வியாழன், 2 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 148

ஆறாவது ஸ்கந்தம் - பதினான்காவது அத்தியாயம்

(வ்ருத்ராஸுரனுக்குத் தத்வ ஜ்ஞானம் உண்டானதின் காரணத்தைப் பரீக்ஷித்து - வினவுதலும், ஸ்ரீசுகர் அவனுடைய  பூர்வஜன்மத்தைக் கூறுதலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹம ரிஷீ! வ்ருத்ராஸுரன் ரஜோகுணத்தையும், தமோ குணத்தையுமே இயற்கையாகவுடைய அஸுர குலத்தில் பிறந்தவன்; பாபங்களையே செய்யும் தன்மையன். அவனுக்கு ஷாட்குண்ய பூர்ணனாகிய ஸ்ரீமந்நாராயணனிடத்தில் திடமான பக்தி எங்கனம் உண்டாயிற்று? ஸத்வ குணமே தலையெடுக்கப் பெற்றவரும், பரிசுத்தமான மனமுடையவருமான தேவதைகளுக்கும், மஹர்ஷிகளுக்கும் கூட முகுந்தனுடைய பாதார விந்தங்களில் பெரும்பாலும் பக்தி உண்டாகிறதில்லை. அப்படிப்பட்ட பக்தி இவ்வஸுரனுக்கு எப்படி உண்டாயிற்று? பூமியின் துகள் போல இப்பூமியிலுள்ள ஜந்துக்களும் கணக்கிட முடியாதவை. அவற்றில் மனுஷ்யர் முதலிய சிலரே சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட தர்மத்திற்கு அதிகாரிகள். ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! அவர்களில் சிலரே மோக்ஷத்தில் விருப்பங்கொள்பவர். அங்கனம் முயற்சி கொள்கிற பலவாயிரம் பேர்களுக்குள் ஒருவனே ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களிலிருந்து விடுபட்டு யோகஸித்தியைப் பெறுகிறான். மாமுனியே! ராகம் முதலிய தோஷங்கள் நீங்கி ஸித்தி பெற்ற கோடி பேர்களிலும் ஸ்ரீமந்நாராயணனையே முக்யமாகப் பற்றிப் பரிசுத்தமான மனமுடையவன் ஒருவனும் கிடைப்பதரிது. அந்த வ்ருத்ராஸுரன் பாபிஷ்டன்; ஸமஸ்த லோகங்களுக்கும் துக்கத்தை விளைக்கும் தன்மையன். அவனுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் நிலைநின்ற மதி (புத்தி) எங்கனம் உண்டாயிற்று? க்ராம்யமான சப்தாதி விஷயங்களில் ப்ரீதி எப்படி உண்டாகாதிருந்தது? அவை எப்படிப்பட்டவனையும் இழுக்குந் தன்மையுடையவையல்லவா? ஆகையால், இவ்விஷயத்தில் எனக்குப் பெரிய ஸந்தேஹம் உண்டாயிருக்கின்றது. அவன் இந்த்ரனிடத்தில் பயந்து ஸ்ரீக்ருஷ்ணனைச் சரணம் அடைந்தானென்று சொல்லவும் இடம் இல்லை. அந்த வ்ருத்ராஸுரன் தன் பௌருஷத்தினால் (வீரத்தினால்) தேவேந்திரனை ஸந்தோஷப் படுத்தினானென்று மொழிந்தீர். ஆகையால் அதன் காரணத்தைக் கேட்க வேண்டுமென்று எனக்குப் பெரிய குதூஹலமாயிருக்கின்றது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! நான் ஒரு உபாக்யானம் (கதை) சொல்லுகிறேன், கேட்பாயாக. இதை நான் வ்யாஸரிடத்திலும், நாரதரிடத்திலும், தேவரிடத்திலும், கேட்டேன். இந்த வ்ருத்ராஸுரன் முன் ஜன்மத்தில் சூரஸேன தேசங்களில் பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாகிய சித்ரகேதுவென்னும் மன்னவனாயிருந்தான். அவனுக்குப் பூமி விரும்பினவற்றையெல்லாம் கறந்தது. அவனுக்குக் கோடி பார்யைகள் இருந்தார்கள். அவன் ஸந்ததியைப் பெறச் சக்தியுடையவனாயினும் அவர்களிடத்தில் ஸந்ததியைப் பெறவில்லை. ரூபம், ஒளதார்யம், வயது, நற்குலப்பிறப்பு, வித்யை, ஐச்வர்யம், செல்வம் இவை முதலிய குணங்களெல்லாம் அமைந்த அம்மன்னவனுடைய பார்யைகள் அனைவரும் மலடிகளாகவே இருந்தார்கள். அவனுக்குப் பிள்ளையில்லையேயென்று பெரிய சிந்தை உண்டாயிற்று. ஸமஸ்தமான ஸம்பத்துக்கள் அழகான கண்ணுடைய பட்ட மஹிஷிகள் ஸமஸ்தமான இப்பூமண்டலம் இவையெல்லாம் அவனுக்கு ஸந்தோஷத்தை விளைக்க வல்லவையாகவில்லை. அம்மன்னவன், இங்கனம் பிள்ளையைப்பற்றிச் சிந்தையுற்று மனக் களிப்புற்றிருக்கையில், தவத்தில் ஸித்திபெற்ற மஹானுபாவரான அங்கிரஸ மஹர்ஷி ஒருகால் தெய்வாதீனமாய் அவனுடைய வீட்டிற்கு வந்தார். அம்மன்னவன், விதிப்படி எழுந்து எதிர்கொண்டு அர்க்யம், பாத்யம் முதலியவற்றால் பூஜித்து அவருக்கு விருந்தளித்து அவர் ஸுகமாக உட்கார்ந்திருக்கையில், மனவூக்கத்துடன் அவருடைய அருகாமையில் வந்து உட்கார்ந்தான். 

வணக்கத்துடன் அருகிலிருக்கின்ற அம்மன்னவனை அம்மஹர்ஷி வெகுமதித்து “மன்னவனே நீ ஆரோக்யமா? உன் ப்ரக்ருதிகள் அனைவரும் (ராஜ்யத்தின் முக்கியவைகளான தலைமை புரோஹிதர், முக்கிய மந்திரி, மக்கள், கோட்டைகள், கஜானா, காவல் படை, ராணுவம் மற்றும் நட்பு நாடுகள்)   க்ஷேமமாயிருக்கின்றார்களா? ஜீவன், மஹத்து, அஹங்காரம் பஞ்ச தன்மாத்ரங்கள் ஆகிய இவ்வேழு தத்வங்களால் பாதுகாக்கப்பட்டு ஸுகத்தை அனுபவிப்பது போல். மன்னவனும் ப்ரக்ருதிகளிடத்தில் தன்னை ஒப்புவித்து அவர்களால் பாதுகாக்கப்பெற்று ஸுகத்தை அனுபவிப்பான். ப்ரக்ருதிகளும், மன்னவனால் பாதுகாக்கப் பெற்றுத் தமது இஷ்டங்களைப் பெறுவார்கள்; அனிஷ்டங்களையும் (துக்கங்களையும், கஷ்டங்களையும்) போக்கிக் கொள்வார்கள். உன் பார்யைகளும் (மனைவிகளும்), ப்ரஜைகளும் (மக்களும்), கார்ய ஸஹாயமான (செயல்களில் உதவி புரியும்) மந்திரிகளும், நண்பர்களும், தாம்பூலம் கொடுப்பவர் முதலிய பரிசாரகர்களும் (வேலைகாரர்களும்), மந்த்ராலோசனைக்குத் தகுதியான மந்திரிகளும், பட்டணத்து ஜனங்களும், தேசாந்தரத்து (வேற்று நாட்டு) ராஜாக்களும், பிள்ளைகளும், உன் வசப்பட்டு நடக்கின்றார்களா? மனத்தை சப்தாதி விஷயங்களில் போகவொட்டாமல் அடக்கியாளும் திறமை உடையவனுக்கு பார்யை (மனைவி) முதலிய இவர்கள் அனைவரும் வசப்பட்டிருப்பார்கள். அவனுக்கு லோகபாலர்களும் (சிற்றரசர்களும்) ஸமஸ்தமான (எல்லா) லோகங்களும் கப்பங்கொடுத்துப் பணிவார்கள். உன் மனம் ஸந்தோஷமற்றிருக்கின்றதே. இது ஸ்வயமாகவேயா? அல்லது வேறு காரணத்தைப் பற்றியா? நீ மனவிருப்பம் ஈடேறப் பெறாதவன் போல் தோற்றுகின்றாய். உன் முகம் சிந்தையினால் ஒளியற்றிருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன?” என்றார். 

மன்னவனே! அம்முனிவர் அரசனுடைய கருத்தை அறிந்தவராயினும் இங்கனம் வினவினார். ஸந்ததியை விரும்புகின்ற அவ்வரசன் வணக்கத்துடன் அம்முனிவரை நோக்கி “மஹானுபாவரான மஹர்ஷியே! தவம், ஜ்ஞானம், ஸமாதி, இவற்றால் பாப கர்மங்களெல்லாம் தொலையப் பெற்ற உம்மைப் போன்ற யோகிகளுக்கு ப்ராணிகளின் மனத்திலும் வெளியிலுமுள்ள எவைதான் தெரியாது? எல்லாம் தெரியும். ப்ரஹ்மர்ஷீ! ஆயினும் நீர் என்னை வினவுகின்றபடியினால், என் மனக்கருத்தைச் சொல்லுகிறேன். பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருக்கையாகிற ஐச்வர்யம், அதனால் விளையும் ஸம்பத்து (செல்வம்) இவையெல்லாம் இந்த்ரன் முதலிய லோகபாலர்களாலும் ஆசைப்படத் தகுந்தவை. ஆயினும், பசி, தாஹங்களால் வருந்தினவனுக்கு மற்ற போகங்களெல்லாம் மனக்களிப்பை (மகிழ்ச்சியை) விளைக்கமாட்டாதவைபோல், ஸந்ததியற்றிருக்கிற எனக்கு அவையெல்லாம் சிறிதும் களிப்பை (மகிழ்ச்சியை)  விளைக்கவில்லை. மஹானுபாவரே! ஆகையால், நான் என் தந்தை முதலிய பெரியோர்களுடன் கடக்க முடியாத நரகத்தில் விழ ஸித்தமாயிருக்கிறேன். எனக்கு ஸந்ததியைக் கொடுத்து நாங்கள் அந்நரகத்தைக் கடக்கும்படி அருள்புரிவீராக” என்றான். 

அங்கிரஸ முனிவர் ப்ரஹ்மாவின் புதல்வர்; ஸமர்த்தர்; மன இரக்கமுடையவர். அவர் அம்மன்னவனால் வேண்டப்பெற்று த்வஷ்டாவைத் (தேவ சிற்பியான விச்வகர்மாவைத்) தேவதையாகவுடைய சருவைப் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) பக்குவம் செய்வித்து மன்னவனைக்கொண்டு அதனால் அந்த த்வஷ்டாவை (தேவ சிற்பியான விச்வகர்மாவை)  ஆராதித்தார். பாரதனே! பிறகு யாகத்தில் மிகுந்த சருவை (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருளை) அம்மன்னவனுடைய பார்யைகளில் முதன்மையானவளும் சிறப்புடையவளுமாகிய க்ருதத்யுதி என்பவளுக்குக் கொடுத்தார். அம்முனிவர் மீளவும் மன்னவனை நோக்கி ''ராஜனே! சித்ரகேது! உனக்கு ஒரு பிள்ளை பிறப்பான். அவன் தனது பிறவியால் உனக்கு ஸந்தோஷத்தையும், மரணத்தினால் சோகத்தையும் கொடுப்பான்” என்று மொழிந்து அவர் புறப்பட்டுப்போனார். 

பிறகு க்ருத்திகை, அக்னியிடத்தினின்று கர்ப்பந்தரித்தாற் போல, அந்த க்ருதத்யுதி அந்த ஹவிஸ்ஸை (ஹோமம் செய்யப்படும் பொருளை) உண்ட மாத்ரத்தினால் சித்ரகேதுவினிடத்தினின்று கர்ப்பம் தரித்தாள். அவளிடத்தில் சித்ரகேதுவின் வீர்யத்தினால் ஏற்பட்ட கர்ப்பம், சுக்ல பக்ஷத்து சந்தரன் போலத் தினந்தோறும் மெல்ல, மெல்ல வளர்ந்தது. பிறகு, சிறிது காலம் சென்ற பின்பு சித்ரகேதுவுக்குப் பிள்ளை பிறந்தான். அதைக் கேட்டுச் சூரஸேன தேசத்திலுள்ளவர் அனைவரும் மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்கள். அப்பால், சித்ரகேது மன்னவன் ஸந்தோஷமுற்று, உடனே ஸ்நானம் செய்து பரிசுத்தனாகி அலங்கரித்துக்கொண்டு புதல்வனுக்கு ப்ராஹ்மணர்களால் ஆசீர்வாதம் செய்வித்து ஜாதகர்மம் நடத்தினான். 

அனந்தரம் அந்த ப்ராஹ்மணர்களுக்குப் பொன், வெள்ளிகளையும் ஆடையாபரணங்களையும், க்ராமபூமிகளையும், யானை, குதிரைகளையும், அறுபது லக்ஷம் பசுக்களையும் கொடுத்தான். தனத்தையும், புகழையும், பிள்ளைக்கு ஆயுளையும், வளர்க்குமாறு மற்ற ப்ராணிகளுக்கும் மேகம் மழை பெய்வதுபோல் விருப்பங்களையெல்லாம் தந்தான். பணமில்லாதவனுக்கு மிகவும் வருந்தி சம்பாதித்த பணத்தில் ப்ரீதி வளர்வது போல், மிகவும் ப்ரயாஸப்பட்டுக் (கஷ்டப்பட்டுக்) கிடைத்த அப்புதல்வனிடத்தில் ராஜர்ஷியாகிய சித்ரகேதுவுக்கு ஸ்நேஹம் வளர்ந்து வந்தது. அங்கனமே மாதாவான க்ருத்யுதிக்கும் அப்புதல்வனிடத்தில் மோஹத்தினால் பெரிய ஸ்நேஹம் வளர்ந்து வந்தது. அவளுடைய சக்களத்திகள் (கணவனின் மற்ற மனைவிகள்) அனைவரும் நமக்குப் பிள்ளையில்லையேயென்று மனக் கவலையுற்றிருந்தார்கள். தினந்தோறும் அப்புதல்வனைச் சீராட்டிக் கொண்டிருக்கிற சித்ரகேதுவுக்குப் பிள்ளையைப் பெற்ற பார்யையாகிய (மனைவியாகிய) க்ருதத்யுதியிடத்தில் போல் மற்றவர்களித்தில் ப்ரீதி உண்டாகவில்லை. 

பிறகு, க்ருதத்யுதியின் சக்களத்திகள் (கணவனின் மற்ற மனைவிகள்) எல்லாரும் மன்னவன் தங்களை ஆதரிக்காமையாலும், தங்களுக்குப் பிள்ளை இல்லாமையாலும், துக்கித்து அவளிடத்தில் அஸூயை (பொறாமை) கொண்டு “பிள்ளையில்லாமல் பாபிஷ்டர்களான எங்கள் போன்ற பெண்களைச் சுடவேண்டும். பிள்ளையில்லாதவளைக் கணவன் வீட்டில் இருக்கவுங்கூட ஸம்மதிக்கிறதில்லை. நற்பிள்ளையைப் பெற்ற சக்களத்திகள் (கணவனின் மற்ற மனைவிகள்) அவளைத் தாஸியைப் (வேலைக்காரியைப்) போல் அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட பாபிஷ்டர்கள் ஜீவித்திருந்து என்ன உபயோகம்? மற்றும், ராஜனுடைய தாஸிகளும் (வேலைக்காரிகளும்) தம் ப்ரபுவுக்குப் பணிவிடை செய்து அவனிடத்தினின்று அடிக்கடி விருப்பங்களைப் பெறுகிறார்கள். நாங்கள் தாஸிக்கும் தாஸியைப்போல் மிகவும் பாக்யமற்றவர்கள்” என்று வெறுத்துப் பரிதாபித்தார்கள். 

இங்ஙனம் சக்களத்திக்குப் பிள்ளை பிறந்த பெருமையைப் பொறாமல், பரிதபிக்கின்றவர்களும் ராஜனுக்கு இஷ்டமற்றவர்களுமாகிய அம்மன்னவனது பார்யைகள் அனைவரும் பெரிய த்வேஷம் (வெறுப்பு) கொண்டார்கள். அவர்கள் த்வேஷத்தினால் (பகைமையினால்) மதிகெட்டு (புத்தி கெட்டு), இயற்கையாகவே கொடிய மனமுடையவர்களாகையால் மன்னவனைப் பொருள் செய்யாமல் அப்புதல்வனுக்கு விஷங்கொடுத்தார்கள். க்ருதத்யுதி, சக்களத்திகள் செய்த மஹத்தான அந்தப் பாபகார்யத்தை அறியாமையால் குழந்தை தூங்குகிறானென்றே நினைத்து வீட்டில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பிறகு தாய்  “குழந்தை வெகு நேரமாய் உறங்கிக் கொண்டிருக்கிறானே. இன்னம் எழுந்திருக்கவில்லையே” என்று நினைத்துப் பிள்ளையைச் சீராட்டுவதில் விருப்பமுடையவளாகையால் பால் கொடுக்கும் வேலைக்காரியை அழைத்து “அடி பத்ரே! என் குழந்தையை எடுத்துக்கொண்டு வா” என்றாள். அவள் குழந்தை படுத்துக் கொண்டிருக்குமிடம் சென்று, கண்களில் கருவிழிகள் மேலிட்டிருப்பதையும் ப்ராணன் (மூச்சுக்காற்று), இந்த்ரியம் (புலன்கள்), ஜீவன் (ஆத்மா) இவையெல்லாமின்றிக் கட்டையாயிருப்பதையும் கண்டு ”ஐயோ! முடிந்தேனே” என்று கதறிப் பூமியில் விழுந்தாள். ராஜ மஹிஷியான க்ருதத்யுதி, கைகளால் மார்பில் அடித்துக்கொண்டு, உரக்கக் கதறுகிற அத்தாஸியின் (வேலைக்காரியின்) துக்க த்வனியைக் கேட்டு விரைவுடன் பிள்ளையினருகே சென்று அவன் உண்மையாகவே மரணம் அடைந்திருக்கக் கண்டாள். உடனே, பூமியில் விழுந்தாள்; சோக வேகத்தினால் தலைமயிர்களும் ஆடையும் அவிழ்ந்து அலையப் பெற்று மூர்ச்சித்தாள். 

பிறகு ராஜனது அந்தப்புரத்திலுள்ள ஆண், பெண்கள் அனைவரும் அவ்வழுகுரலைக் கேட்டு அவ்விடம் வந்து மன்னவனோடு ஒருமிக்க மனவருத்தமுற்றார்கள். விஷம் கொடுத்து அபராதப்பட்ட சக்களத்திகளும் ஓடிவந்து மெய் (உண்மை) போலவே கண்ணீர் பெருக்கினார்கள். மன்னவன் தன் புதல்வனுடைய மரணத்தைக் கேட்டு அதற்குக் காரணம் ஏற்படாமல், அப்புதல்வனிடத்தில் மிகுந்த ஸ்நேஹமுடையவனாகையால் மஹத்தான சோகத்தினால் பீடிக்கப்பட்டுக் கண் தெரியாமல் கீழ்விழுவதும், கால் தடுக்கப் பெறுவதும் மூர்ச்சிப்பதுமாகி, மந்த்ரி முதலியவர்களோடும், ப்ராஹ்மணர்களோடும் அவ்விடம் வந்து தலை மயிர்களும், அரையாடையும் அவிழ்ந்து அலையப்பெற்றுப் பெருமூச்செறிந்து கொண்டு கண்ணீர்களால் கண்டம் (குரல்) தடுக்கப்பெற்று, ஒன்றும் பேசமுடியாமல் அப்புதல்வனுடைய பாதங்களில் வந்து விழுந்தான். அப்பொழுது, பதிவ்ரதையான க்ருதத்யுதி, தன் கணவன் பெருஞ் சோகத்தில் ஆழ்ந்திருப்பதையும், ஒரே ஸந்ததியாகிய தன் சிறுவன் மரணம் அடைந்திருப்பதையும் கண்டு, அங்குள்ள ஜனங்களுக்கும், மன்னவனுக்கும் மந்திரி முதலானவர்களுக்கும், மனவருத்தத்தை விளைத்துக்கொண்டு பலவாறு புலம்பினாள். அவள், குங்குமம் கலந்த சந்தனம் அணிந்த கொங்கைகள் இரண்டையும், மையோடு கூடின கண்ணீர்த் துளிகளால் நனைத்துப் புஷ்பங்கள் உதிரப்பெற்ற தலை மயிர்களை விரித்து இனிய குரலுடன் அழுகுரல் பக்ஷிபோல் புதல்வனைக் குறித்து மேல் வருமாறு சோகித்தாள். 

“ஆ தெய்வமே! நீ மூர்க்கன். உனக்கு மன இரக்கமில்லை. நீ உன்னுடைய ஸ்ருஷ்டி க்ரமத்திற்கு விபரீதமாக நடத்துகின்றாய். முன் பிறந்த தந்தை முதலியவர் ஜீவித்துக் கொண்டிருக்கையில் பின்பிறந்த பிள்ளை முதலியவர்க்கு மரணத்தை விளைக்கின்றாய். இது தகுமா? இதை மாற்றி நடத்துவாயாயின், நீ மேன்மையுடையவனாவாய். நிச்சயம். பெரும்பாலும் நீ அங்கனம் செய்கிறதில்லையாகையால், மூர்க்கனென்றே உன்னை நிச்சயிக்கிறேன். இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் ப்ராணிகளின் உத்பத்தி மரணங்களுக்கு க்ரமம் இல்லையாயின், பிறத்தல், சாதல் முதலியவை அனைத்தும் அவரவர் கர்மத்தின்படி நடக்கட்டும். ஈச்வரனென்று பேரிட்டுக் கொண்டிருக்கிற உன்னால் ஆகவேண்டிய கார்யம் என்ன இருக்கிறது? நான், அவரவர் கர்மத்தின்படி பலன்களைக் கொடுக்கிறேன்” என்றால், உன்னுடைய ஸ்ருஷ்டியின் (படைப்பின்) அபிவ்ருத்திக்காக (வளர்ச்சிக்காக), நீ பிள்ளை முதலியவர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிற ஸ்நேஹமாகிற பாசத்தை நீயே அறுப்பாயாக. 

அப்பா! குழந்தாய்! நாதனற்று வருந்திக் கொண்டிருக்கிற என்னை நீ துறக்கலாகாது. உன் தந்தை, உன்னைப் பற்றின சோகத்தினால் பரிதபிப்பதைக் காண்பாயாக. பிள்ளையில்லாத வருத்தம் ஒருவாறு பொறுக்கக்கூடியது. இந்த வருத்தமோ எவ்விதத்திலும் கடக்க முடியாதது. ஆகையால் அதைக் காட்டிலும் இது மேற்பட்டது. நீ கண் திறந்து பார்ப்பாயாயின், அந்தகாரம் (இருட்டு) போன்ற இச்சோகத்தை நாங்கள் கடப்போம். நீ பார்க்கமாட்டாயாயின், மன இரக்கமின்றி உன்னைக் கொண்டுபோன யமனுடன் சொல்லி என்னையும் வெகுதூரமான அவ்விடம் கொண்டு போய்ச் சேர்ப்பாயாக. அப்பனே! ராஜகுமாரா! உன்னோடொத்த வயதுடைய இச்சிறுவர்கள் உன்னுடன் விளையாட உன்னை அழைக்கின்றார்கள். மற்றும் நீ உறங்கப்படுத்து வெகுநேரமாயிற்று. உனக்குப் பசிக்குமல்லவா? ஆகையால் ஸ்தன்யம் பருக எழுந்திருப்பாயாக. உன்னைச் சேர்ந்த எங்கள் சோகங்களையெல்லாம் போக்குவாயாக. 

குழந்தாய்! அழகிய புன்னகையும் அசைகின்ற இமை மயிர்களோடு கூடின கண்களும் அமைந்த உன் முககமலத்தை நான் பார்க்கவில்லை. பாக்யமற்ற நான் இனியவைகளான உன் பேச்சுக்களை இன்னம் கேட்கவில்லை. இதற்குள்ளாகவே திரும்பி வாராதபடி உன்னை மன இரக்கமற்ற தெய்வம் லோகாந்தரத்திற்குக் (வேறு உலகத்திற்குக்) கொண்டு போயிற்று. நீ இப்படி என்னைத் துறந்து போகக்கூடாது?” என்று புலம்பினாள். இங்ஙனம் மரணம் அடைந்த புதல்வனைப் பற்றிப் பலவாறு புலம்புகின்ற க்ருதத்யுதியின் புலம்பல்களைக் கேட்ட சித்ரகேது மன்னவன் சோகத்தினால் பரிதபித்துக் குரல் பாய்ச்சிப் புலம்பினான். 

அந்த ராஜனும், ராஜபத்னியுமாகிய இருவரும் புலம்பிக்கொண்டிருப்பது கண்டு அவர்களைத் தொடர்ந்த ஆண், பெண்கள் அனைவரும் கண்ணீர் பெருக்கி அழுதார்கள். மற்ற ஜனங்களெல்லோரும், சித்ரத்தில் எழுதின ப்ரதிமைகள் (பொம்மைகள்) போல மதியற்றிருந்தார்கள். இவ்வாறு அம்மன்னவனும் அவனைச் சேர்ந்தவர்களும் ஆகிய அனைவரும் பெருந்துக்கத்தில் ஆழ்ந்து ப்ரஜ்ஞையற்று (நினைவற்று) உண்மையை உரைத்துத் தேற்றுவோர் எவருமின்றியிருப்பதை அறிந்து, அங்கிரஸ முனிவர் நாரதருடன் அவ்விடம் வந்தார். 

பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக