இஷ்டப்பட்ட வடிவம் எடுத்துக் கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்த மாரீசன், மானாக வந்து ஏமாற்றி சீதையின் ஆசையைக் கிளப்பி, அதன் காரணமாகத் தன்னை வெகுதூரம் இழுத்துக் கொண்டு போய், அங்கே தன்னுடைய அம்புக்கு இரையாகி உயிர் விடும் போது தன் சுய உருவத்தை வெளிப்படுத்தி 'ஹா லக்ஷ்மணா! நான் செத்தேன்' என்று பொய்க் குரலில் அரக்கன் பலமாகக் கத்தினதையும், - எல்லாவற்றையும் நினைத்து ராமன் கவலை கொண்டான்.
“ஓகோ! இது பெரிய மோசம்; இந்த மோசத்தால் லக்ஷ்மணன் ஏமாற்றமடைந்து சீதையைத் தனியாகக் காட்டில் விட்டு விட்டு என்னைத் தேடிக் கொண்டு வந்து விட்டிருந்தால் பெரிய அபாயமாகுமே! சீதையை அபகரித்துக் கொண்டு போகவோ, கொன்று தின்றுவிடவோ அரக்கர்கள் இந்த மோசத்தைச் செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ‘ஹா செத்தேன்’ என்று என்னுடைய குரலைக் கேட்டதாக எண்ணி உடனே சீதை பயந்து லக்ஷ்மணனை என்னிடம் அனுப்பி விடுவாள். நரிகள் அவலக்ஷ ணமாக ஊளையிடுகின்றன. பறவைகளும் மிருகங்களும் துரதிருஷ்டக் குறிகளைக் காட்டுகின்றன. உள்ளத்தில் தைரியத்துக்குப் பதில் நடுக்கமாக இருக்கிறது. நான் காண்பதெல்லாம் அபசகுனங்களாகவே இருக்கின்றன. பெரிய ஆபத்தை அடைவேன் என்றே நினைக்கிறேன்.”
இவ்வாறு தனக்குள் கவலைப்பட்டுக் கொண்டு ராமன் மிக வேகமாக ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். எதிரே லக்ஷ்மணன் வருவதைக் கண்டான். அவனைக் கண்டதும், “ஐயோ! நான் நினைத்தவாறே ஆயிற்று” என்று கத்தினான்.
“சீதையைக் காட்டில் தனியாக விட்டு விட்டு வந்து விட்டாயே, லக்ஷ்மணா! அவளை ராக்ஷசர்கள் கொன்று தின்று விடுவார்கள் என்பது நிச்சயம். தவறான காரியம் செய்து விட்டாயே! ஜானகி தப்ப மாட்டாள்!” என்று ராமன் லக்ஷ்மணனுடைய கையைப் பிடித்துக்கொண்டு மிக வருத்தத்துடன் சொன்னான்.
“ஆசிரமத்தில் அவளைக் காணாவிடில் லக்ஷ்மணா! நான் இறப்பேன், நிச்சயம். நீதான் திரும்ப அயோத்திக்குப் போய் விஷயத்தைச் சொல்வாய். ஐயோ! கௌசல்யை துக்கத்தை எப்படிப் பொறுப்பாள்? கைகேயி விரும்பியதைப் பூர்த்தி செய்து விட்டாயே, லக்ஷ்மணா? ராக்ஷசர்களுக்கு நம் பேரில் இருந்து வந்த பகையைப் பேதை சீதையின் மேல் காட்டி இதற்குள் அவளைக் கொன்று தின்று விட்டேயிருப்பார்கள்! அவளைத் தனியாய் எப்படி நீ விட்டு விட்டு வந்தாய்? மாரீசன் போட்ட சத்தத்தைக் கேட்டு ஏமாந்து போனீர்களே! நான் இப்போது என்ன செய்வேன்? சீதையை நான் காணப் போவதில்லை. அரக்கனுடைய சதி வெற்றியடைந்துவிட்டது. நான் சாவது நிச்சயம். உன்னை நம்பி சீதையைப் பார்த்துக் கொள் என்று அவளை உன்னிடம் ஒப்புவித்து வந்தேன், நீ ஏன் அவளை விட்டு விட்டு வந்து விட்டாய்? இப்படிச் செய்யலாமா?” என்று பசியாலும் தாகத்தாலும் துக்கத்தாலும் கோபத்தாலும் வாட்டப்பட்ட ராமன் பலவாறு கதறினான். கோபம் மேலிட்ட அண்ணனைப் பார்த்து லக்ஷ்மணன் கண்களில் நீர் பெருகப் பேசலானான் :
“அண்ணா! நான் என்ன செய்வேன்? ‘ஹா சீதா! ஹா லக்ஷ்மணா!’ என்ற கூக்குரலைக் கேட்டதும் சீதைக்குப் பெரும் பயம் பிடித்துக் கொண்டுவிட்டது! அவள் துடிதுடித்து நடுங்கி, 'போ! போ! ஓடு! ஓடு! ஏன் நிற்கிறாய்?' என்று என்னை விடாமல் தொந்தரவு செய்து நான் என்ன சொல்லியும் கேட்காமல் என்னைத் துரத்தினாள். ‘சீதையே! பயப்பட வேண்டாம். ராமனை இந்த உலகத்தில் எந்த ராக்ஷசனும், எந்தப் பகைவனும் எதிர்த்து வெற்றி பெற முடியாது. இது ராமன் குரல் அல்ல. இது மோசம். மூன்று உலகத்திலும் ராமனைக் கொல்லும் ஆற்றல் படைத்தவர்கள் யாரும் இல்லை. யுத்தத்தில் அவன் இம்மாதிரி தீன சுவரத்துடன் ஒரு நாளும் மானத்தை விட்டுக் கதற மாட்டான், இதை ஒரு கணமும் நம்ப வேண்டாம்' என்று நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல், ‘ஓ பகைவனே! வேஷம் போட்டு எங்கள் கூட வந்து மோசம் செய்தாயே! ராமன் இறந்ததும் என்னை அடையலாம் என்றல்லவா காட்டுக்கு எங்களுடன் நீ வந்தாய்! நீ ஒரு நாளும் என்னை அடைய மாட்டாய், மோசக்காரனே! மகா பாபி! பரதனும் நீயும் செய்த சதியா இது?' இவ்வாறு சொல்லி, பொறுக்க முடியாத தோஷத்தை என்மேல் சாட்டி, 'நீ போனால் ஆயிற்று. இல்லாவிட்டால் உயிரை இப்போதே விடுவேன்' என்று கதறினாள். உன்மத்தமடைந்தவளாகித் தாங்க முடியாத பேச்சுக்களைப் பேசி என்னைத் துன்புறுத்தித் துரத்தியபடியால் வேறு வழியில்லாமல் வந்தேன், அண்ணா!” என்றான்.
“நீ சொல்லும் சமாதானத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது” என்றான் ராமன். “அவள் என்ன சொன்ன போதிலும் அஞ்ஞானத்தால் உண்டான பேச்சு என்று நீ பொறுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் அல்லவா? அவளைத் தனியாக விட்டு நீ எப்படி வரலாம்? பெண்ணாய்ப் பிறந்தவள் பயத்தினால் ஏதேதோ சொல்லுவாள். அதை நீ பொருட்படுத்தியிருக்கக் கூடாது. நீ செய்தது பெருந் தவறு. சீதையை நான் மறுபடி காணப் போவதில்லை” என்று சொல்லி லக்ஷ்மணன் மேல் கோபித்துக் கொண்டு துக்கத்தில் மூழ்கினான்.
இருவரும் வெகு வேகமாக ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்கள்.
போகும்போது பல அசுபக் குறிகள் தோன்றின. அவை ஒன்றன் பின் ஒன்றாதத் தோன்றிய போதெல்லாம், ராமன் “சீதையின் க்ஷேமம் சந்தேகம், சந்தேகம்” என்று லக்ஷ்மணனுக்குச் சொல்லிக் கொண்டே சென்றான்.
ஆசிரமத்தையடைந்தும், அது சீதையின்றிச் சூன்யமாகக் கிடப்பதைக் கண்டார்கள். ராமனுடைய இதயம் உடைந்து போயிற்று.
மான் தோலும், தர்ப்பையும், புல் பாயும் யாவும் சிதறிக் கிடந்தன. குடிசை பாழாய்க் கிடப்பதைப் பார்த்து ராமன் விம்மி விம்மி அழுதான். இங்குமங்கும் குடிசையைச் சேர்ந்த வனத்தில் ஓடியோடித் தேடிப் பார்த்தான். மரங்களிலெல்லாம் இலைகளும் புஷ்பங்களும் வாடியிருந்தன. சீதையை எங்கும் காணவில்லை.
“ஐயோ! கொன்று தின்று விட்டார்களோ, எங்கே தூக்கிக் கொண்டு போனார்களோ! எவ்வளவு பயந்து போயிருப்பாள்! சகிக்க முடியவில்லையே! ஒரு வேளை ஆற்றுக்குப் போயிருக்கிறாளோ, ஜலம் கொண்டு வரப் போயிருக்கிறாளோ, பார்ப்போம்!” என்று பைத்தியம் பிடித்தவனைப் போல் கண்கள் சிவந்து இங்கு மங்கும் அலைந்தான். ஒளிந்து கொண்டு வேடிக்கை செய்கிறாளோ என்று மரம் மரமாகத் தேடிப்பார்த்தான்.
ராமனுடைய துயரம் வர வரக் கடல் போல் பொங்கிற்று. உன்மத்த நிலை அடைந்து விட்டான். ஒவ்வொரு மரமாகச் சென்று அவற்றைக் கூவியழைத்துப் பிரலாபிக்க ஆரம்பித்தான்.
“அசோக மரமே! உனக்கு நன்றாகத் தெரியும், சீதை எங்கே என்று சொல்லுவாய். என் சோகத்தைத் தீர்க்க மாட்டாயா?”
“ஓ, பனைமரமே! அவள் எங்கே இருக்கிறாள்? உனக்குக் கட்டாயம் தெரியும். சொல்வாயே!”
இவ்வாறு செடி, கொடி, மரம் ஒவ்வொன்றையும் கேட்டுக் கொண்டே பைத்தியம் பிடித்தவனாக வனமெல்லாம் திரிந்தான்.
வனத்தில் கண்ட மிருகங்களையெல்லாம் இம்மாதிரியே கேட்டுக் கொண்டு அலைந்தான்.
“ஏ, புலியே! அந்த யானையும் மானும் எனக்கு உண்மை சொல்லப் பயப்படுகின்றன. உனக்குத் தான் பயம் என்பது இல்லையே, நீயாவது சொல், உனக்குக் கட்டாயம் தெரியும்.”
இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதான்.
“ஒளிந்து கொண்டிருக்கிறாய். அதோ பார்த்து விட்டேன். போதும் உன் விளையாட்டு இனி நிறுத்து. என்னால் பொறுக்க முடியவில்லை” என்று சொல்லி அழுதான்.
இவ்வாறு பிதற்றிக் கொண்டும், அழுது கொண்டும் சுற்றிலுமுள்ள காடெல்லாம் தேடிச் சென்றான். எங்கும் காணாமல் துக்கம் மேலிட்டு, “ஹா லக்ஷ்மணா, ஹா சீதே!” என்று கதறித் தரையில் விழுந்தான்.
“லக்ஷ்மணா! எங்குமில்லை சீதை! அவளை அரக்கர்கள் பிடித்து அங்கம் அங்கமாகப் பிய்த்துத் தின்று விட்டார்கள். நான் இனி என்ன செய்வேன்? உயிர் தங்காது. தந்தை தசரத மகாராஜாவைப் போய்ச் சேருவேன். ஐயோ! அங்கும், 'மகனே, நான் இட்ட ஆணையைத் தீர்க்காமல் ஏன் முன்னால் வந்து விட்டாய்?' என்று தந்தை கோபிப்பார். நான் கெட்டேன்!” யானையைப் போல் என்று சேற்றில் அகப்பட்ட வீரிட்டு அழுதான்.
இவ்வாறு ராமன் துயரப்பட்டு, நிலையிழந்து உன்மத்தனைப் போல் கஷ்டப் படுவதைக் கண்டு சகிக்க முடியாமல் லக்ஷ்மணன் சொன்னான் :
“அண்ணா, இப்படி அழுவது தகாது. இருவரும் சேர்ந்து காடு முழுவதும் தேடிப் பார்ப்போம். உனக்குத் தெரியுமே, சீதை குகைகளிலும் வனங்களிலும் சஞ்சரிப்பதில் மிகப் பிரியமுடையவள். ஆற்றில் குளிப்பதிலும் விளையாடுவதிலும் புஷ்பங்கள் பறிப்பதிலும் மிகவும் ஆசை கொண்டு எங்கேயோ விளையாடிக் கொண்டிருக்கிறாள். பார்ப்போம், நம்மைச் சோதிக்கவே இப்படி அவள் விளையாட்டாகச் செய்கிறாள். வா, இருவரும் தேடுவோம். பிரலாபிக்காதே!”
இருவரும் காடு, மலை, ஆறு, தடாகம் ஒரு இடம் விடாமல் தேடினார்கள்.
*
“எங்கும் காணவில்லை, லக்ஷ்மணா! நான் என்ன செய்வேன்?” என்றான் ராமன்.
“புலம்பாதே. அண்ணா! மகாவிஷ்ணு பலிச்சக்கரவர்த்தியை அடக்கி மூன்று உலகத்தையும் அடைந்தது போல் நீ சீதையை அடைவாய். நிச்சயம், தைரியம் இழக்காதே!” என்றான் லக்ஷ்மணன்.
“இல்லை, தம்பி! தேடிப் பார்த்தாயிற்று. சீதை எங்குமில்லை. அவளை இழந்தேன். என் உயிர் இனி எனக்கு வேண்டியதில்லை” என்றான் ராமன்.
ஒரு முகூர்த்த நேரம் நினைவிழந்து கிடந்தான். பிறகு நினைவு வந்ததும் 'ஐயோ' என்று துயரம் தாங்காமல் உரத்த குரலில் அழ ஆரம்பித்தான். லக்ஷ்மணன் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை.
“லக்ஷ்மணா! என்னால் இனி என்றைக்கும் அயோத்தி போக முடியாது. சீதையை அழைத்துக் கொண்டு வனம் சென்றவன் அவளைப் பாதுகாக்க வகையில்லாதவன், அவளை அரக்கர்களுக்குத் தின்னும்படி கொடுத்து விட்டுத் தனியாகத் திரும்பி வந்தான் என்று உலகமெல்லாம் என்னை இகழும். ஜனகருக்கு நான் என்ன சொல்லிச் சமாதானப் படுத்துவேன்? நீ போய் நம் தாய்மார்களைக் கவனித்துக் கொள். பரதனை ஆலிங்கனம் செய்து எனக்காக அவனுக்குச் சொல்லி விடு. 'நீயே அரசன்; தேசத்தை நீயே அரசனாக இருந்து ஆள்வாய். ராமன் உனக்கு ஆக்ஞையிட்டு விட்டான் என்று சொல்லிவிடு” என்றான்.
லக்ஷ்மணன் எவ்வளவு தேறுதல் செய்ய முயற்சித்தும் பயன்படவில்லை. சீதையை ராக்ஷசர்கள் தூக்கிச் சென்று உடலைப் பிய்த்துப் பிய்த்துத் தின்று விட்டார்கள் என்று தீர்மானித்துவிட்டான். நரமாமிசம் தின்னும் அரக்கர்களிடம் அவள் படும் இம்சையைக் கற்பனை செய்து, அதை விரித்துச் சொல்லிச் சொல்லி அழுதுகொண்டேயிருந்தான்.
“நான் பெரும் பாபங்களைச் செய்தவனாக இருக்க வேண்டும். இல்லாவிடில் எனக்கு இவ்வளவு கஷ்டங்கள் நேர்ந்திருக்குமா? என்னுடன் வந்த சீதை அரக்கர்களுக்கு உணவாகப் போனதை நான் சகிக்க வேண்டியதாயிற்றே! என்னைப் போன்ற பாபி உலகத்திலே வேறு ஒருவனுமில்லை” என்றான்.
“அண்ணா, இப்படி நீ மன நிலையை இழந்து விடலாமா? தைரியத்தை இழந்தவர்கள் ஒரு முயற்சியையும் எடுக்க முடியாது. துக்கத்தை அடக்கியாண்டு மனத்தை ஸ்திரப்படுத்திக் கொள். விதியை முயற்சியால் வெல்லவேண்டும். அப்படி வெற்றி பெறுவதற்கு மனத்தினின்று அதைரியத்தை விலக்கித் தைரியம் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறு தான் உலகத்தில் தைரியசாலிகள் காரியசித்தியடைகிறார்கள். வனம் முழுதும் தேடிப் பார்ப்போம். சோகத்தில் மூழ்கிப்போகாதே! தைரியசாலிகளுடைய வழியைப் பின்பற்றுவோம்” என்று லக்ஷ்மணன் பலவாறு சொல்லிப் பார்த்தான். ஆனால் ராமனுடைய அளவு கடந்த துயரத்தில் அது பயனில்லாமல் போயிற்று.
ராமன் தன்னை ஒரு மனிதனாகத்தான் கருதினான். தன்னை விஷ்ணுவாக அறியவில்லை என்பதற்கு இந்தக் கட்டம் சந்தேகமற்ற அத்தாட்சியாகும். சில இடங்களில் நிகழ்ச்சிகளும் பேச்சுகளும் வேறு அபிப்பிராயத்துக்கு இடம் தந்தாலும் இந்தக் கட்டத்தில் வால்மீகி ராமனை மனிதனாகத்தான் வர்ணித்திருக்கிறார். உயிரைக் காட்டிலும் பிரியமான மனைவி அரக்கர்கள் நிறைந்த வனத்தில் காணாமற் போனால், மேம்பட்ட குணமுள்ள ஒரு புருஷன் எவ்விதம் நடந்து கொள்ளுவானோ அந்த விதத்திலேதான் ராமனுடைய மன நிலையும் நடத்தையும் இருக்கக் காண்கிறோம். தம்பி ஆறுதல் கூறியும் பயன் ஏற்படாத நிலையில் ராமன் இருப்பதைக் காண்கிறோம்.
ராமாவதாரத்தில் சாதாரண தருமம் விளக்கப் படுகிறது. தருமத்தோடு வளர்ந்த காதல் எவ்வாறிருக்க வேண்டும் என்பதைப் பார்க்கிறோம். மனைவியின் காதலுக்குப் புருஷனுடைய காதல் குறைவாக இருக்கலாகாது என்பதை இந்தக் கட்டத்தில் நன்றாகப் பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சிகளை ஆத்மீக முறையிலும் எடுத்துக் கொண்டு ஓரளவு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஆன்மா வழி தப்பிப் போனால் பகவானுடைய திருவுள்ளம் எந்த அளவில் துன்பப்படுகிறது என்பதை, சீதா வியோகத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.
பகவானுக்கு நஷ்டமேது, துன்பமேது என்று கேட்கலாம். சர்வம் பகவத் லீலை, எல்லாம் பகவானுடைய திருவிளையாடல் என்று உணர்ந்து விட்டோமானால் ஒரு விமரிசனமும் அதற்கு மேல் வேண்டியதில்லை. பாவம், புண்ணியம், பக்தி இவையெல்லாம் அந்த லீலையில் ஒரு பாகம். ஆண்டவனுக்கு நாம் ஒவ்வொருவரும் காதல் மனைவியைப் போலாவோம். நாம் எந்தக் காரணத்தினாலுமே வழி தப்பிப் போனால் ஆண்டவனுக்குக் காதல் மனைவியை இழந்த துக்கம் உண்டாகும். அந்தத் துக்கம் அவன் விளையாட்டில் ஒரு பாகம்.