புதன், 1 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 147

ஆறாவது ஸ்கந்தம் - பதின்மூன்றாவது அத்தியாயம்

(வ்ருத்ராஸுரனைக் கொன்ற ப்ரஹ்மஹத்யையால் (ப்ராஹ்மனனைக் கொன்ற பாபத்தால்) வருந்தின தேவேந்த்ரன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவால் பாதுகாக்கப் பெறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனே! இங்கனம் வ்ருத்ராஸுரன் முடிகையில் இந்திரனையொழிய மூன்று லோகங்களும், லோகபாலர்களும் அந்த க்ஷணமே மனக்கவலை தீர்ந்து இந்த்ரியங்களெல்லாம் களிக்கப் (மகிழ்ச்சியடையப்) பெற்றார்கள். பிறகு, தேவதைகளும், ரிஷிகளும், பித்ருக்களும், பூதங்களும், தைத்யர்களும், தானவர்களும், தேவதைகளின் பரிவாரங்களும், ப்ரஹ்மதேவன், இந்தரன் இவர்களும் மற்றவரும் தத்தம் இருப்பிடம் சென்றார்கள்.

மன்னவன் சொல்லுகிறான்:- மாமுனிவரே! இந்த்ரனையொழிய மற்ற அனைவரும் ஸந்தோஷம் அடைந்தார்களென்று மொழிந்தீர். இந்திரன் ஸந்தோஷம் அடையாமைக்குக் காரணம் என்னவோ அதைக் கேட்க விரும்புகிறேன். வ்ருத்ராஸுரனைக் கொன்றதே காரணமாயின், அதனால் தேவதைகளும் ஸந்தோஷம் அடையாதிருக்க வேண்டும். வ்ருத்ராஸுர வதத்தினால் தேவதைகள் அனைவரும் ஸந்தோஷித்திருக்க, அதே காரணத்தினால் இந்த்ரனுக்கு மாத்திரம் ஏன் துக்கம் உண்டாயிற்று?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸமஸ்தமான (எல்லா) தேவதைகளும், ரிஷிகளும், வ்ருத்ராஸுரனுடைய பராக்ரமத்திற்குப் பயந்து அவனை வதிக்கும் பொருட்டு இந்த்ரனை வேண்டினார்கள். இந்த்ரன் வேண்டப்பெற்றும் ப்ராஹ்மணவதம் என்று பயந்து, அதற்கு இசையாமல் அவர்களை நோக்கி “நான் முன்பு விச்வரூபனைக் கொன்றேன். அதனால் எனக்கு மஹத்தான பாபம் நேரிட்டது. அதை ஸ்த்ரீகள், பூமி, ஜலம், வ்ருக்ஷங்கள் ஆகிய இந்நால்வரும் என்னை அனுக்ரஹித்துப் பங்கிட்டு ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுது வ்ருத்ராஸுரனை வதிப்பேனாயின், அந்தப் பாபத்தை எவ்விடத்தில் போக்கிக்கொள்வேன்? அதற்கு வழியே இல்லை. ஆகையால் அவனை நான் வதிக்கமாட்டேன்” என்றான். ரிஷிகள் அவ்விந்தரன் மொழிந்த வசனத்தைக் கேட்டு மஹேந்த்ரனை நோக்கி இங்கனம் மொழிந்தார்கள். “நாங்கள் உன்னைக் கொண்டு அச்வமேதயாகம் செய்விக்கிறோம். நீ பயப்பட வேண்டாம். உனக்கு க்ஷேமமே உண்டாகும். நீ உலகங்களையெல்லாம் வதித்தாலும், அச்வமேத யாகத்தினால் பரமபுருஷனை ஆராதிப்பாயாயின், அந்த பாபத்தினின்று விடுபடுவாய். அவன் பரமாத்மா; ஸர்வேச்வரன்; அனைத்திலும் உட்புகுந்து நியமிக்குந் தன்மையன்; தன் தேஜஸ்ஸினால் ப்ரகாசித்துக் கொண்டிருப்பவன்; நாராயணன். “அவனுடைய திருநாமத்திற்கு எவ்வளவு சக்தி உண்டோ, அதற்குப் போதுமான பாபத்தைச் செய்ய ஜனங்கள் வல்லவராக மாட்டார்கள்” என்று சொல்லுகிறார்கள். இத்தகைய மஹா மஹிமைகள் அமைந்த பற்பல நாமங்களையுடைய பகவானை நேரே ஆராதிப்பதனால் பாபங்கள் தீருமென்பதில் ஸந்தேஹமென்ன? ஆகையால், தர்ம வழியைப் பின்பற்றிய வ்ருத்ராஸுரனைக் கொன்ற பாபம் அச்வமேத யாகத்தினால் தீருமோவென்று நீ ஸந்தேஹப்பட வேண்டாம். பகவானுடைய நாமத்தைச் சொன்ன மாத்ரத்தினால், ப்ராஹ்மணன், தாய், தந்தை, பசு, ஆசார்யன் இவர்களைக் கொன்ற பாபிகளும் மற்றும் பல பாபம் செய்தவர்களும் சண்டாளனும், அவனுக்கும் கீழ்ப்பட்ட பாபிஷ்ட ஜாதியனும், தம்முடைய பாபங்களினின்று விடுபடுவார்கள். அச்வமேதமென்னும் மஹாயாகத்தை எங்களைக்கொண்டு ச்ரத்தையுடன் அனுஷ்டித்துப் பரமபுருஷனை ஆராதிப்பாயாயின், அவனுக்குச் சரீரமாகிய ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான ஜகத்தையெல்லாம் வதித்தாலும் அந்தப் பாபம் உன்னைத் தீண்டாது. இனித் துஷ்ட ஸ்வபாவனான வ்ருத்ராஸுரனைக் கொன்ற பாபம் உன்னைத் தீண்டாதென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?” என்றார்கள். 

இந்த்ரன் இங்கனம் ப்ராஹ்மணர்களால் தூண்டப்பட்டுச் சத்ருவாகிய வ்ருத்ரனைக் கொன்றான். பிறகு, அவன் ப்ராஹ்மணனாகையால், இந்த்ரனை ப்ரஹ்மஹத்யை (ப்ராஹ்மனனைக் கொன்ற பாபம்) தொடர்ந்தது. அவன் அதனால் பெருந்தாபம் (பெரிய வேதனை) உண்டாகப் பெற்று, அதைப் பொறுத்துக் கொண்டிருந்தான். ஆதலால் அவனுக்குச் சிறிதும் ஸுகமின்றித் துக்கமாகவேயிருந்தது. அவன் வெட்கமுடையவன். ப்ராஹ்மணனான வ்ருத்ரனைக் கொன்றமையால் அவன் பழிக்கு இடமானான். அதனால், வருத்தமுற்றிருக்கிற இந்த்ரனுக்குத் தைர்யம் முதலிய பல குணங்கள் இருப்பினும், அவனுக்கு ஸுகத்தை விளைக்கவில்லை. அந்த ப்ரஹ்மஹத்யை (ப்ராஹ்மனனைக் கொன்ற பாபம்) கிழத்தனத்தினால் அங்கங்களெல்லாம் நடுங்கப்பெற்றதும், க்ஷயரோகத்தினால் (TB, எலும்புருக்கி நோயினால்) பீடிக்கப்பட்டிருப்பதுமாகிய ஒரு பெண்ணுருவங்கொண்டு, சண்டாளியைப் (கீழ் ஜாதிப் பெண்ணைப்) போன்று தன்னைப் பின்பற்றி ஓடிவர இந்த்ரன் கண்டான். 

நரைத்திருக்கின்ற தலைமயிர்கள் விரிந்து அலையப்பெற்ற அந்த ப்ரஹ்மஹத்யை  (ப்ராஹ்மனனைக் கொன்ற பாபம்), மீன் நாற்றமுடைய மூச்சுக் காற்றின் துர்நாற்றத்தினால் வழியையெல்லாம் கெடுத்துக்கொண்டு வந்து “நில், நில்” என்றது. பிறகு தேவேந்திரன் ஆகாயம் முழுவதும் திசைகள் முழுவதும் திரிந்தும் எங்கும் தொடர்ந்து வருகையால் இளைப்பாற முடியாமல் வடகிழக்கு மூலையில் சென்று அங்கு மானமென்னும் தடாகத்திற்குள் நுழைந்தான். அவன் ஸூக்ஷ்ம உருவத்துடன் அங்குத் தாமரைத் தண்டின் நூல்களுக்குள் மறைந்து ப்ரஹ்மஹத்யையினின்று (ப்ராஹ்மனனைக் கொன்ற பாபத்திலிருந்து) தன்னை விடுவித்துக்கொள்ளும் உபாயத்தை ஆலோசித்துக்கொண்டு ஆயிரமாண்டுகள் ப்ரஹ்மஹத்யைக்குத் (ப்ராஹ்மனனைக் கொன்ற பாபத்திற்குத்) தெரியாமல் ஜலத்திற்குள் இருந்தான். யாகத்தில் தனக்கு ஏற்பட்ட ஹவிர்ப் பாகங்களைக் கொண்டு வந்து கொடுப்பவன் அக்னியே யாகையால் அவன் ஜலத்திற்குள் நுழைய மாட்டானாகையால், யஜ்ஞபாகங்கள் நேரப்பெறாமலேயிருந்தான். 

அப்பொழுது, வித்யை, தவம், யோகம் இவற்றால் மிகுந்த ப்ரபாவமுடைய நஹுஷனென்னும் மன்னவன் இந்த்ரபதம் பெற்று ஸ்வர்க்கத்தை ஆண்டு வந்தான். அவன் ஸம்பத்தின் (செல்வத்தின்) மிகுதியாலும், இந்த்ரபதம் பெற்றோமென்கிற செருக்கினாலும் மதித்து (கர்வம் கொண்டு) விவேகமற்று சசீதேவியால் ஸர்ப்ப ஜன்மம் பெற்றான். மானஸ்தடத்தில் (மானமென்னும் தடாகத்திற்குள்) மறைந்திருக்கும் தேவேந்த்ரன், ப்ராஹ்மணர்களால் அழைக்கப் பெற்று வெளிவருகையில் நெடுநாள் பரமபுருஷனை த்யானித்துக் கொண்டிருந்தானாகையாலும், அப்பரமபுருஷனது பத்னியும் அக்குளத்தில் வஸிக்கும் தேவதையுமாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மி அவனைப் பாதுகாத்துக் கொண்டிருந்தாளாகையாலும் ப்ரஹ்மஹத்யா (ப்ராஹ்மணனைக் கொன்ற) ரூபமான பாபம் தன் பலம் ஒடுங்கப்பெற்று அவனை முன்போல் பாதிக்க முடியாதிருந்தது. 

பாரதனே! அவ்விந்தரனிடம் ரிஷிகள் வந்து பரமபுருஷ ஆராதன ரூபமான அச்வமேத யாகத்தைச் செய்ய விதியின்படி தீக்ஷை செய்வித்தார்கள். பிறகு, தேவேந்த்ரன் ப்ரஹ்மவாதிகளான ரிஷிகளை ருத்விக்குக்களாக ஏற்படுத்திக்கொண்டு அச்வமேத யாகத்தினால் ஸமஸ்த தேவதைகளுக்கும் அந்தராத்மாவான பரமபுருஷனை ஆராதித்தான். அதனால், வ்ருத்ராஸுரனைக் கொன்ற பாபம் மஹத்தாயினும் (பெரியதாயினும்), ஸூர்யனைக் கண்ட பனி போல் சிறிதுமில்லாமல் சூன்யமாயிற்று. அவ்விந்தரன் மரீசி முதலிய மஹர்ஷிகளைக் கொண்டு சாஸ்த்ரங்களில் சொல்லியபடி அச்மேத யாகத்தை அனுஷ்டித்து, யஜ்ஞங்களால் ஆராதிக்கப்படும் பரமபுருஷனை ஆராதித்து வ்ருத்ராஸுரனைக் கொன்ற பாபத்தை எல்லாம் உதறிச் சத்ருக்களெல்லாம் தொலைந்து ராஜ்ய ஸம்பத்தையும் பெற்று, மிகுந்த மஹிமையுடையவனானான். மஹேந்த்ரன், ப்ரஹ்மஹத்யா (ப்ராஹ்மணனைக் கொன்ற) ரூபமான பாபத்தினின்று விடுபட்டதையும், அவனுடைய ஜயத்தையும் கூறுகின்ற இந்தப் பெரிய உபாக்யானம் (கதை) பாபங்களையெல்லாம் போக்கும்; புண்ய தீர்த்தமான கங்கைக்கு உத்பத்தி ஸ்தானமான பாதங்களையுடைய பரமபுருஷனுடைய கீர்த்திகள் உள்ளடங்கப் பெற்றது; பகவானிடத்தில் பக்தியை வளர்க்கும். இது பக்த ஜனங்களின் வ்ருத்தாந்தத்தைக் கூறுகின்றது. இதில், ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபம் கூறப்பட்டிருக்கின்றது. இது பணத்தையும், புகழையும் விளைக்கும்; ஸமஸ்த பாபங்களையும் தீர்க்கும்; சத்ரு ஜயத்தையும்  மங்களத்தையும் கொடுக்கும்; ஆயுளை வளர்க்கும். ஆகையால் இந்த உபாக்யானத்தைப் பண்டிதர்கள் அனைவரும் எப்பொழுதும் படிக்க வேண்டும். பர்வங்கள் (உற்சவங்கள், அமாவாசை, பெளர்ணமி) தோறும் இதைக் கேட்க வேண்டும். 

பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக