திங்கள், 18 மார்ச், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 36


இரண்டாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம் 

பரமனடி பற்றுவிக்கும் பதினெட்டுக் கேள்விகள்!

ப்ரஹ்மாவும், நாரதரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் படைப்பைப் பற்றி நாரதர் கேட்க, ப்ரஹ்மா அதனை விளக்கமாகக் கூறினார். படைக்கப்பட்ட உலகத்தைக் காப்பதற்காக, திருமால் பல அவதாரங்களை எடுக்கிறார். அவற்றையும் வரிசைப்படுத்தி, அந்தந்த அவதாரத்தின் பயனோடே கூட நான்முகன் விளக்கினார். இனி அடுத்தாற்போல, பரீக்ஷித் சுகாசாரியாரிடத்தில், பல கேள்விகளை அடுக்குகிறார். கேள்விகள் அத்தனையும் எட்டாம் அத்தியாயத்தில் உள்ளது. அடுத்த அத்தியாயம் தொடங்கி, சுகாசாரியர் அவற்றுக்கு உரிய பதில்களைக் கூற முற்படுகிறார். பதில்கள் பலப்பல அத்தியாயங்கள் – ஸ்கந்தங்களில் விரிந்துள்ளன. முதலில் கேள்விகளைப் பார்ப்போம். 

“சுகாசாரியரே! நாரதருக்கு ப்ரஹ்மா உபதேசித்ததை விளக்கமாகக் கூறினீர். இந்த ஞானக்கதிர்கள் என் செவியின் வழியே புகுந்து, அமுதமாக உள்ளத்தை நிறைத்துள்ளன. பகவானுடைய கதையைப் பெறுவதற்கு, வாயைக் காட்டிலும் செவிப் புலன்தானே நேரடியாகப் பயன்படுகிறது” என்றான் பரீக்ஷித். நம்மாழ்வார் ஒரு பாடலில், ‘புவியும் இரு விசும்பும் நின்னகத்த, நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் அவிவின்றி...’ (பெரிய திருவந்தாதி – 75) என்று கூறுகிறார். 

‘உலகம் அத்தனையும், பகவானே! உன்னால் தாங்கப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தோடும் கூட, நீ என் காதுகளின் வழியே உள்ளே புகுந்து, உள்ளத்தில் உறைகிறாய். இப்போது கூறும்! உலகத்தைத் தாங்கும் நீர் பெரியவரா? அல்லது உன்னையும் சேர்த்துத் தாங்கும் அடியேன் பெரியவனா? பக்தன்தானே அனைவரிலும் பெரியவன். பக்தனுடைய காதுகளின் வழியாகத்தானே, நீ உள்ளே புகுகிறாய்’ என்கிறார். இச்செய்திகளால், ச்ரவணம் – அதாவது பெருமானைப் பற்றி தினசரி விடாமல் கேட்டல் – எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்கிறோம். எப்போதும் பெருமானுடைய கதைகளைக் கேட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு, ஒரு நாள் கேட்காவிட்டால் கூட, உள்ளமும் உடலும் பதறும். தாழ்ந்த உதாரணமாக இருந்தாலும் கூறுகிறேன். 

சில பொருட்களுக்கு அடிமைப்பட்டு விட்ட நாவினர், அதைச் சாப்பிடாவிட்டால் தவிப்பார்கள் அல்லவா? இறைவனைப் பற்றி தினமும் கேட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு, அப்படி ஒருநாள் கேட்கா விட்டால் தவிப்பு ஏற்படும். உலகப் பற்றினால் வரும் அந்தத் தவிப்பு தாழ்ந்தது; இறைப் பற்றினால் வரும் இந்தத் தவிப்பு உயர்ந்தது. அந்தத் தவிப்பால் மறுபடியும், மறுபடியும் துன்பத்துக்கு ஆளாவோம். இந்தத் தவிப்பால் பேரின்பத்தைப் பெறுவோம். ஆனந்த வெள்ளத்தில் மூழ்குவோம். ஆகவே, பகவான் நம் செவிகளின் வழியே புகுந்து நமக்குள் உறைகிறான். அவனைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட பரீக்ஷித் பின்வரும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூற வேண்டும் – என்று ஸ்ரீசுகரை வேண்டினான். கேள்விகளை வரிசையாகப் பார்ப்போம். 

கேள்வி ஒன்று – பகவானுக்குத் திருமேனி உண்டா? பஞ்சபூதங்களோடு ஆன உடலோடுதான் பெருமான் அவதரிக்கிறானா? அப்படியெனில் அவனுக்கும் கர்ம சம்பந்தம் உண்டா? அவனுக்கும் முக்குணங்களின் பாதிப்பு உண்டா? 

கேள்வி இரண்டு – பகவான் ப்ரஹ்மாவைப் படைத்தார் என்று கூறினீர்! அவனுடைய நாபிக் கமலம் எனப்படும் தொப்புளில் இருக்கும் தாமரையிலிருந்து, ப்ரஹ்மா தோன்றினாரே? பிற்பாடு அவர் என்ன செய்தார்? எப்படி உலகத்தைப் படைத்தார்?

கேள்வி மூன்று – ப்ரஹ்மா தன்னிச்சையாகப் படைத்தாரா? அல்லது அவருக்குள் இருந்து கொண்டு, ப்ரஹ்மம் – அதாவது திருமால் படைத்தாரா? யாருடைய அருள் கொண்டு ப்ரஹ்மா படைக்கிறார்? அவருக்கு முதன் முதலில் இப்படித்தான் படைக்க வேண்டும் என்று யார் சொல்லிக் கொடுத்தார்? 

கேள்வி நான்கு – பகவான், ப்ரஹ்மாவைப் படைத்து அவரை மேற்கொண்டு படைப்பதற்காக அருள் பாலித்து ஆணையிட்டு விட்டு, பிறகு எங்கு சென்று சயனிக்கிறார்? அவர் வைகுண்டத்தில் உள்ளாரா? திருப்பாற்கடலில் இருக்கிறாரா? அல்லது படைக்கப்பட்ட உலகத்துக்குள்ளேயே எங்கும் நிறைந்திருக்கிறாரா? 

கேள்வி ஐந்து – ப்ரஹ்மா படைக்கத் தொடங்கியவுடன் பல தேவர்களையும் படைத்தாரா? லோக பாலகர்கள் என்பவர்கள் யார்? இவ்வுலகத்தை யார் காக்கிறார்? தேவர்கள்தான் நமக்குக் காற்றையும், மழையையும், வெப்பத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கிறார்களா? அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? 

கேள்வி ஆறு – உலகில் காலம் என்னும் தத்துவத்தை விளக்கிக் கூற வேண்டும். வினாடி, நிமிடம், மணி, நேரம், நாள், வாரம், மாதம், பக்ஷம், அயனம் – என்று பலப்பல காலப் பிரிவுகளைக் கூறுகிறோம். இவையெல்லாம் யாது? ஒவ்வொருவருக்கும் பொதுவாக நூறாண்டுகள் ஆயுள் என்பது முழுமையான வாழ்வு என்று கூறினீர்களே! அதன் பொருள் என்ன? இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என்பவையெல்லாம் உண்மையா? அல்லது பிரமையா? அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? நம்மை மயக்கி ஆட்டுவிக்கும் இந்த கால தத்துவத்தைப் பற்றி விளக்கமாகக் கூற வேண்டும். 

கேள்வி ஏழு – கர்ம பலன் – அதாவது வினைப் பயன் என்பது யாது? அது உண்டா, கிடையாதா? ஒவ்வொரு ஜீவனும் தன்னுடைய பழைய வினைப் பயனால்தான் பிறக்கிறானா? இப்போதும் வினைப் பயனைச் சேர்க்கிறானா? கர்மம் என்பது அதற்குரிய பலனைத் தந்தே தீரும் – என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? கர்மத்தை ஒழிப்பது எப்படி? அதன் பயனைத் தடுப்பது எப்படி? கர்மம் செய்பவன் எந்த உலகத்துக்குப் போகிறான்? எல்லாக் கர்மங்களைச் செய்தவர்களும் ஒரே உலகத்தை அடைகிறார்களா? அல்லது நரகத்துக்குப் போகிறவன், சொர்க்கத்தை அடைபவன், திரும்ப வராத வைகுண்ட ப்ராப்தி கிட்டுபவன், இவ்வுலகத்திலேயே மாறி மாறிப் பிறப்பவன் என்றெல்லாம் வெவ்வேறு வகையினர் உண்டா? 

கேள்வி எட்டு – முக்குணம் என்பதன் தன்மை என்ன? ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிறோமே, அவை எப்படி மனிதனைப் பாதிக்கின்றன? இவற்றை நாம் எப்படிக் கையாள வேண்டும்? முக்குணத்தில் வேண்டாத இரண்டைத் தொலைப்பது எப்படி? வேண்டிய ஒன்றை வளர்த்துக் கொள்வது எப்படி? நம்மிடம் செயல் புரியும் இந்தக் குணங்களை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? 

கேள்வி ஒன்பது – ஈரேழு பதினான்கு லோகங்களாக, இந்த அண்டம் படைக்கப்பட்டுள்ளதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதே! இவை அத்தனைக்கும் விளக்கம் யாது? எவ்வளவு தூரத்தில் ஒவ்வொன்றும் உள்ளன? பூகோளம் என்பது என்ன? எத்தனை அண்ட கடாகங்கள் உள்ளன?

(அறிவியலில் கூறப்படுகிற அண்டங்கள், பூகோளம் வேறு மாதிரி இருக்கிறதே? ஆனால், ஆன்மீகத்தில் கூறப்படும், அதாவது – இதிகாச புராணங்களில் கூறப்படும் பூகோளம் வேறு மாதிரி இருக்கிறதே? இது எப்படி? – என்றெல்லாம் இன்று நாம் எழுப்புகிற கேள்விகளைப் போலவே கேட்கிறான் பரீக்ஷித்.) 

கேள்வி பத்து – மனிதர்களில் வர்ணங்களை பெருமான், குணங்களின் அடிப்படையில் எதற்கு பிரித்தார்? அந்தணர்கள் என்றும், அரசர்கள் என்றும், வணிகர் என்றும், உழைப்பாளர் என்றும் எதற்காக இந்தப் பிரிவினையை ஏற்படுத்தினார்? இதனால், இன்றைய உலகத்தில்தான் எத்தனை குழப்பங்கள்? குண – கர்மங்களை ஒட்டிச் செய்த இந்த பகவத் சிருஷ்டிக்கு ஏதோ பயன் இருக்க வேண்டுமே? இதன் உட்கருத்து யாது? 

கேள்வி பதினொன்று – நான்கு யுகங்கள் என்று கூறினீர். அகண்டமான காலத்தைப் பகுத்துப் பார்க்கும் போது, க்ருதயுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்று சொல்லப்படும் யுகங்களின் வேறுபாடுகள் யாவை? அந்தந்த யுகத்தில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? நல்ல யுகம், தீய யுகம் என்று உண்டா? நாம் இந்த யுகத்தில் இருப்பதே ஒரு சாபம்தானா? அந்தந்த யுகத்துக்குரிய தர்மங்கள் எவை? இன்ன யுகத்தில் இருப்பவன்தான் முக்தி அடைய முடியும்? மற்ற யுகத்தில் வாழ்பவர்களால் இயலாது என்று ஏதேனும் உண்டா? 

கேள்வி பன்னிரெண்டு – உலகத்தில் நாம் தர்மத்தைச் செய்ய வேண்டும் என்பது நியதி. அவை சாதாரண தர்மங்கள் – அதாவது பொதுவான அடிப்படை தர்மங்கள். திருடாதே, பொய் சொல்லாதே, பிறர் பொருளுக்கு விருப்பப்படாதே, பிறன் மனை விழையாதே, ஏமாற்றாதே, பேராசை கொள்ளாதே, வஞ்சம் தீர்க்காதே, மற்றொருத்தரைப் பற்றிப் புறம் கூறாதே – போன்ற இவையெல்லாம் பொதுவான அறங்கள். இது தவிர, அரசர்களுக்குண்டான அறம், பெண்களுக்குண்டான அறம், ஆபத்துக் காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறம், விசேஷமாகப் பெருமானுக்குத் தொண்டு புரிதலாகிற அறம் – இவை அனைத்தையும் விளக்கமாகக் கூற வேண்டும். 

பதிமூன்றாவது கேள்வி – பகவான் நம்மைப் படைத்திருக்கிறார். நமக்குக் கை கால்கள் முதலிய அங்கங்கள் உள்ளன. நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இவற்றை எதற்காக அவனுக்குத் தொண்டு புரியப் பயன்படுத்த வேண்டும்? ஏன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்? நான் என் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டால் போதாதா? அப்படித்தானே உலகில் அனேகமாக மக்கள் வாழ்கிறார்கள்? ஒரு சிலர் மட்டும்தானே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஓடோடி உழைத்து, பல சமயங்களில் கெட்ட பெயரும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். பகவானுக்கு நான் ஏன் ஆராதனம் செய்ய வேண்டும்? மக்களுக்கு ஏன் தொண்டு புரிய வேண்டும்? அப்படிச் செய்ய வேண்டுமானால், ஆராதனம் செய்ய வேண்டிய முறை யாது? யோகம் செய்ய வேண்டிய முறை, அதாவது பெருமானைக் குறித்து தியானிக்க வேண்டிய முறை எது? அதையும் சொல்லவும். 

பதினான்காவது கேள்வி – வேதங்கள் நான்கு, இதிகாசங்கள் இரண்டு, புராணங்கள் பதினெட்டு. இது தவிர ஆயுர்வேத சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம் முதலான எத்தனை பிரமாணங்கள் உள்ளன? இந்தப் பழமை வாய்ந்த நூல்களைப் பற்றியும், அவற்றிற்குரிய தன்மைகளைப் பற்றியும் விளக்கமாகக் கூற வேண்டும். 

பதினைந்தாவது கேள்வி – உலகை பகவான் படைக்கிறாரே, பிற்பாடு அழிப்பது எதற்காக? உலக அழிவு எப்போது நடைபெறுகிறது? இதனால் நாம் அத்தனை பேரும் அழிந்து விடுவோமா? திடீரென்று உலகம் அழிந்து விடும் என்று அவ்வப்போது ஒரு பயம் கிளம்புகிறதே? ஒவ்வொரு முறையும் கலியுகம் முடிந்தவுடன் பிரளயம் வந்து, அனைத்தும் அழிந்து போகுமா? இந்த அழிவு – மீண்டும் படைப்பு ஆகியவற்றின் தத்துவம் என்ன என்றும் விளக்க வேண்டும்?

பதினாறாவது கேள்வி – தர்மங்களைச் செய்தல், குளம் வெட்டுதல், கோவில் கட்டுதல் முதலானவைகளும், மேலும், தனக்குப் பிள்ளை வேண்டி யாகம் செய்தல், நோய் நொடிகள் தொலைவதற்காக யக்ஞம் செய்தல், நீண்ட ஆயுளுக்காக ஹோமம் செய்தல் – இவையெல்லாம் உண்மையிலேயே பலன் தருபவைதானா? இவற்றையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? மேலும் தர்மம், அர்த்தம், காமம், இவற்றைப் பற்றிய அடிப்படை விளக்கத்தையும் கேட்க விரும்புகிறேன். 

பதினேழாவது கேள்வி – சுகாசாரியரே! நெடுநாளாக அடியேனுக்கு ஓர் வியப்பு! இவ்வுலகுகளும், உயிர்களும் பெருமானுடைய சொத்து என்று கூறினீர். பின் எதற்காக அவனை விரோதிப்பவர்கள் பிறக்கிறார்கள்? ஏன் உலகத்தில் நாஸ்திக வாதம் உள்ளது? எல்லோரும் ஆஸ்திகர்களாக இருக்க வேண்டியதுதானே? தன்னை மறுப்பவர்களையும் அந்தப் பெருமான்தானே படைத்தார்? பின் ஏன் சிருஷ்டி இப்படி அமைந்திருக்கிறது? 

கடைசியாக பதினெட்டாவது கேள்வி – ஆத்மா எதற்காகப் பிறவி எடுக்கிறது? பந்தம் என்றால் என்ன...? முக்தி என்றால் என்ன...? இந்த பந்தத்திலிருந்து விடுதலையை இவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது படைத்தவன்தான் ஏற்படுத்திக் கொடுப்பானா? இவை அனைத்துக்கும் பதில் கூறும். 

இதற்கெல்லாம் பதில் தங்களிடத்தில் இருக்கும் என்று தெரிந்தாலும், தனிப்பட்ட முறையில் விடை தெரியாத, மனதை உறுத்தும் மேலும் ஒரு கேள்வி என்னிடத்தில் உள்ளது. அதற்கும் பதில் கூறும். மேற்சொன்ன அனைத்தும் இறைவனுடைய விளையாட்டுத்தானே? அவன் விளையாட்டுக்கு நானா கிடைத்தேன்? அவன் எதையோ வைத்து விளையாடிக் கொள்ள வேண்டியதுதானே? இவ்வுலகத்தைப் படைத்து, என்னையும் படைத்து, துன்பக் கடலில் ஆழ்த்தி எதற்குப் பெருமான் விளையாடுகிறான்? அவன் அன்புடையவனாக இருந்தால், எப்போதோ என்னை அழைத்துப் போயிருக்க வேண்டுமே! அன்பிலாதபடியால்தானே படைத்துப் படைத்து என்னைப் பாழாக்கி விளையாடுகிறான்? இவர் விளையாடுவதற்கு என் துன்பம்தானா கிடைத்தது? கருணையே உருவான கடவுள் இப்படி விளையாடுவாரா? இதற்கு முக்கியமாக பதில் கூற வேண்டும். இந்தப் பதில்கள் அனைத்தும் தெரிந்தால்தான், நான் நிம்மதி அடைவேன். உம்மிடத்தில் மேலும் மேலும் கேட்டுக் கொண்டிருக்கும் எனக்கு அமுதத்தை அருந்தினாற் போல, பசி, தாகம் முதலிய துன்பங்கள் ஏற்படவில்லை. ஆகவே, நீர் நன்கு விளக்கமாகக் கூற வேண்டும்!’ என்று வினவினான் பரீக்ஷித் மஹாராஜன்.

சூத பௌராணிகர் கூறுகிறார்: இப்படிக் கேட்கப்பட்ட சுகர், மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலோடு கேட்பவன் இருந்தால், ஆச்சாரியனுக்குத்தான் எவ்வளவு இன்பம்! “இதோ கூறுகிறேன். முன்னோர் மொழிந்ததைக் கேட்டிருக்கிறேன். நானும் கடைப்பிடித்திருக்கிறேன். நீயும் கேட்டு கடைப்பிடிக்கும்படியும், துக்கமில்லாமல், எவ்விதப் பதட்டமும் இல்லாமல் நீர் முக்தி மார்க்கத்தில் செல்வதற்காகவும் அனைத்தையும் கூறுகிறேன். கேளும்!” என்று கூறி, அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லப் போகிறார். நாமும் செவிமடுத்துக் கேட்போம். 

இங்கே அடியார்களிடத்தில் ஒரு விண்ணப்பம். இந்த ஒவ்வொரு கேள்விக்கும் வரிசைப்படியாக அடுத்தடுத்து பதில் இருக்காது. ஒரு கேள்விக்கு மூன்று அத்தியாயங்களில் பதில் இருக்கலாம். மற்றொரு கேள்விக்கு எங்கோ நான்கே ச்லோகங்களில் பதில் இருக்கலாம். மொத்தம் பதினெட்டு கேள்விகள். அது தவிர, மன்னனின் மனதைக் குடையும் கடைசிக் கேள்வி! இவை அத்தனையும் பார்த்து முடிக்க, பாகவதமே முடிந்து கூடப் போகலாம். ஆனால், நாம் அனைவரும் சிரத்தையோடு இந்தந்தக் கேள்விக்கு ஸ்ரீபாகவதத்தில் இந்தந்த பதில் உரியவை என்பதைப் புரிந்து கொண்டு சேர்த்துப் பார்க்க வேண்டும். அதற்கு வழி செய்வதற்காக ஒன்று செய்வோம். அந்தந்த கேள்விக்குரிய பதிலை பாகவதத்தின் அடிப்படையில் சுருக்கமாக கூறி விடுகிறேன். அதற்குப் பிற்பாடு அதனுடைய விரிவாக்கம் எப்படி உள்ளது? எந்தெந்த அத்தியாயத்தில் உள்ளது? என்பதையும் அவ்வப்போது பார்த்துக் கொள்வோம். இப்போதைக்கு கேள்விகளை மறுபடியும், மறுபடியும் யோசியுங்கள். பாதகங்கள் தீர்த்தும் பரமனடி காட்டும் விடைகளை நாடுவோம் – கண்ணன் அருளோடு! வினைத் தடைகளைக் கடப்போம், அவன் தரும் துணிவோடு! 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக