ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 43

இரண்டாவது ஸ்கந்தம் - பத்தாம் அத்தியாயம்

தத்துவங்களின் உற்பத்தி

ஸ்ரீமத் பாகவத புராணத்தில், பத்து அடையாளங்கள் உண்டு. 

அத்ர, ஸர்கோ விஸர்கச்ச ஸ்தாநம் போஷணம்
ஊதய:| மந்வந்த்ர ஈசாநுகதா நிரோதோ முக்திராச்ரய:|| (ஸ்ரீமத் பாகவதம் 2-10-1)
பரிவத்ஸரான்|
தேந நாராயணோ நாம யதாப: புருஷோத் பவா:||
(ஸ்ரீமத் பாகவதம் 2-10-11)


இந்தப் பத்தையும் விளக்குகிறேன். ஐம்பூதங்கள், ஐம்புலன்கள் ஆகிய அனைத்தோடே உலகம் படைக்கப்படுகிறதே, இதுவே ‘ஸர்கம்’ என்று கூறப்படுகிறது. 


அண்ட சராசரங்களைப் பெருமான் படைக்கிறான். அவற்றில் நடப்பன, ஊர்வன, அசைவன, அசையாதன, செயல்புரிவன, செயல்புரியாதன... எல்லாம் ‘விஸர்கம்’ என்று கூறப்படுகிறது. 

தேவைக்கேற்ற காலங்களில் பெருமானே அவதரித்து, உலகத்தைக் காக்கிறான். அது ‘ஸ்திதி’ என்று சொல்லப்படுகிறது. 

படைப்பினங்கள் அனைத்துக்கும் அருள்கிறானே, அதுவே ‘போஷம்’ என்று கூறப்படுகிறது. 

மேலும், அந்தந்தக் காலகட்டங்களில் தோன்றும் மனுக்களால் அனுஷ்டிக்கப்படும் நல்ல செயல்கள் ‘மன்வந்த்ரங்கள்’ என்று கொண்டாடப்படுகின்றன. 

பெருமான் அவதரிக்கும்போது, அவனுடைய கதைகள், அவன் பக்தர்களுடைய கதைகள் இவை அத்தனையும் ‘ஈசாநு கதை’ (இறை நற்கதை) என்று சொல்லப்படுகிறது. 

நம் அனைவருடைய கர்ம வாசனை – அதாவது கர்மங்களால் ஏற்பட்ட மனப்பதிவே – ‘ஊதிகள்’ என்று சொல்லப்படுகின்றன. 

பிரபஞ்ச சிருஷ்டி முடிந்து, அனைத்தும் பெருமானிடத்தே லயிக்கின்றனவே – அது ‘நிரோதம்’ என்று சொல்லப்படுகிறது. 

நாம் ஒவ்வொருவரும், நம்முடைய கர்மத்தையும் ஜென்மத்தையும் தொலைத்து, வைகுண்டத்தை அடைகின்றோமே – அது ‘முக்தி’ என்று கூறப்படுகிறது. 

பெருமானுடைய படைப்பு, அவனிடத்திலே ஈர்ப்பு, இவை அத்தனையும் அவனிடத்திலேதானே! ஆகவே, பர ப்ரம்மமான திருமால், அனைவருக்கும் ‘ஆச்ரயம்’ – அதாவது ‘ஆதாரமான இருப்பிடம்’ என்று கொண்டாடப்படுகிறான். 

இந்த ஜீவன், ஆத்யாத்மிகன் என்றும், இந்த ஜீவனின் கண், காது முதலான புலன்களுக்கு தெய்வங்களாக இருக்கும் சூரியன் முதலானோர் ‘ஆதிதைவிகம்’ என்றும், இந்த தேகம் ‘ஆதி பௌதிகம்’ என்றும் கொண்டாடப்படுகிறது. 

இவை அனைத்தையும் நாம் இப்படி பிரித்து விடலாம். அறிபவன், அறியப்படும் பொருள், அறிவதற்கு உதவும் கருவி ஆகியவற்றை ஜ்ஞாதா, ஜ்ஞேயம், ஜ்ஞான ஸாதனம் என்பார்கள். அந்த மூன்றும் – அதாவது நம் புலன்கள் எல்லாம் எப்படி உருவாயின என்று மேலே கூறுகிறார். 

பரப்ரஹ்மமாகிய பகவான், ப்ரஹ்மாவைப் படைத்தார். பின்னர் இந்த அண்டத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த அவர், தண்ணீரைப் படைத்து அதில் சயனித்துக் கொண்டார். 

தாஸ்வவாத்ஸீத் ஸ்வஸ்ருஷ்டாஸு ஸஹஸ்ர


‘நாரம்’ என்பது தண்ணீரைக் குறிக்கும். நாரமாகிற தண்ணீரைப் படைத்து, அதற்குள்ளே பெருமான் கண் மலர்ந்தபடியால், தண்ணீரையே தனக்கு இருப்பிடமாகக் கொண்டபடியால், அவனுக்கு நாராயணன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஜீவன், அவனுடைய கர்மங்கள், அவனுடைய இயல்பு, அவனுடைய காலம் – அதாவது வாழும் காலம், இவை அத்தனையும் பெருமானுடைய அருளால் ஏற்படுகிறது. 

பகவான் அதிதைவம், அத்யாத்மம், அதி பூதம் ஆகிய முப்பெரும் ஆதாரங்களை உருவாக்கத் தொடங்குகிறார். இது ஒவ்வொன்றும் நம்முடனே சம்பந்தப்பட்டவை. இதைக் கேட்க கேட்க, மிகவும் வியப்பாக இருக்கும். பெருமான் படைக்க ஆரம்பிக்கும்போதே, புலன்களின் சக்தி, உடலின் சக்தி, மனதின் சக்தி ஆகியவற்றை உருவாக்குகிறார். பகவானுடைய திருமேனியிலிருந்து வாயு அதாவது, காற்று வெளியேறிற்று. 

காற்று நம் வயிற்றுக்குள் புகுந்தால்தான் பசி, தாகம் ஆகியவை ஏற்படுகின்றன. பகவானுக்கு சாப்பிட வேண்டும், பார்க்க வேண்டும், கேட்க வேண்டும் என்கிற ஆசை உண்டாக, முதன் முதலில் அவருடைய திருமேனியில் முகம் உண்டாயிற்று. அவருக்கு சுவைக்க ஆசைப்பட்டபோது, நாக்கு பிறந்தது. நாக்குக்கு தேவதை, வருணன். நாக்கு சுவையை உணரும். 

அடுத்து பெருமான், பேச விழைந்தார். வாய் உருவாயிற்று. அதாவது, ‘வாக்கு’ எனும் திறன் உருவாயிற்று. அதற்கு அக்னியாகிய நெருப்புக் கடவுளே தேவதை. எனவே வாக்கால் பேசும் வினை ஆற்றப்படுகிறது. 

அடுத்து பெருமானுக்கு ‘நாஸிகர்’ எனப்படும் மூக்கு ஏற்பட்டது. அதில் முகர்ச்சிப் புலன் உருவாயிற்று. அதற்குத் தேவதை வாயு பகவான். அதன் வினை, முகர்தல். 

அடுத்து, கண் உருவாயிற்று. அதாவது, ‘சக்ஷுஸ்’ எனப்படும் இந்த்ரியப் புலன் ஏற்பட்டது. இதற்குத் தேவதை, சூரியன். இது உருவத்தைக் கிரஹிக்கும். 

அடுத்து காதுகள் உருவாயின. அதில் செவிப் புலன் பிறந்தது. அதற்குத் தேவதை திசைகள். செவிப் புலனால் ஒலி கிரஹிக்கப்படுகிறது. 

மேலே தோல் ஏற்பட்டது. இது ‘த்வக்’ இந்த்ரியம் எனப்படுகிறது. அதாவது தொடு உணர்ச்சிப் புலன். இதற்குத் தேவதை மரங்கள். இதன் மூலம் தொட்டு உணர்ந்து கொள்ளலாம். 

மேலே கைகள் முளைத்தன. இதில் ‘பலம்’ எனும் புலன் ஏற்பட்டது. இதற்குத் தேவதை இந்திரன். இதன் செயல் ஆதானம். அதாவது, எடுத்தல் – கொடுத்தல் போன்ற கையாளும் ஆற்றல். மேலும் கால்கள் முளைத்தன. அதில் இடம் பெயர்தலுக்குண்டான திறன் பிறந்தது. இதற்குத் தேவதை விஷ்ணு. இதன் செயல் நடத்தல். 

இறுதியாக இருதயம் உண்டாயிற்று. அதன் புலன் மனம். அதற்குத் தேவதை சந்திரன். இதன் வினை ஸங்கல்பம். அதாவது, காமம், உறுதி, ஐயம், ஈடுபாடு, வெட்கம் ஆகிய அனைத்தும் மனத்தின் வினைகள். 

இப்படிப் பெருமான் ப்ரஹ்மா தொடக்கமாக அனைத்தையும் படைத்தார். இவ்வனைத்துமே அவருடைய ஸ்தூலமான உருவத்தின் பகுதிகள்தான். மேலே பெருமான் இவை ஏதும் இல்லாமல் நுண்ணிய வடிவத்தோடும் காட்சி கொடுக்கிறார். இப்படி உலகத்தை எல்லாம் படைக்கிறார் என்று கூறும்போது, அவருக்கும் கர்ம சம்பந்தம் உண்டோ என்று தோன்றும். 

கிடையாது. பெருமான் கர்மங்களால் தீண்ட முடியாதவன். ‘அகர்ம வச்யன்’ என்று கொண்டாடப்படுகிறான். இந்த எம்பெருமான், மேலே யக்ஷர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், ஒன்பது பிரஜாபதிகள், மனுக்கள், தேவர்கள், ராக்ஷஸர்கள், பிசாசங்கள், பறவைகள், மிருகங்கள், பசுக்கள், மரங்கள், மலைகள், செடிகள், கொடிகள், ஸ்தாவர ஸங்கம ஜந்துக்கள் முதலிய அனைத்தையும் படைத்தார். 

நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் படைக்கப்படுவது நம் கர்மத்தின் பலனாகத்தான். நம்மிடத்தே ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய முக்குணங்களும் கர்மத்தின் பயனாக இருக்கும். 

ஸத்வ குணத்தால் நற்செயல்களைப் புரிந்து, சொர்க்கத்தை அடைகிறோம். 

ரஜோ குணத்தால், விருப்பம் ஏற்பட்டு பிள்ளை, பசு, நிலம், வீடு ஆகியவற்றை அடைகிறோம். 

தமோ குணத்தால், தீய செயல்களில் ஈடுபட்டு, நரகத்தை அடைகிறோம். 

– இம்மூன்றும் ஒவ்வொரு நாளில் ஒவ்வொன்று உயர்ந்திருக்கும். 

இப்படியாக உலகத்தைப் படைக்கும் பெருமான், தானே அவதரித்து இவ்வுலகத்தை எல்லாம் காக்கிறான். காலம் முடிந்த பிறகு, தன்னிடத்திலேயே இழுத்துக் கொண்டு விடுகிறான். 

இப்படி ப்ரஹ்மாவின் பகல் பொழுதில் கல்பத்தின்போது, சிருஷ்டி எப்படி நடக்கிறது என்பதைக் கூறினேன். மேலும் காலத்தின் வெவ்வேறு நிலைகளைப் பற்றியும், அளவுகளைப் பற்றியும், ஏனைய கல்பங்களைப் பற்றியும் மூன்றாவது ஸ்கந்தத்தில் கூறுகிறேன் – என்று முடித்தார் சுகாசாரியார். 

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சௌனகர், ஸூத பௌராணிகரை நோக்கி இப்படிக் கேட்கலானார்: 

“விதுரர் தன் நாட்டை விட்டுத் துறந்து, தீர்த்த யாத்திரை போனார் என்று கேள்விப்பட்டேன். அவர் மைத்ரேயரைச் சந்தித்தாரா? பெருமானைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டார்களா? படைப்பைப் பற்றி மைத்ரேயர் என்ன உபதேசித்தார்? ஏன் விதுரர் தன் பந்துக்களை விட்டு விலகினார்? திரும்ப எதற்காக நாட்டுக்கு வந்து சேர்ந்தார்? – இவை அத்தனையையும் கூற வேண்டும்” என்றார். 

ஸூதர் கூறுகிறார் : 

“நல்ல கேள்வி கேட்டீர்கள். பரீக்ஷுத்தும் இதைத்தான் சுகரிடத்தே கேட்டான். அதற்கு சுகர் என்ன விடை தந்தாரோ, அதை அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன். கேளுங்கள்” என்றார். 

இத்துடன் இரண்டாவது ஸ்கந்தம் முற்றுப் பெறுகிறது. இனி மூன்றாவது ஸ்கந்தத்தில் விதுரர், மைத்ரேயர், உத்தவர் ஆகியோரின் உரையாடலில் ஆழ்ந்த கருத்துக்களைக் கேட்கப் போகிறோம். காத்திருங்கள். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை