கோபத்தாலும் துயரத்தாலும் வாட்டப்பட்ட சீதை சிவந்து போன தன் கண்களை நன்றாகத் திறந்து அரக்கன் முகத்தைத் தைரியமாகப் பார்த்துச்சொன்னாள் :
“நீசனே! உன் பெயரையும் குலத்தையும் வீரப் பிரதாபங்களையும் என்னிடம் மிகக் கம்பீரமாகச் சொல்லிக் கொண்டு எவ்வளவு பெரிய சூரனாக நடந்து கொண்டாய்? வெட்கமில்லையா உனக்கு? பக்கத்தில் யாருமில்லாத சமயம் பார்த்து ஒரு ஸ்திரீயைத் தூக்கி ஓடும் சூரனே! எத்தனை பெரிய வீரன் நீ, ராமன் இல்லாத சமயம் பார்த்து வெட்கமில்லாமல் திருட்டு வேலை செய்தாய்!
என்னைக் காப்பாற்றப் பார்த்த கிழப் பறவையைக் கொன்ற சூரனே, ஆசிரமத்தில் என்னென்ன வீரமும் சாமர்த்தியமும் பேசினாய்? யுத்தம் செய்யத் தைரியமில்லாமல் திருட்டு வேலை செய்த உன் புகழை உலகம் என்றென்றும் புகழுமல்லவா? நீசனே ! நீ பெருமையாகச் சொன்ன உன் குலத்துக்கு அவமானம் இழைத்தாய்!
நீ என்ன சம்பாதிக்கப் போகிறாய், என்னை இப்படி எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிப் போய்? எத்தனை நாள் பிழைத்திருக்கப் போகிறாய்? வெகு சீக்கிரம் என் நாதனுடைய வில்லிலிருந்து பாயும் சரங்கள் உன் உடலில் புகுந்து உன் உயிரைத் தூக்கப் போகின்றன. என் நாதன் பார்வையில் நீ சிக்கினால் போதும், அப்போதே நீ மாண்டாய்! தப்பிப் பிழைத்தாய் என்று எண்ணாதே! நிச்சயமாய் மாள்வாய். உன் அயோக்கியப் பிரயத்தனமெல்லாம் உனக்கு என்ன நன்மை தரப் போகிறது? ஒருநாளும் என்னை நீ அடைய மாட்டாய். உயிர் நீப்பேனேயொழிய உனக்கு வசப்படேன். என் நாதன் உன்னை விட மாட்டார். அவர் கோபத்தைச் சம்பாதித்த நீ பிழைக்க மாட்டாய். நிச்சயமாகக் கொல்லப் படுவாய். வெகு சீக்கிரமாகவே நரகத்தில் வைதரணீ நதியைப் பார்க்கப் போகிறாய். பழுக்கக் காய்ச்சிய இரும்புப் பிரதிமை உனக்காகக் காத்திருக்கிறது. அதைத் தழுவிக் கொள்ளப் போகிறாய். இரும்பு முள்ளுகள் கொண்ட மரமும் உனக்காகவே நரகத்தில் இருக்கிறது. ஒரு முகூர்த்தத்தில் ஜனஸ்தானத்தில் உன்னுடைய பதினாலாயிரம் அரக்கர்களைத் தேரின்றி ஒருவராக நின்று அழித்த என் ராமன் உன்னை விடப் போகிறாரா? உனக்காகக் காத்திருக்கும் யமனிடம் உன்னைச் சீக்கிரம் ஒப்புவிப்பார்.”
இவ்வாறு சீதை பலவிதமாக இகழ்ந்தும் தாக்கியும் எச்சரித்தும் சொன்னதை அரக்கன் காதில் போட்டுக் கொள்ளாமல் ஆகாய மார்க்கமாக லங்கை நோக்கி வில்லினின்றும் பாயும் அம்பைப் போலத் தேரின்றிப் பறந்தே விசையாகச் சென்றான்.
பல மலைகளையும் ஆறுகளையும் தாண்டிச் செல்லும் போது வழியில் ஒரு மலைமேல் யாரோ நிற்பதைக் கண்டாள் சீதை. அப்பொழுது மேலுத்திரியத்தை எடுத்துத் தன் ஆபரணங்களை அதில் முடித்துக் கீழே போட்டாள். ராமன் தன்னைத் தேடுவார்; தன்னை எடுத்துப் போன வழி அவருக்குத் தெரிய வேண்டும் என்று இவ்வாறு செய்தாள். அழுது கொண்டிருந்த அவளைக் கீழே மலை மேலிருந்த வானரங்களும் பார்த்தன.
பம்பையைத் தாண்டிப் பிறகு கடலையும் ராவணன் கடந்து லங்காபுரி பிரவேசித்தான். துயரத்தால் துடித்துக் கொண்டிருந்த சீதையுடன் தன் அந்தப்புரம் அடைந்தான். ஒரு பெண்ணுருவம் கொண்டு தன் உயிரைக் குடிக்க வந்திருந்த அந்தகனை எடுத்துக் கொண்டு தன் அந்தப்புரம் புகுந்தான். ‘சீதையை அடைந்து விட்டேன்’ என்று மூர்க்கன் எண்ணினான்.
உடனே பிசாசுகளைப் போன்ற சில கோர ராக்ஷசிகளைக் கூப்பிட்டு, “இவளை நீங்கள் வெகு ஜாக்கிரதையாகக் காவலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஆணையிட்டான்.
“என் உத்தரவு இன்றி ஆணாவது பெண்ணாவது எவரும் இவளிருக்குமிடம் அண்ட விடாதீர்கள்!” என்று கண்டிப்பாக உத்தரவு செய்தான்.
“இவள் என்ன இச்சித்தாலும் வஸ்திரமோ, பொன்னோ, மணியோ, எதுவாயினும் அவளுக்குக் கொடுத்து சந்தோஷப் படுத்த வேண்டும். எனக்குச் செய்யும் பணிவிடையும் மரியாதையும் இவளுக்கு நடக்க வேண்டும்” என்று உத்தரவிட்டான்.
“யாராவது அவள் மனம் துன்புறும் பேச்சுப் பேசினால் கொன்று விடுவேன். தெரிந்தோ தெரியாமலோ அவளுக்குக் கோபமோ கஷ்டமோ உண்டாகும் பேச்சு யாரும் பேசக் கூடாது. ஜாக்கிரதை!” என்று எச்சரித்தான்.
சீதையை அந்தப்புரத்தில் ஒரு இடத்தில் இறக்கி விட்டு, இனி என்ன செய்ய வேண்டியது என்று யோசிக்கலானான். சாமர்த்தியமான சாரர்களை அழைத்து உத்தரவிட்டான். “நீங்கள் உடனே கரன் இருந்த ஜனஸ்தானம் போய் அங்கே பயப்படாமல் ராமன் என்ன செய்து வருகிறான் என்பதை நன்றாகக் கவனித்து வரவேண்டும். அந்த ராமன் இருக்கும் வரையில் எனக்குத் தூக்கம் வராது! அவன் எனக்குப் பெரிய சத்துரு. அவன் எப்படியாவது சாக வேண்டும். நீங்கள் போய்த் தைரியமாக உங்கள் வேலையைச் செய்ய வேண்டியது” என்று உத்தர விட்டான்.
கடலால் சூழப்பட்ட ஒரு கோட்டைக்குக் கொண்டு வரப்பட்டு, எவ்வளவு தூரத்தில் தான் சிறை கிடக்கிறாள் என்பதை சீதை உடனே அறியவில்லை. தன்னுடைய நாதனான வீரன் உடனே வந்து ராவணனைக் கொன்று மீட்பான் என்றே எதிர்பார்த்தாள். ஆனபடியால் மிகவும் துன்பப்பட்டவளாயினும், தன்னுடைய சித்தத்தைத் திடம் பண்ணிக்கொண்டு, தன் நாதனுடைய வீரத்தையும் சாமர்த்தியத்தையும் பூரணமாக நம்பித் தைரியமாக இருந்தாள். அரக்கன் தன்னண்டை மிருகத்தனமாக நடந்து கொள்ளவில்லையென்பதையும் கண்டு ஒருவாறு ஆறுதல் அடைந்தாள்.
சாரர்களை ஜன ஸ்தானத்துக்கு அனுப்பிவிட்டு, ராவணன் சீதை இருந்த அந்தப்புரம் பிரவேசித்தான். அவள் சோகத்தில் மூழ்கிக் கண்ணீர் நிறைந்த கண்களோடு இருப்பதைக் கண்டான். ராக்ஷசிகள் தங்கள் காவல் வேலையைச் சரியாகச் செய்து வருவதையும் பார்த்தான். சரி, தன் செல்வத்தையும் அந்தஸ்தையும் அவள் பார்க்க வேண்டும். பார்த்தபின் நிச்சயமாகத் தனக்கு உடன்படுவாள் என்று எண்ணி அதற்கு ஏற்பாடு செய்தான்.
அவனுடைய பெரிய அரண்மனைக்குள் கொண்டு போகப்பட்டு, அங்குள்ள சிறப்பும் செல்வமும் காண்பிக்கப்பட்டாள். ராவணனுடைய சம்பத்தும் ராஜ போகங்களுக்குரிய பொருள்களும் உலகத்தில் வேறு எந்த அரசனும் பெற்றதில்லை. சீதைக்கு எல்லாவற்றையும் காண்பித்தார்கள். இதைக் கண்டு தன்னை மோகிப்பாள் என்று அரக்கன் எண்ணினான்.
எங்கு பார்த்தாலும் பொன்னும் மணியும் பட்டும்; எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும்படியான விசித்திர வேலையோடு அமைந்த மண்டபங்கள், விமானங்கள், மேடைகள், ஆயிரக்கணக்கான வேலைக்காரிகள், செல்வத்தாலும் ராஜ்யாதிகாரத்தாலும் உண்டாகக் கூடிய எல்லாவித சம்பத்தையும் லங்காபுரியில் ராக்ஷசேச்வரனுடைய அரண்மனையில் கண்டாள். ஆனால் சீதையின் மனம் வேறு எங்கேயோ இருந்தது. தன்னுடைய பெருஞ் செல்வத்தையெல்லாம் அவளுக்குக் காட்டி விட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான். தன் சேனையின் பெரும் கணக்கை சீதையிடம் சொன்னான்.
அவளோ முன்னமேயே ராவணனுடைய வீரியத்தைப்பற்றித் தன் அபிப்பிராயத்தைச் சொல்லி விட்டாளே! ஆயினும் வெட்கமில்லாமல் தன் சேனா பலத்தைப் பற்றி எடுத்துச் சொன்னான். “இதையெல்லாம் நீ உன்னுடைய பொருளாகவும் உன்னுடைய ராஜ்யமாகவும் வைத்து அனுபவிக்கலாம். என் பிராணனைவிடச் சிறந்தவளாக எனக்கு நீ ஆவாய். என்னுடைய மனைவிகள் பல பேர், ஆயினும் அவர்கள் அனைவருக்கும் நீ எஜமானியாக, என்னுடைய அன்பு முழுவதும் பெற்று விளங்குவாய். நான் சொல்வதைக் கேள். வேறு யோசனை செய்யாதே. என் இஷ்டத்தைப் பூர்த்தி செய்வாயாக. நூறு யோஜனை தூரத்தில், இந்த லங்காபுரியானது சமுத்திரத்தால் சூழ்ந்து, ஆயிரக்கணக்கான மகா வீரர்களால் காக்கப்பட்டு வருகிறது. இங்கே யாரும் பிரவேசிக்க முடியாது.
தேவாசுரர்களில் எனக்குச் சமமான சக்தி கொண்டவர்கள் யாருமேயில்லை. இது தேவாசுரர்கள் அறிந்த விஷயம். ராஜ்யத்திலிருந்து துரத்தப்பட்ட ஒரு அற்ப மானிடன், வனத்தில் தவமிருக்க நிச்சயித்திருக்கும் ஒரு திக்கற்றவன், அவனைக் கட்டிக் கொண்டு நீ என்ன சுகமடைவாய்? உன் அழகுக்குத் தகுந்த சம்பத்துள்ள புருஷன் நான். சுகம் அனுபவிக்கும் யௌவனப் பருவத்தை வீணாக்கிக் கொள்ளாதே. ராமனை நீ மறுபடியும் பார்க்கப் போவதில்லை, அதைப் பற்றிச் சந்தேகம் வேண்டாம். ஒருநாளும் ராமன் இங்கே அண்ட முடியாது. என்னுடைய ராஜ்யம் முழுவதும் உன்னுடையதாக வைத்துக்கொண்டு என்னுடன் அனுபவிப்பாயாக. நானும் எனக்குட்பட்டுக் கிடக்கும் தேவர்களும் உன் அடிமைகளாவோம். என் முக்கிய பட்டமகிஷியாக அபிஷேம் செய்யப்படுவாய்.
உனக்கு ஒரு குறைவுமிருக்காது. இதுவரையில் பூர்வ கர்ம விசேஷத்தால் கஷ்டங்களை அனுபவித்தாய். இனிமேல் உன் புண்ணிய கர்மங்களின் நற்பயனை என்னுடன் அனுபவிக்கப் போகிறாய். லங்கையை ஆளப்போகிறாய். குபேரனை ஜெயித்த லங்கேசன் மனைவியாவாய். புஷ்பக விமானத்தில் ஏறி நாம் இஷ்டப்படி சஞ்சரிப்போம். உன் அழகிய முகத்தில் துக்கம் காணப்படக் கூடாது. சந்தோஷமாக இருப்பாயாக” என்றான்.
ராவணன் இவ்வாறெல்லாம் பேசும்போது சீதையின் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிற்று. புடவையின் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டாள். தன் பயத்தை அரக்கர்கள் காணாமலிருப்பதற்காக இவ்வாறு செய்தாள்.
“நீ சங்கோசப்படாதே! என்னை ஒப்புக்கொள்வதில் பாபம் இல்லை. கூச்சம் வேண்டாம். தெய்வத்தால் ஏற்பட்ட நிலையை ஒப்புக் கொள்ளலாம் என்பது சாஸ்திரம். அழகியே! என் தலையை உன் பாதங்களில் வைத்துக் கேட்டுக் கொள்ளுகிறேன். எனக்கு அருள்வாய். நான் உனக்கு அடிமை. என் பதவியையும் மறந்து நான் உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன். என்னுடைய வாழ் நாளில் யாரையும் இப்படி நான் இறைஞ்சியது கிடையாது.”
இவ்வாறு ராவணன் சீதையை மிக வருந்திக் கேட்டுக் கொண்டான். அவள் ஒப்புக் கொள்வாள் என்றும், அவளை அடைந்து விடுவது நிச்சயம் என்றும் அரக்கன் எண்ணினான்.
மனத்தில் நிச்சய புத்தியிருந்தால் எந்தச் சங்கட நிலையிலும் தைரியம் உண்டாகும். சோகத்தால் வாட்டப்பட்ட சீதை அரக்கனைக் கண்டு பயமேயில்லாமல் பேசலானாள். ஒரு துரும்பைக் கிள்ளித் தனக்கும் ராவணனுக்கும் மத்தியில் வைத்துப் பேசினாள்.
பஞ்சவடியில் சந்நியாசி வேஷம் பூண்டு தான் வைத்த காய் கிழங்குகளுக்கு முன் உட்கார்ந்து ராவணன் தன் குலத்தையும் வீரத்தையும் பேசினான் அல்லவா? அதற்கு ஒரு எதிரொலிபோல் இப்போது சிறையில் கிடந்த சீதை பேசினாள்:
“நான் யார் என்பதை அறிந்து கொள். தசரதராஜர் மூவுலகங்களிலும் புகழ் பெற்ற அரசர். தருமத்துக்கு ஒரு அசையா அணையாகப் பல்லாண்டு அரசு புரிந்த மகாராஜர். சத்தியம் காத்தவர். அவருடைய குமாரர் ராமன், என் புருஷர். தேவனைப் போன்ற அந்த ராமன் என் நாதனாவார். சிம்மத்தின் பலம் பெற்ற வீரர். அவரும் அவர் தம்பி லக்ஷ்மணனும் உன்னுடைய உயிரை வாங்கக் காத்திருக்கிறார்கள். கரனும் அவன் சேனையும் ஜனஸ்தானத்தில் என் நாதனால் நிர்மூலமாக்கப் பட்டார்கள் என்பதை அறிவாய். கருடன் விஷப் பாம்பைத் தூக்கிக் கொண்டு போவது போல் அவ்வளவு சுலபமாக உன்னுடைய பெருஞ்சேனை ஜனஸ்தானத்தில் ராமனால் ஒரு முகூர்த்த நேரத்தில் அழிக்கப்பட்டது. அந்த ராமனை, தேவாசுரர்களால் கொல்லப்பட மாட்டாய் என்று வரம் பெற்ற நீ விரோதியாக்கிக் கொண்டாயல்லவா? அவரால் நீ உன் மரணத்தை அடைவாய் என்பது நிச்சயம்; தப்ப மாட்டாய். நீ பெற்ற வரம் உன்னைக் காக்க மாட்டாது. வேள்வியில் யூத ஸ்தம்பத்தில் கட்டிய ஆட்டைப் போல் நிற்கிறாய் என்பதை அறிந்து கொள். ராமனுடைய கோபப் பார்வை உன் மேல் படுவதுதான் தாமதம். கடலை உலரச் செய்தும் சந்திரனை ஆகாயத்திலிருந்து கீழே இறக்கியுமாவது என்னை என் நாதன் மீட்பார், நிச்சயம். நீ செய்த தீவினை உன்னையும் உன் லங்கையையும் அழித்துப் பாழாக்கப் போகிறது.
என் வீர புருஷர் அரக்கர்களுக்கிடையில் தைரியமாகத் தண்டகாவனத்தில் தனியாக வசித்தார். எதிர்த்து வந்த அரக்கர்களை வீரரைப்போல் யுத்தம் செய்து கொன்றார். அவரில்லாத சமயம் பார்த்து நீ திருடனைப் போல் என்னைத் நீ தூக்கி வந்தாய். இந்தத் தீச்செயலின் பயனை அனுபவிப்பாய், தப்பமாட்டாய். நீயும் உன் குலமும் அழிந்து போகும் காலமானது அருகில் வந்துவிட்ட படியால் விதி உன்னை இந்தப் பாவத்தில் தூண்டித் தள்ளிற்று!! அழிந்து போகும் காலத்திலேதான் இத்தகைய துர் புத்தி உண்டாகிறது.
உன்னை விரும்பும்படி என்னைக் கேட்கிறாய். இது ஆகாத காரியம் என்பதை நீ அறியவில்லையா? அன்னப் பட்சி காக்கையிடம் அணுகுமா? வேள்வி செய்யும் வேதிகையண்டை ஒழுக்கம் தவறிச் சண்டாளனான ஒருவன் கிட்டப் போக முடியுமா? உயிரையாவது உடலையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று எனக்குக் கொஞ்சமும் ஆசையில்லை. உலகத்தாரால் இகழப்பட்டு உயிர் வைத்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. நான் பயப்பட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உன் வசமாவேன் என்று எண்ணாதே!” இவ்வாறு சொல்லிவிட்டு மௌனமடைந்தாள்.
“அப்படியா?” என்றான் ராவணன். “சரி, பன்னிரண்டு மாதம் கெடுவு உனக்குத் தருகிறேன். நீ என்னை மணந்தால் நல்லது; இல்லையென்றால் அந்தத் தவணை முடிந்ததும் என் சமையற்காரர்கள் என்னுடைய காலை ஆகாரத்துக்கு உன் உடலைச் சமைப்பார்கள்.” இவ்வாறு சீதையை எச்சரித்து விட்டுக் காவற்கார ராக்ஷசிகளுக்குத் தனியாக உத்தர
விட்டான்.
“இவளுடைய பிடிவாதத்தையும் கர்வத்தையும் நீங்கள் எப்படியாவது அழிக்க வேண்டும். அசோக வனத்தில் தனியாக வைத்து, பயத்தாலும் நயத்தாலும் சாமர்த்தியமாக இவளைத் திருத்துங்கள். காட்டில் பிடித்த பெண் யானையை எப்படி வசப்படுத்துகிறோமோ அதுபோல் இவளைச் சீக்கிரம் நீங்கள் திருத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுக் கடுஞ்சினத்தோடு தன் அரண்மனைக்குச் சென்றான்.
சீதையை அழைத்துக் கொண்டு ராக்ஷசிகள் அசோக வனம் சென்றார்கள். அது மிக ரம்யமான அந்தப்புர உத்தியான வனம். பறவைகளும் புஷ்பங்களும் காயும் பழமும் நிறைந்த மரங்களும் உள்ள தோட்டம். அங்கே சீதை கோரமான அரக்கிகளின் காவலில் சிறைப்பட்டுத் துயரக் கடலில் மூழ்கிக் கிடந்தாள். ராமனும் லக்ஷ்மணனும் எப்படியாவது விஷயம் தெரிந்து கொள்வார்கள், தன்னை மீட்பார்கள், அரக்கர்களின் மிரட்டல்களுக்குப் பயப்படாமல் உயிர் வைத்துக் கொண்டிருக்க வேண்டும், வீரனாகிய தன் நாதன் அரக்கனை அழித்து விடுவான், மறுபடியும் ராமனுடன் சேர்ந்து வாழும் நாள் சீக்கிரத்தில் வரும் என்று நம்பி, ராக்ஷசிகளின் மிரட்டலுக்குப் பயப்படாமலும் எவ்வளவு நயமாகப் பேசினாலும் அதனால் மோசம் போகாமலும் இருந்து வந்தாள்.
சீதை அசோக வனத்தில் துன்பப்பட்டுக் கிடந்தது ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல. பல மாதங்கள் இப்படி அனாதையாகத் துன்பப்பட்டாள்.
மகாவீரன் ஹனுமான் கடல் தாண்டி வந்து தேவியின் துயரத்தைப் பார்த்து, அந்தத் துயரத்தீயையே கொண்டு லங்காபுரியை எரித்து விட்டு, “ராமன் வருவான், பயப்படாதே!” என்று சீதைக்குச் சொல்லும் நாள் பின்னால் வரும்.
நம் நாட்டில் துயரப்படும் பெண்கள் அனைவரும் சீதாதேவியின் அம்சம். ஆண்களாகப் பிறந்தவர்கள் அனைவரும் ஹனுமானைப் போன்று பெண்ணைக் காக்கும் சுத்த வீரர்கள் ஆவார்களாக.
இப்போது மறுபடி ராம லக்ஷ்மணர்களை நாம் விட்ட இடத்திற்குப் போவோம்.