சனி, 9 மார்ச், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 35


இரண்டாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

பகவானது அவதாரங்கள்

அடுத்து ஒவ்வொரு மனுவாக, 14 மனுக்களாகப் பிறக்கிறான் எம்பெருமான். ஒவ்வொரு மனுவுக்கும் 71 சதுர் யுகங்கள். இது மன்வந்த்ரம் எனப்படும் காலக் கணக்கு. மனு வம்சத்து முதல் அரசனாகப் பிறந்து, பகவான் நாட்டு மக்களை சிறப்புறக் காக்கிறான். ஆக, ஒவ்வொரு அரசனும் பகவான் தன் ஆட்சியில் என்ன செய்தார் என்பதை அறிந்து கொண்டு, ஒரு சிறந்த அரசனாக நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்பதை பகவானே உணர்த்தினார். 

அடுத்து, உலகத்தாருக்கு ஆரோக்கியம் வேண்டுமே? எப்போதும் முக்தியைப் பற்றி பேசினால் போதுமா? இங்கிருக்கும் காலத்தில் பக்தி செய்யவோ, பெருமானுக்குத் தொண்டு புரியவோ தேஹ ஆரோக்கியம் தேவை அல்லவா! இதை கொடுப்பதற்காகத்தான் பெருமான் தன்வந்திரியாக அவதரித்து, ஆயுர்வேத சாஸ்திரத்தை உலகில் பிரசாரம் செய்தார். ஆயுள் நீண்டிருக்க, ஆரோக்கியத்துடன் கூடிய ஆயுளைப் பெற தன்வந்திரிப் பெருமான் நமக்கு அருள்கிறார். இம்மையில் ஆரோக்கியம், மறுமையில் ஆனந்தம். இவ்விரண்டையும் பெருமான் அருளினார். 

அடுத்து, கோபக் கனலாக விளங்கும், பரசுராமர். பூமிக்குத் துன்பம் கொடுத்தவர்கள், நல்ல மார்க்கத்திலிருந்து விலகியவர்கள், இப்படிப்பட்ட அரசர்களைத் தன்னுடைய ‘பரசு’ என்னும் கோடரி ஆயுதத்தால் அழித்தார் பரசுராமர். ஆக, பூமாதேவிக்கு பாரம் கொடுக்கும் யாரையும் பெருமான் விட்டு வைக்க மாட்டான் என்பதற்கு சாட்சியே பரசுராம அவதாரம். 

அடுத்த அவதாரம், கருணையே உருக்கொண்ட ஸ்ரீராமனின் பிறப்பு! சீதையைக் கடிமணம் புரிந்து கொண்டு, வேடனான குகன், குரங்கான சுக்ரீவன், இராக்சதனான விபீஷணன் ஆகியோரைத் தன் தம்பிகள் என்று பிரகடனம் செய்து கொண்டான். மூத்தோர் சொல்ல, இளையோர் கேட்க வேண்டும். ஆச்சாரியன் கூறினால், சிஷ்யனும்; தந்தை சொன்னால், தனயனும்; அண்ணன் சொன்னால், தம்பியும்; இப்படி பெரியவர்கள் சொன்னால், சிறியவர்கள் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதை உலகத்துக்கு உணர்த்தவே ஸ்ரீராம அவதாரம். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று வாழ்ந்தான் இராமன். உண்மை, நேர்மை, கட்டுப்பாடு இவை அனைத்தின் மொத்த உருவே மரியாதா புருஷோத்தமனான ஸ்ரீராமன்.


மேலும் இரண்டு அவதாரங்கள். அண்ணனான பலராமன்; தம்பியான கிருஷ்ணன். இவர்கள் இருவருமாக எத்தனை திருவிளையாடல்கள் செய்தார்கள். கண்ணனுடைய பால்ய பருவமே, நினைக்க நினைக்க நீங்காத இன்பமாக இருக்கும். எத்தனை ரிஷிகளும் ஆழ்வார்களும் இவனுடைய சிறு பிராய விளையாட்டுக்களைப் பாடியிருப்பார்கள். இதன் கருத்து என்ன? 

பகவானுடைய திவ்ய சேஷ்டிதங்களை, அவனுடைய அவதார ரஹஸ்யத்தை உணர்ந்தோமானால், நாம் மறுபடியும் பிறக்க வேண்டிய தேவையே இல்லை. அதற்குத்தான் இத்தனை விளையாட்டுக்களையும் புரிந்தான். பொய் சொன்னதோ, வெண்ணெய் திருடியதோ, பாலைக் குடித்ததோ, கன்றுகளை அவிழ்த்து விட்டதோ, கட்டுப்பட்டு உரலோடு ஏங்கி அழுததோ, மாடு கன்றுகளை மேய்த்ததோ, புல்லாங்குழல் ஊதியதோ, கோகுலத்துப் பெண்களோடு ராஸக்ரீடை செய்ததோ, கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்ததோ... இவை அனைத்தும் அவனுடைய தெய்வீகச் செயல்கள். இவற்றை நினைக்க நினைக்க நாம் மறுபடி பிறக்கத் தேவையில்லாத உயர் நிலையை எய்துகிறோம்.

அவன் தாம்புக் கயிற்றால் கட்டுப்பட்டதை நினைத்தால், நம் பாபக் கட்டுகள் விலகி விடுகின்றன. இதோடு அல்லாமல், பகவத் கீதையை நம் அன்றாட வாழ்க்கைக்கு ஒளி காட்டும் விளக்காகவும், முக்திக்குச் சிறந்த வழியாகவும், உபதேசித்தது ஸ்ரீகிருஷ்ண அவதாரம். அவரோடு கூட இருந்து, அனைத்து விளையாட்டிலும் பங்கெடுத்தார் பலராமர். 

கண்ணனே மற்றோர் உருவில் பிறந்தாரோ! –என்று வியக்கும்படியான ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்ற வேத வியாஸ அவதாரம். பராசரருக்கும் ஸத்தியவதி தேவிக்கும் மகனாக வேத வியாஸர் பிறந்தார். இவர் வேதங்களை ரிக், யஜுர், ஸாம, அதர்வணங்களாய் பிரித்துக் கொடுத்தார். உலகத்தில் இதிஹாஸ – புராணங்களைப் பிரசாரம் செய்தார். இந்த அவதாரத்தின் பயன் யாது? நாம் வேதங்கள், இதிஹாஸ – புராணங்கள் மூலம்தான், பெருமானை அறிந்து கொள்ள முடியும். நாம் அறியாததை அவைதான் அறிவிக்கும். உண்மை பேசும் – என்பதையெல்லாம் உலகுக்கு உணர்த்தினார். அடுத்து வியப்பான ஒரு அவதாரமாக புத்தனாகத் தோன்றினார். ஒரு கால கட்டத்தில் சில அசுரர்களுக்கும் கூட வேதத்தில் பற்று ஏற்பட்டு, அதைப் பிடித்துக் கொண்டு பல வழிகளில் தவறாகப் பயன்படுத்தினார்கள். உலகத்திற்குத் துன்பம் கொடுத்தார்கள். அவர்களுக்கு வேதத்தில் இருந்த ஈடுபாட்டைக் குறைத்தால்தான், அவர்களைச் செயல் இழக்கச் செய்ய முடியும். இதை உணர்ந்த பகவான், புத்தராகப் பிறந்து, அசுரர்களிடத்தே சென்று, ‘இப்படி வேதத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டாம். அது நல்லது சொல்லவில்லை. அது சிறந்த பிரமாணமில்லை’ என்று வேதத்திற்குப் புறம்பாகவே பிரசாரம் செய்து, அவர்களுக்கு அதில் இருக்கும் ஈடுபாட்டைக் குறைத்து, அவர்களை வென்று விட்டார். 

இனி கடைசி அவதாரம். இனிமேல் நடக்கப் போகிறது. உலகத்தில் கொடுமைகள், அதர்மம் மலிந்து போகும்போது, விஷ்ணு யசஸ் என்பவருக்குக் குமாரராய், சம்பலம் என்ற கிராமத்தில் அவதரித்து, வெள்ளைப் புரவியின் மீது கல்கியாக உலகை வலம் வரப் போகிறார். நல்லார்களைக் காத்து, தீயவர்கள் அனைவரையும் அழித்து, கலியுகத்தை மாற்றி, க்ருத யுகமாக திருத்தியமைப்பார் எம்பெருமான். 

மேலே இப்படி எத்தனையோ அவதாரங்கள். நாரதா! உனக்கு பகவானின் வைபவங்கள் அனைத்தையும் கூற முயன்றும் இயலாமல், சுருக்கமாகத்தான் கூறினேன். நீ பேச்சு வல்லமை உள்ளவனாயிற்றே! மேன்மேலும் இந்த அவதாரங்களின் பெருமையை உலகத்திற்குச் சென்று பரப்புவாய்! அனைவருக்கும் அதில் பக்தியையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவாயாக – என்று ப்ரஹ்மா கூறி அமைந்தார். 

அப்போது சுகர் கூறுகிறார் : 

“ப்ரஹ்மா, நாரதருக்குத் திருமாலின் அவதாரங்களின் சிறப்புக்களைக் கூறிய இந்த அத்தியாயத்தை, யாரெல்லாம் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அறியாமை, கல்வி அறிவின்மை ஆகியவை விலகும்; மயக்கம் நீங்கும்; சந்தேகங்கள் தொலையும்; பகவானிடத்தில் பக்தி பிறக்கும்; முக்தி கிட்டும் – இதுவே பயன்” என்று கூறி முடித்தார். நாமும் பக்தி உணர்வு மேலோங்கிட, அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வோம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக