ஞாயிறு, 16 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 37

இரண்டாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

வினைத்தளையறுக்கும் விடைகள்

ஸ்ரீமத் பாகவதத்தில், எட்டாவது அத்தியாயத்தில் இரண்டாவது ஸ்கந்தத்தில், தனக்கு ஏற்பட்ட பல ஐயங்களை பரீக்ஷித், சுகாசாரியரிடத்திலே கேள்விகளாகத் தொடுத்து, விடை பெற விரும்பினான். நாம் கடந்த முறை சந்தித்தபோது பதினெட்டுக் கேள்விகளின் பட்டியலைப் பார்த்தோம். அவற்றிற்குரிய விடைகளைச் சுருக்கமாக இப்போது பார்ப்போம். ஏற்கெனவே கொடுக்கப்பட்ட கேள்விகளை, நீங்கள் கையில் வைத்துக் கொண்டால்தான், அதோடு தொடர்புபடுத்தி இப்பதில்களையும் பார்க்க முடியும். 

ஒவ்வொரு விடையும் எந்த எந்த சாஸ்திர வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் சேர்த்துக் கூறுகிறேன். நாமாக மனத்தில் தோன்றியதைக் கூறினால், அது எடுபடாது, நிலைக்காது. பண்டைய சாஸ்திரங்கள், அவற்றையொட்டிய ஆச்சார்யர்களுடைய திருவாக்குகள் இவற்றைக் கொண்டுதான், ஒரு விஷயத்தை நாம் நிரூபிக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவதமே ஸகல சாஸ்த்ரங்களின் ஸாரம்தான்! இனி விடைகளுக்கு வருவோம். 

விடை ஒன்று - திருமாலுக்குத் திருமேனி உண்டு. அவர் பிறக்கும்போது, அதாவது அவதரிக்கும்போது, எத்தனையோ திருமேனிகளை எடுத்துக் கொள்கிறார். 

இச்சாது பிரிகதோ அமிகதோது தேவ:

– என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்தத் திருமேனி நம்முடைய உடல் போன்றதல்ல. நம் உடல் ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டது. ஆகவே, அழியக்கூடியது. அதே போல் நம் உடல் முக்குணங்களால் ஆக்கப்பட்டது. ஆகவே மாறுதலுக்குட்படுகிறது. நல்லது தீயது, மாறி மாறி வருகிறது. ஆனால், திருமாலுடைய திருமேனியோ, கர்ம சம்பந்தத்தால் ஏற்பட்டதல்ல. முக்குணமயமானது அல்ல. தூய்மையான ஸத்வ குணத்தால் மட்டுமே ஆக்கப்பட்டது. 

அதோடு மட்டுமல்லாமல் நம் உடலைப் போல் ஐந்து பூதங்களால் ஆகாதது. ஆனால், பரமேஷ்டி, புமான், நிவ்ர்தஹா, விஸ்வஹா, சர்வஹா என்கிற ஐந்து ஆத்ம சக்திகளால் ஆக்கப்பட்டது. நம்முடல் ப்ராக்ருதம். ஆனால், பெருமானுடைய திருமேனியோ ‘அப்ராக்ருதம். திவ்யமானது. புராணங்கள் கூறும்போது, அவிகாராய, சுத்தாய, நித்யாய பரமாத்மனே... ஸதைகரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே’ என்று பேசுகின்றன. ‘ஸதா ஏக ரூபாய’ என்றால் ‘எப்போதும் மாறாத தன்மை படைத்தவர்’ என்பது பொருள். அதே போல் மாறாத தூய தன்மை படைத்தவர். இப்படி தூய்மையான ஸத்வ மயமான திருமேனியாக இருக்கிறபடியால், அதைத்தான் தியானிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கும் ஸத்வ குணம் வளரும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். 

முக்குணமயமானதை நாம் தியானித்தால், நம்மிடம் முக்குணங்கள்தான் வளரும். ரஜஸ், தமஸ் குணங்களில் கண் வைக்காமல் தூய்மையான ஸத்வ குண மயமான பெருமானின் திருமேனியையே நம் தியானத்துக்குரிய விஷயமாக்க வேண்டும். அப்போதுதான் நம்மிடத்திலும் ஸத்வ குணம் வளரும். 

விடை இரண்டு - பகவான் ப்ரஹ்மாவைத் தன்னுடைய தொப்புளில் இருக்கும் தாமரை மலரில் படைத்தார். ப்ரஹ்மா பிறகு இவ்வுலகத்தையெல்லாம் வெவ்வேறாக, பத்து விதமாக சிருஷ்டிக்கத் தொடங்கினார். முதலில் பஞ்ச பூதங்களைப் படைத்த பகவான் அண்டகடாகத்தை உருவாக்கி, ப்ரஹ்மனைப் படைக்கும் வரை தானே நேரே செய்கிறார். இதற்கு ஸமஷ்டி சிருஷ்டி என்று பெயர். பின்பு நான்முகனைக் கொண்டு மற்றவற்றையெல்லாம் படைக்கிறார். அதற்கு வ்யஷ்டி சிருஷ்டி என்று பெயர். ஆக, அகில ஜகத்துக்கும் காரணம் ஸ்ரீமன் நாராயணன். இதை உபநிஷத்துக்கள் 

‘கோஹவை நாராயண அக்ர ஆஸீத், ந ப்ரஹ்மா, நேசான: நே மேதேவாபுதிரி நக்ஷத்திரானி...’ 

– என்று கூறுகின்றன. ப்ரளய தசையில் யாரும் இல்லாமல் இருந்தபோது, தனி ஒருவனால் பரப்ரம்மமான திருமால் மட்டுமே இருந்தார். அவர்தான் தன் நாபிக் கமலத்தில் பிரஹ்மாவைப் படைத்தார். ஆகவே, முழு முதற்காரணமான பெருமானை மட்டுமே தியானித்தோமானால் முக்தி கிட்டும். 

வேதங்கள், ‘காரணம் து த்யேய:’ என்று ‘அனைத்துக்கும் காரணனைத் தியானிப்பாய். அதனால் முக்தி அடைவாய்’ என்றுதானே கூறிற்று. 


விடை மூன்று – தொடர்ந்து ப்ரஹ்மா படைக்கத் தொடங்கியபோது, அவரால் தனித்து இயங்க முடியாது. ஸ்ரீமன் நாராயணன் அவருக்கு அந்தராத்மாவாக உள்ளதால், அவருக்குள் இருந்து செலுத்துகிறார். அவர்தான் நான்முகனுக்கு நான்கு வேதங்களையும் ஓதினார். நான்முகன் தன் நான்கு முகங்களால் வேதங்களை ஓதிக் கொண்டே, ப்ரபஞ்சத்தின் படைப்பைத் தொடங்குகிறார். ஆக, படைப்பினங்கள் அனைத்துக்குள்ளும் ப்ரம்மம் உறைகிறார். 

‘ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா, அபஹ தபாப்மா, 
திவ்யோ தேவ ஏக, நாரயண...’ 

– என்று வேதாந்தம் கூறுகிறது. ஒருத்தனான நாராயணனே அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அனைவருக்கும் ஆத்மா அவர். அனைவருக்குள்ளும் இருந்தும் ஆட்சி செலுத்துபவர் அவர். அவருடைய அருளாலேயே ப்ரஹ்மா மேற்கொண்டு படைக்கிறார். 

விடை நான்கு - பகவான் ப்ரஹ்மாவைப் படைத்து விட்டு மேலே என்ன செய்வார்? திருப்பாற்கடலில் சயனித்துக் கொண்டிருப்பார். வைகுண்டத்தில் இருக்கும் எம்பெருமான் படைக்க வேண்டும் என்று தன் திருவுள்ளத்தில் சங்கல்பம் எடுத்துக் கொண்டபோது, தன்னையே நான்காகக் பிரித்துக் கொண்டு, அதாவது வ்யூஹ தசையில் திருப்பாற்கடலில் சயனிக்கிறார். அவன் ஒருவனே நான்கு மூர்த்திகளாக உருக்கொண்டு வாஸு தேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன் என்ற நான்கு திருப்பெயர்களைக் கொண்டவனாகக் கூறுகிறது சாஸ்திரம். இதிலே வாஸுதேவ ஸ்வரூபம் – வைகுண்ட நாதனுக்கும், திருப்பாற்கடற் பெருமானுக்கும் இடையிலுள்ள நிலை. ‘ஸங்கர்ஷணர்’ என்றால் – உலகத்தை அழிப்பவர் (ஸம்ஹரிப்பவர்) என்று பொருள். ‘ப்ரத்யும்னன்’ என்றால் - உலகத்தைப் படைப்பவர் என்று பொருள். அனிருத்தன் - உலகத்தைக் காப்பவர் என்று பொருள். படைக்கும் ப்ரத்யும்னன்தான், ப்ரஹ்மாவையே படைத்து, அவரைக்கொண்டு மற்ற அனைவரையும் படைக்கிறார். படைத்து முடித்த பிறகு, பகவான் திருப்பாற்கடலில் மட்டுமா இருப்பார்? அல்லவே. 

ததேவாநு ப்ராவிசத்| ததநுப்ரவிச்ய|
ஸச்ச த்யச்சா பவத்|
(தைத்ரிய உபநிஷத்) 

– என்று வேதாந்தம் கூறுகிறது. படைக்கப்பட்ட அனைத்துக்குள்ளும் ஆகாசத்தை விட ஸூக்ஷ்மாக, நீக்கமற நிறைந்தும் இருக்கிறார், அவற்றின் எத்தகைய குண தோஷங்களும் தீண்ட முடியாதபடி! 

ஒரு குயவன் மண் பானையைப் படைத்தால், அது யாரிடமோ போய் விடும். குயவன் பானையோடு வாழ முடியாது. ஆனால் பகவான் அப்படியல்ல. படைக்கப்பட்ட அனைத்துக்குள்ளும் வாழ்கிறான். எதற்காக? எப்போதாவது வாய்ப்புக் கிடைக்கும்போது, இந்த ஜீவன் சம்மதிக்கும்போது, அவனை நல்வழிப்படுத்த வேண்டும், திருத்த வேண்டும் என்பதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு, நமக்குள்ளேயே உறைகிறானே பெருமான். எவ்வளவு அன்பு! எத்தனை கருணை!! 

பல விதமான தோஷங்களுக்கு இருப்பிடமான சரீரத்தில் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது உயிர்களை உய்விக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன், இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு பெருமான் நமக்குள்ளே உறைகிறாரே, எதற்காக? ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, நாம் திருந்துவோமா என்கிற ஆவலோடுதான், அப்படிக் காத்திருக்கிறார். 

ஸ்ரீ வேதாந்த தேசிகர் எனும் மஹாசாரியர் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, 

‘ஸதீயம் சபேவாரண சைலநாத, வைகுண்ட 
வாஸேபி நமேபிலாஷ:’ 

– என்று சபதமிடுகிறார். பெருமானே! காஞ்சி தேவராஜப் பெருமானே! நீ எனக்குள் உறைகிறாய். எனக்குள் இருக்கும் பாபங்களாகிய அழுக்கைப் பார்க்காமல், ஒரு தாய் குழந்தையின் மலம், மூத்திரத்தைக் கண்டு வெறுக்காமல், சுத்தம் செய்வது போல, நீ எனக்குள் இருக்கிறாய். உனக்குத்தான் எத்தனை வாத்ஸல்யம்! எத்தகைய கருணை! 

இப்படி என்னிடத்தில் அன்பு வைத்திருக்கும் உன்னை விடுத்து, எனக்கு வைகுண்டம் கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறுகிறார் இந்த ஸ்வாமி. எத்தனை அழகான அனுபவம்! 

விடை ஐந்து - ப்ரஹ்மா படைக்கத் தொடங்கி, தசப்ராஜாபதிகள், மேலும் ஸப்த ரிஷிகள்,தேவர்கள் அனைவரையும் படைக்கிறார். ஸ்ரீமன் நாராயணன், ப்ராஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து கொண்டு, இந்த தெய்வங்களையெல்லாம் படைக்கிறாரே, எதற்காக? கண்ணனே கீதையில் கூறுகிறார். 

தேவாந்பாவ யதாநேரு தே தேவா பாவயந்துவ:|
பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரமவாப்ஸ்யத|| (பகவத் கீதை 3-11) 

“அர்ஜுனா! வேள்விகளால் என்னை அந்தர்யாமியாகக் கொண்ட தேவர்களை வேத விதிப்படி கௌரவித்தால், என் பிரதிநிதிகளான அவர்கள் பதிலுக்கு மழை, காற்று, நெருப்பு, எரிக்கும் சக்தி, அன்னம் முதலானவற்றைக் கொடுத்து மக்களை வாழ்விப்பர். இப்படி தேவர்களும், மனிதர்களும் ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொண்டு, நன்கு வாழுங்கள் என்பது ப்ரஹ்மா வாயிலாக நான் ஆதியில் இட்ட ஆணை!” என்கிறார். இந்த தேவதைகள் எல்லாம் எதற்காக? நாம் நேரடியாகவே பெருமானைப் பற்ற முடியாதா? கண்டிப்பாகச் செய்யலாம். சரணாகதன் அதைத்தான் செய்கிறான். பின் தேவதைகள் எதற்கு? ஓர் அவரை விதையை விதைத்த பின், அது முளை விடும்போது, அடுத்த நாளிலேயே பந்தலில் ஏற்றி விட முடியாது. அதற்குச் சிறியதொரு குச்சியை நட்டு, கொடியை அதில் சுற்ற வேண்டும். அது நன்கு வளர்ந்தபின், பெரிய கம்பு நட்டு, அதில் சுற்ற வேண்டும். இறுதியில்தான் பந்தலில் ஏற்ற வேண்டும். பந்தலைப் போலப் பெருமான் பற்பல பிறவிகளில் அவனிடம் ஏறுவதற்குரிய மனப்பக்குவத்தைப் பெறுவதற்கு உதவ, பல தேவதைகளை அவனே படைத்திருக்கிறான். ஆனால், பெருமானிடம் ஏறிய பிறகு அவன் திருவடிகளை மட்டுமே சரணமாகப் பற்றுகிறோம். 

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள்தன்னாலே, காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் (திருமாலை-10) 

– என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிக்கிறார். 

‘சரணடைவதற்கு கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை’ என்பது ஆழ்வாருடைய நிரூபணம். ஆனால், உலகியல் விவகாரங்களுக்கு உதவ அவனால் படைக்கப்பட்ட எல்லா தேவதைகளும் உண்டு. அவர்களுக்கு வேத விதிப்படி நாம் கொடுக்க வேண்டியதை சிரத்தையுடன் சமர்ப்பித்தோமானால், அவர்கள் பதிலுக்கு நமக்கு நன்மை செய்கிறார்கள், தேவாதிதேவனான அவன் ஆணைப்படி! 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக