ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 32

இரண்டாவது ஸ்கந்தம் - ஆறாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

எல்லையிலா அவன் மேன்மை!

பிரபஞ்சத்தின் சிருஷ்டியைப் பற்றி ப்ரஹ்மா நாரதருக்கு உபதேசித்துக் கொண்டு வருகிறார். அதில் எழுந்த சில மறுப்புகளுக்கு நாம் பதில் பார்த்தோம். மேலும் இறுதியாக ஒரே ஒரு பதில் மட்டும் கூற விழைகிறேன். ப்ரபஞ்சத்திற்கு ப்ரஹ்மம் உபாதான காரணமாய், நிமித்த காரணமாய், ஸஹகாரி காரணமாய் இருக்குமென்று கூறினேன். குடம் உருவாவதற்கு மண் உபாதான காரணம். குடம் உருவாவதற்கு குயவன் நிமித்த காரணம். குடம் உருவாக சக்கரமும், தடியும் ஸஹகாரி காரணங்கள். ஆக, ஒன்று உபாதான காரணமாக இருக்க வேண்டுமானால், அது மாறுதலுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மண் மாறினால்தான் குடமாக முடியும். அப்படியெனில் ப்ரஹ்மமே இந்த பிரபஞ்சத்துக்கு உபாதான காரணம், நிமித்த காரணம், ஸஹகாரி காரணம் ஆகிய மூன்று காரணமாகவும் இருக்கிறது என்று பார்த்தோம். 

ப்ரஹ்மம் உபாதான காரணமாக இருக்க வேண்டுமானால், அது மாறித்தானே ஆக வேண்டும். ப்ரஹ்மம் மாறி ஜகத்தாக பரிணமிக்கிறது. சரி, ஆனால் இதில் ஓர் ஐயம் எழும். ப்ரஹ்மம் மாறுகிறதென்றால், விகாரம் அடையும் என்று பொருள். ஆனால், வேதாந்தமோ, ப்ரஹ்மத்திற்கு விகாரம். அதாவது, மாறுதலே கிடையாது; ஒரே ஸ்வரூபத்தோடே இருப்பது – என்று கூறுகிறது. ஒரே ஸ்வரூபத்தோடே மாறுதல் இல்லாமல் இருக்க வேண்டுமானால், உபாதான காரணமாக முடியாது. உபாதான காரணமாக, அதாவது குடத்திற்கு மண் போன்று, இருக்க வேண்டுமானால், மாறித்தான் தீர வேண்டும். 

அப்போது ‘ப்ரஹ்மம் நிர்விகாரம்’ என்கிற பெருமை அழிந்து போகும். ஆக, இந்தப் பெருமை கூற வேண்டுமேயானால் அதை இழக்க வேண்டும். அந்தப் பெருமை கூற வேண்டுமானால் இதை இழக்க வேண்டும். ஆனால், வேதாந்தமோ ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகவும், அதே சமயத்தில் ப்ரஹ்மத்தை எந்த மாறுதலுக்கும் உட்படாத நிர்விகார தத்துவமாகவும் கூறுகிறது. பின் எப்படி இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கப் போகிறோம்? கேளுங்கள். 

ப்ரஹ்மம் உபாதான காரணமாக உள்ளது என்றேன். எப்படிப்பட்ட ப்ரஹ்மம்? சித்து, அசித்து ஆகியவற்றோடு கூடிய ப்ரஹ்மமே, உபாதான காரணம். ப்ரஹ்மமே மாறாது. ப்ரஹ்மத்திடத்திலிருந்து ஒட்டிக் கொண்டிருக்கும் அசித்து மட்டுமே மாறுதலுக்கு உட்படும். ஓர் உதாரணத்துக்குக் கூறுகிறேன், நாம் இந்த உடலை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஆத்மா. இந்த உடலில் ஒரு சேறு ஒட்டி கொள்ளுமானால், ஒன்று துணியைத் துவைப்போம். அல்லது உடலைக் கழுவிக் கொள்வோம். அல்லது நீராடுவோம். ஆத்மாவைக் கழற்றியா சுத்தம் செய்கிறோம்? உடலிலே பட்ட அழுக்கு ஆத்மாவில் படாது. உடலானது சிறுவன், இளைஞன், வயோதிகன் என்று மாறுதலுக்கு உட்படுகிறது. அதற்கென்று சிறுவன், இளைஞன், வயோதிகன், என்றா ஆத்மா மாறும்? உடல் மாற்றம் ஆத்மாவைப் பாதிக்காது. அதேபோல ப்ரஹ்மத்தின் உடலாக இருக்கும் அசித்துக்கள், அதாவது, மூலப் ப்ரக்ருதி மட்டுமே மாறுதலுக்கு உட்படுகிறது. அது மாறி, ஜகத்தாக பரிணமிக்கிறது. அது பெருமானுக்கு உடலாக மட்டும் இருக்கிறபடியால், அது மாறுதலுக்கு உட்பட்டது; பெருமானை பாதிக்காது. ப்ரஹ்ம ஸ்வரூபத்திற்கு எந்த மாறுதலும் ஏற்படாது. 

அதே சமயத்தில் ப்ரஹ்மத்தின் உடலே, அதாவது மூலப் ப்ரக்ருதியே மாறுதலுக்கு உட்பட்டு உலகமாகப் பரிணமிக்கிறபடியால், ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகவும் சொல்லலாம். ஆக, சித்து, அசித்து ஆகியவைகளோடு கூடியிருக்கும் ப்ரஹ்மம் உபாதான காரணமாகிறது. அதே சமயத்தில், சரீரம் மட்டுமே – ப்ரஹ்மத்தின் உடல் மட்டுமே – மாறுதலுக்கு உட்படுகிறபடியால், ப்ரஹ்ம ஸ்வரூபத்திற்கு எந்த விகாரமும் - எந்த மாறுதலும் வராது. ஆகவே, ப்ரஹ்மம் ஒரு பக்கத்தில் பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருந்து கொண்டே, மற்றொரு பக்கத்தில் மாறுதல் இல்லாத சுத்தமான நிர்விகார தத்துவமாக வும் விளங்குகிறது. ஆகவே, நாம் பலப் பல ஆட்சேபங்களுக்கு பதில்களைப் பார்த்தோம். இறுதியில் முடிவு சொல்வோம். 

ப்ரஹ்மம் ஜகத்திற்குக் காரணமே. ப்ரஹ்மம் மட்டுமே உலகத்திற்குக் காரணம். இவ்விரண்டையும் தெரிந்து கொண்டபடியால், இனி அந்த ப்ரஹ்மத்தை நோக்கி தியானித்து – உலகக் காரணத்தை நோக்கி தியானித்து – நாம் முக்தி அடையலாம். இதிலிருந்து உலகத்திற்குக் காரணம் யார் என்று தெரிந்து கொள்வது எவ்வளவு இன்றியமையாதது என்று புரிந்திருக்கும். மேற்கொண்டு ப்ரஹ்மா தொடர்ந்து கூறுகிறார் :

பாகவதத்தில் இரண்டாவது ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயத்தில் நாம் உள்ளோம். அண்ட கடாகத்தை உடைத்துக் கொண்டு விராட் புருஷன் வெளிவந்தார் என்று பார்த்தோம். மேலும், எவையெவை அவரிடத்திலிருந்து சிருஷ்டியாகின்றன என்று கூறுகிறார். மக்களுடைய வாக்கும், அதற்கு அதிஷ்டான தேவதையாகிற அக்னியும், அந்தப் புருஷனுடைய முகத்திலிருந்து உண்டாகின. மேலும் அவருடைய தோளிலிருந்து ஏழு தாதுக்களும், காயத்ரி முதலான சந்தஸ்களும் உண்டாயின. உலகில் பேசப்படும் ஆறு வகையான சுவைகளும், ஜனங்களுடைய நாக்கும், அதற்கு தேவதையான வருணனும், ப்ரஹ்மத்தினுடைய நாக்கிலிருந்து உண்டாகின. அனைத்துப் பிராணிகளுடைய பிராணன்கள் மற்ற வாயுக்கள் ஆகியவை அவருடைய மூக்கிலிருந்து உண்டாயின. பெருமானுடைய கண் புலனிலிருந்து ஏழு விதமான உருவங்களும் சந்திரன், அக்னி முதலான ஒளிபடைத்த பதார்த்தங்களும் உருவாயின. 

அவருடைய காதுகளிலிருந்து திக்குகள், தீர்த்தங்கள் ஆகியவை பிறந்தன. பகவானுடைய ரோமத்திலிருந்துதான் யாகம் செய்வதற்குத் தேவையான அரசு, அத்தி, கருங்காலி, பலாஸம் முதலான மரங்கள் உருவாயின. பகவானுடைய தலை மயிரிலிருந்துதான் மேகங்கள் பிறந்தன. அந்த விராட் புருஷனுடைய மீசை, தாடி இவைகள் மின்னல், நகம், கற்கள் ஆகியவற்றுக்கும் இரும்புக்கும் இருப்பிடமாய் உள்ளன. பகவானுடைய கைகளிலிருந்துதான் உலகத்தைக் காக்கும் திக் பாலகர்கள் பிறந்தார்கள். பகவானுடைய திருவடித் தாமரைகள் உலகத்திற்கு அனைத்து இஷ்டங்களையும் கொடுக்கக் கூடியதாக உள்ளது. இப்படியாய் பிரபஞ்சம் முழுவதுமே அந்த மஹா புருஷனுடைய ஸ்வரூபம்! அவரே அனைத்திலும் வியாபித்திருக்கிறார். இப்படிப்பட்ட ப்ரஹ்மத்தை அடையத்தான் ஜீவாத்மா முயற்சிக்கிறான். நாரதரே! நான் பிறந்தபோது நடந்ததைக் கூறுகிறேன்: இந்த ஜகத் முழுவதும் ப்ரஹ்மமாகவே இருக்கிறபடியால் அவருடைய தொப்புள் – நாபியில் – தாமரையில் தோன்றிய நான் அந்த பரமாத்மாவை ஆராதித்தேன். எங்கெங்கு தேடிப் பார்த்தாலும் அவரைத் தவிர, நெய்யோ, மலர்களோ, ஆகுதி கொடுப்பதற்கு வேறு எதுவுமே கிடையாது. ஹோம திரவியங்களோ, ரிக், யஜுர், ஸாமம் முதலான வேதங்களோ, யாகங்களோ அனைத்தும் அவனாகவே விளங்கின. ஆகவே, அவனை, அவனைக் கொண்டே தொழுதேன். அவரிடத்திலிருந்து உருவான பொருட்களைக் கொண்டே அந்தப் பெருமானை பூஜித்தேன். என்னைப் போலவே காசியபர் முதலான ஒன்பது பிரஜாபதிகளும், மற்ற தேவதைகளும் பகவானைத் தொழுதார்கள். மேலும் கூறுகிறேன்: 

ஸர்வம் புருஷ ஏவேதம் பூதம் பவ்யம் பவச்ச யத்|
தேநேதமாவ்ருதம் விச்வம் விதஸ்திமதி திஷ்டதி||
(ஸ்ரீ பாகவதம் 2-6-15) 

இந்த உலகம் முழுவதுமே பெருமானேதான். இவை அனைத்துமே அவனையே காரணமாகக் கொண்டவை. அவனே அனைத்து இடத்திலும் வியாபித்து இருக்கிறான். அவனுடைய மகிமை, வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாதது. அனைத்தும் அவனிடத்தில் இருக்கிறபடியால், உலகம் ப்ரஹ்மாத்மகம் என்று கூறப்படுகிறது. மகனே, நாரதா! என்னுடைய பேச்சோ, மனதோ தீயவற்றில் ஈடுபடாது. அவனே என்னிடத்தில் நிறைந்திருக்கிறபடியால், என் வாக்கும் மனமும் அவனிடத்திலேயே நிலைத்துள்ளன. ஒவ்வொரு மனிதனும் தன் பேச்சையும், மனத்தையும் பெருமானிடத்தில் ஈடுபடுத்துவானானால் அவை கண்டபடிக்குத் திரியாது நிலைபெறும். நன்கு வளரும். 

உலகத்தவர்கள் என்னை ப்ரஜாபதியாகக் கொண்டாடுகிறார்கள். என்ன விந்தை! பெருமான் எனக்குள் இல்லாவிடில், நான் எங்கே உலகத்தைப் படைக்கப் போகிறேன்? பகவானோ, தேவர்களாலும் அறிய முடியாதவர். என்னாலும், மற்ற தேவதைகளாலும் யாராலுமே அவரை அறிய முடியாது. ஏன்? அவருக்கே அவருடைய மகாத்மியத்தின் எல்லை என்ன என்பது தெரியாது– அதற்கு எல்லை என்பதே இல்லாததால்! இந்தப் புருஷன்தான் ஆதிகாலத்திலிருந்து விளங்குகிறார். அவர்தான் என் உருவத்தாலே ஜகத்தைப் படைக்கிறார். என் மகனான ருத்திரனுடைய உருவத்தாலே உலகத்தை அழிக்கிறார். தானே விஷ்ணுவாக இருந்து கொண்டு உலகத்தைக் காக்கிறார். ஆகவே, அவரைத் தவிர உலகத்தில் ஏதும் இல்லை. இந்தப் பெருமான்தான் காலமாகவும், ஸ்பாவமாகவும் அனைத்துப் பொருட்களாகவும் விளங்குகிறார். இப்படி அனைத்துமாக இருக்கும் பெருமான், உலகத்தைக் காப்பதற்காக எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறார். நாரதா! அவருடைய லீலை, அவருடைய அவதாரங்களைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறேன். 

நம் காதுக்கு ஏற்பட்டிருக்கும் அழுக்கும், குற்றங்களும் அவருடைய லீலைகளைப் பற்றிக் கேட்டால்தான், தொலைந்தே போகும். பெருமானுடைய அவதாரங்கள் எண்ணிறந்தவை. ஒன்றல்ல, இரண்டல்ல. நம் புத்தியால் எளிதில் பற்றுவதற்காக பத்து அவதாரங்கள் என்று கூறுகிறோமேயொழிய, பெருமானுடைய அவதாரங்களோ கணக்கிலடங்கா. அதை உனக்கு விளக்கமாகக் கூறுகிறேன். கேட்டுக் கொள் – என்று ப்ரஹ்மா கூறினார். இனி, நாம் அடுத்த அத்தியாயத்தில் பெருமானுடைய எண்ணற்ற அவதாரங்களில் ஒரு சிலவற்றைப் பார்க்கப் போகிறோம். 

பாகவதத்தில் சுகாசாரியார் 25 அவதாரங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். இந்த அவதாரங்களுக்குள் நாம் அறிந்திருக்கும் பத்து அவதாரங்களும் உண்டு. நமக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், ஆனால் புரியாத ஏனைய பல அவதாரங்களும் உண்டு. அவதாரங்களை இரண்டாகப் பிரிப்பார்கள். முக்கிய அவதாரம், கௌண அவதாரம் – இது முதல் பிரிவு. இதில் கௌண அவதாரத்தில் ஸ்வரூபவ ஆவேசம், சக்தி ஆவேசம் என்று மறுபடியும் பிரிவு. முக்கிய அவதாரம் என்றால் பெருமானே நேரே வந்து பிறப்பார். அமுக்கிய (கௌண) அவதாரம் என்றால், ஒரு ஜீவனைத் தேர்ந்தெடுத்து பகவான் அவனிடத்தில் தன் சக்தியை வைப்பார். இதை ஏற்கெனவே உங்களிடத்தில் சுருக்கமாகக் கூறியுள்ளேன். ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு, ராமன் முக்கிய அவதாரம். ஆனால் பரசுராமர் ஆவேச அவதாரம். கண்ணன், முக்கிய அவதாரம், ஆனால் பலராமன் ஆவேச அவதாரம். ஆகையால்தான் பரசுராமனும், ராமனும் சந்தித்துக் கொண்டார்கள். பலராமனும் கண்ணனும் சந்தித்துக் கொள்கிறார்கள். உங்களுக்கு ஐயம் ஏற்படும். இரண்டு அவதாரங்கள் ஒரே சமயத்தில் எப்படி சந்தித்துக் கொள்வார்கள்? யோசித்துப் பாருங்கள். வராஹ அவதாரமும், நரசிம்ம அவதாரமும் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள். கண்ணனும் ராமனும் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அனைவருமே ப்ரதான அவதாரங்கள். ஆனால், பரசுராமன் ஒரு ஜீவன். அவனிடத்தில் பெருமான் தன்னுடைய சக்தியை வைத்துள்ளார். ஆனால் ராமன் நேரே பெருமானுடைய அவதாரம். ஆகவே ராமனும் பரசுராமனும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதே போல பலராமன். அவர் ஒரு ஜீவன். அவனிடத்தில் பெருமான் தன் சக்தியை வைக்கிறார். ஆகையால்தான் முக்கிய அவதாரமான கண்ணனைச் சந்திக்க முடிகிறது. இப்போது விடை கிடைத்திருக்குமே! 

ஆகவே பகவானுடைய அவதாரங்களில் முக்கிய அவதாரங்களை நாம் உபாசிக்க வேண்டும். அது தவிர, எந்த ஜீவாத்மாக்களைத் தேர்ந்தெடுத்து தன் சக்தியை வைக்கிறாரோ, அவர்களைப் போற்ற வேண்டும். இப்படிப் பல அவதாரங்களைப் பற்றியும் ப்ரஹ்மாவே நாரதருக்குக் கூறப்போகிறார். கேட்போம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

1 கருத்துகள்

  1. "பிரம்ம விஷ்ணு ருத்ரர்கள் படைக்கப்படுகிறார்கள் பூதங்களும் இந்திரியங்களினுடன் படைக்கப்படுகின்றன.அதனால் அவர்கள் காரணர்கள் அல்லர்.அனைத்துக்கும் காரணமானவர் யாதொரு பொருளினின்றும் உற்பவித்தல் இல்லை.சர்வைசுவரிய சம்பந்தரும் சருவேசுவரனுமான சிவனே ஆகாயமத்தியில் தியானிக்கற்பாலர்"-அதர்வசிகை

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக
புதியது பழையவை