எதிர்பாராத கஷ்டங்களும் விபத்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்ததைக் கண்டு விதியின் போக்கை யாராலும் விலக்க முடியாது என்கிற உணர்ச்சி மனத்தைக் கவர்ந்து ராம லக்ஷ்மணர்கள் தங்களுக்குள்ள இயற்கை தைரியத்தை அவ்வப்போது இழந்தார்கள். ஆனபோதிலும் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு சென்றார்கள்.
காட்டில் போய்க் கொண்டிருந்த பொழுது எதிர் பாராதபடி ஒரு கோர உருவம் கொண்ட ராக்ஷசனுடைய கையில் கையில் இரு ராஜகுமாரர்களும் அகப்பட்டுக் கொண்டார்கள். அந்த ராக்ஷசனுக்குத் தலையுமில்லை, கால்களுமில்லை. பெரிய வயிறும், மிக நீண்ட இரண்டு கைகளுமே அவன் உருவம். காட்டில் ஓர் இடத்தில் அசையாமலிருந்து கொண்டு இரண்டு கைகளையும் நீட்டி அவற்றுள் அகப்படும் புலி, கரடி முதலிய மிருகங்களை வயிற்றுக்குள் போட்டுக் கொண்டு தின்று விடுவான். வயிற்றிலேயே அவனுக்கு ஒரு பெரிய வாய். மார்பிலே ஒரு கண், பார்த்தாலும் சகிக்க முடியாத இந்தக் கோர உருவத்தோடு இருந்த அரக்கன் கையில் அகப்பட்ட இராஜகுமாரர்கள் கொஞ்ச நேரம் திகைத்தார்கள். இன்னது செய்வது என்று தெரியவில்லை. பிறகு ராமன் லக்ஷ்மணனுக்குச் சொன்னான்: “நீ ஒரு கையை வெட்டித் தள்ளு, நான் ஒரு கையை வெட்டி விடுகிறேன்.”
அப்படியே செய்தார்கள். அந்த அரக்கன் பெயர், கபந்தன். கைகள் வெட்டியவுடன் ஒன்றும் செய்ய முடியாமல் அரக்கன் பேச ஆரம்பித்தான். “நான் செய்த துராக்கிரமத்தால் சாபம் பெற்று இந்த உருவத்தில் வாழ்ந்து வந்தேன். நீங்கள் ராம லக்ஷ்மணர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் வந்து என் கைகளை வெட்டி விட்டு என் உடலை தகனம் செய்தீர்களாகில் நான் என் சொந்த உருவம் பெறுவேன். இதுவே எனக்கு இந்திரன் சொன்ன சாப விமோசனம”
என்றான்.
ராஜகுமாரர்கள் கபந்தனை எரித்தார்கள். எரிந்ததும் அவன் திவ்ய மங்கள ரூபத்துடன் நெருப்பிலிருந்து வெளி வந்து சுவர்க்கம் செல்ல விமானம் ஏறினான். “நீங்கள் சீதையை அடைவீர்கள். மிகவும் ரம்யமான பம்பா தீரத்துக்குச் சென்று அங்கே ரிச்யமூக மலையில் வசித்து வரும் சுக்கிரீவன் என்ற வானர ராஜாவின் உதவியைப் பெறவேண்டும். அவன் தன் அண்ணனாகிய வாலியால் ராஜ்யத்திலிருந்து துரத்தப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனுடைய நட்பை நீங்கள் சம்பாதித்தாலொழிய உங்கள் காரியம் நிறைவேறாது” என்று சொல்லி மறைந்தான்.
*
பிறகு ராமனும் லக்ஷ்மணனும் பம்பையை நோக்கிச் சென்றார்கள். அந்த அழகிய பிரதேசத்தில் மதங்க ரிஷியின் சிஷ்யையான சபரி என்கிற விருத்த சந்நியாசியம்மையைக் கண்டு அவளுடைய உபசாரத்தைப் பெற்றார்கள். சபரியம்மை மகாஞானி. ராமன் ஈசுவராவதாரம் என்பதை அறிந்தவள். அவன் வருவான், அவனைக் கண்டு அவன் பாதத்தில் வணங்கி பரமபதமடையவேண்டும் என்றே காத்திருந்தாள். ராமனுக்காகத் தான் தேடி வைத்திருந்த மிகுந்த ருசியான பழங்களை அவனுக்கும் லக்ஷ்மணனுக்கும் தந்து உபசரித்தாள்.
பிறகு சபரி அவ்விடத்திய மகிமைகளையெல்லாம் ராமனுக்குக் காட்டியும் சொல்லியும் தீயெழுப்பி அதில் பிரவேசித்து உடலை நீத்து மேலுலகம் சென்றாள்.
சபரியைக் கண்டு பம்பாசரஸில் ஸ்நானம் செய்த பின் ராம லக்ஷ்மணர்கள் தைரியமடைந்தார்கள். பிறகு செய்ய வேண்டியதை யோசித்தார்கள். “லக்ஷ்மணா! என் உள்ளத்தில் வெற்றியடைவோம் என்கிற உணர்ச்சி தோன்ற ஆரம்பித்திருக்கிறது. சுக்கிரீவனைப் பார்க்கும் வழி தேடுவாய்” என்றான் ராமன்.
பம்பை நோக்கிச் சென்றார்கள். பம்பையாறும் தடாகமும் வனமும் வசந்த பருவத்துக்குரிய அழகோடு சோபித்தன. மிருகங்களும், பறவைகளும், மரங்களும், கொடிகளும் தம்முடைய இயற்கை சௌந்தரியத்தைக் காட்டி ராமனுடைய துக்கத்தை முன்னைவிட அதிகமாக வளரச் செய்தன. எதைப் பார்த்தாலும் சீதை இதை எவ்வளவு அனுபவித்திருப்பாள் என்கிற எண்ணமே அவன் உள்ளத்தை வாட்டிற்று. அவதார சங்கற்பத்தின்படி அனுபவிக்க வேண்டிய மானுட துயரத்தை எவ்வளவு அடக்கியாளப் பார்த்தாலும் முடியவில்லை. எப்போதுமே தைரியமும் ஸ்தைர்யமும் கொண்ட ராமனுடைய மனம் தளர்ந்து போய் கஷ்டப் படுவதைப் பார்த்து லக்ஷ்மணன் ஆறுதல் மொழிகள் சொல்லி வந்தான். “தேவர்களின் தாயாகிய அதிதியின் கர்ப்பத்தில் மூடி வைத்தாலும் சீதையைக் கண்டு பிடிப்போம். ராவணன் தப்பிப் போக மாட்டான். நிச்சயம், அவனை வதைத்து சீதையை மீட்போம். இந்த மனத் தளர்ச்சி உனக்குத் தகாது. கவலையும் அதைரியமும் உன்னை அண்டலாமா? அவற்றைத் தூர விலக்கு. ஒரு பொருள் இருந்தால் அதை மறுபடி பெறுவதற்கு மனிதன் இடைவிடாத முயற்சியுடன் வேலை செய்ய வேண்டும். நம்முடைய அன்பே நமக்கு விரோதியாகப் போகிறது. அன்பின் காரணம் மனம் சோகத்தில் சிக்கியலைந்து தளர்ச்சி அடைந்து முயற்சியைத் தடுக்கிறது. உனக்கு நான் சொல்ல வேண்டுமா? உற்சாகமே மனிதனுக்கு முக்கிய சாதனம். சோகமும் அதை உண்டாக்கும் அன்பையும் மறந்து உற்சாகத்தை மேற்கொண்டு முயற்சி செய்வோமாக. தைரியம் செய்துகொண்டு சோகத்தைத் தள்ளுவாய், அண்ணா!”
இவ்வாறெல்லாம் தம்பி அண்ணனுக்கு உபதேசம் செய்தான். ஆதிசேஷன் மகா விஷ்ணுவுக்குக் காப்பு. அந்த ஆதிசேஷனைப் போல் இளைய பெருமான் சக்கரவர்த்தித் திருமகனை உற்சாகப் படுத்தி மனத்தாழ்ச்சியை விலக்கினான் என்பது பெரியோர்களுடைய வியாக்கியானம்.
ராமன் ரிச்யமூக வனம் வந்து இங்கு மங்கும் வில் பிடித்துத் திரிவதைப் பார்த்து சுக்ரீவனுக்கும் அவன் கூட்டத்துக்கும் பெரும் பயம் பிடித்துக் கொண்டது. வாலியால் துரத்தியடிக்கப்பட்ட சுக்ரீவன், வாலி வர முடியாத இடம் என்று கண்டு அந்த மலைப் பிரதேசத்தில் வாசம் செய்து கொண்டிருந்தான். இங்கும் வாலி மாறு வேஷம் போட்டுக் கொண்டு தன்னைக் கொல்ல வந்து விட்டானோ என்று சுக்ரீவன் பயந்தான். அல்லது வாலியினுடைய நண்பர்கள் க்ஷத்திரிய வீரர்கள் யாரோ அவன் சார்பில் வந்து தன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள் என்றும் பயந்தான். வனத்திலுள்ள மற்ற வானரர்களும் கிலி பிடித்து இங்குமங்கும் ஓடினர்.
ஹனுமான் சுக்ரீவனுடைய முக்கிய முக்கிய மந்திரி. அவன் சுக்ரீவனுக்குத் தைரியம் கூறினான். “இது வாலியல்ல. இவர்கள் வாலியின் நண்பர்களாகவும் காணப்படவில்லை. பயப்பட வேண்டிய காரணமில்லை. நான் போய்ப் பேசித் தெரிந்து கொண்டு வருகிறேன்” என்று சொன்னதன் பேரில் சுக்ரீவன் மிக மகிழ்ச்சியடைந்து “அப்படியே செய்! ஜாக்கிரதையாகப் போய் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வா. மிக சாமர்த்தியமாக உண்மையை உணர வேண்டும். எனக்கு ரொம்ப சந்தேகமாகத்தான் இருக்கிறது. அவர்கள் இங்கு மங்கும் தேடுவதைப் பார்த்தால் என்னைக் கண்டு பிடித்துக் கொல்லவே வந்திருப்பதாகத் தோன்றுகிறது” என்றான்.
ஹனுமான் ராம லக்ஷ்மணர்களிருந்தவிடம் ஒரு பிராமண வடிவமெடுத்துச் சென்றான். போய் நின்றதுமே ஹனுமானுடைய உள்ளத்தில் ஒரு புது உணர்ச்சி உண்டானதாகத் தெரிகிறது. உள்ளதை உள்ளது போல் சொல்லிப் பேசலானான். நிகழ்ச்சியை எழுதும்போது தான் யார் என்பதைக் காட்டாமல் விஷயம் கண்டு கொள்ளவே போனதாக முனிவர் ஆரம்பிக்கிறார். ஆனால் போகப் போக ஒன்றும் மறைக்காமல் தன்னைப் பற்றியும் வானர ராஜனைப் பற்றியும் விவரமாகப் பேசுகிறான். ராம லக்ஷ்மணர்களுடைய தோற்றத்தைக் கண்டதும் நாதனைக் கண்ட பக்தனைப் போல் பரவசப்பட்டு அனுபவித்துப் புகழ்கிறான். தான் ஒரு வானரம், தன்னுடைய அரசன் சொல்லிய வண்ணம் வேஷம் போட்டுக் கொண்டு வந்ததாகவே சொல்லி விடுகிறான்.
“மனத்தைக் கவரும் ரூபம் தரித்த ராஜ ரிஷிகளே! தேவர்களைப் போல் விளங்குகிறீர்கள். விரதம் பூண்டவர்களாகக் காணப்படுகிறீர்கள். தவம் செய்ய வந்தீர்கள் என்றே எண்ணுகிறேன். இந்தக் கஷ்டமான வனத்துக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் யார் என்று சொல்ல வேண்டும். இந்த நதியும் வனமும் உங்கள் வரவால் முன்னை விட அழகாக விளங்குகின்றன. உங்களுடைய முக காந்தியும் உங்கள் சரீர சௌந்தரியமும் ஆச்சரியமாக விளங்குகின்றன. உங்களுடைய அபூர்வ லக்ஷணங்களைக் கண்டு இந்த வனத்திலுள்ள ஜீவன்கள் பயப்படுகின்றன. உங்கள் பராக்கிரமம் சொல்லாமலே விளங்குகிறது. நீங்கள் யார், எந்த தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்? நீங்கள் பெரிய ராஜ்யத்தை ஆட்சி புரியவே பிறந்தவர்கள் என்பது வியக்தம். ஆயினும் தாபஸ வேஷம் தரித்திருக்கிறீர்கள். ஜடையும் மரவுரியும் தரித்து வில்லும் அம்புமாக வந்திருக்கிறீர்கள்.
“நான் இவ்வளவு சொல்லியும் ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? இங்கே சுக்ரீவன் என்கிற வானர ராஜன் தன் அண்ணன் வாலியால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டு இங்குமங்கும் அலைந்தும், மறைந்தும் காலம் கழித்து வருகிறான். அவனுடைய மந்திரி நான். என் பெயர் ஹனுமான். நான் வாயுவின் புத்திரன். அரசன் உத்தரவிட்டபடி பிராமண சந்நியாசி உருவம் தரித்து உங்களிடம் வந்திருக்கிறேன்.”
இவ்வாறு ஹனுமான் மிக வணக்கமாகச் சொன்ன மொழிகளைக் கேட்டு ராமன் லக்ஷ்மணனுக்குச் சொன்னான் :
“தம்பி, இந்த ஹனுமான் பேசியதைக் கேட்டு இவனிடம் எனக்கு முழு நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. அவன் பேச்சின் அழகைப் பார்த்தாயா? எவ்வளவு சரியான இலக்கணமும் சுவரமுமாகப் பேசுகிறான்! வேதங்கள் முழுதும் அத்தியயனம் செய்து, வியாகரணம் சம்பூரணமாகக் கற்றவனைப் போல் பேசுகிறான். இவனைப் போல் அல்லவோ இருக்கவேண்டும் தூதன். இத்தகைய தூதனைக் கொண்ட அரசனுக்கு ஒரு குறையுமில்லை. நாம் யாரைத் தேடி வந்தோமோ அவனே நம்மைத் தேடி வந்திருக்கிறான். சுக்ரீவனைக் காண நாம் வந்தோம். அவனே இந்தத் தூதனை அனுப்பியிருக்கிறான். இவனுக்கு நல்வரவு சொல்லி நம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிப்பாய்!” என்றான்.
*
ராம லக்ஷ்மணர்களும் ஹனுமானும் பரஸ்பரம் தங்கள் வரலாற்றையும் கஷ்ட சுகங்களையும் பேசிக் கொண்டார்கள். இந்த சம்பாஷணையின் பயனாக லக்ஷ்மணனுக்கு ஹனுமானிடம் மிகுந்த பிரியம் உண்டாயிற்று. அதை ராமனிடமும் சொன்னான்.
“மகா ஐசுவரியம் படைத்த என் தமையன், சக்கரவர்த்தியின் மூத்த மகன், ராஜ்யத்தை விட்டு விட்டு வனவாசம் செய்கிறான். உன் அரசனான சுக்ரீவனிடம் தன் காரியம் நிறைவேறுவதற்காக உதவியை நாடி வந்திருக்கிறான். சாபத்தால் ராக்ஷச வடிவம் பெற்ற தைத்யன் ஒருவன் நமக்கு ‘சுக்ரீவன் என்கிற வானர ராஜனுடைய சகாயத்தைப் பெற்றீர்களானால் அரக்கன் வஞ்சித்து எடுத்துப் போன ராஜகுமாரியை மறுபடி அடைவீர்கள்' என்று சொன்னான். அவன் சொற்படி இங்கே வந்திருக்கிறோம். உன்னுடைய அரசனுடைய நட்பைத் தேடி வந்திருக்கிறோம்” என்றான் லக்ஷ்மணன்.
வாயு குமாரனான ஹனுமானும் “சுக்ரீவன் வாலியால் பீடிக்கப்பட்டு, ராஜ்யத்தையும் மனைவியையும் இழந்தான். இரண்டையும் மறுபடியும் அடைவான் என்பது இப்போது உறுதியாயிற்று. உங்கள் நட்பை என் அரசன் அடைந்து அவனும் பயனடைவான். உங்களுடைய காரியமும் அவன் உதவியினால் நிறைவேறும்” என்றான்.
பிறகு மிகுந்த சந்தோஷத்தோடு மூவரும் வானர ராஜனான சுக்ரீவன் இருப்பிடம் சென்றார்கள்.
போகும் மார்க்கம் வானரர்கள் தான் தாண்டக்கூடுமாகையால், ஹனுமான் சுய ரூபமான வானர உருவமெடுத்து இரு ராஜகுமாரர்களையும் தன் தோளின் மீது ஏற்றிக் கொண்டு சென்றான்.
நல்லவர்களுடைய உள்ளங்கள் வெகு சீக்கிரம் சுலபமாக ஒன்று கூடும். வெகு காலம் ஒரே இடத்தில் கூடி வாழ வேண்டியதில்லை. அநேக சந்தர்ப்பங்களில் ஒருவரோடு ஒருவர் கலந்து பழக வேண்டியதில்லை. இருவர் உள்ளங்களிலும் தானாக உதிக்கும் உணர்ச்சியே நட்பைத் திடீர் என்று உண்டாக்கும்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா-உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும். என்பது திருக்குறள்.
தவிர இந்த நட்பு பகவானுடைய சங்கற்பம். ஹனுமானுடைய பக்தியையும் சேவையையும் ராமசந்திரன் அடைய வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டிருந்த படியால் ஒருவரை ஒருவர் கண்டவுடனே பூரண நம்பிக்கை தோன்றி விட்டது. தன் தோளின் மேல் இரு ராஜ குமாரர்களையும் தூக்கிச் செல்வது உள்ளத்தில் உண்டாகி விட்ட இணைப்பிலிருந்து தோன்றின மெய்ப்பாடு. நண்பர்களும் காதலர்களும் கட்டியணைத்துக் கொள்வதுபோல் தாசனும் பக்தனுமான ஹனுமான் தன் சுவாமியைத் தோளின் மேல் மகிழ்ச்சி பரவசமாகத் தூக்கிச் சென்றான்.
ரிச்ய மூகத்திலிருந்து மலயமலை ஏறிப் போய்ச் சேர்ந்ததும் ஹனுமான் சுக்ரீவனிடம் போய் ராம லக்ஷ்மணர்கள் வந்து அரசனைப் பார்க்கக் காத்திருப்பதாகத் தெரிவித்து, “இந்த ராமன் சிறந்த அறிவும் மற்ற எல்லா நற்குணங்களும் பெற்ற ராஜகுமாரன். இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மகாராஜா தசரதனுடைய மூத்த குமாரன். தகப்பன் சொல்லை சத்தியமாக்குவதற்காகத் தம்பியுடனும் மனைவியுடனும் அயோத்தியை விட்டு வனம் சென்றான். தசரத மகாராஜன் தன் இளைய மனைவியால் தூண்டப்பட்டு ராமனை அரண்ய வாசம் செய்யச் சொன்னான். அப்படி ராமன் தம்பி லக்ஷ்மணனுடன் காட்டிலிருந்த போது ராஜகுமாரர்கள் பக்கத்தில் இல்லாத சமயம் பார்த்து ராமன் மனைவியை ராவணன் தூக்கிப் போய் விட்டான். அவளைத் தேடிக் கண்டு பிடித்துத் தர ராமன் உம் உதவியை நாடி வந்திருக்கிறான். இந்த ராஜகுமாரர்கள் உம்முடைய நட்பை அடையும் தகுதி வாய்ந்தவர்கள். இவர்கள் சிநேகத்தை அடைந்தால் நீரும் பெரும் பயனடைவீர்” என்றான்.
சுக்ரீவன் அழகிய மானுட உருவம் தரித்து ராஜகுமாரர்களைக் கண்டு பேசினான். ராமனை நோக்கிக் கையை நீட்டி “ராஜகுமாரனே! வானரனான என் சிநேகத்தை நீ விரும்புவாயாகில் இதோ என் கை, அங்கீகரிப்பாயாக! உன் குணங்களையும் மகிமையையும் வாயு புத்திரனால் அறிந்தேன்!” என்றான்.
ராமனும் நீட்டிய கையை அங்கீகரித்து சுக்ரீவனை ஆலிங்கனம் செய்துகொண்டான்.
உடனே ஹனுமான் குச்சிகளைக் கொண்டு வந்து தீ மூட்டினான். அக்கினியைப் பூஜித்து பிரதக்ஷிணம் செய்து ராமனும் சுக்ரீவனும் நட்பு பிரதிக்ஞை செய்தார்கள். “இருவர்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் இருவரும் சம பங்கு கொள்வோம். நம்முடைய நட்பு என்றும் இருப்பதாக” என்று பிரமாணம் செய்தார்கள்.
இரண்டு பெரும் மரக்கிளைகளை ஆசனமாகக் கொண்டு ராமனும் சுக்ரீவனும் ஒரு இடத்திலும் ஹனுமானும் லக்ஷ்மணனும் மற்றொரு இடத்திலும் சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு உட்கார்ந்தார்கள். சுக்ரீவன் தன் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டான்.
“வாலியின் பயத்தால் வனத்தில் இங்குமங்கும் திரிந்து கொண்டும் இந்த மலையில் மறைந்திருந்தும் காலம் கழித்து வருகிறேன். நீ வாலியைக் கொன்று என் துக்கத்தைத் தீர்த்து ராஜ்யமும் மனைவியும் நான் மறுபடி பெற்று அனுபவிக்கும்படி செய்வாயோ?” என்றான்.
“நிச்சயமாக இதோ இந்த அம்புக்கு வாலி இரையாவான், சந்தேகமில்லை” என்றான் ராமன்.
இப்படி சுக்ரீவனும் ராமனும் பேசிக்கொண்டிருந்த காலத்தில் அசோகவனத்தில் சீதையின் இடது கண்கள் துடித்தன. அரக்கர்களின் அரசன் ராவணனுடைய இடது கண்களும் துடித்தன.