கண்ணன் கதைகள் - 4 - திருப்பூர் கிருஷ்ணன்

அர்ப்பணம் உனக்கே அர்ப்பணம்

கண்ணன் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டிருந்தான். உறங்கவில்லை. ஆனால், உறங்குவதுபோல் தோற்றம் காட்டிக் கொண்டிருந்தான். அவன் உறங்குவதாக நினைத்து ஒருபக்கம் கருடனும், கண்ணன் கைச் சக்கரமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தன. 

கண்ணன் ஒரு முறுவலுடன் அவற்றின் பேச்சைச் செவிமடுத்தான். 

கருடன் தன் மெல்லிய இறகுகளைக் கூர்மையான அலகால் கோதிக்கொண்டே பெருமை பொங்கச் சொல்லிற்று: "சக்கரமே! திருமால் தான் இப்போது கண்ணனாய் இங்கே வந்திருக்கிறார் தெரியுமல்லவா? அதனால் தான் அவருக்கு எப்போது நான் தேவைப்படுவேனோ என்று இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். கஜேந்திர மோட்சத்தின்போது என் உதவி இல்லாவிட்டால் அவரால் முதலையை வதம் செய்திருக்க முடியுமா என்ன? வாயு வேகம் மனோ வேகம் என்பார்களே, அப்படியல்லவா திருமால் நினைத்த மறுகணம் அவரைச் சுமந்துகொண்டு சம்பவம் நடந்த இடத்திற்குப் பறந்துசென்றேன்!''

இதைக் கேட்ட சக்கரம் ஒரு சுற்றுச் சுற்றிக்கொண்டே கடகடவென்று சிரித்தது. "நீ என்ன வேகமாக அவரைத் தூக்கிக் கொண்டு பறந்தாலும் நான் மட்டும் இல்லாவிட்டால் அவர் எப்படி முதலையை வதம் செய்திருக்க முடியும்? என்னை வீசித்தானே அவர் முதலையைக் கொன்றார்? நீ திருமாலுக்குச் செய்த உதவியின் பெருமையை விட நான் செய்த உதவியின் பெருமை தான் அதிகம்!''

கண்ணன் உள்ளூர நகைத்துக் கொண்டான். "இவ்விரண்டிற்கும் சக்தியைக் கொடுத்ததே நான் தான். அப்படியிருக்க இவைகளுக்குத் தான் எத்தனை ஆணவம்? எனக்கு இவை உதவி செய்ததாமே?" 

அதற்குள் சலசலவெனப் பெண்களின் பேச்சுக் குரல் கேட்கவே, கண்ணனின் கவனம் குரல் வந்த பக்கம் திரும்பியது. பேசிக் கொண்டிருந்தவர்கள் அவனது ராணிகள் தான். 

"நம் அழகால் கவரப்பட்டுத்தான் கண்ணன் நம்மைத் திருமணம் செய்துகொண்டான். நமக்கு இணையான அழகிகள் உலகில் எங்குமில்லை!'' என்றாள் ஒருத்தி. 

"அதென்னவோ உண்மைதான். ஆனாலும், உன்னைவிட நான் சற்றுக் கூடுதல் அழகு என்பதும் கூட உண்மைதானே?'' என்றாள் இன்னொருத்தி! 

தங்களின் அழகைப் பற்றிய ராணிகளின் கர்வம் நிறைந்த பேச்சைக் கேட்டுக் கண்ணனுக்கு நகைப்பு வந்தது.

"உடல் அழகாக இருந்து என்ன பயன்? உள்ளமல்லவா அழகாக இருக்கவேண்டும்? என் ராதைக்கு வாய்த்த உள்ளம்போல் வேறு யாருக்கு வாய்க்கும்?" 

"இவர்கள் இப்படிக் கர்வப்படுகிறார்களே? ராமாவதாரத்தின் போது என் பக்தனாக மாறிய ஆஞ்சநேயன் எத்தனை ஆற்றல் மிக்கவன். ஆனால் எத்தனை அடக்கம் நிறைந்தவன்! அவன் சிரஞ்சீவி. இன்னும் வாழ்ந்து வருகிறான் அல்லவா? சரி... ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க வேண்டியதுதான்! கருடன், சக்கரம், ராணிகள் அனைவரின் கர்வத்தையும் அடக்க ஒரு வழிசெய்வோம்''.

கண்ணன் எழுந்தான்.

"கருடா!'' என அன்போடு அழைத்தான். கருடன் பறந்தோடி வந்து பவ்வியமாய் நின்றது. 

"கந்தமாதன பர்வதம் என்ற பெயருடைய மலையில், குபேரனது ஏரியில், சவுகந்திக கமலம் என்ற அபூர்வமான தாமரை மலர்கள் பூக்கும் காலம் இது. மிக வசீகரமான வாசனை உடையவை அவை. நீ போய் என் ராணிகளுக்காகச் சில தாமரை மலர்களைப் பறித்து வருகிறாயா? நீதான் பலசாலி ஆயிற்றே? எந்த எதிர்ப்பு வந்தாலும் சமாளிப்பாயே. உன்னால் தானே மிக வேகமாகப் பறக்கமுடியும்?"

கண்ணனே தன்னைப் புகழ்வதைக் கேட்டு கருடனுக்குப் பெருமை தாங்கவில்லை. 

"இதோ மின்னல் வேகத்தில் மலர்களோடு வருகிறேன்!'' சொல்லிவிட்டு விண்ணில் பறந்தது அது. 

ஆனால், அந்த இடத்தில்தான் அடக்கமே வடிவான ஆஞ்சநேயர் ராமநாம ஜபம் செய்துகொண்டு வசித்து வருகிறார் என்பதைக் கருடன் அறியவில்லை. கருடன் பாய்ந்து பாய்ந்து அலகால் மலர்களைக் கொத்திப் பறிப்பதைப் பார்த்த ஆஞ்சநேயர் திடுக்கிட்டார். 

"யாரப்பா நீ? இந்த மலர்கள் குபேரனுக்குச் சொந்தமானவை. அவரிடம் மலர்களைப் பறிக்க அனுமதி பெற்றாயா?''

"ஏ கிழட்டுக் குரங்கே! நான் யார் தெரியுமா? துவாரகை மன்னனான கண்ணனின் கருடன். கண்ணபிரானுக்காகத் தான் இந்த மலர்களைக் கொய்துகொண்டிருக்கிறேன்." 

"கண்ணனுக்கான சேவைக்கு யார் அனுமதியும் தேவையில்லை!"

கருடனின் கர்வம் நிறைந்த பேச்சைக் கேட்டு, ஆஞ்சநேயருக்குக் கடும் கோபம் வந்தது. சடாரெனப் பாய்ந்து, கருடனைப் பிடித்துத் தன் ஒரு கையிடுக்கில் இடுக்கிக் கொண்ட அவர், கருடனோடு ஒரே தாவாகத் தாவி துவாரகை சென்றார். 

ஆஞ்சநேயர் செய்த கர்ஜனையால் துவாரகை அதிர்ந்தது.

"கர்வம் பிடித்த இந்த கருடனை சேவகனாகக் கொண்டவர் யார்?'' என்று அவர் முழங்கிய முழக்கத்தைக் கேட்ட கண்ணன், கஜேந்திர மோட்சத்தின் போது எனக்குக் கைகொடுத்த சக்கரமே! வந்திருக்கும் குரங்குடன் போரிட்டு அந்த கருடனைக் காப்பாற்றக் கூடாதா?'' என்று வினவினார். 

"இதோ! உடனே அந்தக் குரங்கை என்ன செய்கிறேன் பாருங்கள்! என்றவாறு சக்கரம் சீறிப் பாய்ந்தது. மறுகணம் தாவிச் சென்று அந்தச் சக்கரத்தைப் பிடித்துத் தன் இன்னொரு கையிடுக்கில் இடுக்கிக் கொண்ட ஆஞ்சநேயர், "இந்த ஆணவம் பிடித்த சேவகர்களின் எஜமான் யார்?'' என்று உறுமினார். 

அடுத்து, அந்தக் குரங்கு அரண்மனைக்குள் வந்தால் என்ன நேருமோ என ராணிகள் பயந்து நடுங்கி கண்ணனைத் தஞ்சம் புகுந்தார்கள். எப்படியாவது இந்தக் குரங்கை சமாளிக்க வேண்டும் என வேண்டினார்கள். கண்ணன் நகைத்தவாறே சொன்னான்.

"என் அன்பிற்குரியவர்களே! வந்திருக்கும் குரங்கு வேறு யாருமல்ல. ராம பக்தனான ஆஞ்சநேயர் தான். அவரது வலிமைக்கு முன் யார் வலிமையும் செல்லாது. ஆனால், ராமரும் சீதாதேவியும் நேரில் வந்து ஏதும் சொன்னால் அதற்கு அவர் கட்டுப்படுவார். எனவே நான் ராமராக உரு மாறுகிறேன். உங்களில் யார் சிறந்த அழகியோ அவர்கள் சீதையாக உரு மாறுங்கள். சீதை உருவத்தால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் அழகிய பெண்மணி. உங்களில் மன அழகு யாருக்கு வாய்த்திருக்கிறதோ அவர்கள் பிரார்த்தியுங்கள். சீதையின் வடிவம் உங்களுக்குக் கிட்டும்''.

எல்லா ராணிகளும் கண்ணை மூடிப் பிரார்த்தித்துப் பார்த்தார்கள். ஆனால் யாரும் சீதாதேவியாக உருமாற இயலவில்லை. கண்ணன் ராதையை அழைத்துவர உத்தரவிட்டான். ராதை வந்ததும் பிரச்னையைச் சொன்னான். ராதை கண்மூடிக் கைகூப்பி அமர்ந்துகொண்டாள். 

"எல்லாவற்றையும் நிகழ்த்துவது என் கண்ணன் தான். எனக்கென்று தனித்த பெருமை ஏதுமில்லை. அனைத்தையும் புரிவது கண்ணனே என்பது உண்மையானால், அவனது அருள் என்னை சீதாதேவியாக மாற்றட்டும்!'' என்று உரக்கச் சொல்லிப் பிரார்த்தித்தாள்.

அந்த விந்தையான பிரார்த்தனையைக் கேட்ட ராணிகள் திகைத்து தங்களின் ஆணவம் அகன்று நின்றார்கள். ஒரு கணத்தில் ராதை சீதையானாள். 

"இந்த ஆணவம் பிடித்த சேவகர்களின் அரசன் யார்?'' என்றவாறே அரண்மனையின் உள்ளே வந்த அனுமன் ராம பிரானையும் சீதாதேவியையும் கண்டு திகைத்தான்.

"பிரபோ! தாங்களா துவாரகையை ஆட்சி செய்கிறீர்கள்?'' என்று பக்திப் பரவசத்துடன் வணங்கினான். 

"அன்றைய ராமன்தான் இன்றைய கண்ணன்!'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன கண்ணபிரான், உன் கையிடுக்கில் உள்ள என் சேவகர்களை விட்டுவிடு. அவர்கள் ஆணவம் இன்றோடு ஒழிந்தது!'' என்றான். 

"அப்படியே ஆகட்டும் பிரபோ!'' என்ற அனுமன் தன் பிடியில் இருந்த கருடனையும் சக்கரத்தையும் விடுவித்தார்.

கடவுள் பணி செய்பவர்களுக்கு அகந்தை ஆகாது! என அறிவுறுத்திவிட்டு, "ஜெய்ஸ்ரீராம்" என்றவாறே விண்ணில் தாவி மறைந்தார்.

ராமனாக மாறிய கண்ணனும். சீதையாக மாறிய ராதையும் பழைய உருவத்தை அடைந்தனர். 

"நாங்கள் அடங்கிவிட்டோம்!'' என்று கருடனும் சக்கரமும் கண்ணனைப் பணிந்தபோது, "நாங்களும் அடக்கத்தைக் கற்றுக் கொண்டுவிட்டோம்!'' எனக் கண்ணனின் ராணிகளும் ராதையைப் பணிந்து வணங்கினார்கள்.

"நீங்கள் அனைவரும் என் காலில் விழுந்து வணங்கும் இந்தப் பெருமையும் கூடக் கிருஷ்ணார்ப்பணம்!'' என்று ராதை கண்ணனை நோக்கிக் கைகூப்பியபோது அவனது மனம் நிறைவடைந்தது.

நன்றி - தினமலர் மே 2012

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை