ஞாயிறு, 16 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 38

இரண்டாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

வினைத்தளையறுக்கும் விடைகள்

விடை ஆறு - காலம் எனும் தத்துவம் எது? அது ஒரு ஜடப் பொருள். தன்னுணர்வு அற்றது. காலம் தானும் மாறிக் கொண்டே இருக்கும்; தான் எதைப்பற்றி இருக்கிறதோ, அந்தப் பொருளையும் மாற்றிக் கொண்டே இருக்கும். அனைத்துப் பொருட்களையும் காலம் தன் வசத்தில் வைத்து மூடிக் கொண்டிருப்பது போல் இருக்கும். அது, தானே மாறும் என்று கூறினேன் அல்லவா? வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு என்று தனக்குத்தானே மாறும். அதே சமயத்தில் தான் மூடிக் கொண்டிருக்கும் பொருட்கள், தான் மூடியிருக்கும் உடல், தான் மூடியிருக்கும் இடம் ஆகிய அனைத்தையும், ஓரோரு நிமிடமும் மாற்றிக் கொண்டே இருக்கும். 

நேற்று இருந்த நம் சரீரத்தின் தோல் இன்று அதே போல் இருக்குமா? சுருங்கி இருக்குமே! பழைய திசுக்கள் நீங்கி, புதிய திசுக்கள் உருவாகியிருக்குமே! நேற்று இருந்த பூ இன்றைக்கு எப்படி இருக்கும்? வாடி இருக்குமே! அது உதிர்ந்தபின் புதிய பூ முளைக்குமே! இதுதான் கால தத்துவத்தின் கோலம். அனைத்தையும் மாற்றிக் கொண்டே இருக்கும். குறைத்துக் கொண்டே போகும். பரிணாம மாற்றங்களையும் உண்டாக்கும். ஆனால், வைகுண்டத்தில் காலத்தின் ஆட்சி கிடையாது. 

‘ந காலஸ் தத்ரவை பிரபு:’ 

என்று வேதாந்தம் கூறுகிறது. ஆகவே, பொன்னான காலத்தின் சீர்மையை உணர்ந்து கொண்டு, ப்ரம்மத்தை அறிவதில் வாழ்வைக் கழிக்க வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது. 

விடை ஏழு - கர்மத்தையும், மறு பிறவியையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ஆம்! அது இல்லாவிடில் உலகமே குழம்பிப் போகும். எந்த ஒன்றை நான் செய்தாலும், அதன் நன்மை, தீமை ஆகியவற்றை நானே பொறுப்பேற்று அனுபவித்துத்தானே ஆக வேண்டும்! நல்லதைச் செய்தால் பரிசு கிட்டும். தீயதைச் செய்தால் தண்டனை கிடைக்கும். 

ஒருவன் தீமையைச் செய்தால், அது அவனோடு மட்டும் நிற்காது. மற்றவர்களையும் பாதிக்கும். ஆகையால், ஒருவன் செய்யும் கர்மம் என்பது நல்வினைகளாகிற புண்ணியம், தீ வினைகளாகிற பாவம் ஆகியவையாகும். ‘இவை இரண்டுமே இல்லை; இவை இரண்டும் அடுத்த பிறவிக்குப் போவதுமில்லை’ – என்று ஒரு வாதத்துக்குக் கூறுவோமானால், என்ன நிகழும்? இப்பிறவியில் நாம் என்னென்னவெல்லாம் தீயவற்றைச் செய்தோமோ, அதற்குரிய பலனை அனுபவிக்காமல், உயிர் பிரிந்தவுடன், அடுத்த பிறவி என்ற ஒன்று இல்லாவிட்டால், அதற்குரியப் பலனை அனுபவிக்கவே முடியாது. சரி. அனுபவிக்கா விட்டால் என்ன? என்றால், அதுதான் ஆபத்து. உலகத்தில் மனிதன் நல்லவனாக வாழ வேண்டும் என்கிற விருப்பமே இல்லாமல் போகும். 

நல்லதைச் செய்தால் பரிசு, தீயதைச் செய்தால் தண்டனை உண்டு; இன்று இல்லாவிட்டாலும், நாளை உண்டு என்பது புரிந்தால்தான் மனிதன் நல்லவனாக வாழ்வான். சிலர் கொள்ளை அடிக்கிறார்கள். உடனே தண்டனை கிடைத்து விடுகிறதா? நீதிமன்றத்திற்குப் போய் தீர்ப்பாவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும், தண்டனை உண்டு என்பது தெரிகிறது. அதனால்தான் மக்கள் நல்லவர்களாக இருக்க முயற்சியாவது செய்கிறார்கள். 

அதே போல இன்று நாம் செய்யும் நல்வினை – தீவினைகளுக்குத் தக்க பரிசோ – தண்டனையோ உண்டு. இன்று இல்லாவிட்டாலும், அடுத்த பிறவியில் உண்டு; அல்லது எந்தப் பிறவியிலாவது உண்டு என்று உணர்ந்தால்தான், மனிதன் நல்லவனாக வாழ்வான். இல்லை என்றால், உலகமே தீமையில்தான் உழலும். ஆகவே, கர்மங்களுக்குப் பலன் உண்டு. அவை அடுத்தடுத்து பிறவியைக் கொடுக்கின்றன. பிறவிதோறும் கர்ம பலன்களைச் சேர்த்துக்கொண்டே போகிறோம். இவை அனைத்தும் உண்மை. 

இனி இதிலேயே மற்றொரு பகுதி. இப்படி கர்மத்தைச் சேர்த்துக் கொண்டே போனால் என்றைக்காவது அதை ஒழிக்க முடியுமா? முடியாதா? செய்யலாம். கர்மத்தின் வாயிலாக பிறவி அடைகிறேன். பிறவி அடைந்ததால் மட்டும் பயனில்லை.நான் பிறந்ததற்கே பயன், பிறவாமையை அடைவதற்கான வழியை நாடுவது! உடல் வேறு, ஆத்மா வேறு. ஆத்மா பெருமானுடைய சொத்து. தன் சொத்தை அடைய பெருமான் முயல்கிறார். அதற்கு குறுக்கே நாம் நம் கர்மங்களுடன் நிற்கிறோம். இவற்றை ஒழிக்க வேண்டும் என்கிற உறுதி எடுத்துக் கொண்டு, ‘கண்ணா, உன் திருவடிகளே சரணம். என் பாபங்களைத் தொலைப்பாயாக!’ என்று வேண்டினோமானால், 

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ 
மோக்ஷயிஷ்யாமி மாசுச:
(நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்தருள்வேன்! கவலை வேண்டாம்!) 

– என்று கீதையில் கூறியபடிக்கு, கண்ணன் அக்கர்மங்களையெல்லாம் ஒழித்து விடுகிறார். அதற்குப் பின் நாம் பிறக்கப் போவதில்லை. பாவ, புண்ணியங்கள் நம்மைத் தீண்டாது. 


இப்போது நமக்கு ஓர் ஐயம் ஏற்படும். சரி. இப்பிறவியில் எனக்கு நல்ல புத்தி வந்தது. இதற்கு முந்தைய ஜன்மங்களில் எத்தனையோ கர்மங்களைப் புரிந்தேன். அதனடியாக இப்போது பிறந்திருக்கிறேனே! இப்பிறவியும், முன்னமே கர்ம பலன்களால் தீர்மானிக்கப்பட்டதுதானே? அந்த முடிவை மாற்றி, என் மதியால், என்னுடைய பகுத்தறிவால் நான் கர்மத்தை ஜெயித்துப் பெருமானைப் பற்ற முடியுமா? அல்லது கர்மம் என்னும் பெரு வெள்ளத்தில் அடிபட்டு இந்தப் பிறவியையும் கழித்து விட்டு, மீண்டும் மீண்டும் பிறவித் துயரில் அடிபட வேண்டியதுதானா? 

இது நியாயமான ஐயம்! தாராளமாக, நம் மதியால் கர்மத்தை வெல்லலாம். அதற்கு ஜீவனுக்கு சுதந்திரம் உண்டு. தனித்து முடிவெடுக்கும் திறனுண்டு. அந்தத் திறனால் பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்து, அவருடைய அருளால் கர்மங்களைத் தாராளமாகத் தொலைக்கலாமே! இப்படிப் பிறந்து விட்டோம், அழிந்தே போனோம் – என்பதில்லை. நடுவில் திருந்துவதற்கு வாய்ப்பில்லாவிடில், வேதங்கள் நம்மை ‘திருந்து’ என்று எதற்காக உபதேசிக்க வேண்டும்? அந்த உபதேசமே வீணாகிப் போகாதா? ஆகவே, கர்மத்தின் பாதிப்பு கொடியதுதான். ஆனால், அதை விட பெருமானின் கருணையின் வலிமை அதிகம் அல்லவா? அந்தக் கருணையால் கர்மத்தின் பாதிப்பை நாம் தீர்த்துக் கொள்ள வேண்டும். 

சிறிய பாவத்தைச் செய்தோமானால், இவ்வுலகத்திலேயே தண்டனை கிட்டும். பாவம் பெரியதாக இருக்குமானால் நரக லோகத்தை அடைகிறோம். சிறிய புண்ணியம் செய்தால் இவ்வுலகத்திலேயே நன்மை கிட்டும். பெரிய புண்ணியம் செய்தால், சொர்க்கத்திற்குச் சென்று சுக போகங்களை அனுபவிக்கிறோம். இப்படிப் பல புண்ணிய லோகங்கள், பாப லோகங்கள் உள்ளன. இதில் எந்த உலகத்தை அடைந்தாலும், ஏன் ப்ரஹ்மாவினுடைய ஸத்ய லோகம் வரை போனவன் கூட, திரும்ப மனித லோகத்துக்கு வந்துதான் ஆக வேண்டும். 

இவையெல்லாம் நம்மை பூவுலகிற்குத் திரும்பி வரச் செய்யும் லோகங்கள். ஆனால், வைகுண்டம் என்பது இப்பிறவிச் சுழலுக்குள் திரும்ப வரவே வேண்டியிராத லோகம். வேதாந்தம், 

‘ந ச புநராவர்த்ததே, 
ந ச புநராவர்த்ததே’ 

– என்று கூறுகிறது. பாவ, புண்ணியங்களைத் தொலைத்து அவ்வுலகத்தை அடைந்தவன் ‘திரும்ப வருவதில்லை, திரும்ப வருவதில்லை’ என்று பலமுறை வேதாந்தம் கூறுகிறது. 

ஆகவே, கர்மங்களால் பிறவி எடுக்கிறோம். பிறவி எடுத்தபோது, மேலும் கர்மங்களைச் சேர்க்கிறோம். ஏதோ ஒரு ஜன்மத்தில் மனப்பக்குவம் எய்தி இந்தச் சுழலிலிருந்து விடுபட வேண்டும் என்கிற உறுதி ஏற்படும். ஏன்! இப்போதே நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்! அந்த உறுதியோடே பெருமானிடத்தில் சரணாகதி செய்து, அவன் கருணையின் வலிமையால் கர்மத்தைத் தொலைத்து, மீளாத இன்பமான முக்தி பெற வேண்டும். இதுவே வாழ்க்கையின் பயன் என்பதை உணர்ந்து கொள்வோம். 

விடை எட்டு - நம்முடைய உடல் முக்குணங்களால் ஆக்கப்பட்டது. முக்குணங்களும் ப்ரக்ருதியோடே ஒட்டி இருப்பவை. 

‘ஸத்வம் ரஜஸ் தமஇதி குணா :
ப்ரக்ருதி ஸம்பவா :’ 

– என்று கண்ணன் கூறுகிறார். நம்முடைய மனம்,இந்திரியங்கள், உடலின் பகுதிகள் ஆகிய அனைத்தும் முக்குணங்களால் மூடியிருக்கும். ஆகவே, ஓர் உதாரணத்துக்குப் பார்ப்போம். 

நம் மனப் பாங்கில், நோக்கத்தில், அணுகுமுறைகளில் ஒரு சமயம் ஸத்வ குணம் மிகுந்திருக்கலாம். மற்றொரு நேரம் ரஜோ குணம் வளர்ந்திருக்கலாம். பிறிதொரு நேரம் தமோ குணம் உயர்ந்திருக்கலாம். எவ்வப்போது எந்தெந்த குணம் உயர்ந்திருக்கிறதோ, அதற்குத் தகுந்தாற் போல் நம் பார்வை வேறுபடும். ஆத்மாவில் இருக்கும் ஞானம் மனத்தை அடைகிறது. மனதிலிருந்து ஞானம் கண், காது, மூக்கு முதலான புலன்களை அடைகிறது. மனத்திலும், குணங்களிலும் முக்குணங்களும் விரவியுள்ளன. எந்த குணம் உயர்ந்திருக்கிறதோ, அதற்குத் தக நம் பார்வையோ, அணுகுமுறையோ, நுகர்ச்சியோ, விருப்பமோ மாறுபாடு அடையும். ஸத்வ குணம் மனத் தெளிவையும், இனிய அமைதியையும்; ரஜோ குணம் உக்கிரமான ஆசையையும், கோபத்தையும்; தமோ குணம் மன மயக்கம், தூக்கம், சோம்பல் ஆகியவற்றையும் விளைவிக்கும். இதில் ரஜஸ், தமஸைத் தொலைத்து, ஸத்வ குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

இதற்கு வழி யாது? நாம் உட்கொள்ளும் உணவு ஸாத்விகமான உணவாக இருந்தால், ஸத்வ குணம் வளரும். ரஜோ குண, தமோ குண உணவுகளைத் தவிர்த்து, ஸாத்விகமான உணவைத்தான் உட்கொள்ள வேண்டும். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பெருமானுடைய திருமேனி தூய்மையான ஸத்வ குணத்தால் மட்டுமே ஆனது; முக்குணத்தின் கலவை அல்ல – என்று பார்த்தோம். அந்தத் திருமேனியையே நாம் தியானிக்க, தியானிக்க உள்ளத்திலிருந்து விலகாமல் பெருமானை வைத்துக் கொண்டு துதிக்க, நம் உள்ளத்தில் ஸத்வ குணமே உயரும். புலன்களிலும் ஸத்வ குணமே வளரும். நம்முடைய உடல் முழுவதும் ஸத்வ குணம் நிறைந்து விடும். இது மிகவும் அவசியம். ஆகவே ஸத்வ குணம் வளர ஆகார நியமமும், பெருமானுடைய இனிய திருமேனித் தியானமும் முக்கியமாகின்றன. 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக