சனி, 9 மார்ச், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 34


இரண்டாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

பகவானது அவதாரங்கள்

அடுத்து, ஒன்பதாவது அவதாரம். ப்ரியவ்ரதனுக்கு ஆக்னித்ரன் பிறந்தார். அவருக்கு நாபி பிறந்தார். நாபிக்கும் ஸுதேவிக்கும் திருக்கல்யாணம் நடந்து, பகவானே ரிஷப தேவனாக அவதரித்தார். இவர் ஸன்யாஸ ஆச்ரமத்தின் சிறப்பை வெளிப்படுத்தியவர். பரமஹம்ஸர், பற்றற்றவர். உடலுணர்வற்று உலக உணர்வு நீங்கிய யோகியாகத் திரிந்தவர். பற்றில்லாத தன்மை, ஸன்யாஸம் இவற்றின் பெருமையை உணர்த்தவே ரிஷப தேவருடைய அவதாரம். 

மேலும் எம்பெருமான் குதிரை முகத்தினனாய், ஹயக்ரீவனாகப் பிறந்தார். இவர் அனைத்து வித்யைகளுக்கும் ஆதாரக் கடவுள். உலகத்தில் நல்ல கல்வி, பேச்சு சாமர்த்தியம் ஆகியவை வேண்டுமானால், இவர்தான் அருள வேண்டும். இவரே வித்யைகளுக்கெல்லாம் மூல ஸ்தானம். வாகீசர், வாகதீசர், வாக்குகளுக்கெல்லாம் அதிபதி என்றெல்லாம் துதிக்கப்படுகிறார். வாக்கு என்றாலே, வேதங்கள்தானே! 

பெருமான் ஹயக்ரீவனாக அவதரித்து, குதிரையின் கனைப்பொலியான ‘ஹல ஹலா’ எனும் ஒலி மூலம் வேதங்களையே உலகுக்கு உபதேசித்தார். குதிரை எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும். தன்னை அண்டியவர்களைத் தன் முதுகில் ஏற்றிச் செல்லும். காற்று வேகத்தில் ஓடும். சுறுசுறுப்பாக இருக்கும். இத்தனை சிறப்புகளுடன் வேதங்களையும் கொடுத்த பகவான், எத்தனையோ உயர்ந்த கருத்துக்களை நமக்கு உணர்த்துகிறார். 

அடுத்து மத்ஸய அவதாரம். அதாவது, மீனாய் தோன்றிய அவதாரம். உலகின் பிரளயத்தின்போது, வேதங்கள் மறைந்து போகாமல் இருக்கவும், மூலிகைகளைக் காக்கவும், ஸப்த ரிஷிகளைக் காப்பதற்காகவும், பகவான் மீனாக அவதரித்தார். இது மிகப் பெரிய அவதாரம். ஒரு படகைத் தன் கொம்பின் நுனியில் வாசுகி எனும் பாம்பால் கட்டி, பிரளய காலத்தில் ரிஷிகளையும், மனுவையும் காத்துக் கொடுத்தான் எம்பெருமான். பிரமன் இழந்த வேதங்களை மீட்டு, திரும்பவும் ஸ்தாபித்துக் கொடுத்தவன் எம்பெருமான். 

மேலும் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, ஆமை உருவாய் கூர்ம அவதாரம் செய்தார். அப்போது மந்தர மலை கடலுக்குள் மூழ்காமல் இருக்க, மலையையே தன் முதுகின் மேல் வைத்துக் காத்துக் கொடுத்தார். இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? உலகத்தையே தாங்குபவனான அவனே அனைத்தையும் தாங்கும் ஆதாரம் என்று தெரிந்து கொள்கிறோம். 

அடுத்து சிறு குழந்தையான பிரஹ்லாதன். இவன் ஹிரண்யகசிபுவின் மகன். அந்தச் சிறுவன், தன்னுடைய சிறு விரலை ஒரு தூணில் சுட்டிக் காட்ட, அந்தத் தூணிலிருந்து நரசிம்மப் பெருமானாகத் தோன்றினார். சிறுவன் ‘எங்கும் உளன் கண்ணன்’ என்று கூறினான். ‘இங்கு இருக்கிறானா?’ என்று தூணைத் தொட்டுக் கேட்டான் ஹிரண்யகசிபு. ‘இங்கும் இருக்கிறான்’ என்று குழந்தை பதில் கூறினான்.

அடுத்த வினாடி ஹிரண்யகசிபு கோபத்துடன் தூணைத் தட்டுகிறான். 

‘அளந்திட்ட தூணை அவன் தட்ட - ஆங்கே 
வளர்ந்திட்டு வானாகிர்ச் சிங்க உருவாய்’...
(பெரியாழ்வார் திருமொழி 1-6-9) 

பெருமான் வெளிப் புறப்பட்டான். பகவான் ஸர்வ வியாபகன். எங்கும் உளன். தூணிலும் உளன். துரும்பிலும் உளன். நம்மிலும் உளன். ஆகவே அவன் எங்கும் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு, பாவங்களைச் செய்யாமல், அவனுக்கு ஆனந்தத்தைத் தரும் புண்ணியங்களையே செய்து கொண்டிருக்க வேண்டும். பக்தனான ஒரு சிறுவன் பேச்சுக்கும் பணிந்து பெருமான் வருகிறான். ஹிரண்யகசிபுவுக்கு எதிலும் மரணம் இல்லை என்று ப்ரஹ்மா வரம் கொடுத்திருந்தார். அந்த வரத்தின் விதிகளை மீறாமல், உள்ளேயோ வெளியேயோ கொல்லாமல், ஆகாயத்திலோ பூமியிலோ கொல்லாமல், மனித உருவத்தோடோ அல்லது விலங்கு உருவத்தோடோ மட்டும் வராமல், அனைத்தையும் மீறி ஹிரண்யகசிபுவை முடித்தார். 

ஆக, ஒரு சிறுவனும் கூட ‘எங்கும் உளன் அவன்’ என்ற உண்மையைக் கூறினால், நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் அதை எடுத்துக் காட்டிய அவதாரம் இது! அடுத்து, பகவானே ஸ்ரீ ஹரி என்ற திருநாமத்தோடே யானைக்கு அருள் புரிவதற்காக, கஜேந்திர வரதனாகத் தோன்றுகிறார். ஒரு விலங்கின் அலறலுக்குக் கூடவா ஓடி வருவான்? ஒரு யானை குளத்தில் இறங்கி, தாமரை மலரைப் பறித்து, பெருமானுடைய திருவடிகளுக்கு ஸமர்ப்பித்து, மகிழ்ச்சி கொள்ள நினைத்தது. ஆனால் அப்போது யானையின் காலை ஒரு முதலை கவ்விப் பிடித்து இழுத்தது. 

யானைக்கும் முதலைக்கும் நெடுங்காலம் சண்டை நிகழ்ந்தது. யானை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற உறுதியோடு போரிட்டது. இறுதியில் தண்ணீருக்கு வெளியில் தும்பிக்கை மட்டுமே இருந்தது. உடல் அத்தனையும் மூழ்கிற்று. இனி நம்மால் நம்மைக் காத்துக் கொள்ள இயலாது என்பது புரிந்து, ‘ஆதிமூலமே!’ என்று பெருமானை அழைக்க, அவர் ஓடோடி வந்து யானையைக் காத்தார். 

இக்கதையிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? நம்மை நாமே காத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், பெருமான் வர மாட்டார். ‘அவனே காப்பாளன்’ என்ற முழு உணர்வுடன் நாம் சரணாகதி செய்தால், ஓடோடி வந்து காக்கிறான்.

கஜேந்திரனைக் காக்க, அதாவது விலங்கான ஒரு யானையைக் காப்பதற்குக் கூட பெருமான் ஓடி வருகிறான் என்பதை இங்கு புரிந்து கொண்டோம். அடுத்து, வாமன அவதாரம். இது எதற்கு? பெருமானுடையதுதான் இந்த உலகம் முழுவதும். அவனுடைய சொத்துதான் அனைத்தும்! யாரேனும் சொத்தை இழக்க விரும்புவார்களா? இந்திரனை முதல் மூன்று லோகங்களை ஆள்வதற்காக பகவான் நியமித்திருக்கிறார். இந்திரன், அசுரர்களிடத்தில் தோற்றான். அசுரர்களின் அதிபதியான பலிச் சக்ரவர்த்தி இந்திரனுடைய மூன்று லோகங்களைப் பறித்துப் போனான். அவற்றைத் திரும்ப மீட்க இந்திரனுக்கு வழி தெரியவில்லை. பெருமானிடத்தில் வேண்டினான்.

பெருமான், குள்ளமான உருவத்தோடு வாமனனாக அவதரித்தார். தனது பக்தன் ப்ரஹ்லாதனின் பேரனான மஹாபலியிடம் சென்று, தனது கால் அளவால் மூன்றடி மண்ணை தானமாகக் கேட்டார். மஹாபலியும் இசைந்தார். உடனே பெருமான் வளர்ந்தார். உலகத்தனையையும் திரிவிக்ரமப் பெருமானாகத் தாவி அளந்தார். ஒரு திருவடியால், அதாவது வலது திருவடியால் பூலோகம் அத்தனையும் அளந்தார். இடது திருவடியால் வானுலகில் அத்தனையும் அளந்தார். மூன்றாவது அடியை வைக்க இடமில்லை. ‘எங்கே வைக்க வேண்டும்?’ என்று பலியைக் கேட்டு, அவனைச் சரணடைய வைத்து ஆட்கொண்டார். 

இந்த அவதாரத்திலிருந்து நாம் அறிந்து கொள்வது – தன் சொத்தை பகவான் இழக்க மாட்டார்; தன்னைக் குறைத்துக் கொண்டாவது, குள்ளமாக அவதரித்தாவது, யாசித்தாவது தன் சொத்தை மீட்டு விடுவார் என்பதே! ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன? நாம், பெருமானுடைய சொத்து; நாம் அவனுடையவர்கள்; அவனுடைய உடமை – என்று உணர்ந்து ஒத்துக் கொண்டோமானால், எப்பாடுபட்டாவது நம்மைக் காத்து விடுவான் எம்பெருமான்; ஒருக்காலும் கைவிட மாட்டான் – என்பதை அறிகிறோம். 

மேலே பகவானே, ஹம்ஸமாக – அன்னப் பறவையாகத் தோன்றி, நாரதரே! உமக்கு யோக சாஸ்திரத்தை உபதேசித்தார் அல்லவா! ஹம்ஸம் என்ன செய்யும்? பாலையும் நீரையும் கலந்து வைத்தால், நீரைத் தள்ளி பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும். பெருமான் அன்னமாக அவதரித்ததில் இன்னும் ஒரு சிறப்பு உண்டு. நல்லதையும் தீயதையும் சேர்த்துக் கொடுத்தால், தீயதைத் தள்ளி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வான் எம் பெருமான் என்பதோடு மட்டும் அல்லாமல், அவனைச் சரணடைந்தவன் தீயதை மட்டுமே கொடுத்தாலும் கூட, அந்தத் தீயதையே நல்லதாக மாற்றியமைத்து எடுத்துக் கொள்கிறான் பகவான். நாம் எத்தனையோ குற்றங்களைப் புரிந்திருக்கிறோம். இருந்தாலும் அந்தத் தவறுகளுக்கு வருந்தி, மன்னிப்பு வேண்டினால், அந்தக் குற்றங்களையே தனக்கு ஸமர்ப்பிக்கப்பட்டதாக, நல்லதாக ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறான். நாம் கடந்த காலத்தில், எப்படி இருந்தோம் என்பது முக்கியமில்லை. இன்று திருந்தி பகவானையே சரணடைந்தால், பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் தவறுகள் செய்யாமல் இருந்தாலே போதும்.   

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக