இரண்டாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம் (தொடர்ச்சி)
வினைத்தளையறுக்கும் விடைகள்
விடை பன்னிரெண்டு – நாம் எதற்காக தர்மம் செய்ய வேண்டும்? அது நமக்கென்ன செய்யும்?
தர்மோ ரக்ஷதி: ரக்ஷித:
– என்று சொல்வார்கள். நாம் தர்மத்தைக் காத்தால், அது பதிலுக்கு நம்மைக் காப்பாற்றிக் கொடுக்கும்.
‘தரதி இதி தர்ம:’
– உலகத்தையே தாங்குகிறபடியால்தான் அதற்கு தர்மம் என்று பெயர். ஒருவன் எதற்காக தர்மத்தின் வழி வாழ வேண்டும்? சாத்திரம் கூறியபடி பொய் சொல்லாமல், பிறர் பொருளுக்கு விருப்பப்படாமல், ஏமாற்றாமல் ஏன் இருக்க வேண்டும்? ஏனெனில் மக்களாகிய நாம் மாக்களிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். நாம் விலங்குகள் அல்ல. மனிதர்கள். விலங்கைக் காட்டிலும் உயர்ந்த அறிவு படைத்தவர்கள். இந்த அறிவுக்குப் பயனே ஒழுக்கம்தான்.
மேலும் நாம் தர்மத்தைச் செய்தால், அது தர்மத்தின் ஆதார வடிவினனாக இருக்கும் பகவானுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அவருக்கு ஆனந்தம் ஏற்பட்டால், நமக்கு என்ன நன்மைதான் கிட்டாது! தர்மத்தை மீறினால் பெருமானுக்குக் கோபம் ஏற்படுகிறது. அதனால் நமக்குத் தீமை. சாஸ்திரம் சொல்லியபடி நடந்து கொண்டால், அது தர்மமாக, புண்ணியமாக மலர்கிறது. மறைநூல் கட்டளைகளை மீறி நடந்தாலோ, அதன் வழி விலகி நடந்தாலோ பெரும் பாவமாகி, அதுவே பெருமானுடைய கோபமாகப் போய் முடிவடைகிறது.
இதைப் புரிந்து கொண்டு, பகவானுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தும் வகையில், தர்ம மார்க்கத்தில் நடக்க வேண்டும். வேதம், வேதாந்தம், இதிஹாஸ புராணங்கள் ஆகியவை கூறும் தர்ம மார்க்கமே ‘ஸனாதன தர்மம்’ என்று கொண்டாடப்படுகிறது. இது ஆதி காலம் தொடங்கி என்றென்றும் மிளிர்வது! காலத்தால் மாறாதது! ஞானம் நல்கி நாரணன் அடி சேர்விப்பது!
விடை பதிமூன்று – பகவான் நம்மைப் படைத்திருக்கிறார். நாம் எதற்கு திரும்ப அவனுக்கு ஆராதனம் செய்ய வேண்டும்? ஏன் நான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்? இதனால் எனக்கு என்ன லாபம்? நான் என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போனால் போதாதா? என்றெல்லாம் தோன்றும். ஆனால் அது அப்படியல்ல!
விசித்ரா தேஹஸம்பத்தி: ஈச்வராய நிவேதிதும்| பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்தபாதாதி ஸம்யுதா||
– என்று ஒரு பிரமாணம். பகவான் நமக்கு உடலைக் கொடுத்து பிறவியைக் கொடுத்தார். கை கால்களை அருளினார். எதற்காக? இவை அத்தனையும் அவனிடத்தில் சமர்ப்பிப்பதற்காக. எதை மறந்தாலும் நன்றி மறக்கக் கூடாது. ஒருவரிடத்தில் ஒரு உதவி பெற்றால், அதை மறவாமல் அவருக்கு நாமும் திரும்பவும் நன்கு உதவுவதுதானே முறை? பகவான் நமக்கு உணர்வையும் ஞானத்தையும் சரீரத்தையும் கொடுத்து உதவினார். நாம் இந்த உடலை அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு புரிவதற்கும், உணர்வை அவனை நினைந்து உருகுவதற்கும் திரும்ப சமர்ப்பிக்கத்தானே வேண்டும்?
நாம் ஒரு முதலாளியிடம் வேலை பார்க்கிறோம். அவர் சம்பளம் கொடுக்கிறார். அவருக்காகத்தானே மாதம் முழுக்க உழைக்கிறோம். நம் வீட்டு வேலைகளையும் ஒதுக்கி விட்டு, நம்மையே அவருக்கு சமர்ப்பிக்கிறோம்? இந்த முதலாளிக்கும் நமக்கும் எவ்வளவு காலமாகத் தொடர்பு? இந்தப் பிறவிக்குள் ஒரு சில ஆண்டுகள்! ஆனால், நமக்கும் பகவானுக்கும் உள்ள தொடர்பு ஒரு சில ஆண்டுகள் அல்ல. அனாதிகாலமாக அனைத்து பிறவிகளிலுமே தொடர்பு! அவரே நமக்கு உண்மையான முதலாளி. அவருடைய அன்பையே நமக்குக் கூலியாகக் கொடுக்கிறார். எனவே நாம் அனைத்தையும் அவருக்கு சமர்ப்பிப்பதுதானே நியாயம்? நம்மைப் பிறப்பித்த பெற்றோருக்கு நாம் தொண்டு புரிகிறோம். எழுத்தறிவித்த குருவுக்குத் திரும்பத் தொண்டு புரிகிறோம். இதெல்லாம் நன்றி காட்டும் செயல்கள். இதேபோல நம்முடைய உடலைக் கொடுத்த பகவானுக்கு நாம் தொண்டு புரியத்தானே வேண்டும்?
ஒரு பொருள் உலகத்தில் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறதோ, உற்பத்தி செய்யப்பட்டதோ அந்தப் பயனுக்காக அதைப் பயன்படுத்தினால்தான் பொருள் சிறப்பாக இயங்கும். இல்லையெனில் ஆபத்து வரும். கையில் ஒரு கூர்முனையுள்ள பேனா. நம் காதிலோ அழுக்கு. பேனாவின் முனையை வைத்து நம் காதைக் குடைந்தால், அழுக்கு வெளியே வந்து விடலாம். ஆனால் அதற்குள் பேனாவின் முனையும் வீணாகிப் போய்விடும். நம் காதும் வீணாகிப் போகும். பேனாவை எழுதுவதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமேயன்றி, மற்றதற்கல்ல!
அதே போல, இந்த உடல் படைக்கப்பட்டது பெருமானுக்குத் தொண்டு புரியவும், கர்ம பந்தங்களைத் தொலைத்துக் கொள்ளவுமே! ஆனால் அதை மறந்து இவ்வுடலை வேறு பயன்களுக்கு ஈடுபடுத்தினால், அது சிறப்பாகாது. ஆகவே உடல் பெற்ற நன்றியுணர்வைக் காட்ட பெருமானை நம் மனம், மொழி, மெய்யால் தினமும் ஆராதனம் செய்ய வேண்டும். அவனைக் குறித்து தியானம் செய்ய வேண்டும். உலகில் எளியோர்களையும் நலிவுற்றோர்களையும் நல்லோர்களையும், அவன் அடியார்களாக பாவித்து முழு மனதுடன் உதவ வேண்டும். இதுவே உள்ளம், உடல், மொழி ஆகிய மூன்றும் தூய்மையாக இருப்பதற்கு உதவும்.
விடை பதினான்கு – புலன்களுக்கு எட்டாத விஷயங்களை உரைப்பதற்குத்தான் வேதங்கள், இதிகாச – புராணங்கள் உள்ளன. நம் புலனறிவுக்கு உட்பட்டதை நாமே அறிந்து கொள்கிறோம். நம் அறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளைத்தான் வேதமாகிற பிரமாணம் கூறும். வேதங்கள் நான்கு. அதற்கு அங்கங்கள் ஆறு. உபாங்கங்கள் எட்டு. இவை அனைத்தும் பகவானுடைய ஆணைகளின் தொகுப்பு!
ச்ருதி: ஸ்ம்ருதிர் மமைவாக்ஞா
யஸ்தாமுல்லங்ய வர்த்ததே|
ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோஹீ
மத் பக்தோ(அ)பி ந வைஷ்ணவ:||
(விஷ்ணு தர்மம் : 6-31)
– என்று பகவானே தெரிவிக்கிறார். “வேதமும் ஸ்மிருதிகளும் என்னுடைய ஆணைகள். அதை மீறி யாராவது வாழ்ந்தால், அவன் எனக்கு துரோகம் செய்தவன் ஆகிறான். அவன் பக்தன் அல்ல. வைணவனே அல்ல” என்று பெருமான் வெகுண்டு கூறுகிறார்.
இதிகாச புராணங்களை நமக்கென்று கொடுத்து விட்டுப் போன ரிஷிகள், பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணத்துக்காகவோ அவற்றைக் கொடுக்கவில்லை. ஆத்மாக்கள் அனைவரின் உய்வுக்காகத்தான் அவற்றைக் கொடுத்தார்கள். வேதமும் இதிகாசங்களும் இவ்வுலக வாழ்வில் சாந்தியையும், பக்தியையும் கொடுக்க வல்லவை. பக்தியுடன் வாழ்ந்தோமானால், ஸ்ரீவைகுண்டத்தில் இடம் நிச்சயம். ஆகவே, வேதங்கள் எவற்றாலும் அசைக்க முடியாத, காலத்தைக் கடந்த, பெருமானுடைய திருவுள்ளத்திற்குப் பிடித்தமான பிரமாணங்கள். அவைதான் பகவானையே நமது நெஞ்சில் நிலைப்படுத்திக் கொடுக்கின்றன. ஆகவே, அவற்றினிடத்தில் நாம் பக்தியோடு இருக்க வேண்டும்.
விடை பதினைந்து – பகவான் உலகைப் படைக்கிறாரே! அவர் அதை அழிப்பதற்கு என்ன கொடுமைக்காரரா? நாம் பொதுவாக ‘படைத்தல், காத்தல், அழித்தல்’ என்று கூறுகிறோம். அதில் ஒரு சிறு திருத்தம்: படைத்தல் சரி; காத்தலும் சரி; ஆனால் பகவான் அழிப்பதில்லை. எந்த ஒரு பொருளையும் தம் திருமேனியோடயே மீண்டும் இழுத்துக் கொள்கிறான் அவன்!
சித்து, அசித்து, ஈஸ்வரன் ஆகிய மூன்று தத்துவங்களுமே நித்தியமானவை. அழிவற்றவை. ‘அசித்துக்குக் கூடவா அழிவு கிடையாது? கல்லும் மண்ணும் நாம் கண்ணால் காணும் பொருள்களும் அழிகின்றனவே?’ என்றால், சற்றே யோசித்துப் பாருங்கள். உண்மையில் அவை அழிவதில்லை. வடிவ நிலை வேறுபடும். அவ்வளவே! மண், நிலை மாறுமானால் குடமாகிறது. குடம், நிலை மாறுமானால் மடக்காகிறது. பொன், மாறுமானால் மோதிரமாகிறது. மோதிரம் மாறினால் மறுபடியும் பொன்னாகும். நிலை மாறுதலை அடைகின்றனவேயொழிய, அழிந்து போவது கிடையாது. ஆகவே உலகம் அழிகிறது என்று சொல்வதை விட, நிலை மாறி, பெருமானுடைய திருமேனியோடே ஒன்றுகிறது என்றுதான் கூற வேண்டும்.
உடனடியாக உலகம் அழியப் போவதில்லை. அதற்கு இன்னும் நெடுங்காலம் உள்ளது. மனிதர்களின் காலக்கணக்கின்படி 43 லட்சத்து இருபதாயிரம் ஆண்டுகளானால், ஒரு சதுர்யுகம் முடியும். இதே போல் ஆயிரம் சதுர்யுகம் முடிந்தால், ப்ரஹ்மாவிற்கு ஒரு பகல் முடியும். அதே அளவு இரவு. அதேபோல் அவருக்கு நூறாண்டுகள் ஆயுள். தற்போது நாம் ப்ரஹ்மாவினுடைய இரண்டாவது ஐம்பதாண்டுகளில் வைவஸ்வத மன்வந்த்ரத்தில் 28-ஆவது சதுர்யுகத்தில் இருக்கிறோம்.
இது கலியுகம். இது தொடங்கி 5114 ஆண்டுகளே ஆகின்றன. மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். இந்த கலியுகம் முடிந்த பிற்பாடு, அடுத்து க்ருத யுகம் வரும். அப்போதும் உலகம் அழியாது. 71 சதுர்யுகங்கள் முடிந்தால்தான், ஓர் மன்வந்தரம் முடியும். நாம் இப்போது 28-ஆவது சதுர்யுகத்தில்தான் இருக்கிறோம். இந்த மன்வந்தரம் முடிந்தாலும், மொத்தம் 14 மனுக்கள் முடிந்தால்தான், ப்ரஹ்மாவினுடைய பகல் முடியும். அப்போதுதான் ‘பூலோகம், புவர் லோகம், ஸுவர் லோகம்’ என்ற மூன்று உலகங்கள் பகவானிடம் லயமடையும்.
ஆகவே பக்தர்களே! இன்னும் நெடுங்காலம் உள்ளது. கவலை வேண்டாம்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்