மூன்றாவது ஸ்கந்தம் - மூன்றாம் அத்தியாயம்
உத்தவர் உரைத்த கண்ணன் கதையமுதம்
விதுரரும் உத்தவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். விதுரர் நடந்து முடிந்த கதைகள் அத்தனையையும் கேட்கிறார். மஹாபாரத யுத்தம் நடந்தது; கண்ணன் தர்மபுத்திரருக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தது; கண்ணனே இப்பூவுலகத்தை விட்டுப் பிரிந்து போனது – ஆகிய அத்தனை செய்திகளையும் உத்தவர் தற்போது விதுரருக்குக் கூறுகிறார்.
தன்னுடைய பங்காளிகள் அனைவரும் இறந்து போனதைக் கேள்விப்பட்டதை விட, கண்ணன் இப்பூவுலகை விட்டுப் பிரிந்து போனதைக் கேள்விப்பட்டது விதுரருக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்தது. அவரது துன்பத்தைப் போக்குவதற்காக உத்தவர் கண்ணனுடைய சரித்திரத்தைச் சுருக்கமாகக் கூறுகிறார்.
“பகவானுடைய அற்புதங்கள் கேட்பதற்கே இனிமையானவை. ஒரு விளக்கு ஏற்றி வைத்தால், விட்டில் பூச்சிகள் அதில் தாமே வந்து விழுந்து எப்படி உயிரை மாய்த்துக் கொள்ளுமோ, அதேபோல கண்ணன் என்ற விளக்கு ஏற்றி வைக்கப்பட்டபோது, அனைத்து அசுரர்களும் விட்டில் பூச்சிகள் போல தாங்களே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள். எந்த ஒரு அசுரனை அழிப்பதற்கும், கண்ணன் பெரிய முயற்சி எதையும் எடுத்ததில்லை. அவன் தனது குழந்தைப் பிராயத்திற்குத் தகுந்தாற் போல விளையாட, அதில் விழுந்து தாங்களே மாண்டு போனார்கள் அசுரர்கள்” என்றார் உத்தவர்.
ஸ்ரீ வைஷ்ணவ மரபிலே, ஆழ்வார்களுடைய பாசுரங்களுக்கு உரை எழுதிய ஆசாரியர்கள் அனைவரும் முத்தமிழையும் நன்கு கற்றவர்கள். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் ஆகிய மூன்றிலும் தேர்ந்தவர்கள்.
சொல்லார் தமிழொரு மூன்றும், சுருதிகள்
நான்கும் எல்லை
யில்லா அறநெறி யாவும் தெரிந்தவன்
இராமாநுசன்
(இராமாநுச நூற்றந்தாதி - 44)
– என்று திருவரங்கத்து அமுதனார் ஸ்ரீராமானுஜரைப் பற்றிக் கொண்டாடுகிறார். நாலாயிர திவ்ய ப்ரபந்தமே தீந்தமிழில் பாடப்பட்டது. கண்ணனைப் பற்றி முழுவதுமாக அனுபவித்த பெரியாழ்வார், ‘பெரியாழ்வார் திருமொழி’ யில் கண்ணனுடைய சிறுவயது பிராயத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அதில் சுவையான ஒரு செய்தியை விளக்குகிறேன்.
கண்ணன், தான் குழந்தையாக இருந்தபோது, ‘அப்பூச்சி’ காட்டி விளையாடினான். அதாவது, கண் இரப்பையை மடித்து, உள்ளிருக்கும் சிவப்பைக் காட்டி, குழந்தைகளைப் பயமுறுத்துவதை ‘அப்பூச்சி காட்டுதல்’ என்பர். இதைப் பெரியாழ்வார்
‘அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
– என்று பாடியிருக்கிறார். இப்பாடலை அரங்கநாதன் திருமுன்பே அரையர் ஸ்வாமி அபிநயம் பிடித்து, நடன முத்திரைகளை எல்லாம் வைத்து நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார். அப்பூச்சி காட்டுதலைப் பற்றிய பாடல் வரி வந்தபோது, அதற்கு தன் கைகளாலே அப்பூச்சி அபிநயம் பிடித்துக் காட்டி, கண் விழிகளைப் புரட்டிப் பிடித்து, காண்போருக்குப் புரிய வைக்கப் பார்த்தார். அப்போது, பின்னால் அமர்ந்திருந்த எம்பார் என்ற ஆசாரியர், இப்படி நினைத்தார் : ‘கண்ணன் என்ன உலகத்தில் உள்ள சாமான்ய குழந்தையா? இரப்பையைப் பிடித்து மடக்கி அப்பூச்சி காட்ட! அவன் தெய்வக் குழந்தை அல்லவா! ஆகவே இந்த அற்பமான செய்கையுடைய விளையாட்டெல்லாம் அவன் செய்ய மாட்டான். குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த போது, சுற்றுமுற்றும் யாரேனும் வருகிறார்களா என்று பார்ப்பான். யாருமில்லை என்று தெரிந்து கொண்டால், சடக்கென நான்கு திருத்தோள்களோடு சங்கு சக்கரம் பற்றிக் கொண்டு காட்சி கொடுப்பான். அதைக் கண்ட குழந்தைகள் வியப்பினால் திகைத்துப் போவார்கள். கண்ணனைப் பொறுத்தவரை, இதுதான் அப்பூச்சி காட்டுதல்’ என்பதை அரையர் ஸ்வாமிக்குத் தன் அபிநயத்தினால் உணர்த்தினார் ஆசாரியர். என்ன அழகான அனுபவம்!
தனது விளையாட்டினால் மற்றவர்களை அதிசயிக்க வைத்து ஆனந்தம் ஊட்ட வேண்டுமென்றாலும், சட்டென்று சங்கு சக்கரங்களைக் காட்டுகின்றான் குழந்தைக் கண்ணன்! இப்படி பல விளையாட்டுக்களைச் செய்து வந்த எம் பெருமான், பத்து வயதான பிற்பாடு, கோகுலத்திலிருந்து மதுரா வந்தடைந்தான். மதுரா, பெருமானுடைய சம்பந்தம் நீங்காத இடம்.
உத்தவர் தொடர்ந்து சொன்னார்: “கண்ணனைக் கொல்வதற்காக குவலயா பீடம் எனும் யானை, முஷ்டிக சானுரர்கள் எனும் அசுரர்கள், அனைத்துக்கும் மேல் தான், என்று கம்சன் சாமர்த்தியமாகத்தான் திட்டம் தீட்டி வைத்தான். ஆனால், கண்ணனோ அவர்கள் அனைவரையுமே முடித்து விட்டான். கம்சன் முடிந்த பிற்பாடு, மதுராவிலேயே கண்ணன் சில காலம் வாழ்ந்தான். இனி குருகுலவாசம் பண்ண வேண்டும் என்பதற்காக, அவந்திகா நகரம் – அதாவது இன்றிருக்கும் உஜ்ஜயினி எனும் நகரத்தை – அடைந்து, அங்கு சாந்திபனி எனும் ஆசாரியரிடத்தே, ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறுபத்து நாலே நாட்களில் கற்று முடித்தான்.
“பின்னர் துவாரகா நகரை நிர்மாணம் செய்து கொண்டு ஆட்சி புரிந்தான். பிறகு, விதர்ப்ப தேசத்து ராஜ குமாரியான ருக்மணிப் பிராட்டியை திருக்கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தான். எவராலும் அடக்க முடியாமல் போன அசுர பலம் கொண்ட ஏழு காளைகளை அடக்கி, சுயம்வரத்தில் நக்னஜித் என்பவனின் பெண்ணான, சத்யபாமாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான்.
“பின்னர் தன் மனைவியான சத்யபாமாவிற்காக, இந்திர லோகத்திலிருந்து பாரிஜாத மரத்தையே கொண்டு வந்து, துவாரகாவில் நட்டான். நரகாசுரன், முராசுரன் ஆகியவர்களை அழித்து, அங்கு சிறைப்பட்டிருந்த பதினாறாயிரத்து நூற்றெட்டுப் பெண்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், சமுதாயச் சீர்கேடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் தன் யோக மஹிமையால், ஒவ்வொருவரையும் தனித்தனி ரூபத்துடன் ஒரே சமயத்தில் மணம் புரிந்து கொண்டான்.
“பாரதப் போர் மூண்டது. பாண்டவர்களுடைய ஏழு அக்ஷௌஹிணி சைன்யத்தின் பக்கம் நின்று, கௌரவர்களின் பதினோரு அக்ஷௌஹிணி சைன்யத்தை முடித்தான். அர்ஜுனனுக்குத் தேரோட்டினான் கண்ணன். ஆனால், உண்மையில் அவன்தான் இந்த யுத்தத்தையே திட்டமிட்டு நடத்தி, பூமாதேவியின் பாரத்தைக் குறைப்பதற்காக, தீய மன்னர்கள் அனைவரையும் ஓரிடத்தில் சேர வைத்து முடித்தான். துரியோதனன் முதலான நூறு பேரும் அழிந்து போனார்கள். தர்மபுத்திரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
“உத்தரையின் கர்ப்பமான பரீக்ஷித்தையும் கண்ணன் காத்தருளினான். இப்படி தான் வந்த நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்த எம்பெருமான், பூவுலகத்தை விட்டுக் கிளம்ப வேண்டும் என்று முடிவெடுத்தான். தூய புன்முறுவல், கனிவு பொங்கும் பார்வை, அமுதம் போன்ற பேச்சு, குற்றமில்லாத சரித்திரம் இப்படி அனைத்தும் கொண்ட எம்பெருமான், ப்ரபாஸ க்ஷேத்ரத்திற்குப் போய் இப்பூவுலகத்தை விடத் துணிந்தான்.
“முனிவர்களுடைய சாபம் என்ற ஒரு காரணத்தை ஏற்படுத்தி வைத்து, யது குலத்தையும் முடித்தான். தான் வந்த காரியம் நிறைவேறியதால், வைகுண்டத்திற்குப் புறப்பட்டான் எம்பெருமான்” என்று சொல்லிய உத்தவர், கண்ணன் நினைவு நெஞ்சில் தளும்ப, கண்களில் நீர் சொரிய பெருமூச்செறிந்தார்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்