ஆறாவது ஸ்கந்தம் - பதினைந்தாவது அத்தியாயம்
(நாரதரும் அங்கிரஸ முனிவரும் சித்ரகேதுவுக்குத் தத்வோபதேசம் செய்தல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அங்கிரஸ முனிவர், நாரத முனிவர் ஆகிய அவர்களிருவரும் மரணம் அடைந்த பிள்ளையின் அருகில் விழுந்து, சோகத்தினால் மதிமயங்கி, மரணம் அடைந்தாற் போலிருக்கிற சித்ரகேது மன்னவனை நோக்கி ப்ரக்ருதி, புருஷன், ஈச்வரன் இவர்களின் உண்மையை அறிவிக்கிற இனிய உரைகளால் அவனுக்கு விவேகத்தை விளைத்துக்கொண்டு மொழிந்தார்கள். “மன்னவனே! நீ எவனைப்பற்றிச் சோகிக்கின்றனையோ, அத்தகைய இவன், ப்ரவாஹம் (நீரின் ஓட்டம்) போன்ற ஸ்ருஷ்டியில் (படைப்பில்) நடந்த காலத்திலாவது, நிகழ்காலத்திலாவது, வருங்காலத்திலாவது, உனக்கு என்னாக வேண்டும்? நீயும் இவனுக்கு என்னாக வேண்டும்? நீ ஜீவாத்மாவைக் குறித்துச் சோகிப்பாயாயின், சோகிக்கப்படுகிற இந்த ஜீவனுக்கும், உனக்கும் என்ன ஸம்பந்தம்? மூன்று காலங்களிலும் இவனோடு உனக்கு ஒருவிதமான ஸம்பந்தமும் கிடையாது. தேஹத்தைப் பற்றின பிதா, புத்ர ஸம்பந்தத்தைப்பற்றிச் சோகிப்பாயாயின், அதுவும் அழகன்று. மணல்கள் ப்ரவாஹ (நீர் ஓட்டத்தின்) வேகத்தினால் ஓரிடத்தில் குன்றாய்ச் சேருகின்றன. ஓரிடத்தில் குன்றாயிருந்த மணல்கள் பிரிந்துபோகின்றன. அங்கனமே ப்ராணிகள் மற்றவர்களோடு காலத்தினால் சேருவதும், பிரிவதுமாயிருக்கிறார்கள். விதைகள் முளைத்துக் காய்காய்த்துத் தம்மைப் போன்ற வேறு விதைகளை விளைக்கின்றன. காலக்கிரமத்தில் அழிந்து போகின்றன. அங்கனமே ப்ராணிகளிடத்தினின்று ஈச்வரனுடைய மாயையால் தூண்டப் பெற்று, வேறு ப்ராணிகள் உண்டாகிறார்கள். காலக்ரமத்தில் மரணம் அடைகிறார்கள். ஆகையால் ஈச்வரனுடைய மாயையின் மஹிமையை ஆராய்ந்து இவ்விஷயத்தில் சோகிக்கலாகாது. நாங்களும், நீயும், இதோ புலப்படுகின்றவர்களும், இக்காலத்திலுள்ள மற்ற ஐங்கம (அசையும்), ஸ்தாவரங்களும் (அசையாதவையும்) ஆகிய எல்லாம் பிறந்ததற்கு முன்பு இல்லவேயில்லை; மரணம் அடைந்ததற்குப் பின்பும் இருக்கப்போகிறதில்லை.
மன்னவனே! அங்கனமே இத்தேஹமும் இப்பொழுது கலைந்து போக ஆரம்பித்தது. இனி இருக்கப்போகிறதில்லை. ஆகையால் இத்தேஹத்தைப் பற்றியும் சோகிக்கலாகாது; ப்ராணிகளுக்குள் புகுந்து நியமிக்கிற ஸர்வேச்வரன் தன்னால் படைக்கப்பட்டவைகளும் தனக்குட்பட்டு ஸ்வாதீனம் (தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை) அற்றவைகளுமான ப்ராணிகளைக் கொண்டு ப்ராணிகளைப் படைப்பதும் காப்பதும், அழிப்பதும் செய்கிறான். அவன் கர்மத்தினால் விளையும் பிறவியற்றவன்; அவாப்த ஸமஸ்தகாமன். உலகத்தில், ஒருவன் ஒரு கார்யம் செய்யும் பொழுது தன் ப்ரயோஜனத்தையாவது பிறர் ப்ரயோஜனத்தையாவது கருதிச் செய்கிறான். ஈச்வரன் ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களைச் செய்வது தன் ப்ரயோஜனத்திற்காகவென்று சொல்லலாகாது. அவன் விருப்பங்களெல்லாம் கைகூடப் பெற்றவனாகையால், அவனுக்கு இவற்றால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் ஒன்றும் இல்லை. பிறர் ப்ரயோஜனத்திற்காகச் செய்கிறானென்று சொல்ல வேண்டும். அதற்குப் பிறரிடத்திலுள்ள அருளே காரணமாக வேண்டும். கர்ப்பம் (தாயின் கருவறை), ஜன்மம் (பிறப்பு), ஜரை (கிழத்தனம்), மரணம், நரகம் முதலிய பலவகையான துக்கங்களுக்கிடமான ஜகத்தை மன இரக்கமுடையவன் எவனும் படைக்கமாட்டான். எவனும் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் ஒரு கார்யத்தைச் செய்யமாட்டான் என்றால், ஈச்வரன் தன் ப்ரயோஜனத்திற்காக ஸ்ருஷ்டிக்கிறான் என்பதில்லை. ஏனெனில், அவன் அவாப்த ஸமஸ்தகாமன் (விருப்பங்களெல்லாம் கைகூடப் பெற்றவன்). ஸம்ஸாரம் பல துக்கங்களுக்கு இடமாகையால், பிறர் ப்ரயோஜனத்திற்காக ஸ்ருஷ்டிக்கிறான் (படைக்கிறான்) என்பதும் இல்லை. ஆயினும் பாலர்கள் விளையாடுவது போல், ஈச்வரன் வேறு ப்ரயோஜனத்தை எதிர்பாராமலே ஸ்ருஷ்டிக்கிறான் (படைக்கிறான்). ஈச்வரனுடைய ஸ்ருஷ்டி (படைப்பு) முதலிய கார்யங்களுக்கு விளையாட்டே ப்ரயோஜனம். ஆயினும், ப்ராணிகளை மேன்மையும், தாழ்மையுமாகப் படைக்கிறானாகையால் அவனுக்குப் பக்ஷபாதமும் (ஓரவஞ்சனையும்), பலவகைத் துக்கங்களை விளைக்கிறானாகையால், மன இரக்கமில்லாமையும் நேருமேயென்று சங்கிக்க வேண்டாம். அவன் ஜீவாத்மாக்களுடைய கர்மங்களை அனுஸரித்து, மேன்மை, தாழ்மைகளையும், ஸுக, துக்கங்களையும் விளைக்கிறானாகையால் அவனுக்குப் பக்ஷபாதமாவது (ஓரவஞ்சனையாவது), மன இரக்கமில்லாமையாவது உண்டாகாது.
மன்னவனே! பூமியில் நட்ட விதையினின்று வேறு விதைகள் உண்டாவது போல, ஜீவனுடைய தேஹம் தந்தையின் தேஹத்தினால் மாதாவின் தேஹத்தில் உண்டாகின்றது. அக்னிக்கு உஷ்ணம் போலவும், ஜலத்திற்குக் குளிர்ச்சி போலவும், தேஹத்திற்கு மரணம் அடைவது ஸ்வபாவம். ஆகையால் அதைப்பற்றிச் சிந்திக்கலாகாது. ஜீவன் என்றும் ஒருவாறாயிருப்பவன்; நித்ய ஆனந்த ஸ்வரூபன்; ஆகையால், புருஷர்களால் ஆசைப்படத் தகுந்தவன். அத்தகையனான ஜீவனுக்குத் தேஹ ஸம்பந்தம் அநாதியான அவிவேகத்தினால் (சரீரம், ஆத்மா இவற்றின் உண்மை நிலையை அறியாததால்) ஏற்பட்டதேயன்றி ஸ்வாபாவிகமன்று (இயற்கையன்று). முத்துச் சிப்பியைப் பார்த்து இது வெள்ளியென்று ப்ரமிப்பது போல், தேஹத்தை ஆத்மாவென்றும் தன்னை ஸ்வதந்த்ரனென்றும் (பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவன் என்றும்) ப்ரமிக்கின்றான். முத்துச்சிப்பியில், வெள்ளியென்னும் ஜாதி, உருவம் இவற்றின் பிரிவுகள் ப்ரமத்தினால் (மனக்கலக்கத்தால்) கற்பிக்கப்படுவது போல், “இத்தேஹம் இந்த ஜீவனுடையது; இந்த ஜீவன் இத்தேஹமுடையவன் என்னும் பிரிவு அவிவேகத்தினால் (சரீரம், ஆத்மா இவற்றின் உண்மை நிலையை அறியாததால்) கற்பிக்கப்படுகின்றது. ஆகையால் ஜீவனுக்குத் தேஹ ஸம்பந்தம் வந்தேறியேயன்றி நித்யமன்று” என்று மன்னவனுக்கு ஹிதம் உபதேசித்தார்கள்.
இங்கனம் அந்த ப்ராஹ்மணர்களின் உரைகளால் ஸமாதானம் செய்யப்பெற்ற சித்ரகேது மன்னவன், புத்ரசோகத்தினால் வாடின முகத்தைக் கையால் துடைத்துக்கொண்டு அவர்களை நோக்கி “நீங்கள் மஹாஜ்ஞானிகளாய் இருக்கிறீர்கள்; மேன்மையுடைய பெரியோர்களுக்கும் பெரியோர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் அற்பவேஷத்துடன் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார்? பகவானுக்கு அன்பர்களான ப்ராஹ்மணர்கள், பித்தம் (பைத்தியம்) பிடித்தவர் போல் வேஷம் பூண்டு, என்னைப்போன்ற மூடர்களுக்கு ஜ்ஞானோபதேசம் செய்யும் பொருட்டு இப்பூமியில் திரிகிறார்கள். அவர்களில் நீங்கள் யாவரோ தெரியவில்லை. ஸனத்குமாரர், நாரதர், ருபு, அங்கிரஸ்ஸு, தேவலர், அஸிதர், அபாந்தரதமஸ்ஸு, வ்யாஸர், மார்க்கண்டேயர், கௌதமர், வஸிஷ்டர், பரசுராமர், கபிலர், ஸ்ரீசுகர், துர்வாஸர் , யாஜ்ஞவல்க்யர், ஜாதுகர்ணி, ஆருணி, ரோமசர், சயவனர், தத்தாத்ரேயர், ஆஸூரி, பதஞ்சலி, பராசரர், மைத்ரேயர், பாரத்வாஜர், வாருணி, வேதசிரர், ஆங்கிரஸர், பஞ்சசிகர், ஹிரண்யநாபர், கௌஸல்யர், சுருததேவர், ருதத்வஜர் இம்முனிவர்களும் மற்றும் பல முனிவர்களும் மூடர்களுக்கு ஜ்ஞானோபதேசத்தின் பொருட்டு இப்பூமண்டலத்தில் ஸஞ்சரிக்கிறார்கள். அவர்கள் தபஸ் ஸித்தி பெற்றவர்களில் சிறந்தவர்கள். ஜ்ஞானத்தையே செல்வமாக உடையவர்கள். அவர்களில் நீங்கள் யாவரோ தெரியவில்லை. நீங்கள் யாராயிருந்தாலும் இருப்பீர்களாக. என்னைப் போன்ற மூடனுக்கு ஜ்ஞானோபதேசம் செய்ய வல்லராயிருக்கிறீர்கள். நான் அஜ்ஞானமாகிற அந்தகாரத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; மூடபுத்தியுடையவன். மனுஷ்யனைப் போல் தோற்றுகிறேனேயன்றிப் பசுவின் (விலங்கின்) தன்மையே எனக்குள்ளது. ஆஹாரம், நித்ரை, பயம், மைதுனம் இவையொழிய மற்றொன்றும் அறியேன். பசுக்களைக் (விலங்குகளைக்) காட்டிலும் மனுஷ்யர்களுக்கு ஜ்ஞானமன்றோ விசேஷம்? அது எனக்கு முதலே கிடையாது. ஆகையால் இத்தகைய எனக்கு நீங்கள் ஜ்ஞானச்சுடர்விளக்கை ஏற்றிக் கொடுப்பீர்களாக” என்றான்.
மன்னவனின் வார்த்தையைக் கேட்டு, அங்கிர மஹர்ஷி மன்னவனை நோக்கி “ஓ, ராஜனே! நீ பிள்ளை வேண்டுமென்று விரும்பிக் கொண்டிருக்கையில் உனக்குப் பிள்ளையைக் கொடுத்த அங்கிரஸ முனிவன் நான். இவர் ப்ரஹ்மதேவனது புதல்வராகிய நாரதமஹர்ஷி; மஹானுபாவர். நீ இங்கனம் புத்ர சோகத்தினால் கடக்க முடியாத அஜ்ஞானத்தில் ஆழ்ந்திருப்பதையும், நீ அதற்குத் தகாதவனென்பதையும், பெரியோர்களால் அனுக்ரஹிக்கத் தகுந்தவனென்பதையும் ஆராய்ந்து உன்னை அனுக்ரஹிக்கும் பொருட்டு நாங்கள் இவ்விடம் வந்தோம். ப்ரபூ! ப்ராஹ்மண குலத்திற்கு க்ஷேமம் செய்பவனும், பகவானிடத்தில் பக்தியுடையவனுமாகிய, உன்னைப் போன்றவன் துக்கிப்பதற்கு உரியவனல்லன். முன்பு வந்தாற்போல் உன் க்ருஹத்திற்கு வந்திருக்கிற நான், உனக்கு ஜ்ஞானத்தை உபதேசிக்கிறேன். நீ முன்பு பிள்ளை வேண்டுமென்று வேறு விஷயத்தில் பேராவலுற்றிருந்தாய். ஆகையால், அதை அறிந்து நான் அப்பொழுது உனக்கு பிள்ளையைக் கொடுத்தேன்.
மன்னவனே! பிள்ளை பெற்றவர்களுக்கு நேரும் பரிதாபத்தை நீயே நேரில் அனுபவிக்கின்றாய். இங்கனமே மனைவி, மனை, பணம், பலவகையான ஐச்வர்யப் பெருக்குகள் சப்தாதி விஷயங்கள் ராஜ்ய போகங்கள் இவையெல்லாம் நிலையற்றவைகள். ராஜனே! பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருக்கை, யானை, குதிரை முதலிய சதுரங்க பலம், கருவூலம், ப்ருத்யர்கள் (சேவகர்கள்), மந்த்ரிகள், நண்பர்கள், இவையெல்லாம் கந்தர்வ நகரம் போலவும் ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற ஆச்சர்யமான மனோரதங்கள் போலவும் நிலையற்றவைகள். அவை சோகம், மோஹம், பயம் இவற்றைக் கொடுக்கும். அவை புலப்படும் காலத்திலும் பரம புருஷார்த்தமான ஆநந்தத்திற்கிடமல்லாமலே புலப்படும்; அழிந்த பின்பு மீளவும் எக்காலத்திலும் புலப்படமாட்டாது.
ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற வஸ்துக்கள் போல, நாம் விழித்துக்கொண்டிருக்கும் பொழுது அனுபவிக்கும் வஸ்துக்களும் மனத்தினின்றே உண்டாகின்றன. அதெப்படியென்றால், நாம் அனுபவிக்கும் வஸ்துக்களெல்லாம் ஜன்மாந்தரத்தில் செய்த கர்மங்களின் பலனாகவே ஏற்பட்டவை. அனாதி கர்மவாஸனையால் ஜீவன் கர்மங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறான். அம்மனத்தினால் தூண்டப்பட்டு மீளவும் கர்மங்களைச் செய்கிறான். ஆகையால், அக்கர்மங்களின் பலனாக ஏற்படும் வஸ்துக்கள் மனத்தினின்று உண்டானவைகளே. ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்கள் ஜ்ஞானேந்திரிய, கர்மேந்தரியங்கள் இவற்றின் ஸமுதாய ரூபமான தேஹம் ஜீவனுக்கு ஜன்மாந்தரத்தில் செய்த கர்மங்களின் பலனான பலவகை வருத்தங்களை அனுபவிப்பதற்காகவே ஏற்படுகின்றதென்று சொல்லுகிறார்கள். (முதலில் அனாதி வாஸனையோடு கூடின மனத்தினால் சப்தாதிவிஷயங்களைச் சிந்திக்கிறான். அச்சிந்தையால் அவற்றைப் பெறுதற்குரிய புண்ய, பாப கர்மங்களைச் செய்கிறான். அக்கர்மங்களால் சுக துக்கங்களை அனுபவிப்பதற்கிடமான தேஹத்தைப் பெறுகிறான். அத்தேஹத்தினால் முன் ஜன்மத்தில் செய்த கர்ம பலன்களை அனுபவித்துக்கொண்டே மீளவும் சப்தாதி விஷயங்களைச் சிந்திக்கிறான். அச்சிந்தையால் மீளவும் கர்மங்களைச் செய்கிறான். ஆகையால் ஜீவன் அனுபவிக்கும் வஸ்துக்களெல்லாம் மனத்திலுண்டானவைகளே). இங்கனம் பிள்ளை, பெண்டிர் முதலியவை அனைத்தும் ஸ்வப்னத்தில் (கனவில்) கண்ட வஸ்துக்களைப் போல நிலையற்றவையாகையால் மனக்கலக்கமின்றித் தேஹாதிகளைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), ஜ்ஞானாநந்த ஸ்வரூபனுமாகிய ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து தேஹத்தில் ஆத்மாபிமானத்தைத் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணத்தைத்) துறந்து வைராக்யத்தை ஏற்றுக்கொள்வாயாக” என்றார்.
இங்கனம் அங்கிரஸ முனிவரால் விவேகம் உண்டாகும் படி உரைக்கப்பெற்ற சித்ரகேது மன்னவனைப் பார்த்து நாரத முனிவர் மொழிந்தார். “மன்னவனே! நான் ரஹஸ்யமான மந்திரத்தை உபதேசிக்கிறேன். இதை நீ மனவூக்கத்துடன் பெற்றுக் கொள்வாயாக. இதை மறவாமல் தியானிப்பாயாயின், ஏழு நாளைக்கு மேல் ப்ரபுவான ஸங்கர்ஷண பகவானைக் காண்பாய். மன்னவனே! அவருடைய பாதமூலத்தைப் பணிந்து, ருத்ரன் முதலிய பெரியோர்கள் இரண்டு வகையான ப்ரமத்தையும் (1. இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் - மனக்கலக்கம்; 2. நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) துறந்து, அப்பொழுதே இணையெதிரில்லாத அவருடைய மஹிமையைப் பெற்றார்கள். நீயும் சீக்கிரத்தில் மேலான அம்மஹிமையைப் பெறுவாய்” என்றார்.
பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.