளில் புகுகின்றனவே! நீ எண்ணுவது அநீதி, பொய், பார்த்துக் கொண்டிருக்கும் தேவர்கள் சாக்ஷியாகச் சொல்லுகிறேன். வன தேவதைகள் சாக்ஷியாகச் சொல்லுகிறேன். என்னைச் சந்தேகப்பட்டுப் பேசினாயே! ஆகா! இன்று பெண்களுடைய குணக்குறைவு உன்னிடமும் இருப்பதைக் கண்டேன். எனக்குப் பாப எண்ணம் சூட்டினாயே, அடடா! இது உன்னுடைய கெட்ட காலம் என்றே எண்ணுகிறேன். பெரிய விநாசம் உன்னைத் தாக்கி விடுவது நிச்சயம்” என்றான் அப்பாவி லக்ஷ்மணன், பயத்தால் நடுங்கினான்.
“இதோ, உலர்ந்த கட்டைகளிருக்கின்றன. தீ மூட்டி அதில் விழப் போகிறேன். கோதாவரியில் விழுந்து உயிர் நீப்பேன். அல்லது தூக்குப் போட்டுக் கொண்டு சாவேன். மலையிலிருந்து கீழே குதித்தோ அல்லது விஷம் குடித்தோ சாவேன்! என்ன நினைக்கிறாய்? ராமன் கூக்குரலிட்ட இடம் போவாயா, இல்லையா?” என்றாள் சீதை.
இவ்வாறு சொல்லி சீதை வயிற்றில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள். இதைக் கண்டு பொறுக்க முடியாமல் லக்ஷ்மணன் கை கூப்பி நமஸ்கரித்து, “சீதையே! சரி, நீ சொல்லுகிறபடி அண்ணன் ஆணையை மீறி உன்னைத் தனியாக விட்டு விட்டுச் செல்கிறேன். உனக்கு மங்களம்! வன தேவதைகள் உன்னைக் காப்பார்களாக! நீ சொல்லுகிறபடியே போகிறேன். ஐயோ, கெட்ட நிமித்தங்கள் காண்கிறேனே! பயமாகத் தானிருக்கிறது. நான் வந்து மறுபடி உன்னை ராமனுடன் பார்ப்பேனா! சந்தேகமாக இருக்கிறது. ஆயினும் இதோ போகிறேன்!” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
போகும்போது அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே கொஞ்சம் கூட மனமில்லாமல் சென்றான்.
லக்ஷ்மணன் மனத்தைக் கோபமும் துயரமும் சேர்ந்து வாட்டின. சீதை சொன்ன கோரமான மொழிகளை அவன் எப்படிச் சகிப்பான்? அல்லது மறப்பான். அனைத்தையும் விட்டு விட்டு அண்ணனுடன் வனத்துக்கு வந்த ராஜகுமாரன் மனத்தை அந்த மொழிகள் மிகவும் துன்புறுத்தின.
ராமன் போன வழியிலேயே லக்ஷ்மணன் சென்றான். அந்த சமயத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த. ராவணன் சுத்தமான காவித் துணி அணிந்து, இருப்பிடமின்றி பிக்ஷை எடுத்துத் திரியும் சந்நியாசியாகத் தன்னை மாற்றிக் கொண்டு, மனத்தில் தீய எண்ணமும் வாயில் வேத மந்திரங்களும் சொல்லிக் கொண்டு ராமனுடைய ஆசிரமத்தண்டை சென்றான்.
குடிசை வாயிலில் வைதேகி தனியாக நின்று கொண்டிருந்தாள். ராமன் வருவானா என்று வனத்தைப் பார்த்த வண்ணமாக நின்றாள். ராவணன் சீதையைப் பார்த்தான்.
பார்த்ததுமே சூர்ப்பனகை எழுப்பிய ஆசை அவன் உள்ளத்தில் ஊர்ஜிதப் பட்டு நன்றாக உருக் கொண்டு விட்டது. எப்படியாவது அவளை அடைய வேண்டுமென்று நீசன் தீர்மானித்து விட்டான்.
*
காஷாயம் தரித்து, கமண்டலமும் திரிதண்டமுமாக வந்த பரிவ்ராஜ சந்நியாசி ஆசிரமத்தண்டை நின்ற படியால் ஆசார முறைப்படி சீதை அவனுக்கு உபசாரம் செய்தாள். கடமைப்படி ஆசனம் அமைத்து, பழமும் கிழங்கும் அவன் முன் வைத்தாள். அந்தக் காலத்தில் இது தவறக் கூடாத பண்பாடு.
அமைத்த ஆசனத்தில் சந்நியாசி உட்கார்ந்து சீதையைப் பார்த்தான். அவன் ஆசை இன்னும் அதிகரித்து முற்றிப் போயிற்று.
கேவலம் மிருகானுபவத்துக்கு மட்டும் ராக்ஷசேந்திரன் ஆசைப் படவில்லை. பாவியாயிருந்தாலும், பச்சை ஊன் தின்னும் அரக்கர் குலத்தவனாக இருந்தாலும், அவனுடைய எண்ணம் சீதையின் காதலைப் பெற்று அவளை மனைவியாக்கிக் கொண்டு மேலான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது. லங்கேசனுடைய ஆசை அவளுடைய சம்மதத்தைப் பெற வேண்டும் என்பது. வனவாசத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை ராமனை விட்டுவிட்டு சம்பத்தும் சக்தியும் வாய்ந்த தன்னிடம் சந்தோஷமாக சீதை வந்து விடுவாள் என்றும் அதுவே ராமனுக்குச் சரியான அவமானமுமாகும் என்றும் ராவணன் எண்ணினான். தான் கண்ட மற்ற ஸ்திரீகளைப் போல் சீதையும் இருப்பாள் என்று எதிர்பார்த்தான்.
*
இலை முன் உட்கார்ந்த சந்நியாசி கூச்சமில்லாமல் சீதையின் அழகைப் புகழ்ந்து பேசினான்.
“நீ யார்? மிருகங்களும் ராக்ஷசர்களும் நிறைந்த இந்த பயங்கரமான காட்டில் தனியாக இருக்கிறாய்?” என்று கேட்டான்.
ஆசார முறைப்படி செய்ய வேண்டிய உபசாரத்தைச் செய்துகொண்டும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டும் வந்தாள். ஆயினும் ராஜ குமாரர்கள் சீக்கிரம் வரமாட்டார்களா என்று வாயில் பக்கம் பார்த்த வண்ணமாகவே இருந்தாள்.
அரக்கன் மெள்ள மெள்ளத் தான் யார் என்பதைச் சொல்ல ஆரம்பித்தான். தன் குலத்தின் பெருமையை எடுத்துச் சொன்னான். தன் சக்தி, தன் ஐசுவரியம் இவற்றையெல்லாம் சொன்னான். தன்னுடைய பிரதாபத்தைச் சொல்லி ராமனை இகழ்ந்து பேசினான்.
“எனக்கு மனைவியாவாய்; லங்கையில் சுகமாக இருக்கலாம், போவோம்!” என்று முடித்தான்.
இப்படி எதிர்பாராத சங்கட நிலையடைந்ததும் சீதையானவள் கற்பின் சக்தியால் அபார தைரியமடைந்து அரக்கனை லட்சியம் செய்யாமல், “நீசனே! துஷ்டனே! உன் விநாசம் நெருங்கிற்று! நீ மடிவாய், விலகிப் போ, உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஆசிரமத்தை விட்டுப் போ!” என்று சீறினாள்.
அரக்கனுக்குக் கடுங்கோபம் உண்டாகிவிட்டது. மாறு வேஷம் நீக்கிவிட்டுத் தன் நிஜ ரூபத்தைத் தரித்துக் கொண்டான். அவள் தலைமயிரை ஒரு கையில் பற்றி மற்றொரு கையால் அவளைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு வனத்துக்குள் வேகமாகச் சென்று ஆயத்தமாக இருந்த தேரில் சீதையைத் தூக்கியவாறு ஏறி ஆகாயத்தில் கிளம்பிவிட்டான்.
“ஹா என் நாதனே! ராமா! எங்கே போய் விட்டாய்? லக்ஷ்மணா! தலை சிறந்த பக்தனே! பிடி வாதம் செய்து உன்னைத் துரத்தினேனே!” என்று கதறி அழுதாள். அரக்கன் அவளை அசையாமல் அழுத்திப் பிடித்துத் தேரை வேகமாகச் செலுத்தினான். கீழே காட்டிலுள்ள செடிகளையும் மரங்களையும் கூவிக் கூவி, “ராமனிடம் சொல்லுங்கள்” என்று சீதை கதறினாள்.
அப்போது ஒரு மரத்தின் மேல் அரைத் தூக்கமாக உட்கார்ந்திருந்த ஜடாயு வேகமாகச் சென்று கொண்டிருந்த ரதத்தைப் பார்த்தான். சீதையின் குரலைக் கேட்டு, யார் என்று தெரிந்து கொண்டான். சீதையும் ஜடாயுவைக் கண்டாள்.
“நீ என்ன செய்வாய், பறவையே! லங்கேசன் என்னைத் தூக்கிச் செல்கிறான். இந்தக் கொடிய அரக்கன் எல்லா ஆயுதங்களோடுமிருக்கிறான். நீ எதிர்த்தால் உன்னைக் கொன்று விடுவான். உன்னால் என்னை மீட்க முடியாது. விஷயத்தையாவது ராமனிடம் சொல்” என்று அழுதாள்.
*
ஜடாயு தேரில் ராவணனைப் பார்த்து, “ஏ! லங்கேசனே! நான் ஜடாயு, கழுகு ராஜன், நீண்ட நாள் உன்னைப் போல் நானும் அரசனாக வாழ்ந்தவன். தம்பீ! தகாத காரியத்தைச் செய்யாதே! நில்! அரசன் என்று சொல்லிக் கொள்ளுகிற நீ இத்தகைய காரியத்தைச் செய்யலாகாது. பெண்களைக் காப்பதல்லவா அரசனுடைய கடமை? அதிலும் ராஜ ஸ்திரீயை இவ்விதம் செய்யலாமா? அழிந்து போவாய். ஜாக்கிரதை! உடனே அவளை விட்டு விட்டுத் திரும்பிப் போ! அவளுடைய கோபப் பார்வையால் நீ சுட்டெரிந்து மாண்டு போவாய்! அவள் யார் என்று எண்ணுகிறாய்? விஷப் பாம்பை மடியில் கட்டிக் கொள்ளாதே! காலனுடைய பாசம் உன் கழுத்தின் மேல் விழுந்து உன்னை இழுத்துப் போக ஆயத்தமாக இருப்பதை நீ அறிவாய். துஷ்டனாக நடந்து கொள்ளாதே! தாங்காத பாரத்தைச் சுமந்து போகப் பார்க்காதே! விஷத்தைத் தின்று பிழைக்கப் பார்க்காதே. நான் கிழவன். நீ யுவன். கவசம் பூண்டு தேரும் வில்லுமாக இருக்கிறாய். ஆயினும் என் கண் முன்னால் நீ வைதேகியை எடுத்துப் போகவிடமாட்டேன். ராமன் இல்லாத சமயமா சீதையை எடுத்துப் போகிறாய்? ராமன் பேரில் உனக்குக் கோபம் இருந்தால் நின்று ராமனுடன் போர் செய். உனக்கு அந்த தைரியமில்லை என்பது எனக்குத் தெரியும், கோழையே! இதோ நான் இருக்கிறேன். இறங்கி என்னுடனாவது போர் செய். நான் உயிருடன் இங்கே இருக்க நீ ராமன் மனைவியைத் தூக்கிப் போக முடியாது. ரதத்திலா இருக்கிறாய்? தப்பலாம் என்று எண்ணுகிறாயா? பார், உன் தலைகள் பனம்பழம் போல் கீழே உதிர்ந்து விழப் போகின்றன. ஓடாதே, நில்!” என்றான்.
*
இந்தப் பேச்சைக் கேட்ட ராவணன் சினம் கொண்டு, பறவையான ஜடாயுவைத் தாக்கினான்.
பெரும் காற்றுக்கும் மேகக் கூட்டத்துக்கும் நடக்கும் யுத்தத்தைப் போல் ஒரு அற்புத யுத்தம் அந்த வனத்தில் நடந்தது. சிறகு கொண்ட மலையைப் போல் ஜடாயு தாங்காத கோபத்துடன் யுத்தம் செய்தான். கொல்லும் நாராசங்களை ராவணன் விடுத்தான். அவற்றையெல்லாம் கழுகரசன் தடுத்து ராவணனுடைய உடலைக் கீறிக் கிழித்தான். அரக்கன் ரோஷம் கொண்டு சர்ப்பங்கள் போன்ற மிகவும் கூரிய சஸ்திரங்களைப் பறவையின் மேல் விடுத்தான்.
கழுகரசன் மிகவும் துன்பப்பட்டான். தேரில் இருந்த சீதையைப் பார்ப்பான். கண்ணீர் பெருகிய அவள் கண்களையும் பார்ப்பான். அந்தக் காட்சியைச் சகிக்காமல் ராவணனைப் பலமாகத் தாக்கினான். தன் உடலில் உண்டாகிய பெரும் காயங்களையாவது அரக்கன் செலுத்திய அம்புகளையாவது கொஞ்சமும் கவனியாமல் தாக்கினான். தன் சிறகுகளினால் அரக்கன் தலையிலிருந்த ரத்தின கிரீடத்தையும் அவன் கையிலிருந்த வில்லையும் ஒடித்துத் தள்ளினான்.
இந்த அவமானத்தைத் தாங்காமல் பெரும் கோபம் அடைந்த ராவணன் இன்னொரு வில்லெடுத்துச் சரமாரி பொழிந்தான். பக்ஷிராஜன் தன் சிறகுகளால் அந்த அம்புகளை உதறித் தள்ளி அரக்கன் பிடித்த இரண்டாவது வில்லையும் ஒடித்துத் தள்ளினான்.
அதன்மேல் ஜடாயு தேரைத் தாக்கி, பிசாசு முகங்களைக் கொண்ட கோவேறு கழுதைகளையும் சாரதியையும் கொன்று தேரைச் சுக்கு நூறாகப் பொடி செய்து விட்டான். சீதையைப் பிடித்துக் கொண்டே ராவணன் பூமியில் விழுந்தான். வாகனமிழந்து சாரதியையும் இழந்து அரக்கன் பூமியில் விழுந்தபோது. பூதங்கள் எல்லாம் 'சரி' 'சரி' என்று பக்ஷிராஜனைப் பாராட்டின.
வயோதிக நிலையும், யுத்தத்தின் சிரமமும் காயங்களும் எல்லாம் சேர்ந்து ஜடாயுவைக் களைப்படையச் செய்தன. ஒரு நிமிஷம் தள்ளாமல் நின்றான். அதைக் கண்டு ராவணன் இதுதான் சமயம் என்று சீதையைப் பிடித்திருந்த வண்ணமே தேரின்றி அப்படியே ஆகாயத்தில் கிளம்பிப் போகப் பார்த்தான். உடனே பக்ஷி ராஜன் மறுபடியும் ராவணனைத் தாக்கி நிறுத்தி, “அரக்கனே! திருடனைப்போல் ஓடுகிறாயா? நீசனே! நீ நாசமாகப் போவது நிச்சயம். நின்று யுத்தம் செய்! யுத்தத்தில் உன் தம்பி கரன் அடைந்த கதியை நீயும் அடைவாய். கோழையைப் போலும் திருடனைப் போலும் ஓடித் தப்பப் பார்க்காதே!” என்று சொல்லி அவனுடைய முதுகின்மேல் திடீரென்று மேலிருந்து இறங்கி, கால் நகங்களாலும் கூரிய மூக்காலும் கொத்தியும் கீறியும் ரணமாக்கி ராவணனை மிகவும் துன்புறுத்தினான்.
இதைத் தாங்க முடியாமல் ஒரு பக்கம் சீதையைப் பிடித்துக் கொண்டே தன் முதுகின் மேலிருந்த ஜடாயுவைத் தன் கைத் தலங்களால் அடித்து விரட்டப் பார்த்தான். சீதையைப் பிடித்த கைகளைப் பக்ஷிராஜன் ஒன்றன்பின் ஒன்றாகக் கொத்திப் பிடுங்கி எறிந்தான். பிடுங்கி எறிய எறிய ராவணனுக்குப் புதுக் கைகள் புற்றிலிருந்து பாம்பு வருகிற மாதிரி முளைத்து வந்தன. வலி தாங்காமல் கோபம் மேலிட்டு ராவணன் சீதையைக் கீழே விட்டுவிட்டு ஜடாயுவைக் கைகளால் அடித்தும் கால்களால் உதைத்தும் பலமாகத் தாக்கினான்.
இந்த கோர யுத்தம் வெகு நேரம் நடந்தது. வீரனாகிய ஜடாயு மிகவும் கஷ்டப்பட்டான். பிறகு ராவணன் தன் கத்தியை எடுத்துப் பக்ஷிராஜனுடைய சிறகுகளையும் கால்களையும் கருணையின்றி வெட்டினான். பக்ஷி அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் தரையில் குற்றுயிராக வீழ்ந்தது.
ஜானகி குதித்து ஓடித் தரையில் வீழ்த்தப்பட்ட பறவையை இறுகத் தழுவிக் கொண்டு “என் அப்பனே! எனக்காக உயிர் விட்டாயே! என் நாதருக்கு மற்றொரு தகப்பனாக வந்தாயே, இறந்தாயே!” என்று புலம்பினாள்.
மகா சௌரியத்தோடு யுத்தம் யுத்தம் செய்துவிட்டு, காட்டுத் தீ எரிந்து அணைந்து விட்டது போல் தரையில் விழுந்த பறவையைப் பார்த்துவிட்டு ராவணன் திருப்தியடைந்தான். சீதையோ பறவையை அணைத்துக் கொண்டு, “இறந்த என் மாமனார் தசரத ராஜா உயிர் பெற்றது போல் யுத்தம் செய்தாயே” என்று புலம்பினாள்.
பிறகு அரக்கன் அவளைத் தூக்கிப் போகச் சென்றான். “ஐயோ!” என்று கதறிக் கொண்டு அவள் இங்குமங்கும் அனாதையாக ஓடினாள். அங்கிருந்த மரங்களைப் பிடித்துக் கொண்டு, “நாதா! எங்கிருக்கிறீர்கள்? லக்ஷ்மணா, எங்கிருக்கிறாய்? ஓடி வாருங்கள்!” என்று புலம்பினாள். ராக்ஷசன் அவளைப் பலாத்காரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆகாயத்தில் கிளம்பினான்.
மேலே கருமேகத்தை அடுத்த மின்னலைப் போல் பிரகாசித்தாள் சீதை. அரக்கன் அவளைத் தூக்கிச் செல்லும்போது காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிற ஒரு மலைபோல் காணப்பட்டான். வைச்ரவனுடைய தம்பியாகிய ராவணனின் தேகம் ஆகாயத்தில் வேகமாகச் செல்லும்போது சீதையின் பிரகாசத்தால் ஒரு தூமகேதுவைப் போல் இருந்தது.
*
இப்படி ஜானகி அரக்கன் கையில் அகப்பட்டு அபகரிக்கப்பட்டாள். அச்சமயம் சூரியன் தன் பிரகாசத்தை இழந்தான். இருள் சூழ்ந்தது. சர்வ பூதங்களும் புலம்பின.
“தர்மம் அழிந்தது. சத்தியம் மறைந்தது. நீதி நெறி, கருணை எல்லாம் ஒழிந்தன” என்று பிரலாபித்தன.
தரையிலிருந்து பார்த்த ஊமைப் பிராணிகளும் கண்களில் நீர் சொரிந்தன.
ராவணன் ஆகாயத்தில் கருணையின்றிப் பிராட்டியைப் பிடித்துக் கொண்டு தன் விநாசத்தை நோக்கி வேகமாகச் சென்றான். சீதை சூடியிருந்த மலர்களின் இதழ்கள் சிந்திச் சிதறின. ராவணனுடைய சம்பத்து சிதறி விழும் என்று சொல்லிக் கொண்டு விழுவது போல் காணப்பட்டன.