கண்ணன் கதைகள் - 5 - திருப்பூர் கிருஷ்ணன்

தெய்வத்தின் அருளுக்கு இணையானது

பாஞ்சாலி கண்ணனையே பக்திப் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன என்னையே பார்க்கிறாய் திரவுபதி?'' - கண்ணன் கனிவோடு கேட்டான். 

"உன் அருள் மட்டும் உரிய நேரத்தில் கிட்டாதிருந்தால் அன்று துரியோதனன் சபையில் என் சேலை இழுக்கப்பட்ட போது, என் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்தேன். உன் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தேன். தக்க தருணத்தில் ஓடி வந்து பக்தர்களைக் காப்பதில் உனக்கு இணை யார் உண்டு?''

"நான் ஓடி வரவில்லையே? தொலைவிலேயே துவாரகையிலேயே தானே இருந்தேன்?'' - கண்ணன் நகைத்தான். 

"நீ என் அருகிலேயே தான் இருந்தாய். என் உள்ளத்தில் இருந்தாய்!''- திரவுபதி பெருமையுடன் சொன்னாள். 

"பெண்களைப் பேச்சில் வெல்லக் கடவுளால் கூட முடியாது!''

"எனக்கு ஒரு சந்தேகம்!''

"பெண்களின் தேகம் முழுவதுமே சந்தேகம்தான்! கேள்!''

"நீ ஆண்களுக்குத் தான் உபதேசிப்பாயா? பெண்களுக்கு மாட்டாயா?''

"யார் சொன்னது? எவர் கேட்டாலும் என் அறிவுரை உண்டு. ஆனால் பெண்கள் பெரும்பாலும் உபதேசத்தைக் கேட்பவர்களாக இல்லை. உபதேசம் செய்கிறவர்களாகத் தான் இருக்கிறார்கள்! ருக்மிணி, சத்யபாமா போன்றோர் "இந்தப் பெண்ணைப் பார்க்காதே, அந்தப் பெண் அருகே நிற்காதே என்று நாள்தோறும் எனக்குச் செய்யும் உபதேசங்கள் எண்ணி மாளாது. தாய் யசோதை கூட நான் குழந்தையாக இருந்தபோது, இங்கே நிற்காதே, அங்கே போகாதே என்றெல்லாம் உபதேசம் செய்துகொண்டே இருப்பாள். பிறருக்கு உபதேசம் செய்யும் என் ஆற்றலே பெண்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது தான்!''

இதைக் கேட்டு திரவுபதி கலகலவென்று நகைத்தாள். 

பின் விடை தெரிந்து கொள்ளும் ஆவலோடு ஒரு கேள்வி கேட்டாள்:

"கண்ணா! என் கணவர் அர்ச்சுனர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக என்னென்னவோ அறிவுரையெல்லாம் சொல்கிறாயே? எனக்கு ஒரு கேள்வி உண்டு. அதற்கு உன் நேரடி பதில் தேவை. உன் அருளுக்கு இணையான வலிமை பெற்ற இன்னொன்று புவியில் உண்டா? அப்படியானால் அது எது?''

கண்ணன் புல்லாங்குழலைக் கையில் தட்டிக் கொண்டே மெல்லிய முறுவலுடன் தீர்மானமாகச் சொன்னான்:

"தெய்வத்தின் அருளுக்கு இணையான வலிமை படைத்தது பெரியவர்களின் ஆசி. இன்னும் சொல்லப்போனால் பெரியவர்களின் ஆசி மொழிகளே தெய்வத்தின் வாக்கு தான். அதனால் தான் தெய்வம் போல் வாழ்ந்த பெரியவர் சொன்ன மொழிகளைத் தெவத்தின் குரல் என்கிறோம். தெய்வம் தன் ஆசியைப் பெரியவர்களின் சொற்கள் வழியே தான் வழங்குகிறது.''

வாழ்க்கை தொடர்பான ஒரு பெரிய உண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் திரவுபதி கண்ணனைக் கைகூப்பி வணங்கினாள். தானே அந்த உண்மையால் பயனடையவும் அவள் வாழ்வில் விரைவிலேயே ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.... 

பாரதப் போர் தொடங்கிச் சில நாட்கள் தான் ஆகியிருந்தன. பீஷ்ம பிதாமகர் தொடர்பான அந்தக் குறிப்பிடத்தக்க செய்தி திரவுபதியை எட்டியபோது அவள் நிலைகுலைந்து போனாள். துயரம் வரும் வேளையில் எல்லாம் அவளுக்குக் கண்ணன் தானே கதி? "கண்ணா" எனக் கதறினாள். கண்ணன் தோன்றினான்.

"பாண்டவர்கள் மேல் உள்ள பாசத்தின் காரணமாக பீஷ்மர் தனக்கு விசுவாசமாக இல்லை என்று துரியோதனன் பீஷ்மரைக் கடுமையாகச் சாடினானாமே? நாளைக்குள் பாண்டவர்களை இல்லாமல் செய்வேன் என்று பீஷ்மர் சபதம் செய்தாராமே?'' 

"ஆமாம். பீஷ்மர் சபதம் செய்தார் என்றால் அதை நடத்திக் காட்டிவிடுவார். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பல ஆண்டுகள் முன் சபதம் செய்தாரே? அதை நடத்திக் காட்டினார் இல்லையா?''

"என் கலக்கத்தை அதிகப்படுத்தவா உன்னை அழைத்தேன்? இந்த நிலைமையை எப்படிச் சீர் செய்வது என்று சொல்!''

"பீஷ்மரின் சபதத்தை விட வலிமையான ஒன்றின் மூலம் அதை முறியடிக்க வேண்டும்!''

"அப்படி ஏதும் உண்டா?''

"உண்டே! பெரியவர்களின் ஆசி! பீஷ்மருக்கு இணையான ஒரு பெரியவரிடம் நீ ஆசி பெற வேண்டும்!''

"அந்தப் பெரியவர் யார்? அவரிடம் எப்படி எப்போது எங்கே ஆசி பெறுவது?''

கண்ணன் திரவுபதியை அருகே அழைத்தான். அந்தச் சூட்சுமத்தைக் காதோடு ரகசியமாய்ச் சொல்லிக் கொடுத்தான். அதைக் கேட்ட திரவுபதியின் விழிகள் வியப்பால் விரிந்தன. "அப்படியே செய்கிறேன்!'' என ஒப்புக்கொண்டாள். கண்ணன் குறும்பு கொப்பளிக்க நகைத்தவாறே சொன்னான்:

"ஆனால் ஒன்று. நான் சொன்னபடி நீ நாளை அதிகாலை அந்தப் பெரியவர் ஆற்றில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு வரும்போது அவர் பாதங்களில் விழுந்து ஆசி பெறப் போகிறாயே? அப்போது மறக்காமல் உன் முகத்தை முக்காடால் மூடிக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல. உன் கால்களில் நீ கொலுசணிந்து செல்ல வேண்டும். ஆற்று மணலில் புதையாமல் நடந்து உன் கொலுசுச் சப்தம் அவர் காதில் விழுகிற மாதிரி நீ பார்த்துக்கொள்ள வேண்டும்!''

"முக்காடால் முகத்தை மூடிக்கொள்ளச் சொன்னது ஏன் எனப் புரிகிறது. கொலுசு அணிந்து அது ஓசை எழுப்புமாறு நடந்துசெல்ல வேண்டும் என்கிறாயே? அதன் பொருள்தான் புரியவில்லை''.

"நான் சொன்னபடி கொலுசணிந்து நட. விளக்கத்தை நாளை சொல்கிறேன்!''

"நீ சொன்னபடி தானே நான் எப்போதும் நடக்கிறேன்!' -' திரவுபதி கண்ணனைக் கைகூப்பி வணங்கினாள்.

மறுநாள் சூரியோதயத் தருணத்திலேயே அவள் ஆற்றங்கரைக்குச் சென்று காத்திருந்தாள். அந்தப் பெரியவர் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு மணலில் கால்கள் புதைய நடந்து வந்தார். தன் முகத்தை முக்காடால் மூடிக் கொண்ட திரவுபதி கொலுசு சப்தம் செய்ய நடந்து அவர் அருகே சென்றாள். கொலுசின் ஓசை கேட்ட அவர் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டார். அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள் திரவுபதி. 

"தீர்க்க சுமங்கலீ பவ! மங்களானி பவந்து" "என்றும் சுமங்கலியாய் இருப்பாய்! மங்களம் உண்டாகட்டும்!''

அவர் அவளது நமஸ்காரத்தை ஏற்று மனப்பூர்வமாக ஆசி வழங்கினார். ஆனால் நமஸ்காரம் செய்வதை அவள் நிறுத்தவில்லை. ஐந்து முறை வணங்கி எழுந்தாள். ஐந்து முறையும் அவரது ஆசி தொடர்ந்தது.

"நான் தான் ஆசி கூறிவிட்டேனே? ஏன் மறுபடி மறுபடி விழுந்து வணங்குகிறாய்?'' கேட்டவாறே அவர் திரும்பிப் பார்த்தார். முக்காடை விலக்கி அவரைப் பணிந்த திரவுபதி ஏனென்றால் எனக்கு ஐந்து கணவர்கள்!' 'என்று சொல்லி விடைபெற்று வேகமாய்க் கண்ணனைச் சந்திக்க நடந்தாள். 

வியப்படைந்த பீஷ்மர், தன்னிடமே ஆசிபெறும் ஏற்பாட்டைக் கண்ணன் தான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என்றெண்ணி மனத்திற்குள் நகைத்துக் கொண்டார். தன் ஆசி பலிக்காமல் போகாது. 

கண்ணன் இருக்கும் கட்சி ஜெயிக்கும் என்று அவர் பெருமூச்சோடு எண்ணிக் கொண்டார். 

பாஞ்சாலி, "கண்ணா! நீ சொன்னபடிச் செய்து ஆசி பெற்றுவிட்டேன்!'' எனக் கண்ணனை வணங்கி நன்றி தெரிவித்தாள். 

"பீஷ்மருக்கு இணையான பெரியவர் வேறு யார் உண்டு? அதனால் தான் பீஷ்மரிடமே ஆசிபெறச் சொன்னேன்!'' என நகைத்தான் கண்ணன்.

"அதுசரி. முக்காடால் முகத்தை மறைத்துக் கொள்ளச் சொன்னாய். நான் என்று தெரிந்தால் அவர் ஆசி வழங்க மறுக்கக் கூடும் என்பதால்! எதற்குக் கொலுசு சப்தம் கேட்குமாறு நடக்கச் சொன்னாய்?''

"அவர் பெண்கள் என்றால் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். உன் கொலுசு சப்தம் கேட்டதுமே வந்திருப்பது பெண் என்பதால் உன் பக்கம் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டார். அதோடு நீ முகத்தை மறைத்து முக்காடும் போட்டுக் கொண்டு விட்டாய். இந்த இரு காரணங்களால் நம் எண்ணம் பலித்தது!''

"நம் எண்ணம் பலித்ததா? உன் எண்ணம் பலித்தது என்று சொல்! நீ நினைப்பது தானே நடக்கும்? பெரியவர்களது ஆசியின் முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் மூலம் உலகம் உணரட்டும்!'' என்று, தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிய கண்ணனைக் கைகூப்பித் தொழுதாள் திரவுபதி. 

நன்றி - தினமலர் ஜூன் 2012

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை