ஞாயிறு, 16 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 39

இரண்டாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

வினைத்தளையறுக்கும் விடைகள்

விடை ஒன்பது - பகவான் ப்ரபஞ்சமாகிற இவ்வண்டத்தைப் படைத்தார். இது ஒரு முட்டை வடிவத்தில் இருக்கும். மேல் உலகங்கள் ஏழு, கீழ் உலகங்கள் ஏழு. இவற்றைச் சேர்த்து மொத்தம் பதினான்கு உலகங்கள். 

‘சதுர்த்தச புவனாத்மகம் அண்டம், 
தபீகுணினி தோத்தரஞ்ச ஆவரணஸப்தகம்’ 

– என்று ஸ்வாமி ராமானுஜர் கூறுகிறார். இதில் கீழ் உலகமான பாதாளத்திலிருந்து, இறுதி மேல் உலகமான ப்ரஹ்மனின் ஸத்ய லோகம் வரை 500 கோடி மைல் தூரம் உள்ளது. கேட்பதற்கே வியப்பாக இருக்கும். இப்படி ஒரு அண்டம்தானா உள்ளது? அல்ல. 

‘அண்டானாம்து ஸஹஸ்ராணாம் 
ஸஹஸ்ராண்யயுதானிச’ 

பத்து கோடி, நூறாயிரம் கோடி, கோடிக்கோடிக்கணக்கான, எண்ணிலடங்காத அண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு ப்ரஹ்மா. அந்தந்த அண்டங்களில் தேவர்கள். ஆங்காங்கே பதினான்கு உலகங்கள். எத்தனை எத்தனை பெரியது இந்த அண்ட கோளம்! 

இதிலே ஒரு வியப்பான செய்தி. அறிவியல், பூமி உருண்டை என்று கூறுகிறது. ஆனால் புராணமோ, மனிதப் பார்வைப்படி தட்டை என்று கூறுகிறது. அறிவியல், சூரிய மண்டலம் தூரத்திலும், சந்திர மண்டலம் பூமிக்கு அருகாமையிலும் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் புராணம், சந்திர மண்டலம் தொலைவிலும், சூரிய மண்டலம் அருகாமையிலும் இருப்பதாக, அவற்றிலிருந்து வெளிப்பட்டு பூமியை அடையும் ஒளிப்படலத்தின் அளவைக் கொண்டு கூறுகிறது. 

அறிவியல், ஆன்மிகம் ஆகிய இரண்டுக்கும் பிணக்கா? அப்படி அல்ல. அறிவியலிலே ஆங்காங்கு அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. முன்னால் சொல்லப்பட்டவை, பின் கண்டுபிடிப்புகளால் மாற்றப்படுகின்றன. சமீபத்தில் கூட சூரியனைச் சுற்றி வரும் கிரஹங்களின் கணக்கிலிருந்து புளுட்டோ விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இப்படியாக அறிவியல் கருத்துக்கள் எப்போதும் மாறுபாடு அடைவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், முக்காலமும் உணர்ந்த ரிஷிகள் புராணங்களை எழுதி வைத்துள்ளபடியால், அவற்றிலுள்ள கருத்துக்கள் மாறாதவை. பின் ஏன் முரண்பாடு இருக்கிறது? யோசித்துப் பார்ப்போமே! 

பூமி உருண்டை என்று அறிவியல் கூறுகிறது. ஆனால், ஓர் அண்டம் அதாவது பதினான்கு உலகங்கள் சேர்ந்ததான ஓர் அண்டம் உருண்டை என்ற கருத்தில் ‘பூகோள வர்ணனம்’ – (புவி உருண்டை வர்ணனை) என்ற சொல்லையிட்டு விவரிக்கின்றன புராணங்கள். 

அடுத்தது - அறிவியலின்படி சூரியனைச் சுற்றி வருகிற கிரஹங்களைப் பற்றிய விஷயம். அவை அனைத்தும் ஒரே தட்டையான தள அமைப்பில்தான் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மேலும் கீழுமாக வெவ்வேறு தளங்களில் கிரஹங்கள் கிடையாது என்பது தெரிந்ததே! 

அதே போல் ‘தட்டையாக இருக்கிறது’ என்று புராணம் கூறுவது, சூரியக் குடும்பத்திற்கே உரிய பொதுவான தட்டைத் தள அமைப்பை குறிக்கலாமன்றோ! ஆகவே, அறிவியலுக்கும், புராணங்களுக்கும் முரண்பாடு கிடையாது. திறந்த மனதுடன் சாஸ்த்ரங்களுடைய நோக்கையும், அறிவியல் அணுகுமுறையையும் ஆராய்ந்தோமானால், முரண்பாடுகளை நீக்கி எங்கு ஒற்றுமை இருக்கிறதோ, அதைக் கொண்டு உள்ளம் தேறி நாமும் வாழ்க்கையை வளம் பெறச் செய்து கொள்ளலாம். 

முதல் ஒன்பது கேள்விகளுக்குண்டான பதில்களைப் பார்த்தோம். இனி அடுத்த ஒன்பது கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம். கேள்விகளையும், பதில்களையும் அடியார்கள் இரண்டு மூன்று முறை படித்து, அதில் கூறப்பட்டிருக்கும் ஆழ்ந்த கருத்துக்களை மனத்தில் தேக்கி, தெளிந்த மனத்தினராய், சாஸ்திரங்கள் கூறும் நல் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். 

வேத, இலக்கியங்களின் சாரமான உண்மை நல்லுரைகளை வாழ்வில் சிறிதளவாவது கடைப்பிடிக்கத் தொடங்கினால், ஸத்வ குணம் வளர்ந்து, குழப்பமான நிலை நீங்கி வாழ்வில் நிம்மதி தவழும். வேத விருட்சத்தில் பழுத்த இனிய கனியான பாகவதத்தின் பரிந்துரைகளைக் கைக்கொண்டு, பகவத் பக்தியில் பழுத்தவர்களாய் இறை அனுபவ பேரின்பத்தை நேரடியாக இவ்வுலக வாழ்விலேயே அவசியம் அனுபவிப்போம், வாரீர்! 

விடை பத்து – பகவான் நான்கு வர்ணங்களைப் படைக்கிறாரே, இதனால்தான் உலகத்தில் எத்தனை குழப்பங்கள்? எதற்கு பெருமான் இதைச் செய்தான்? கண்ணன் பகவத் கீதையில், 

சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:|
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தாரமவ்யயம்:||
(ஸ்ரீமத் பகவத் கீதை : 4-13) 

– என்று தெரிவிக்கிறார். “அர்ஜுனா! நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன். குணத்தின் அடிப்படையிலும், அவர்கள் செய்யும் கர்மத்தின் அடிப்படையிலும் அவர்களை வகுத்து ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்து, அனைவரும் மேம்பட வேண்டும் என்பதற்காக அமைத்துள்ளேன். அவர்களது பூர்வ கர்மங்களின் விளைவாக, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகியவற்றின் விகிதம் ஒவ்வொருவரிடையே வெவ்வேறு அம்சங்களில் மாறுபட்டிருக்கலாம். இதன் அடிப்படையிலும், அவற்றிற்கு உகந்த தொழில்களின் அடிப்படையிலும் பிரித்தேன்.” 

ஒரு சமுதாயம் நன்கு வளம் பெற வேண்டுமானால், அனைவரும் வேலையைப் பகிர்ந்து கொண்டுதான் செய்ய வேண்டும். அனைவரும் ஒரே வேலையில் ஈடுபட முடியாது. சமுதாயம் முன்னேறச் செய்யப்படும் அனைத்துப் பணிகளுமே உயர்ந்தவை. அவற்றுக்குள் உயர்வு, தாழ்வு பார்க்க முடியாது. ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்பது இல்லை. அந்தணர், அரசர், வணிகர், உழைப்போர் ஆகிய அனைவருமே பெருமானின் திருமேனியில் இருந்து தோன்றியவர்கள்தாம்! 

ஒரு வர்ணத்தவர், பகவானின் திருவாயிலிருந்தும்; அடுத்தவர் திருத்தோள்களிலிருந்தும்; அடுத்தவர் திருத்தொடைகளிலிருந்தும்; அடுத்தவர் திருவடிகளிலிருந்தும் தோன்றினர் – என்கிறது வேதம். பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர், ஒருவர் தாழ்ந்தவர் என்று நாம் சொல்வோமானால், நம்மைப் படைத்த பெருமானுடைய திருமேனியில் ஓர் அங்கம் உயர்ந்தது, மற்றொரு அங்கம் தாழ்ந்தது என்று சொல்லி அவனைக் கொச்சைப்படுத்துவது போலாகி விடும்.


இதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னும் கேட்டால், நாம் பற்றுவதற்கு எளிதான பகவானுடைய திருவடிதான் அவனுடைய திருமேனியிலேயே சிறப்பு மிக்கதாகக் கொள்கிறோம்! மேலும் உலகில் வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் வேறுபட்ட இரண்டுக்குள் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது. உதாரணத்திற்கு நம்முடைய கை வேறு, கால் வேறு, கண் வேறுதான். அனைத்து அங்கங்களும் ஒன்றாக இருக்க முடியாதுதான்! அதற்காக என் கண் உயர்ந்தது, கை தாழ்ந்தது என்று கூறிவிட முடியாது. பயனளவைப் பார்த்தால், அனைத்தும் சமம். உலகில் வேற்றுமை (differentiation) இன்றியமையாதது. ஆனால், வெறுத்து ஒதுக்குதல் (discrimination) கூடாது. முகத்துக்கும், கைக்கும், பாதத்துக்கும் தொடர்பில்லை என்பது அறியாமை! காலில் முள் குத்தினால் கண்ணில் நீர் வருகிறது. வாய் அலறுகிறது. கை, முள்ளை எடுக்கிறது. 

மேலும் பிறப்பால் ஒரு வர்ணத்தவனாக இருந்தாலும், நம்முடைய ஒழுக்கத்தாலும், அல்லது கடைப்பிடிக்கும் தொழிலாலும் நம் வர்ணம் மாறலாம். 

அதாவது விச்வாமித்ரர் பிறப்பால் க்ஷத்ரியராக இருந்தாலும், அவர் ப்ரும்ம ரிஷி பட்டம் பெற்றார். ஆனால் பரசுராமர் பிறப்பால் அந்தணராக இருந்தாலும், அவர் செய்த யுத்தங்களால், க்ஷத்ரியராகத்தான் வாழ்ந்தார். 

ஆக, நாம் கொண்டுள்ள குணத்தாலும், செய்யும் தொழிலாலும், நம்மை நாமே ஒழுக்கமாக அமைத்துக் கொள்ளலாம். முக்கியமாக ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் – இவ்வுலகில் ஆத்மாக்கள் அனைவரும் சமம். உடலைப் பார்த்தால் வேறுபாடுகள்தான் தோன்றும். ஆத்மாவைப் பார்த்தால் ஒற்றுமைதான் வெளிப்படும். உலக மக்கள் சமுதாயமே இறைவனின் வடிவம் என்றால், சிந்தனைத் திறன், ஆளும் திறன், ஈட்டும் திறன், செயல் திறன் ஆகியவை முறையே தலை, தோள், தொடை, பாதம் என்று அதன் உருவாகமாகின்றன – என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். 

விடை பதினொன்று – நான்கு யுகங்களுமே உயர்ந்தவைதாம்! அந்தந்த யுகத்தின் தன்மையும், அதில் வாழ்ந்தவர்களின் தன்மையும் சற்றே மாறுபடும். க்ருத யுகத்தில் இருப்பவர்கள் மிக உயர மாகவும், சிறிதளவு உணவு உண்டு, தண்ணீர் மட்டுமே குடித்து வந்த போதிலும், நெடு நேரத்திற்கு வலிமை உள்ளவர்களாகவும், நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும் வாழ்ந்தார்கள். 

இது அடுத்தடுத்த யுகங்களில் குறைந்து கொண்டே வந்தது. இயற்கையிலேயே நேர்மை, கட்டுப்பாடு, தவம், தானம், சத்தியம், தூய்மை ஆகியவை முதல் யுகத்தில் மிகுந்திருந்தன. அவை அடுத்தடுத்த யுகங்களில் படிப்படியாகக் குறைந்து வந்தன. 

கலியுகத்தில் இவை குறைந்து காணப்பட்டாலும், இந்த யுகத்துக்கு என ஒரு பெரும் சிறப்பு உள்ளது.ஆம்! சிறிதளவு முயற்சியிலேயே பெருமானை அடைவதாகிற பெரும் பயனைப் பெற்று விடலாம்! க்ருத யுகத்தில் தியான மார்க்கத்தாலும், த்ரேதா யுகத்தில் யாக, யக்ஞங்கள் புரிவதாலும், துவாபர யுகத்தில் அர்ச்சனை மார்க்கத்தாலும், கலியுகத்தில் எளிமையான பகவத் நாம சங்கீர்த்தனத்தாலும் நாம் உயர்வடைகிறோம். கலியுகத்தில் பக்தி உணர்வோடு பகவானைப் பற்றுவோருக்கு முக்தி நிச்சயம். ஆகவே யுகத்தைக் குறை கூறாமல், எந்த யுகத்திலும் நாம் இறையுணர்வுடன் கூடிய நல்லவர்களாக வாழ முயற்சி செய்யத்தான் வேண்டும். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக