இரு சகோதரர்களும் மலையிலும் வனத்திலும் ஆற்றங்கரையிலும் தேடித் தேடி 'சீதா! சீதா!' என்று கூக்குரலிட்டுப் பார்த்து ஒன்றும் பயன்படவில்லை. ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இன்னது செய்வது என்று ஒன்றும் தோன்றாமல் துக்கத்தின் வேகத்தால் கோதாவரியையும் தேவதைகளையும் பஞ்ச பூதங்களையும் ராமன் கூவிக் கூவிக் கதறினான். ஆறுகளுக்கும் தேவதைகளுக்கும் பஞ்ச பூதங்களுக்குமே ராக்ஷசேந்திரனிடம் உள்ள பயத்தால் எந்த மலையும் ஆறும் வாயுவுங்கூடப் பதில் தரவில்லை என்கிறார் கவி முனிவர்.
ஒரு மான் கூட்டம் மட்டும் சைகையால் தெற்கு முகம் நோக்கிப் போய்த் தேடுங்கள் என்று குறிப்பிட்டதாக அறிந்து ராம லக்ஷ்மணர்கள் தெற்கு நோக்கிச் சென்றார்கள். அங்கே வழியில் ஓரிடத்தில் புஷ்பங்கள் தரையில் சிதறிக் கிடந்திருப்பதைக் கண்டார்கள்.
அதைக் கண்டதும் “இதோ நான் கொடுத்த புஷ்பம்! சீதையின் தலையிலிருந்து உதிர்ந்த புஷ்பமே” என்று ராமன் துப்பு அறிந்து உற்சாகமும் கூடவே துயரமும் அடைந்தான். சீதைக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்கிற பயம் முன்னைவிட அதிகமாய் விட்டது. கதறிக் கதறி அழுதான்.
புஷ்பங்கள் கிடந்த இடத்தைச் சுற்றிக் காட்டில் தேடிப் பார்த்தார்கள். பூமியில் ராக்ஷசேந்திரனுடைய பெருங்காலடிச் சுவடுகளும் சீதையின் காலடி பதிந்த குறிப்புகளும் கண்டார்கள். சீதையின் ஆபரணங்களிலிருந்து சிந்திக் கிடந்த தங்க மணிகளையும் கண்டார்கள். அவற்றைப் பார்த்து ராமன், “பார்த்தாயா, அவளைப் பிடித்துத் தின்பதற்காக அரக்கன் துரத்தித் துரத்தி ஹிம்சித்திருக்கிறான்!” என்று சொல்லிப் பிரலாபிக்கலானான்.
*
பிறகு உடைந்து கிடந்த தேரின் பல பாகங்களைக் கண்டார்கள். ரத்தம் சிந்தியிருப்பதையும் கண்டார்கள். ராக்ஷசேந்திரனுடைய தலைப்பாகையும் ஆபரணங்களும் தரையில் சிதறிக் கிடப்பதைப் பார்த்தார்கள்.
இது என்ன? என்று திகைத்து யோசிக்கலானார்கள். ஒடிந்த பெரிய வில்லையும், கிழிந்து போய்க் கிடந்த தேர்க் கொடிகளையும் கவசத்தையும் கண்டார்கள். பிறகு சாரதியும் ரதத்தையிழுத்த பூதக் கழுதைகளும் செத்துக் கிடப்பதைக் கண்டார்கள். பெரியதொரு யுத்தம் அந்த இடத்தில் நடந்திருப்பதாகப் பல சின்னங்களைப் பார்த்தார்கள்.
“சீதையின் உடலைத் தின்பதற்காக இரு அரக்கர்கள் தங்களுக்குள் பெருஞ்சண்டை யிட்டிருக்கிறார்கள்” என்றான் ராமன்.
இப்படி நானாவிதமாக ஊகித்துக் கொண்டு, “தருமம் சீதையைக் காப்பாற்றவில்லையே! எந்த தெய்வமும் அவள் துணைக்கு வந்து நிற்கவில்லையே! இந்த உலகத்தை அழித்து விடுவதே சரி. நான் கற்ற அஸ்திரங்கள் பயன்படாமல் போகுமா, பார்க்கலாம்!” என்றான் ராமன். தன் மன நிலையை முற்றிலும் இழந்து இவ்வாறு பேசினான்.
ராமனுடைய மனக் குழப்பத்தையும் ஆற்றாமையையும் கண்டு தம்பி லக்ஷ்மணன் தைரியம் சொல்லிக் கொண்டே வந்தான். “பெருந்துயரம் ஏற்பட்டால் எல்லாருக்குமே மனம் கலங்கி சுவாதீனமற்றுப் போய் விடுகிறது. சகஜமாக உனக்குள்ள குணங்களை ஏன் விட்டு விட்டாய்? உலகத்தையெல்லாம் வெறுக்கவோ கோபிக்கவோ காரணமில்லை. ஒருவன் செய்த துஷ்டச் செயலை வைத்து நாம் உலகத்தையெல்லாம் பழிக்கலாமா? முந்தியெல்லாம், அண்ணா, என்னை நீ சாந்தப் படுத்திச் சரியான மார்க்கத்தில் நிறுத்திக் காப்பாற்றி வந்திருக்கிறாயே! உன் மனம் பெரும் துயரத்தால் கலங்கிப் போயிருக்கிறபடியால், சிறியவனாகிய நான் உனக்குத் தைரியம் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. உன்னுடைய இயற்கை தைரியத்தை நான் தட்டி எழுப்புகிறேன். உலகத்தை வெறுப்பது நியாயமல்ல. நம்முடைய பகைவன் யார் என்பதைக் கண்டுபிடித்துப் பிறகு செய்ய வேண்டியதைச் செய்வோம்.”
இவ்வாறு லக்ஷ்மணன் ஆறுதலும் தைரியமும் தரக்கூடிய மொழிகளைப் பிரியமாகச் சொல்லிக் கொண்டே சென்றான். கொஞ்ச தூரம் சென்றதும் தரையில் அசையாமல் குற்றுயிராய்க் கிடந்த ஜடாயுவைக் கண்டார்கள். சிறகுகள் வெட்டப்பட்டு உயிர் போகும் நிலையில் தரையில் கிடந்த பறவையைத் தூரத்திலிருந்து பார்த்த ராமன் யார் என்று தெரிந்து கொள்ளவில்லை. அது ஒரு அரக்கன், மாய வேஷம் போட்டுக் கொண்டு தங்களை ஏமாற்றுவதற்காகவே அப்படித் தரையில் கிடப்பதாக எண்ணினான். மாரீசன் செய்த மோசம் ராமன் மனத்தை இவ்வாறு எண்ணச் செய்தது. மகா கோபாவேசமாக “அதோ, அரக்கன்! சீதையைத் தின்றுவிட்டுப் படுத்திருக்கிறான்” என்று சொல்லி வில்லும் அம்புமாகப் பறவையிருந்த இடம் பாய்ந்தான்.
அப்போது ஜடாயு தீனமான சுவரத்தில், “அப்பா. ராமனே! என்னை நீ கொல்ல வேண்டாம், என் உயிர் இன்னும் ஒரு கணம்தான் இருக்கும். நீ இந்த வனத்தில் தேடித் தேடி அலைகிற உன் தேவியானவள் ராவணனால் தூக்கிப் போகப் பட்டாள். அத்துடன் என் உயிரையும் தூக்கிச் சென்று விட்டான். சீதா தேவியைத் தன் மாய ரதத்தில் தூக்கிச் செல்வதைப் பார்த்து நான் தடுத்து அவனுடன் போர் செய்தேன். அவன் வில்லையும் ரதத்தையும் உடைத்துப் பொடியாக்கினேன். அவனுடைய சாரதியையும் வதம் செய்தேன். தரையில் கிடப்பதெல்லாவற்றையும் பார், அந்த யுத்தத்தின் சின்னங்கள். முடிவில் ராக்ஷசன் நான்
களைப்பாயிருந்த சமயம் பார்த்து என் சிறகுகளைக் கத்தியால் வெட்டி என்னை வீழ்த்திவிட்டான். சீதையைத் தூக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாய்ச் சென்று விட்டான். சிறகுகளையிழந்து தரையில் கிடந்த என்னால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. உயிரை இவ்வளவு இவ்வளவு நேரம் வைத்துக் கொண்டு உனக்கு விஷயம் சொன்னேன்” என்றான்.
*
ஜடாயுவின் சொல்லைக் கேட்டதும் ராமன் கண்களினின்றும் ஆறுபோல் கண்ணீர் பெருகிற்று. வில்லை வீசி எறிந்துவிட்டு, பறவையைக் கட்டி அணைத்துக் கொண்டான். ராஜகுமாரர்களுடைய துக்கம் எல்லை கடந்து போயிற்று. 'கோ'வென்று அழுது கொண்டு பூமியில் புரண்டார்கள்.
“லக்ஷ்மணா! என்னைப் போன்ற துர்ப்பாக்கிய சாலி எவனுமில்லை. நாட்டை இழந்து காட்டுக்கு வந்து இங்கே சீதையையும் இழந்தேன். தசரதனுக்குப் பதில் நமக்குத் தந்தையாக இருந்த இந்த ஜடாயுவையும் நான் கொன்றேன். எனக்காகத் தன் உயிரை விட்டான். சீதையை இழந்த துக்கத்தைவிட இது அதிகத் துக்கமாயிருக்கிறது. நான் நெருப்பில் விழுந்தாலும் என்னுடைய துர்ப்பாக்கியம் அந்த நெருப்பையும் அணைத்து விடும். கடலில் விழுந்தேனானால் கடலில் உள்ள நீரும் என்னுடைய துர்ப்பாக்கியத்தால் வற்றிப் போகும். நான் பெரும் பாவி. லக்ஷ்மணா! ஒரு நாள் உன்னையும் நான் இழந்து விடுவேனோ?” என்று ராமன் அழுது புரண்டான்.
ஜடாயுவைக் கட்டியணைத்துக் கொண்டு “என் அப்பனே, என் சீதையை நீ கண்டாயா?” என்றான்.
ஜடாயு பேச்சிழந்து தரையில் உணர்வற்று விழுந்தான்.
மரணத் தறுவாயிலிருந்த கழுகரசன் சரியாகப் பேசச் சக்தியின்றி மறுபடியும் தீனஸ்வரத்தில், “பயப்படாதே, ராமா! சீதையை நீ மீண்டும் அடைவாய். அவளுக்கு ஒரு சேதமும் ஏற்படாது. இழந்த செல்வத்தை மறுபடியும் பெற்றுப் பெருமகிழ்ச்சியை அடைவாய்!” என்று சொல்லிவிட்டு வாயில் ரத்தமும் மாமிசமும் கக்கி உயிர் நீத்தான்.
மோகத்தாலும் மயக்கத்தாலும் தாம் செய்ய வேண்டியதைச் சமயத்தில் செய்யாமலும் செய்யக் கூடாததைச் செய்தும் சீதையை இழந்தார்கள்.
அயோத்தியில் தந்தை இறந்தான். அவனுக்கு உத்தரகிரியைகள் பரதனும் சத்ருக்னனும் செய்தார்கள். ராமனும் லக்ஷ்மணனும் அந்த ஆறுதலைக்கூட அடைய சந்தர்ப்பம் இல்லாமல் வனத்திலிருந்தார்கள். தாங்கள் அஜாக்கிரதையாக இருந்ததால் சீதைக்கு உண்டான அபாயத்தினின்று அவளைத் தப்புவிக்க, ஆயுதபாணியாயிருந்த அரக்கனோடு சிறகுகளும் காலும் மூக்கும் தவிர வேறு ஆயுதமின்றி ஜடாயு கடும் போர் செய்து தன் உயிரைத் தத்தம் செய்து விட்டதைக் கண்டார்கள். இந்த ஜடாயு தங்கள் தந்தைக்குச் சமானம் என்று பாவித்து அந்தப் பறவைக்கு உத்தரகிரியை தகப்பனாருக்குச் செய்வது போல் ராஜகுமாரர்கள் இருவரும் செய்து ஓரளவு ஆறுதல் அடைந்தார்கள். இறந்த வீரனுக்கு வேறு என்ன அவர்கள் செய்ய முடியும்?
பாகவத பக்தர்கள் ஜடாயுவை மிகப் பெரிய பக்த சிரேஷ்டனாக வணங்குகிறார்கள். அந்த ஏழைப்பறவை ராக்ஷசேந்திரனுடன் சண்டையிட்டுக் கஷ்டப் படும்போது பார்த்துக் கொண்டிருந்த சீதையின் உள்ளத்தில், எவ்வாறு அன்பும் நன்றியும் துக்கமும் பொங்கியிருக்கும் என்பதை நம் கற்பனா சக்தியைக் கொண்டு உணரவேண்டும். உணர்ந்தால் பிராட்டியின் அருளால் தூய்மையும் பக்தியும் அடைவோம். பக்தர்கள் ஜடாயுவை ஓர் ஆழ்வாராகக் கருதிப் பக்தி செய்வதில் என்ன வியப்பு? பின்னால், ராமன் இலங்கையில் யுத்தம் செய்து வெற்றி அடையப் போகிறான். ஆனால், அதை சீதை நேரில் காணுவதில்லை; அசோகவனத்தில் சிறைபட்டுக் கிடக்கிறாள். போர்க்கள நிகழ்ச்சியையும் புருஷனுடைய புகழையும் பிறர் சொல்லித்தான் அறிந்து திருப்தி அடையப் போகிறாள். ஆனால் ஜடாயுவின் பக்தியையும் வீரத்தையும் தண்டகாரண்யத்தில் பிராட்டி தன் கண்ணாலேயே பார்த்தாள். வில்லும் வாளும் கொண்ட அரக்கனை ஆயுதமொன்றும் இல்லாமல் எதிர்த்து, அவன் கர்வத்தை அடக்கி, முடிவில் தன் உயிரைத் தத்தம் செய்த வீரன் ஜடாயு. இலங்கையில் நடந்த யுத்தத்தைக் காட்டிலும் ராவண ஜடாயு யுத்தமே மேலானது என்றுகூடச் சொல்லலாம். இதனாலேதான் பக்தர்கள் பரதனை ஆழ்வான் என்று துதிப்பதுபோல், ஜடாயுவையும் ஆழ்வான் என்று பெயர் சூட்டிக் கொண்டாடுகிறார்கள்.
*
“லக்ஷ்மணா! உலர்ந்த கட்டைகளைத் திரட்டி அடுக்குவாய், நான் நெருப்புக் கடைகிறேன். நமக்காக உயிர்விட்ட கழுகரசனுக்கு, தசரதனுக்குச் செய்யத் தப்பிப்போன கிரியைகளைச் செய்வோம்” என்றான்.
“வேள்வித் தீயில் ஆகுதிவிட்டு யாகம் செய்த சீலர்களுக்கு எந்தப் பதவி உரியதோ, தவம் செய்யும் வானப் பிரஸ்தர்களுக்கு எந்தக் கதி உரியதோ, பூமி தானம் செய்யும் புண்ணியவான்களுக்கு எந்தப் புண்ணிய லோகம் உரியதோ, யுத்தத்தில் பின் வாங்காத வீரனுக்கு எந்த உலகம் உரியதோ, அவையெல்லாம் உனதாகுக, கழுகரசனே!” என்று சொல்லி ராஜகுமாரர்கள் நீர்க் கடனும் செலுத்தினார்கள். அதன் மேல் ராமன் மனத் தளர்ச்சி நீங்கித் தைரியம் அடைந்தான்.
*
பாரத மக்களுக்கு, கோடிக்கணக்கான ஆண் பெண் குழந்தைகளுக்கு, ராமாயணம் வெறும் கதையல்ல. வாழ்க்கை நிகழ்ச்சிகளைவிட உண்மை. சூரியனுடைய வெயிலினால் செடியும் கொடியும் எப்படி உண்மையில் வளர்கின்றனவோ, அப்படியே இந்த ராம சரித்திரத்தில் காணும் நிகழ்ச்சிகளை உட்கொண்டு பாரத தேசத்துக் கோடிக்கணக்கான மக்கள் வளர்ந்து பண்பட்டு வாழ்க்கை நடத்தும் சக்தியை அடைந்து வருகிறார்கள். எந்த அபலையாவது அபாயத்திலோ கஷ்டத்திலோ வருந்துவதைப் பார்த்தோமானால் ஜடாயுவை நினைத்து நாம் மனோபலம் அடைந்து செய்ய வேண்டியதைச் செய்வோமாக!
*
அவதார புருஷனான ராமன் துக்கம் வந்தபோது மனம் தளர்ந்து, புலம்புவது, உலகத்தில் மற்றொரு குலத்தார் பூஜிக்கும் அவதார புருஷனான ஏசுநாதரைப் பற்றி கிறிஸ்து புராணத்தில் சொல்லியிருப்பதோடு ஒப்பிட்டுக் கவனிக்கத் தக்கது. சிலுவையில் தூக்கி ஆணிகள் அடித்து மாட்டப்பட்டு வெகு நேரம் அந்த நிலையில் தவித்து முடிவில் உயிர்போகும் தறுவாயில் “ஏலோய்! ஏலோய்! லாமா சபக்தானி!” [இபராணி பாஷை, இதன் பொருள் : “என் கடவுளே; என் கடவுளே! என்னை ஏன் கைவிட்டாய்?”] என்று ஏசுநாதர் உரத்த குரலில் புலம்பிக் கூவி உயிர் நீத்ததாக எழுதப்பட்டிருக்கிறது. அவதாரங்களில் இன்றியமையாத ஒரு பொது இலக்கணத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தான் தெய்வமேயானாலும் அவதார உடலினுடைய தருமத்தின்படி துக்கப்படுதலும் மற்றும் பலவும் நடக்கும்.