சனி, 9 மார்ச், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 33


இரண்டாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம்

பகவானது அவதாரங்கள்

திருமால் செய்யும் அவதாரங்கள் எண்ணிறந்தவை. நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் பெருமான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறார். தர்மங்களை நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், தன்னையே சிறந்த தர்மமாகவும் பெருமான் உபதேசிக்கிறார். பகவானுடைய அவதாரங்கள் ஒவ்வொன்றும் உயர்ந்த கருத்துக்களை வலியுறுத்திக் கூற வந்தவை. 

நாரதருக்கு ப்ரஹ்மா உபதேசித்து வரும்போது அவதாரங்களைப் பட்டியலிடுவதோடு, அவற்றின் பயன் என்ன? நமக்கு எந்த உயர்ந்த கருத்தைப் புரிய வைப்பதற்காக ஏற்பட்டவை? – என்றும் கூறுகிறார். அவற்றை நாம் இப்போது சுருக்கமாகக் காண்போம். 

முதலில், பகவான் வராஹ வடிவினராக அவதரித்தார். அதாவது பெரிய பன்றி உருவத்தோடு தோன்றினார். ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன், பூமியை அதன் சுழற்சிப் பாதையில் இருந்து வெளியேற்றி, அண்டவெளிக்கு அப்பால் உள்ள சூட்சுமமான ஆவரண ஜலம் எனப்படும், பிரளயக் கடலில் ஒளித்து வைத்தான். பகவான் பன்றி உருவில் தோன்றி, கடலுள் புகுந்து, அசுரனை அழித்து, பூமிப் பிராட்டியைக் காப்பாற்றி, தன் மடியில் அமர்த்தி வைத்துக் கொண்டு, வராஹ புராணத்தையே உபதேசித்தார். 

இந்த அவதாரத்திலிருந்து உலகத்தையே தாங்கும் பலம் பொருந்தியவன் எம்பெருமான் என்பதும், பிரளயக் கடலிலிருந்து பூமிதேவியைக் காத்துக் கொடுத்த அவர், ஸம்ஸாரம் என்னும் பெரும் கடலில் விழுந்து நோவுபடும் நம்மையும் நிச்சயம் காப்பாற்றி, மேலே தூக்குவார் என்பதும் திண்ணமாக வெளிப்படுகிறது. 

அடுத்து, ருசி என்பவர் ஆகுதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதில் அவர்களுக்கு ஸுயக்ஞர் பிறந்தார். ஸுயக்ஞர் பகவானுடைய அவதாரம். இவருக்கு ‘ஹரி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் தக்ஷிணா எனும் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, சுயமர்கள் எனும் தேவர்களைப் பெற்றார். அவரே ஆபத்துக்களைப் போக்கக் கூடியவர். ‘ஹரிர் ஹரதி பாபானி’ – பாவங்களை அபகரிக்கக் கூடியவர் – என்பது ஹரி என்ற அவருடைய திருநாமத்தின் பொருள். ஆக, எவ்வளவோ பாவங்களை நாம் சேர்த்து வைத்திருக்கிறோம். இவற்றை நம்மால் தனித்துப் போராடி போக்கிக் கொள்ள இயலாது. பெருமானின் திருவடி பலத்தால்தான், இப்பாவங்கள் நம்மை விட்டு விலக முடியும். இதனையே ஸுயக்ஞர் உணர்த்துகிறார். 

அடுத்து, கபில அவதாரம். கர்த்தம ப்ரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் முதலில் ஒன்பது பெண்கள் பிறந்து, இறுதியாக கபிலர் அவதரித்தார். தன்னுடைய தாயான தேவஹூதிக்கே ஞான மார்க்கத்தை உபதேசித்தார். இவர் உபதேசத்தால் தேவஹூதியின் ஞானம் மலர்ந்து, முக்தி பெற்றாள். அப்படி என்னதான் கூறினார்?

இவ்வுலகத்திலிருந்து நாம் விடுதலை அடைவதற்கும், பிறப்பு இறப்புகளைத் தாண்டுவதற்கும், ஒரே வழி அசித்தான ஜடப் பொருள்களுக்கும், சித்தான ஜீவனுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளுதல். இதை ‘ப்ரகிருதி புருஷ விவேகம்’ என்று கபிலர் கூறுகிறார். நாம் ஜடப் பொருளான நம்முடைய உடலையே ‘நாம்’ என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த அடிப்படைத் தவறு மாறினால்தான், எந்த யோகமும் ஸித்திக்கும். நம்மால் முக்தி பெற இயலும். இதை உணர்த்தவே கபிலர் அவதரித்தார். 

அடுத்து, தத்தாத்ரேயர் அவதாரம். அத்ரியின் பிள்ளையானபடியால் ஆத்ரேயர் என்று இவர் பெயர் பெற்றார். இவர் தாயார் அனசூயை. தன்னையே இவர்களுக்குப் புதல்வனாக தத்தம் செய்தபடியால், அதாவது கொடுத்தபடியால், இவருக்கு தத்தர் என்று பெயர். தன்னையே கொடுத்து, அத்ரியின் பிள்ளையானபடியால், தத்தாத்ரேயர். இவர் உணர்த்தியது எதை? என்று பார்ப்போம். 

இவருடைய திருவடிகளின் பாதத் தூளிகளின் பலத்தால்தான் யது, கார்த்தவீரியன் முதலான மஹாத்மாக்கள் எல்லாம் பேறு பெற்றார்கள். நாம் பகவானிடத்தில் எதைக் கேட்டாலும் கொடுப்பார். அதோடு நில்லாமல், தன்னையே கொடுப்பதற்கும் ஆவலாக உள்ளார். 

‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ 

– என்பது ஆழ்வார் அனுபவித்த அவனது நீர்மை! தன்னையே ஒரு தாய் – தந்தையருக்குக் கொடுத்தவர், நாம் வேண்டினால் தன்னையே நமக்கும் கொடுப்பார் – என்பதைச் சொல்லவும் வேண்டுமோ! 

‘தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை’ 

– என்று கம்பரும் ராமாயணத்தில் அவனைப் போற்றுகிறார்.

மேலும் பார்ப்போம். ப்ரஹ்மா கூறுகிறார் : 

“நாரதா! நான் பல காலம் தவம் புரிந்தேன். அப்போது பகவான் எனக்கு நான்கு குமாரர்களைத் தந்து அருள் புரிந்தார். ஸனகன், ஸனத்குமாரன், ஸனந்தனன், ஸனத்ஸுஜாதன் என்று அவர்களுக்குத் திருநாமங்கள். இவ்வுலகத்தில் அவர்கள் ஆத்ம வித்யையை உபதேசித்தார்கள். கண்ணால் பார்க்க முடியாததை, நம்மால் அறிய முடியாதவற்றை வேதங்களைக் கொண்டும், வேதம் வல்லார்கள் வாயிலாகக் கேட்டும்தான் உணர முடியும். உணர்வதற்கரிய ஆத்ம தத்துவத்தை, உலகோர்க்கு உணர்த்தியவர்கள் என்னுடைய நான்கு குமாரர்கள். 

அடுத்து, பகவானுடைய நர நாராயண அவதாரம். அதாவது, தக்ஷன் என்பவருடைய பெண் மூர்த்தி. அவள் தர்ம தேவதையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அவர்களுக்கு பகவானே இரண்டு புதல்வர்களாகப் பிறந்தார். ஒருவருக்கு நாராயணன் என்றும், மற்றொருவருக்கு நரன் என்றும் திருநாமம். இது நடந்தது பதரிகாச்ரமத்தில். கந்தமாதன பர்வதம், ஹிமாச்சலத்தில் உள்ளது. அங்கே நெடிதுயர்ந்த எதிரும் புதிருமான இரு மலைகள் உள்ளன. ஒன்று – நரன் என்ற பெயருடனும், மற்றொன்று – நாராயணன் என்ற பெயருடனும் திகழ்கின்றன. இங்குதான் இறைவன் இருவராகப் பிறந்தார். தானே ஆசாரியன், தானே சீடன். 

‘நர நாராயணனாய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்’ 
(பெரிய திருமொழி 10-6-1) 

– என்பது ஆழ்வாருடைய பாடல். இங்கே பரமாத்மாவான பகவான் இலந்தை மரத்தின் கீழ் அமர்ந்து, தன்னில்தானே லயித்து தவம் புரிந்தார். தன்னுடைய சீடனான நரனுக்கு, எட்டெழுத்து மந்திரமாம் திருமந்திரம் எனப்படும், நாராயண மந்திரத்தை உபதேசித்தார். இங்கு அவர் காமதேவனை வென்றார். காமத்தையும், கோபத்தையும் வெல்ல நினைப்பவர்களுக்காகவே திருமந்திரத்தை உபதேசித்தார். 

இதே நாராயணரும், நரனும்தான் மேலும் பல காலம் கழித்து, கண்ணனாகவும், அர்ஜுனனாகவும் பிறந்ததாகக் கூறுவதுண்டு. மேலும் பார்ப்போம்: 

ப்ரஹ்மாவிற்கு ஸ்வாயம்புவ மனு பிறந்தார். அவருடைய இரண்டு புதல்வர்களில் ஒருவரான உத்தானபாதனுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி ஸுநீதி, மற்றொருத்தி ஸுருசி. ஸுநீதியின் மகன் துருவன்.

அவன் பெருமானுடைய அவதாரமாகவே கொண்டாடப்படுகிறான். தன்னுடைய மாற்றாந்தாயாலே இகழப்பட்ட துருவன், கோபத்துடன் காடு சென்று ‘வாஸுதேவ மந்திரத்தை’ உச்சரித்து, ஆறு மாதங்கள் கடும் தவம் புரிந்தான். ஆறாம் மாதத்து இறுதியில் பெருமானை நேரே கண்டான். உவகை பூண்டான். பகவான் அவனுக்கு அருள் புரிந்து, ‘துருவ பதவி’ – என்ற ஒரு நக்ஷத்திரப் பதவியை அருளினார். ஸப்த ரிஷிகளும் இந்த துருவ நக்ஷத்திரத்திற்குக் கீழே இருந்து பகவானைத் தொழுது கொண்டிருக்கிறார்கள். 

இதிலிருந்து – ஒரு பாலனும் தவம் புரியலாம்; சிறுவனும் தியானிக்கலாம்; அவனுக்கும் பெருமான் அருள் புரிகிறார் – என்று தெரிந்து கொள்கிறோம். ஆக, வயதான பின்புதான் பக்தி என்பதில்லை. இள வயதிலிருந்தே பக்தி வேண் டும். 

‘பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த:
லக்ஷ்மண: லக்ஷ்மி வர்தன:’
(ஸ்ரீ ராமாயணம் – பால காண்டம் 18-7) 

– என்பது வால்மீகி ராமாயண ச்லோகம். சிறு பிராயம் தொடங்கியே இலக்குவணன், ராம பக்தியோடு வளர்ந்தார். எப்படி துளசியானது, பூமியிலிருந்து முளைவிட்டுப் புறப்படும்போதே, மணத்தோடு வெளிக் கிளம்புமோ, அதே போல சிறுவயது முதலே பக்தியில் மலர்ந்து வளர வேண்டும்.

நம்மாழ்வார் அவதரித்தபோதே, அத்துணை பக்தியோடுதான் பிறந்தார். நம்மாழ்வார் ஒரு பாடலில், 

‘கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோவில்:
...சார்வது சதிரே’
(திருவாய்மொழி – 2.10.1) 

– என்று கூறுகிறார். இளமை கெடுவதற்கு முன்னரே பக்தனாக வாழுங்கள்; இளம் பிராயத்திலேயே பக்தி மலரட்டும். இவற்றைத்தான் துருவன் உணர்த்தினான்.

துருவனுடைய வம்சத்திலேயே வேனன் பிறந்தான். அவன் கொடுங்கோலனாக இருந்தான். எனவே ரிஷிகள் கூடி, நாட்டைக் காப்பதற்காக அவன் உயிரை சாபத்தால் பறித்தனர். ஆனால் அடுத்து மன்னன் வேண்டுமே! ஆகையால் அவன் உடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து ப்ருது பிறந்தான். 

ப்ருது சிறந்த அரசன். அவன் பூமா தேவியிடத்திலிருந்து எல்லாச் செல்வங்களையும் கறந்து பெற்றான். இங்கு ஒரு செய்தி: 

வேனன் கொடுங்கோல் ஆட்சி புரிந்தபோது, பூமாதேவி தன்னிடம் இருந்த சொத்துக்கள் அத்தனையையும் மறைத்து விட்டாளாம். அடுத்து வந்த மன்னனான ப்ருது நல்லாட்சி கொடுத்தபடியால் மறுபடியும் அனைத்துச் செல்வங்களையும் பூமாதேவி அவனுக்குக் கொடுத்தாள். ஆக, நாட்டை நன்கு ஆண்டால், நல்லார்களுக்கு பூமி எதையும் மறைக்காமல், அனைத்துச் செல்வங்களையும் கொடுக்கும் என்பது திண்ணம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக