இரண்டாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம் (தொடர்ச்சி)
வினைத்தளையறுக்கும் விடைகள்
விடை பதினாறு – தர்மங்கள், அல்லது கர்மங்கள் மூன்றாகச் சொல்லப்படுகின்றன – நித்ய கர்மம், நைமித்திக கர்மம், காம்ய கர்மம். நாம் அன்றாடம், நித்யமே செய்ய வேண்டிய கர்மங்கள், நித்ய கர்மங்கள். ஒரு காரணத்தாலே செய்ய வேண்டியது நைமித்திக கர்மாக்கள். நிமித்தம் என்றால் காரணம். அதாவது, கிரஹணம் என்ற காரணத்துக்காக தர்ப்பணம் செய்தோமானால், அது நிமித்த கர்மம். அன்றாடம் ஸந்த்யா வந்தனம் செய்தோமானால், அது நித்ய கர்மம்.
இது தவிர, ஆயுளுக்காகச் செய்யப்படும் ஆயுஷ்ய ஹோமம், மரணத்தைத் தள்ளிப் போடச் செய்யப்படும் ம்ருத்யுஞ்ஜய ஹோமம், புத்திரபேற்றுக்காகச் செய்யப்படும் புத்ரகாமேஷ்டி என்று பல கர்மங்கள் உண்டு. இவையெல்லாம் காம்ய கர்மங்கள்.
ஒரு மனிதன் முதல் படியில் பகவானிடத்தில் எதை எதையோ கேட்டு, அவற்றுக்குரிய விருப்பமான கர்மங்களைச் செய்வான். அவற்றுக்கான பலன்களையும் பகவானிடத்தில் இருந்து பெறுவான். ஆனால் இந்தத் தாழ்ந்த பயன்களால் அவனுக்கு நிரந்தர இன்பம் ஏற்படாது. நாட்கள் செல்லச் செல்ல இவையெல்லாம், தற்காலிகமான அற்பமான பயன்கள் என்று அறிவான். பகவான் திருவடியில் தொண்டு புரிந்து அனுபவிப்பதே, நிலையான பயன்; அதுவே ஜீவனுக்கு ஏற்ற பயன் – என்பதை உணர்ந்து கொண்டு காம்ய விருப்பத்தை விடுத்து – உலகியல் விருப்பத்தை விடுத்து – பகவானிடத்தில் எதையும் கையேந்தாமல், பக்தி செய்யத் தொடங்குகிறான்.
ப்ரஹ்லாதனும், துருவனும் பகவானை தரிசித்தார்கள். ‘உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள்’ என்று பகவான் கூறினான். ‘உன்னை தரிசித்ததே வரம்; இதற்காக வேறொரு பயனையா கேட்கப் போகிறோம்?’ என்றார்கள் குழந்தைகள். எட்டு விதமான பக்தியைப் பற்றிக் கூறும் திருமால்,
யச்சமாம் நோபஜீவதி
– என்று, ‘என் பக்தன் என்னிடத்தில் கையேந்துவதில்லை. மாறாக எனக்குத் தொண்டு புரிகிறான்’ என்று திருப்தியோடு கூறுகிறார். ஆகவே, நாமும் துவக்கத்தில் எதைஎதையோ பகவானிடத்தில் கேட்டாலும், கற்பக மரத்தைப் போன்ற எம்பெருமானிடத்தில் அல்பமான பயன்களைக் கேட்காமல், எல்லாவற்றுக்கும் மேலான அவனையே கேட்டுப் பெற்று பேரின்பம் அடைய வேண்டும்.
விடை பதினேழு – இவ்வுலகத்தில் எதற்கு நாஸ்திக வாதம் உள்ளது? பகவான்தானே படைத்தார்? அனைவரையும் நல்லவர்களாகப் படைக்க வேண்டியதுதானே? உண்மைதான். பகவான் படைத்தார்; ஆனால் தன்னிச்சைப்படியா படைத்தார்? நம்முடைய கர்மத்தின் அடிப்படையில்தானே படைத்தார். நாம் செய்திருக்கும் கர்மத்தின் அடிப்படையில் பிறவி எடுக்கிறோம். புண்ணிய கர்மத்தால் புண்ணியமான பிறவி. பாவ கர்மத்தால் பாவமான பிறவி.
நமக்கு ஒரு ஐயம் எழும். எப்படிப் பிறந்தவனாக இருந்தாலும் பகவான் தன்னுடைய ஸங்கல்பத்தால், அவனைத் திருத்தி, ‘இப்போதிலிருந்து நீ நல்லவனாக இரு’ என்று ஏன் கூறுவதில்லை? ஆம்! நாமாகத் திருந்த வேண்டும் என்றுதான் பகவான் எதிர்பார்க்கிறார். இது தவறல்லவே!
எம்பெருமான் என்ன விலங்குகளை மேய்ப்பவனா? அப்படியெனில் கையில் தடியை வைத்துக் கொண்டு சாட்டையைச் சொடுக்கி, இப்படி போ, அப்படிப் போ என்று ஓட்டலாம். நாமோ மனிதர்கள்; விலங்கிலிருந்து வேறுபட்டவர்கள். சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உடையவர்கள். பரமாத்மாவான தான் எப்படி ஸர்வ சுதந்தரனோ, அதே போல் தன்னுடைய அம்சமான ஜீவனுக்கு சுதந்திரத்தை – அதாவது, தன் விருப்பப்படி முடிவெடுக்கும் வல்லமையைக் கொடுத்த பகவான், அதை ஒருக்காலும் தடுக்கமாட்டார். ‘நானாக ஒரு மனிதனை கட்டாயப்படுத்த மாட்டேன்; அவனே விருப்பத்துடன் திருந்தி வரட்டும்’ என்று நம் முடிவுக்கு மதிப்புக் கொடுக்கிறார்.
நாமும் பாவங்களைத் தவிர்க்க பகவானிடத்தில் பிரார்த்தித்து அவற்றை முறியடிக்கலாம்; நம் அனாதிகால கர்மத்தை பெருமாளுடைய அருளாலே மாற்றி அமைக்கலாம். அப்படி இல்லாதவர்கள் உலகத்தில் அறிந்தோ அறியாமலோ தீயவர்களாக வாழ நேரிடும். அதையும் பெருமாள் கண்டு கொள்வதில்லை. அவர்களாக மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்து, அவை முற்றிப் போகுமானால், அதற்குரிய தண்டனைகளை அவர்களே பெறுவார்கள். அவை ஏற்படுத்தும் அச்ச வடிவமான மனப் பதிவுகளால் ஏதோ ஒரு பிறவியில் மனம் திருந்தி அவன் அருளை நாடும் நிலையும் வரலாம்!
விடை பதினெட்டு – ஆத்மா பிறவியெடுப்பதன் பயன் என்ன? தனது கர்மாவிற்கேற்ப ஒரு ஜீவன் உடலை எடுத்துக் கொள்ளுதல் பிறவி எனப்படும். அந்த உடலை விடுத்துப் புறப்படல் மரணம் என்று கூறப்படுகிறது. இந்த ஸம்சாரத்தில் பிறப்பதுதான் பந்தம். கை விலங்கு என்கிறார்கள் ஆன்றோர்கள். உலகியல் கட்டுக்களில் சிறைப்பட்டிருப்பதால், இப்பிறவிச் சுழலுக்குள் நிரந்தரமாகவே திரும்ப வராத நிலையைத்தான் முக்தி என்கிறார்கள். இந்த பந்தத்திலிருந்து யார் விடுவிப்பார்கள்? பெருமான்தான் விடுவிக்க வேண்டும். ஒரு ஆற்று வெள்ளத்தின் சுழலில் சிக்கிக் கொண்டவன், தானாக வெளியே வர முயற்சி செய்தால், மேலும் மேலும் சிக்குண்டு அமிழ்வான். வெளியே உள்ள ஒருவரின் உதவியைத்தான் அவன் நாட வேண்டும். அதே போல நாமும் ஸம்சாரம் எனும் சுழலில் சிக்கியிருக்கிறோம். அதற்கு வெளியே இருப்பவனான பெருமானின் உதவியைத்தான் நாட வேண்டும். அவர் எப்படி உதவுகிறார்? இதை உற்று நோக்குங்கள்.
நாம் கர்மத்தின் அடியாகப் பிறக்கிறோம். பிறக்கும்போது உடல், புத்தி, பகுத்தறிவு, சிந்திப்பதற்கு மனம் ஆகியவற்றை பெருமானே அருள்கிறார். இதோடு அல்லாமல் நம் பகுத்தறிவால் எதையும் பகுத்து அறிந்து, அவற்றில் உள்ள நல்லது – தீயதை அறிவதற்காக, சாத்திரங்களையும் அவரே கொடுத்து விட்டார். வெறும் புத்தக அறிவு மட்டும் போதாது என்று, ரிஷிகள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் ஆகியோரைப் பிறப்பித்து, அவர்களை முன்னோடிகளாக வாழ்ந்து காட்ட வைத்து, உபதேசமும் செய்வித்தார். இதோடு, ஒவ்வொரு ஜீவனுக்கும் தான் விருப்பப்பட்டபடி முடிவெடுக்கும் திறமையையும் கொடுத்தார்.
இவை அத்தனையும் செய்து முடித்த பெருமாள், இதை உபயோகப்படுத்தி நாம் எப்படி முடிவு செய்கிறோம் என்று காத்திருக்கிறார். நாம் ஒவ்வொரு செயலிலும் இறங்கும் போது, முதல் முடிவு எடுக்கும்போது, பகவான் குறுக்கே புகுவதில்லை. நம்முடைய செயலை வேடிக்கை பார்ப்பது போன்ற மௌன ஸாக்ஷியாகவே இருந்து விடுகிறார். நம்முடைய முடிவெடுக்கும் வல்லமையினால் பகுத்தறிவைப் பயன்படுத்தி, தீயதை முன்னரே அறிந்து கொண்டு, நல்லதைத் தெரிந்து கொண்டு, சுயநலப் பற்றில்லாது மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் முடிவை எடுக்க வேண்டிய கடமை நம் கையில் உள்ளது.
‘பகவான், ஞான மயன்; ஆனந்த மயன்; அனைவருக்குள்ளும் உறைபவன்; பிரபஞ்சத்துக்கே காரணம் அவன். எனக்கு எல்லா விதத்திலும் உறவினன். நான் அவனுடைய சொத்து’ என்று தெளிவு பெறுவோமானால், அவன்பால் நமக்கு அன்பு ஏற்படுகிறது. அதுவே ஆசையாக வளர்கிறது. இந்த விருப்பம் – அவனை அடைய வேண்டும் என்கிற பேராவல் – யாருக்கு வந்து விடுகிறதோ, அவர்களுக்குப் பெருமான் நல்ல புத்தியைக் கொடுத்து, சரணாகதி செய்விக்கிறார். ஆக, அவன் அருளால்தான் நாம் சரணாகதி செய்கிறோம். அதனால் நம் பாவங்கள் அனைத்தும் தொலையும். அதனால் இப்பிறவியின் முடிவிலேயே முக்தி பெறுவோம். உலக வாழ்வே பகவான் நமக்கு இட்டு வைத்திருக்கும் தேர்வுக் கடமை. வாழ்க்கை எனும் பரீக்ஷையில் நாம் தேர்ச்சி பெற, அவன் பரிவுடன் காத்திருக்கிறான்.
இப்படியாக பரீக்ஷித் கேட்ட பதினெட்டு கேள்விகளுக்கும் சுகாசாரியார் பதில் கூறினார். இனி கடைசிக் கேள்வி. நம் அனைவரிடத்திலும் இருக்கும் ஐயம். பகவான் தனது இன்பமான விளையாட்டுக்காகத்தானே உலகைப் படைக்கிறார்! அவர் விளையாட்டுக்கு நான்தான் அகப்பட்டேனோ? என்னை பொம்மை போலப் பயன்படுத்தி, தான் இன்பப்படுகிறானோ? இது நியாயமா? கடவுள் கருணை கொண்டவரா? அல்லது கொடுமையானவரா? இது ஒரு நல்ல கேள்வியைப் போல தோன்றினாலும், தவறான கேள்வி.
பகவான் நம்மைப் படைத்தார் – நம்முடைய கர்மத்துக்குத் தகுந்தாற்போலே. மேலும், படைத்தவர், இந்த ஜீவன், தன்னை அடைய வேண்டும் என்ற விருப்பத்தோடு, ‘எப்போது இவனைத் திருத்துவதற்கு நமக்கு வாய்ப்புக் கொடுப்பான்?’ என்று எதிர்பார்த்துக் கொண்டு, நம் உள்ளத்தை விட்டு அகலாமல் அமர்ந்திருக்கிறார். இந்த உடல் ரத்தம், மலம், மூத்திரம், மாமிசம், சதை, எலும்பு – அதற்கும் மேல் சுயநலமே வடிவான மனம் ஆகிய ஆபாசங்கள் நிறைந்தது. எனினும், இவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக நினையாது, நம்மை விட்டு விலகாமல் பெருமான் நம் இதயத்தில் வீற்றிருக்கிறார்.
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலை
பொருப்பேயுறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேனென்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதமுண்டு களித்தேனே.
(திருவாய்மொழி : 10-8-6)
– என்று நம்மாழ்வார் பாடுகிறார். இப்படி இவ்வளவு அழுக்குகளுக்கு இடையில் அவன் ஏன் எழுந்தருளியிருக்கிறான்? ‘எப்போதாவது நம்மை திருத்துவதற்கு வாய்ப்புக் கிடைக்காதா?’ என்று எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறான். அதோடு அல்லாமல் பற்பல அவதாரங்களைச் செய்து, உபதேசங்கள் செய்து, வாழ்ந்தும் காட்டுகிறான். ஆன்றோர்களைப் படைத்து நம்மை நல்வழிப்படுத்த உபதேசங்களைச் செய்விக்கிறான்.
நாம் எத்தனையோ பாவங்களைப் புரிந்திருந்தாலும், ‘இனி இவற்றைச் செய்ய மாட்டோம்’ – என்று வேண்டி சரணாகதி செய்தவுடனே அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கிறார். நம் தவறான நடத்தையை மாற்றி விடுகிறார். நமக்கு கொடுக்கப்பட்ட முடிவெடுக்கும் திறனையும், மதிக்கிறார். ஒரு பக்தனோடு, தான் கலந்து ஆனந்தப்பட வேண்டும் என்று அடங்காக் காதல் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு அன்பும் கருணையும் கொண்ட கடவுளையா கொடுமைக்காரன் என்று கூறுவது? நாம் பகவானுடைய சொத்து. அவனை அடைவதற்காகத்தான் பிறவி எடுத்திருக்கிறோம். அடைவதும் நாமல்ல. அடையும் முயற்சியும் நம் முடையதல்ல. அடைந்து இன்பப்படுவதும் நாமல்ல. பகவான்தான் ஜீவனைக் கைக்கொண்டு இன்பம் அடையப் போகிறார். அதற்கு அவரே வழியைக் காட்டுவார்.
அவர் இந்த ஜீவனை அடைந்து கூடச் சேர்ந்து இன்பப்படுகிறார். ஆகவே இதில் ஜீவனின் முயற்சி என்பது ஒரு விஷயமே அல்ல. பெருமாளுடைய அருளே ஓங்கி உள்ளது. அவர் தன் அருளினால் நம்மைக் காக்க வரும்போது, நாம் அதைத் தடுக்காமல் இருந்தாலே போதும். பகவான் நம்மைக் காத்து, தாயினும் மிக்க பரிவோடு நம்மை அரவணைத்துக் கொள்கிறார்.
நம் முயற்சி என்று நினைத்தால் மலைப்பாக இருக்கும். ‘எல்லாம் அவன் அருள்’ என்ற உண்மையை உணர்ந்தால் எளிதில் முடிந்து விடும். இத்தகைய உண்மைகளை எல்லாம் உரைப்பதுதான் ஸ்ரீமத் பாகவத புராணம்.
கடந்த சில வாரங்களில் அனைத்து கேள்விகளுக்கும் நாம் சுருக்கமாக பதில்களைப் பார்த்தோம். இவற்றை நீங்கள் மீண்டும் மீண்டும் படித்துச் சிந்தித்து, பக்தர்களுடன் கலந்துரையாடி, நல்லோர்களை நாடி மேன்மேலும் விளக்கம் பெற, பொருள் நன்கு மனதில் பதியும். பதிந்ததை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அதனினும் அவசியம். அப்போதுதான் சாந்தி நிலவும். எனவே இந்த இனிய பக்திப் பாதையில் மேலும் பயணிப்போம்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்