ஞாயிறு, 16 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 44


மூன்றாவது ஸ்கந்தம் - முதல் அத்தியாயம் 

விதுரர் - உத்தவர் உரையாடல்

சுகாசாரியர் கூறுகிறார். “பரீக்ஷித் மகாராஜனே! விதுரரும் மைத்ரேயரும் என்றோ சந்தித்துக் கொண்டு பல அரிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். நாட்டில் வாழப் பிடிக்காத விதுரர் நாட்டைத் துறந்து, புண்ய க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை புகுந்தார். எந்த விதுரருடைய குடிசைக்குச் சென்று, கண்ணன் அமுது உண்டு மகிழ்ச்சி அடைந்தானோ, அந்த விதுரருக்கு நாட்டில் நாட்டமில்லை. ஆனால், இதற்காக அவர் துன்பப்படாமல், காட்டுக்குச் சென்று பெருமானைத் தியானித்து வந்தார். 

இது கேட்ட அரசன், சுகாசாரியரிடத்தே வினவுகிறான். “விதுரர் எதற்காக நாடு துறந்து, காடு ஏகினார்? அவர் எப்போது மைத்ரேயரைச் சந்தித்தார்? என்ன பேசினார்? பெரியோர் இருவர் பேசினால் அது அற்பமான விஷயமாக இருக்காது. மனித சமுதாயத்துக்கே நன்மை பயப்பதாகத்தான் இருக்கும். அதை விளக்கமாகக் கூறுவீர்” என்றார். 

இந்த உரையாடல்களையெல்லாம் ஸூத பௌராணிகர், சௌனகர் முதலான ரிஷிகளுக்குக் கூற ஆரம்பிக்கிறார். “ரிஷிகளே! இப்படி பரீக்ஷித் கேட்டது, நமக்காக. இனி நாம் பெறப் போகும் கருத்துக்கள் மிக உயர்ந்தவை. விதுரரும், மைத்ரேயரும் பேசப் போகிறார்கள். அதற்கு முன்னால் விதுரரும், உத்தவரும் உரையாடப் போகிறார்கள். ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு உதவும் கருத்து. கவனத்தோடு கேட்பீர்” என்றார். 

மேலும் சுகாசாரியர் கூறுகிறார். “திருதராஷ்டிரனுக்கு தன் பிள்ளைப் பாசம் கண்ணை மறைக்க, பிள்ளைகளின் தீய வழிக்கு அவன் உடந்தையாக இருந்தான். நல்லோர்களான பாண்டவர்களை அழிப்பதற்கு, அரக்கு மாளிகையை தீ வைத்து கொளுத்த மறைமுகமாக அனுமதித்தான். சிறு வயதிலிருந்தே பீமனுக்கு விஷம் கொடுத்து அழிக்கப் பார்த்தான். இப்படி உயிர்க் கொலைமுயற்சியோடு நில்லாமல், திரௌபதியை மானபங்கப்படுத்த துரியோதனன் முயன்றபோது, அது கண்டு திருதராஷ்டிரன் மௌனமாக இருந்தான். சூதாட்டத்திற்கு அழைக்கப்பட்டு, நாடு அத்தனையும் இழந்து, தன் மனைவியையும் இழந்தான் தர்மபுத்திரன். அது அவன் மீது சற்றே குற்றமாக இருந்தாலும், இதை மன்னர் திருதராஷ்டிரன் தடுத்திருக்கலாம். ஆனால், சுயநலம் காரணமாக, வஞ்சகச் சதியைத் தடுக்காமல் வாளாவிருந்தான். 

‘நாம் குற்றம் புரியாமல் இருப்பது நல்லது, அதே சமயம் நம்மைச் சுற்றி நடக்கும் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல், அதுவும் அதைத் தடுக்கும் பொறுப்பில் நாம் இருக்கும்போது, அதைத் தடுக்காமலும் இருப்பது, அதை அனுமதிப்பதற்குத்தான் சமமாகும். இவை அத்தனையும் போனால் போகிறது. இறுதியில் பாண்டவ தூதனாகக் கண்ணன் வருகிறான். அதற்கு முன்னும் பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தைக் கொடுக்க திருதராஷ்டிரன் மறைமுகமாக மறுத்தான். கண்ணன் வந்த பிறகாவது, அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? பரம்பொருளான எம்பெருமானிடத்திலேயே அபசாரப்பட்டு, அவனுடைய பேச்சையும் ஒதுக்கித் தள்ளினான். ராஜசபையில் கண்ணன் பேசியது, பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றவர்களுக்கு அமுதமயமாக இருந்தது. ஆனால், திருதராஷ்டிரனுக்கும், அவன் பிள்ளைகளுக்குமோ அது நஞ்சாக இருந்தது. கண்ணனையும் வெறுங்கையோடு திருப்பி அனுப்பினார்கள். 

மேலும், கண்ணன் புறப்பட்டுப் போன பிறகு, திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து, ‘எது நம் நாட்டுக்கு நன்மையோ அதைக் கூறும்’ என்று வினவினான். 

விதுரர், தான் அறிந்த நீதிகளையெல்லாம் எடுத்துரைத்தார். “மன்னா! நீ எத்தனையோ தீமைகளைப் புரிந்திருக்கிறாய். போகட்டும். இவை அனைத்தையும் பாண்டவர்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுடைய நல்ல குணத்தைக் காட்டுகிறது. ஆனால், பெரும் நாகப்பாம்பு போல், பழி வாங்கும் வாய்ப்பை எதிர்நோக்கி பீமசேனன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான். அதற்கு நீ இரையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதைத் தவிர்த்துக் கொள். 


“மனிதர்களிடத்தில் முதலில் அபசாரப்பட்டாய். பிறகு, அனைவருக்கும் நன்மை நினைக்கும் கண்ணனிடம் அபசாரப்பட்டாய். கண்ணனோ, தர்மத்தின் வழி நிற்கும் பாண்டவர்கள் பக்கம் இருக்கிறார். பகவான் ஒருபுறம் இருக் கும்போது, அதை நாம் எதிர்க்கலாமா? அவரை அவமரியாதைப் படுத்தலாமா? தர்மத்தின் வழிதான் கண்ணன் இருப்பான். அவனே தர்மத்தின் உருவம். தர்மத்தைக் காப்பதுதான் ஒரு மன்னனின் கடமை. இந்த ஒரு மகனைத் திருப்தி செய்வதற்காக ஊரையே இழந்து விடாதே. இப்போதே அவர்களை அழைப்பாயாக! பாதி நாட்டைக் கொடுத்து கண்ணனிடத்தில் அபசாரத்திற்கு மன்னிப்பு வேண்டிக் கொள்” என்றார். 

இதைக் கேட்ட துரியோதனன் பெரும்சீற்றம் கொண்டு, விதுரரை அவமரியாதை செய்து “தான் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கிறார் இவர். உடனே இவரை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்” என்று பேசினான். இதைக் கேட்ட விதுரர் மனம் கலங்காமல், ‘உலகப் பற்றில் உழலும் மக்கள் இப்படித்தான் கீழான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நாம்தான் நம் உயர்ந்த நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும்’ என்று முடிவெடுத்தார். 

இது நமக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. அதாவது ‘பலர் தாழ்ந்தவர்களாக தீய நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களே! நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் நடைபெறுகின்றனவே!’ என்று நாம் மனம் தளர்ந்து துன்பப்படுகிறோம். இது துன்பப்பட வேண்டிய விஷயம் அல்ல. அவற்றில் எதை எதை நாம் மாற்ற முடியுமோ, முயற்சி எடுத்து மாற்ற வேண்டும். எது நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லையோ, அதைப்பற்றி துன்பமோ கவலையோ படாமல், பகவானிடத்தில் வேண்டி ‘எல்லோரையும் இந்தத் துன்பத்திலிருந்து மீட்க வேண்டும்’ என்று இறைஞ்ச வேண்டும். 

நாம் மேலும் மேலும் தியானித்து ஈடுபாட்டுடன் பெருமானை வேண்டினோமானால், அவரால் செய்து முடிக்க முடியாதது என்று ஏதேனும் உண்டா என்ன? என்ற அந்த உறுதிதான் விதுரரின் உள்ளத்தில் இருந்தது. நம் ஒவ்வொருவருக்கும் அந்த உறுதி வர வேண்டும். 

விதுரர் மேலும், ‘இனி இந்த நாட்டில் இருப்பது நமக்கு நல்லதல்ல. புறப்பட்டு விடுவோம்’ என்று தன் வீட்டிலிருந்து வெளியேறினார். தன்னுடைய வில்லை வாயிற்படியிலேயே வைத்து விட்டுச் சென்றார். ‘நான் போரிடுவதற்குத் தயாராக இல்லை. நடக்கப் போகும் போருக்கும், எனக்கும் தொடர்பில்லை. அரசனுக்கு எதிராக நான் பாண்டவர்கள் பக்கம் செல்லப் போவதுமில்லை’ என்று பல செய்திகளை துரியோதனனுக்குச் சொல்லாமலேயே உணர்த்திவிட்டு, விதுரர் புறப்பட்டு விட்டார். 

பின்னர் புண்ணிய தீர்த்தங்களை அடைந்தார். புனிதமான நதிகளில் நீராடினார். பல புண்ணிய காரியங்களில் ஈடுபட்டார். ஒரு சன்னியாசியைப் போலே மரவுரியைத் தரித்துக் கொண்டு காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் பகவானைத் தியானித்து வாழ்ந்து கொண்டு, காய், கனிகளை உண்டு, ‘இவர் விதுரர்’ என்பதை ஊரார் அறிந்து கொள்ளாத படி, காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தார். இப்படியே பல இடங்களில் திரிந்து இறுதியாக, ப்ரபாஸ க்ஷேத்திரத்தை அடைந்தார். 

இதுதான், பின்னர் கண்ணன் இப்பூவுலகை விட்டுப் புறப்பட்டுச் சென்ற இடம். குஜராத் மாநிலத்தில் வெராவல் என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது. இது மிகவும் புனிதமான க்ஷேத்திரம். அவசியம் அனைவரும் தரிசிக்க வேண்டிய திருத்தலம். 

விதுரர் அங்கு சென்றபோது ஒரு செய்தியைக் கேள்விப்பட்டார். ‘பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் யுத்தம் மூண்டு, கௌரவர்கள் அழிந்தார்கள். இப்போது தர்மபுத்திரன் நாட்டை ஆள்கிறான். அவனுடைய ஆட்சி, இப்பாரத தேசம் முழுவதும் பரந்து விரிந்து உள்ளது. ஒரு வெண்கொற்றக் கொடையின் கீழ் நாட்டையே அறநெறி பிறழாமல் ஆள்கிறான் தர்மபுத்திரன்’ என்ற புகழ் மக்களிடையே பரவியிருந்தது. 

இதைக் கேள்விப்பட்ட விதுரர், ‘இது நான் எதிர்பார்த்ததுதான். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை’ என்று அறிந்து கொண்டு, மேற்கு முகமாக ஓடும் சரஸ்வதி நதியை அடைந்தார். அங்கே பதினோரு தீர்த்தங்கள் உள்ளன. 

இன்றும் சரஸ்வதி நதி, கோமதி நதியாக வெளிப்பட்டு மேற்குக் கடலில் கலக்கிறது. த்ரிதஸ், உஸனஸ், மனு, ப்ருது, அக்னி, அசிதஸ், வாயு, சுதாசஸ்ய, கோ தீர்த்தம், சுப்ரமண்ய தீர்த்தம், சிராத்த தீர்த்தம் என்று அங்கே பதினோரு புனித தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் நீராடி விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சௌஷீரம், குருஜாங்கலம் ஆகிய நாடுகளைக் கடந்து யமுனை நதிக்கரையை அடைந்தார் விதுரர். அங்கே உத்தவரைக் கண்டார். கண்ணனுக்கு உத்தவர் மிக நெருங்கிய பக்தர். பிரகஸ்பதியினுடைய சீடராகவே முன்பு இருந்தவர். 

அவரைக் கண்டவுடன் வணங்கிய விதுரர், ஆசையோடு கேட்டார். “உத்தவரே! கண்ணன் சுகமாக உள்ளாரா? பூ பாரத்தை தீர்ப்பதற்காக அவர் பிறந்தாரே, அதை நடத்தி முடித்து விட்டார் போலிருக்கிறதே! கண்ணனை தரிசிக்கப்பெற்ற நீர்தான் எத்தனை பாக்கியம் செய்தவர்? கண்ணனுக்கும் ருக்மணி தேவிக்கும் அவதரித்த ப்ரத்யுமனன் நலமாக உள்ளாரா? ப்ரத்யுமனனுடைய திருக்குமாரர் அனிருத்தன் ஆனந்தமாக உள்ளாரா? மேலும் யாதவர்கள், வ்ருஷ்ணிகள், போஜர்கள், தாசானுகர்கள் இவர்கள் எல்லாம் நலமா? கண்ணன் ஜாம்பவதி தேவியைக் கல்யாணம் செய்து கொண்டதில் அவர்களுக்குப் பிறந்த சாம்பன் நலமா? சாத்யகி நலமாக உள்ளாரா? 

“இவர்கள் எல்லாம் இருக்கட்டும். கண்ணனையே தன் வயிற்றில் வைத்துக் காத்தாளே, தெய்வத் தேவகி! அவர் நலமாக உள்ளாரா? இவை அனைத்தையும் நீர் கூற வேண்டும். பீமசேனன் மிகக் கோபத்துடன் சண்டையிட்டிருப்பாரே? அனைவரையும் கொன்று முடித்திருப்பாரே? இப்படித்தான் நடக்கும் என்று நான் அன்றே கூறினேன். திருதராஷ்டிரன் நாசப் பாதையை நோக்கி, பிள்ளைப் பாசத்தாலே உந்தப்பட்டு நடந்தான். இறுதியில் அவன் அனைத்தையும் இழந்து நிற்கிறான். 

“உத்தவரே! கண்ணன் எதற்காக மனித உருவத்தில் அவதரித்தார்? அவரோ பரம்பொருள். இதை யோசிக்கும்பொழுது எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. துரியோதனனை முதலிலேயே ஒரே நிமிடத்திலேயே கண்ணன் கொன்று முடித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் பாண்டவர்களைக் காட்டுக்கு அனுப்பி, பிறகு அவர்களின் தூதராக நடந்தார். இத்தனையும் எதற்கு? நம் பாரத தேசத்தில் உள்ள அனைத்துக் கொடியவர்களையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டி அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீண்ட அவகாசம் கொடுத்தான் போலும் பெருமான். அவனோ பிறப்பில்லாதவன். ஆனால், நமக்காகப் பிறந்தான். அவனை கர்மங்கள் ஒரு நாளும் தீண்டாது. ஆனால், தீண்டுகிறாப் போல் நடித்தான். மனிதர்களுடைய வீண் கதைகள் கிடக்கட்டும். கண்ணன் எம்பெருமான் எப்படி உள்ளார்? அவருடைய ஆனந்த மயமான கதைகள் என்னென்ன? கேட்பவர் மனத்தைக் கொள்ளை கொண்டு பரிசுத்தமாக்கும் அவனது திருவிளையாடல்கள் எவையெவை? விவரமாக அவற்றையெல்லாம் கூறும்” என்று விதுரர் வினவினார். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக