மூன்றாவது ஸ்கந்தம் - இரண்டாம் அத்தியாயம்
விதுரர் - உத்தவர் உரையாடல் தொடர்ச்சி....
கண்ணனைப் பற்றிக் கேட்ட விதுரரை நோக்கிய உத்தவர், ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவரால் வார்த்தை கொண்டு பேச இயலவில்லை. பகவானை நினைத்தவர்கள் உள்ளம் உருகிப் போகிறார்கள். உத்தவர், சிறு வயதிலேயே தன்னிடத்திலிருந்த பொம்மைகளையெல்லாம் கண்ணனுடைய உருவமாகவே நினைத்துக் கொண்டு விளையாடியவர். அவருடைய தாய் ‘சாப்பிட வா குழந்தாய்’ என்று அழைத்தபோது, ஆகாரத்தில் புத்தியே போகாமல் கண்ணனிடத்திலேயே சித்தம் லயித்திருந்தவர். ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோதே, இவ்வளவு பக்தி இருந்திருக்குமானால், இப்போது எவ்வளவு தூரம் முற்றி இருக்கும்?
பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில்,
காலுமெழா கண்ணநீரும் நில்லா
உடல் சோர்ந்து நடுங்கி, குரல்
மேலுமெழா மயிர்க்கூச்சுமறா
என தோள்களும் வீழ்வொழியா
மாலுகளா நிற்கும் என் மனமே
உன்னை வாழத்தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள்சுனைசூழ்
திருமாலிருஞ் சோலை எந்தாய்!
(பெரியாழ்வார் திருமொழி – 5-3-5)
– என்று பாடுகிறார்.
பகவானைப் பற்றி ஒரு பக்தன் நினைக்கும்போதே, அவனுடைய கால்கள் நடுங்குகின்றன. கண்களிலிருந்து காவிரி போல் நீர் பெருகி, குரல் தழுதழுக்கின்றது. உடல் சோர்ந்து போகிறது. குரல் எழுவதில்லை. மயிர்க் கூச்செறிந்து இருக்கிறான். தோள்கள் தொய்ந்து போகின்றன.
ஆஹ்லாத சீதநேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்|
ஸதா பராகுணாவிஷ்ட: த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிவி:|
- என்று சாஸ்திரம் கூறுகிறது.
கண்களிலிருந்து கண்ணீர் பெருக, குரல் தழுதழுக்க இருக்கும் ஒரு பக்தனைப் பார்ப்பதே, அனைத்து பக்தர்களுக்கும் வாழ்வின் இலக்கு. அப்படித்தான் உத்தவர் அழுது கொண்டிருந்தார். நம்மாழ்வார் ஒரு பாடலில்,
‘பூவைப் பைங்கிளிகள் பந்து தூதை பூம்பட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்’ (திருவாய்மொழி – 6-7-3)
– என்று உருகுகிறார்.
சிறு பிராயத்தில் ஆழ்வார் பந்து, கிளி, அம்மானை,களக்கோடி முதலான விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், இந்தப் பொருட்களையெல்லாம் அது அதுவாக அவர் பார்த்ததில்லை. உலகத்துக் குழந்தைகள் பந்தையும், கிளியையும் வைத்துக் கொண்டு விளையாடி என்ன இன்பத்தைப் பெறுவார்களோ, அதே இன்பத்தைப் பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லியே, நம்மாழ்வார் என்னும் குழந்தை இனிதே பெற்றாராம்.
இப்படித்தான் ப்ரஹ்லாதன் சிறு வயதிலேயே தன்னை மறந்து பகவானிடத்திலேயே மனத்தைச் செலுத்தி இருந்தான். சிறு பிராயத்தில் பக்தி வருவது அரிது. அது வருமானால், அதை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.
நம் இல்லத்திலேயே சிறுவர்கள் கோவிலுக்குப் போக வேண்டும் என்றோ, பெருமானைப் பற்றிக் கேட்க வேண்டும் என்றோ, பக்தி வளர வேண்டும் என்றோ பேசினால் நாம் அதை ஊக்குவிக்கிறோமா? ஐயம்தான்! ‘படிக்கும் காலத்தில் இதென்ன பெருமானைப் பற்றிப் பேச்சு?’ என்று நாமே அவர்களைத் தடுத்து விடுகிறோம். அது கூடாது. எந்தக் கல்வியையும் படிக்கட்டும். ஆனால், பெருமானைப் பற்றிய கல்வி இல்லாமல் போனால், எந்தக் கல்வியும் பயன் தராது. வாழ்க்கையும் நிம்மதியாக இருக்காது, இனிதாக இருக்காது. ஆகவே, அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டுகோள்:
சிறு பிராயத்திலிருந்தே நம் குழந்தைகளுக்கு பக்தி வளரட்டும். நாம் தடுக்க வேண்டாம். அவர்களைக் கண்ணன் ஆட்கொள்ளட்டும். வாழ்க்கை இனிதாக இருக்கும். நம்மால் இயன்ற அளவுக்கு அவர்களுக்குப் பாசுரங்கள், ஸ்லோகங்கள், தர்மத்தின் கருத்துக்கள் இவற்றையெல்லாம் புரிந்து கொள்வதற்குண்டான ஏற்பாடுகள், வகுப்புகள் ஆகியவற்றை நாமே செய்து கொடுக்க வேண்டும்.
இந்த உலகம் வினோதமானது. எந்த ஒரு நவீனக் கல்விக்கும் சுமார் பதினைந்து ஆண்டுகள் செலவழிக்கிறோம். ஆனால் பெருமானைப்பற்றி, ஏன், ஆத்மா என்னும் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள எத்தனை நேரம் செலவழிக்கிறோம்? இது நியாயமானதா? நாம்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ப்ரஹ்லாதன், உத்தவர், ஆண்டாள், நம்மாழ்வார் - இவர்களைப் போன்றவர்கள் சிறுவயதிலேயே எவ்வளவு பக்தியோடு இருந்தார்கள்? உத்தவர் பேசுவதற்காகத் தன் நெஞ்சை சமாதானப்படுத்திக் கொண்டார். பின்னர் பேசத் தொடங்குகிறார்.
“விதுரரே! நீர் எளிதாகக் கேள்வியைக் கேட்டு விட்டீர்! ஆனால், பதில் அவ்வளவு சுலபமானது அல்ல. சொல்கிறேன் கேளும். கண்ணனை நினைக்க நினைக்க எனக்குக் குரல் தழுதழுக்கிறது.”
மேலே உத்தவர் கூறலுற்றார். “இது நாம் செய்த துர்பாக்கியம். அந்தோ! நம் வினைப் பயனால், கண்ணன் இப்பூவுலகை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டான்” என்றார்.
அதிர்ச்சி தரும் இந்தச் செய்தியை உதிர்த்தார் உத்தவர். விதுரரும் கண் கலங்கினார். “யுத்தம் முடிந்தது என்று கேள்விப்பட்டேன். கண்ணனா புறப்பட்டுப் போனான்? ஏன் அவனுக்கு இந்தப் பூவுலகம் பிடிக்கவில்லையா? உம்மையும், எம்மையும் பிடிக்காமல் கண்ணன் புறப்பட்டுப் போனானோ?” என்று கேட்டார்.
உத்தவர் “அவனை இந்த உலகத்தில் தங்க வைக்கும் அளவுக்கு நமக்கு பக்தி போதவில்லை போலும்” என்றார்.
இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்கும் போது நமக்கு ஒன்று புரிகிறது. கண்ணன் வந்த செயல் முடிந்தது. சண்டை நடந்தது. பலர் கொல்லப்பட்டனர். எவ்வளவோ ஏமாற்று வேலைகள் நடந்தன. இவை எல்லாம் இவர்கள் உள்ளத்தில் முக்கியமாகப் படவில்லை.
‘நமக்கு பக்தி போதவில்லை. கண்ணனை இப்பூவுலகத்தில் இருத்திக் கொள்ளும்படி நம்மிடத்தில் அவனுக்குப் பிரியம் இருக்கும் அளவுக்கு நாம் நடந்து கொள்ளவில்லை’ - என்று தங்களது பக்தியைத் தாழ்த்திப் பேசிக் கொள்ள நினைக்கிறார்களே ஒழிய, அப்போதும் மற்றவர்களைக் குற்றம் சொல்ல அவர்களுக்குத் தோன்றவில்லை. இதுதான் சிறந்த பக்தனுக்கு அடையாளம். இப்படி இருவரும் தழுதழுத்து ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டு, மேற்கொண்டு கண்ணனின் கதையைப் பற்றிப் பேசப் போகிறார்கள். நாமும் ஆனந்தக் கண்ணீரோடு காத்திருந்து கேட்போம்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்