ஞாயிறு, 16 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 42

இரண்டாவது ஸ்கந்தம் - ஒன்பதாம் அத்தியாயம் 

‘தப’ எனும் பதம் காட்டிய பரமபதம்

சுகாசாரியார் சொன்ன பதிலை சுருக்கமாகக் கண்டோம். தொடர்ந்து சுகாசாரியார் கூறுகிறார் 

ஜீவன் தன்னை தேகமாகவே நினைத்து,மருண்டிருக்கிறான். உலகத்தில் நாம் தர்மத்துக்கும் சாஸ்திரத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். ஆனால் அது தவிர, பல பொருள்களுக்கு நாம் கட்டுப்பட்டவர்களாக, தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிரகிருதிக்கும், காலத்திற்கும், உடலுக்கும், இன்னும் பல பழக்கங்களுக்கும் நாம் கட்டுப்பட்டவர்கள் என்று நினைக்கிறோம். 

ஒரு நாள் சாப்பிடாவிட்டால், மயக்கம் வரும் போல் தோன்றுகிறது. ஒருநாள் வேலை காரணமாக தூங்க இயலாமல் போனால், தலை சுற்றுகிறார் போலத் தோன்றும். சாப்பிடுதல், தூங்குதல், ஆண்-பெண் சம்போகம், காம உணர்வுகள், கோபம் இவை அனைத்துக்கும் நாம் கட்டுப்பட்டவர்கள் என்று நினைக்கிறோம். 

அதோடு இல்லாமல் நம் உறவினர்கள், உற்றார்கள் இன்னும் எவரேனும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, நாம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் உபதேசம் செய்வார்களோ, இதற்கெல்லாம் கட்டுப்பட்டவர்களாக நம்மை நினைக்கிறோம். 


அப்படியல்ல. வேதங்களுக்கும், பெருமானுடைய ஆணைக்கும், ஆன்றோர்களின் உபதேசங்களுக்கும்தான் நாம் கட்டுப்பட்டவர்கள். தர்மத்தை மீறக் கூடாது. அதற்காக அதர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும் நினைத்து விடக்கூடாது. ஒரு மனிதன் ஏதோவொரு காலத்தில், ஏதோவொரு இடத்தில் சிங்கமாய், புலியாய், மயிலாய் அல்லது ஜீவராசிகளில் ஏதோ ஒன்றாய் பிறவி எடுத்திருக்கலாம். ஆனால், ஆத்மா என்று பார்த்தால், இது எதற்கும் அது கட்டுப்படாதது. அது ஆணுமல்ல, பெண்ணுமல்ல. நேற்று மட்டுமே இருந்தவன் அல்ல; இன்று மட்டுமே இருப்பவன் அல்ல; நாளை மட்டுமே இருக்கப் போகிறவனும் அல்ல. 

இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டு, ஜீவன் உடலுக்கும் கர்மங்களுக்கும் முக்குணங்களுக்கும், பிறவிக்கும் சம்சாரத்திற்கும் கட்டுப்படாமல் இருக்க வேண்டும். அது அவனது இயற்கை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

இப்படி நாம் உணர்வதற்குத்தான் பெருமான் நமக்குப் பிறவி கொடுத்துள்ளான். பிறவியைப் பற்றி அதாவது சிருஷ்டியைப் பற்றிக் கேள்விகள்தொடங்கின. பெருமானுடைய நாபிக் கமலத்தில் ப்ரஹ்மா படைக்கப்பட்டார். தன்னைப் படைத்தவர் யார் என்று தேட முற்பட்டார். எளிதில் கிட்டவில்லை. பெருமானுடைய நாபியில் இருக்கும் தாமரையில் ப்ரஹ்மா அமர்ந்திருக்கும்போது திடீரென்று வானிலிருந்து, ‘தப’ என்று ஒலி உண்டாயிற்று. 

அதாவது ‘தவம் புரிவாய்’ என்று அவரை ஒரு குரல் ஆணையிட்டது. வடமொழியிலே ‘த’என்ற எழுத்து பதினாறாவது எழுத்து. ‘ப’என்ற எழுத்து இருபத்தோராவது எழுத்து. தவம் அதைத்தான் ‘தப’ என்று கூறிற்று. தவம் அனைவருக்கும் ஒரு பெரும் சொத்து. அது புதையல் போன்றது. 

இப்படி நம்மை ஆணையிட்டவர் யார் என்று ப்ரஹ்மா தேடினார். ஆனால், யாரும் கிடைக்கவில்லை. தன் உள்ளத்திலே சிந்தித்து யார் என்று தெரிந்து கொள்வதை விட, நம்மை என்ன செய்யச் சொன்னார்கள் என்று யோசிப்போம். தவம் புரிதல் என்றால், ஏதோ காட்டில் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு இருப்பது மட்டுமல்ல. தவம் புரிதல் என்றால் தேடுதல். நம்மையே உணர்தல். மேலும் மேலும் ஆலோசித்தல். ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு கடைப்பிடித்தல். 

நல்லதைத்தானே ஒலி கூறியிருக்கிறது. அப்படியே கேட்போம் என்று ப்ரஹ்மா, தேவர்களின் காலக் கணக்கில் ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தார். இது கண்டு திருமால் உவந்தார். நாம் ஒரு வார்த்தை கூறியதற்காக, நான்முகன் நிரம்பத்தவம் புரிந்திருக்கிறான். அவனுக்கு அருள் புரிவோம் என்று தன்னையும், தன் உயர்ந்த நாடாகக் கொண்டாடப்படும் ஸ்ரீவைகுண்டத்தையும்காட்டி அருளினார். 

ஸ்ரீவைகுண்டம் என்பது ரஜோ குணம், தமோ குணம் கலவாத தூய உணர்வு மயமானது. காலத்துக்கு ஆட்படாதது. அங்கிருப்பவர்கள் எல்லாம் பெருமானுடைய ஒரே ரூபத்தை அடைந்தவர்கள். கருநீல வர்ணத்தில், தாமரைக் கண்களோடு, பொன் பட்டாடை அணிந்து கொண்டு, சங்கு, சக்கரம், கதாயுதம், பத்மம்(தாமரை) ஆகியவற்றை ஏந்தி, நான்கு தோள்களோடு விளங்குபவர்கள். அங்கிருக்கும் நித்ய சூரிகளும், நித்ய ஆத்மாக்களும், எப்போதும் பெருமானை நிறைவான அமுதமாக அருந்திக் கொண்டே இருக்கிறார்கள். 

கூரத்தாழ்வான், ஒரு ஸ்லோகத்தில் வைகுண்டத்தை வர்ணிக்கிறார்: 

யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆமநந்தி
கம் வா யதேவ பரமம் தமஸ: பரஸ்தாத்|
தேஜோ மயம் பரமஸத்வமயம் த்ருவம் யத்
ஆநந்தகந்தம் அதிஸுந்தரம் அத்புதம் யத்||
(ஸ்ரீவைகுண்ட ஸ்தவம் - 41) 

எது பெருமானுடைய வைகுண்டம் என்று கொண்டாடப்படுகிறதோ, அது ஆகாயத்தை எல்லாம் தாண்டினது. சத்ய லோகத்தையே தாண்டினது. தமோ குணமாகிற தமஸு என்று கூறப்படுகிற மூல ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டது. ஒளி மயமானது. தூய்மையான சத்வ குணத்தால் ஆனது. நிலையானது. ஆதி அந்தம் இல்லாதது.மகிழ்ச்சிக் கடல் வாய்ந்தது. மிக அழகு வாய்ந்ததாய் வியக்கத்தக்கதாய் இருப்பது. 

இப்படியான ஸ்ரீவைகுண்டத்தில் பெருமான் மகாலக்ஷ்மியோடு எப்போதும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். 

இங்கிருக்கும் பக்த ஜீவாத்மாக்கள், தங்கள் கர்மங்கள் தொலைந்தால், அங்கு அடைகிறார்கள். இங்கிருந்து அங்கு செல்பவனே முக்தன். அவனை நித்ய சூரிகள் வரவேற்று, பெருமானுக்குத் தொண்டு புரிய வேண்டுகிறார்கள். பகவானோ 25 தத்துவங்களால் சூழப்பட்டு, ஆனந்தமாக திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறார். எங்கிருந்தோ அதைக் கண்ட நான்முகன் மயிர்க் கூச்செறிந்து, கண்களில் நீர் சொரிய பெருமானை வணங்கினார். 

பகவான் நான்முகனைப் பார்த்து, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அன்போடு பேசினார்: “நான்முகனே! நீர் தவத்தின் சிறப்பை உணர்ந்து, தவம் புரிந்தீர். உமக்கு என்ன வரம் வேண்டுமோ கேளும்! நான் தவ வலிமையால்தான், இவ்வுலகத்தையே படைக்கிறேன். 

ஸ தபோ (அ) தப்யத/ ஸ தபஸ் தப்த்வா|
இதம் ஸர்வம் அஸ்ருஜத|
(தைத்திரீய உபநிஷத் - ஆனந்தவல்லீ - 6) 

என்று உபநிஷத் கூறுகிறது. பெருமான் தவம் புரிந்தே இவ்வுலகத்தை எல்லாம் சிருஷ்டிக்கிறார்.பெருமானாலே அன்போடு அழைக்கப்பட்ட நான்முகன் அவரை தோத்திரம் செய்தார். ‘எம்பெருமானே நீர் அனைவருக்கும் தலைவனாக உள்ளீர். உம்மை நாதனாகக் கொண்டிருக்கிறபடியால் உலகத்தில் யாரும் அனாதைகளே கிடையாது’. 

என்ன ஒரு அழகான செய்தி! பெருமான், அனைவருக்கும் நாதன். அவன் ஸ்ரீநாதனாய், நமக்கு நாதனாய் இருக்கும்போது, நாம் ஏன் அனாதைகள் என்று கூறிக் கொள்ள வேண்டும்? 

“இப்படிப்பட்ட பெருமானே! உன்னுடைய நுண்ணிய வடிவத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன். சூட்சும ரூபத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு, நீ எப்படி உலகத்தைப் படைக்கிறாய்? சிலந்திப் பூச்சியைப் போல உன்னிடத்திலிருந்து உலகம் வெளியேறுகிறது. மறுபடியும் உன்னிடத்தில் இழுத்துக் கொள்ளப்படுகிறது. இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள விழைகிறேன். நீர் எம் கையைப் பிடித்துக் கொண்டு, உயிர்த் தோழனைப்போல் நடத்தி, சிருஷ்டித் தொழிலைத் தொடங்கும்படி கேட்டுக் கொண்டீர். எனக்கோர் ஐயம். பெருமானுக்கே நான் வேண்டியவன். அவரே நம்மைத் தோழன் என்று சொல்லி விட்டார். ஆகையால், நாம் அவருக்குச் சமம் என்று நினைத்து எனக்குக் கர்வம் உண்டாகி விடுமோ? 

“இப்படிப்பட்ட கர்வம் இல்லாமல் நீர் கூறியதொண்டில் ஈடுபடுவதற்கு, தேவரீரே அருள வேண்டும்” என்று ப்ரஹ்மன் வேண்டினார். 

பகவான் ப்ரஹ்மாவுக்கு அருள் கூறுகிறார்: 

“என்னிடத்தில் உபதேசம் பெற விழைகிறீர். ஞானத்தையும் தர்மத்தையும் எல்லாவற்றிலும் உயர்ந்த பக்தி யோகத்தையும் உமக்குக் கூறுகிறேன். நான் யாரோ, எத்தகைய பண்புகளை உடையவனோ, எப்படிப்பட்ட உருவத்தைப் படைத்தவனோ, அது அத்தனையும் யாரும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. அதை உமக்குக் கூறுகிறேன். என்னைப் போன்ற ஞானத்தை உமக்கும் கொடுக்கிறேன். கேட்டுக் கொள்ளும். நானே இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்கு முன்னும் இருந்தேன். நானே சிருஷ்டிக்குப் பின்னும் இருக்கிறேன். அனைத்தும் என்னிடத்திலிருந்துதான் உருவாயின. என்னால் உருவாக்கப்பட்ட அனைத்துக்குள்ளும், நான் விட்டு விலகாமல் வியாபித்துப் பரந்து நிறைந்து இருக்கிறேன். அனைத்துப் பொருள்களும் என்னிடத்திலேயே லயம் அடைகின்றன”. 

அதாவது, பகவான் அனைத்துப் பொருள்களுக்குள்ளும் இருக்கிறார். அனைத்தும் அவனிடத்தில் அடைக்கலமாகி உள்ளன. இதைப் புரிந்து கொள்வதே சற்றுக் கடினம். ஒரு பொருள் மற்றொரு பொருளால் தாங்கப்படலாம். ஆனால், மறுபடியும் அந்த மற்றொரு பொருளை முதல் பொருள் தாங்காது அல்லவா? நம் கையில் கடிகாரம் உள்ளது. கை, கடிகாரத்தைத் தாங்கும். அதே தலை கீழாக, கடிகாரமே கையைத் தாங்குமா? இயலாது. ஆனால், உலகத்தில் பகவான் அனைத்தையும் படைத்து, அவை அனைத்துக்குள்ளும் தான் உள்ளார். அனைத்தையும் தன்னிடத்தில் வைத்திருக்கிறார். இந்த ஒரு வியத்தகு சக்திக்குத்தான் அகடித கடனா ஸாமர்த்தியம் (சேர முடியாத விஷயங்களையும் சேர்ப்பிக்கும் திறன்) என்று சொல்வார்கள். 

“இப்படிப்பட்டவனாய், அனைத்து ஆத்மாக்குள்ளும் நிறைந்து இருப்பவனாய் என்னையன்றி ஏதும் இல்லாததாய் நீர் நினைக்க வேண்டும். மேலும் மேலும் நான் அனைத்துக்குள்ளும் இருக்கிறேன். அனைவரும் என்னிடம் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டவனின் மாயை விலகுகிறது. அவன் மயக்கம் நீங்குகிறது. என்னையே அவன் அடைய முயற்சிக்கிறான்”. 

இப்படியாய் பெருமான் உபதேசித்து விட்டு மறைந்தார். 

சுகாசாரியார் தொடர்ந்து கூறுகிறார்: 

“மறைந்த பெருமானை ஆனந்தக் கண்ணீரோடு வணங்கினார் நான்முகன். மேலும், தனக்கு இடப்பட்ட பணியான படைப்பைத் தொடர்கிறார். தன்னுடைய தந்தையான நான்முகனுக்கு, நாரதர் விடாமல் அன்போடு தொண்டு புரிந்தார். அப்போது ஒருமுறை ப்ரஹ்மா பத்து அடையாளங்கள் கொண்ட இந்த பாகவத புராணத்தை நாரதருக்கு உபதேசிக்க, நாரதர், சரஸ்வதி நதிக்கரையிலிருந்து தவம் புரிந்து கொண்டிருந்த வேத வியாஸருக்கு பாகவத புராணத்தை உபதேசித்தார். 

“பரீக்ஷித்தே! நீர் கேட்டீர் அல்லவா! அந்த விராட் சிருஷ்டியின்படி ப்ரஹ்மா, எப்படியெல்லாம் உலகைப் படைத்து, அதில் உயிர்களுக்குப் பிறவிப் பேற்றைத் தந்தார் என்று விவரமாகக் கூறுகிறேன் கேளும்!” என்றார். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக