ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 31


இரண்டாவது ஸ்கந்தம் - ஆறாம் அத்தியாயம் (தொடர்ச்சி) 

‘ஆதிபகவன் முதற்றே உலகு!’

ன்மிகமும், விஞ்ஞானமும் ஒத்துத்தான் போகும் என்பதை இதோ நீங்களே படித்துப் புரிந்து கொள்ளலாம். விஞ்ஞானிகள் கூற்றுப்படி துகள்கள் சேர்ந்தன. அணுக்கள் உருவாயின. வெவ்வேறு அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளாக ஆயின. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்ஸிஜன் அணு ஆகியவை சேர்ந்தால் தண்ணீர் உருவாகும். இதுதானே நாம் புரிந்து கொண்டிருப்பது? இது அப்படியே ஏற்றுக் கொள்ளத் தக்கதுதான். இது ப்ரத்யக்ஷம் (நேரடி அறிவு). இதை ஒருநாளும் சாத்திரம் இல்லை என்று சொல்லாது. ஆனால், இதில் ஒரு கேள்வி உற்று நோக்கத்தக்கது. அணுக்கள் தாங்களே கூடுமா? அணுக்களுக்கு அறிவு உண்டா? அறிவிருந்தால்தானே முடிவு எடுக்க முடியும்? ‘இன்ன நாளில், இன்ன தேதியில், இன்ன நேரத்தில், இத்தனை வேகத்தில் நாம் வெடிக்க வேண்டும். இதுகாறும் குளிர்ச்சியாக இருந்தோம். இப்போது வெப்பம் வளர்ந்து விட்டது. இதோ! இப்போது வெடிக்கப் போகிறோம்’ – என்ற இந்த முடிவுகளை உணர்வற்ற அவை, தாமே எடுக்குமா? அறிவுள்ளவன்தானே முடிவு எடுக்க முடியும். அணுவுக்கு அறிவில்லை. அவற்றின் சேர்க்கையால் உருவான மூலக்கூறுகளுக்கும் அறிவில்லை. பின்னே யார் முடிவெடுப்பார்கள்?

அடுத்த கேள்வி. இந்த அணுக்கள் எங்கிருந்து வந்தன? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து – சூன்யத்திலிருந்து – தம்மைத்தாமே உருவாக்கிக் கொண்டனவா? அப்படியே அணுக்கள் ஒன்று கூடி திடீரென்று ஒருநாளில் உருவாகி விட்டனவென்றால், அவை ஏன் அதற்கும் முந்தைய காலத்திலேயே உருவாகவில்லை? இந்த சிருஷ்டிக்கு முன்னால், எதுவுமே இல்லையா? அல்லது ஏதேனும் இருந்ததா? – என்பதே அந்தக் கேள்வி! விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்வது: ‘சிருஷ்டிக்கு முன்னால் மற்றொரு சிருஷ்டி இருந்திருக்கலாம்; நாம் அறியோம்; அதை நிரூபிக்க வழியில்லை. இப்போது உலகம் படைக்கப்பட்டுள்ளது. மெது மெதுவே இதுவும் அழியும். கடைசியாக எல்லாமே விண்ணில் உள்ள ஈர்ப்பு விசை மிகுந்த ஒரு கருப்புக் குழிக்குள் (black hole) இழுக்கப்படும். மறுபடியும் பெரும் குளிர் சூழ்ந்து விடும். ஆக இப்படி வெப்பம் அதிகரித்து வெடிப்பும், வெப்பம் குறைந்து குறைந்து குளிரும் மாறி மாறி ஏற்படலாம். இப்படித்தான் ஏற்படும் என்று எங்களால் நிரூபிக்க முடியாது. அதே சமயம் ஏற்பட வாய்ப்பில்லை என்று நாங்கள் ஒதுக்கவும் முடியாது’ என்பதுதான் விஞ்ஞானிகளின் வாதம். மெய்ஞானம் என்ன கூறுகிறது? பகவான் சிருஷ்டிக்கிறார், அழிக்கிறார். மீண்டும் சிருஷ்டிக்கிறார், அழிக்கிறார். ஆக, மாறி மாறி வெப்பமும், குளிர்ச்சியும் வருகிறது என்பதை வேதாந்தமும் எடுத்துரைக்கிறது. அதை விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்கிறது. பின் வேறுபாடு எங்கே? மேலே நோக்குங்கள். 

அணுக்கள் அறிவற்றபடியால் தாங்களாகவே தம்மை உருவாக்கிக் கொள்ள முடியாது. அப்படியே உருவாகி விட்டாலும், எந்த அணு ‘சரி! இனி உலகம் அழியட்டும்’ என்று முடிவு எடுக்கும்? அணுக்கள் தாமாகவே முடிவெடுக்க வேண்டுமென்றால், அவற்றுக்கோ அறிவு கிடையாது. ஆகவே படைக்கப்பட்டவை படைப்பு நிலையிலேயே இருக்கத்தான் முடியுமே அன்றி, அவை அழிவுக்குப் போகவே முடியாது. யார் முடிவெடுப்பது? அனைத்தையும் தற்செயலான வாய்ப்பு (Probability) என்று தள்ளி விடுவதற்கும் முடியாது. 

ஏனெனில் எதற்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும். எதற்கும் ஒரு கர்த்தா இருந்தாக வேண்டும். ஆகவே, ‘அணுக்களே கூடி உருவாகும். ப்ரக்ருதி (இயற்கை) தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும் என்பதை, அறிவுபூர்வமாக ஏற்றுக் கொள்ள இயலாது. பின் என்ன பதில்? அப்போதுதான் வேதாந்தம் பதில் கூறுகிறது. அணுக்கள் கூடுவது உண்மை. அவை மூலக்கூறுகளாக மாறுவதும் உண்மை. அதிலிருந்து தண்ணீரும், நெருப்பும், நிலமும் தோன்றுவது உண்மை. ஆனால் இவை அனைத்தையும் தோற்றுவித்து, இவை அத்தனையையும் மாறுதல்களுக்கு உட்படுத்தி, அவ்வவற்றுக்குரிய சக்தியையும் கொடுத்து, அத்தனையும் செய்வதற்கு ஸங்கல்பிக்கும் (உறுதி பூணும்) ஒருவன் உள்ளான்! அவன்தான் பரப் ரஹ்மம் – பரமாத்மா – ஸர்வேச்வரனான பகவான்! இந்த அணுக்களும், மூலப் பொருட்களும், ப்ரக்ருதியும், ஜீவனும் இவை அனைத்தும் அந்த பரப்ரஹ்மத்தின் சரீரம். அந்த சரீரம் மாறுதலுக்கு உட்படுகிறது. அதிலிருந்துதான் இவ்வளவு பெரிய பிரபஞ்சம் தோன்றுகிறது. ஆக, பேரறிவின் வடிவான ப்ரஹ்மம் முடிவெடுக்கிறது! ‘நான் என் உடலாக இருக்கும் இந்த சூட்சும ப்ரக்ருதியையும், சூட்சுமமான ஜீவர்களையும், மாறுதல்களுக்கு உட்படுத்தப் போகிறேன். இப்போது அனைத்தும் உலகமாகப் பரிணமிக்கட்டும்’ – என்று ஸங்கல்பித்துக் கொள்கிறது. 

இந்த பரிணாமத்தைத்தான் ‘ப்ரபஞ்ச சிருஷ்டி’ என்று சொல்கிறோம். மறுபடியும் அனைத்தும் ப்ரஹ்மத்தின் உடலில் போய் ஒன்றுகிறது. அதைத்தான் ப்ரளயம் என்று கூறுகிறோம். ஆக, இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாமா? கண்ணால் கண்டு, நிரூபிக்கப்பட்டு, சோதனைச் சாலையில் நாம் எவற்றை நிலை நிறுத்தி விட்டோமோ, அவை அனைத்தும் உண்மைதான். ஆனால் அந்த உண்மையின் முடிவில் சில கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. அந்த விடையைத் தேடினோம் மெய்ஞானத்தில், அதாவது வேதாந்தத்தில் – அதற்கு பதில் கிட்டிற்று. 

இந்த அணுக்களும், மூலக்கூறுகளும், மூலப் பொருள்களும் அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரம். அவர் முடிவெடுப்பார். ‘இப்போது சிருஷ்டி; இப்போது பிரளயம்’ என்று தீர்மானிப்பவர் அவரே! அறிவே வடிவானவர் அல்லவா பகவான். ஆகவே, அவர் முடிவெடுத்து இவை அனைத்தையும் படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார். இதுதான் உண்மை. ஆக ஒரு குறிப்பிட்ட நிலை வரை விஞ்ஞானம் நம்மைக் கொண்டு போய் விட்டது. அதுவரை வந்துள்ள நிலையை மெய்ஞானம் மறுத்துப் பேசவில்லை.

அது விட்ட நிலையில் இருந்து மேலே தொடர்ந்து கூறிற்று. இதில் என்ன குறை? இப்படித்தான் ப்ரத்யக்ஷத்தையும், (நேரடிப் புலனறிவையும்), வேதாந்தத்தையும் ஒன்றாக நாம் நோக்க வேண்டும். வேதத்தின் கடமை, நம் புலன்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகளைக் கூறுவதுதான். நம் நேரடி அறிவுக்குப் புலனாகாதவற்றை எடுத்துக் கூறி வழி நடத்தும். நமக்குப் புரியாததை விளக்கும். ‘ப்ரஹ்மத்தின் உடல்தான் இவ்வுலகும், உயிர்களும் ; அவர்தான் படைத்து, காத்து, மீட்டுக் கொள்கிறார்’ என்ற உண்மையை – நமது நேரடி அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியாத உண்மையை – அது உணர்த்தும். எது நமக்கு ஏற்கெனவே அனுபவ ரீதியாகத் தெரியுமோ, அதையே வேதாந்தம் கூறாது. அதற்கு அவசியமும் இல்லை. எப்போது ப்ரத் யக்ஷத்தில் உலகம் எப்படி உருவாகிறது என்பதை அறிவியல் அடிப்படையில் ஓரளவு தெரிந்து கொண்டோமோ, இதையே திரும்பத் திரும்ப வேதாந்தம் சொல்ல வேண்டியதில்லையே! 

ஆனால் நாம் நேரடியாக அறிய முடியாத உண்மை – ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்பது. இப்போது இரண்டு விதத்தில் பார்த்துள்ளோம். ‘ப்ரஹ்மம் ஜகத் காரணமே’ என்றும் பார்த்தோம். ‘ப்ரஹ்மமே ஜகத் காரணம்; மற்றொன்று அல்ல’ என்பதையும் நோக்கினோம். இந்த இரண்டைத் தான் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் வேத வியாஸர் மிகவும் நேர்த்தியாகத் தெளிவு படுத்தியுள்ளார். மற்றொரு ஐயத்தை நோக்குவோம். 

ப்ரஹ்மம்தான் படைக்கிறார். ப்ரஹ்மம்தான் காக்கிறார். ப்ரஹ்மம்தான் அழிக்கிறார் என்று கூறுகிறோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியன அவரது முத்தொழில்கள். உடனே ஒரு ஐயம் எழும். ‘இவை மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாயிற்றே. முரண்பட்டதை எப்படி பெருமானால் செய்ய முடியும்? ஓர் உதாரணம். ஒரு மாட்டைக் காண்கிறேன். அது முழுக் கொம்போடே, அரைக் கொம்போடே, மொட்டைக் கொம்போடே நிற்கிறது என்று மாட்டுக்கு அடையாளம் கூறினால், எல்லோரும் சிரிப்பார்கள் அல்லவா! அது எப்படி? மாடு முழுக் கொம்போடு இருந்தால், அரைக்கொம் போடு இருக்குமா? அரைக்கொம்போடு இருந்தால், மொட்டைக் கொம்போடு இருக்குமா? இருக்கவே முடியாது. மாட்டின் அடையாளமே தவறு என்று கூறுவார்கள் அல்லவா? வேதாந்தம் ப்ரஹ்மத்தை அடையாளம் காட்டும்போது, படைக்கிறான், காக்கிறான், அழிக்கிறான் என்று கூறுகிறது. உடனே நாம் எள்ளி நகையாடுவோம். 

அது எப்படி? படைப்பவனே அழிப்பானா? படைப்பும், அழிப்பும் முரண்பட்ட தொழில்கள் ஆயிற்றே! காத்தலும், அழித்தலும் முரண்பாடுகள் அல்லவா? எப்படி இதை ஒன்றாக நோக்க முடியும்? ஆக ப்ரஹ்மத்துக்குச் சொல்லப்பட்ட அடையாளங்களே தவறு. ஆகவே, அடையாளம் கொண்டு ப்ரஹ்மத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. வேதாந்தத்தினால் பிரஹ்மத்தை அடையாளம் காட்ட முடியாது’ என்று ஆட்சேபம். இது தவறான கண்ணோட்டம். என் கண்ணில் குற்றத்தை வைத்துக் கொண்டு, அதோடு எதைப் பார்த்தாலும் குற்றம் பொருளில் இருப்பது போல்தான் தோன்றும். இதற்கு எங்கு வைத்தியம் இருக்கிறது? நம் கண்ணில் இருக்கும் குற்றத்தைத்தான் போக்கிக் கொள்ள வேண்டியுள்ளதே தவிர, பொருளில் குற்றம் இல்லை. நாம் வேதாந்தத்தைச் சரியான கண்ணோட்டத்திலே பார்க்க வேண்டும். 

இப்போது பார்ப்போம்: அதே மாட்டைப் பற்றிப் பேசுவோம். அந்த மாடு நிகுநிகுவென்று உயர்ந்த, சீவப்பட்ட கொம்போடே இருந்தது. எங்கோ சென்றது. முட்டிக் கொண்டது. பாதிக் கொம்பும் உடைந்தது. இப்போது அரைக் கொம்போடே இருக்கிறது. மாட்டுக்கு உடையவர் பார்த்தார். அரைக் கொம்போடு என் மாடு அழகாக இல்லை. முழுவதுமாகச் சீவி விடுவோம். மறுபடியும் புதிதாகக் கொம்பு முளைக்கட்டும். அப்போது மாடு அழகாக இருக்கும் என்று அரைக் கொம்பையும் சீவி எடுத்து விட்டார். இப்போது மொட்டைக் கொம்போடே இருந்தது. ஆக, ஒரே மாடு முழுக் கொம்போடும், அரைக் கொம்போடும், மொட்டைக் கொம்போடும் இருக்கலாம். குற்றமில்லை. ஆனால், வெவ்வேறு சமயத்தில் இருக்கும். ஒரே நேரத்தில் முழுக் கொம்போடே, மொட்டைக் கொம்போடே, அரைக் கொம்போடே இருக்க இயலாது. ஆனால், வெவ்வேறு காலத்தில் இருக்கலாம். இதில் ஒரு குற்றமும் இல்லை. இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு ப்ரஹ்மத்துக்கு வாருங்கள். 

முதலில் எழுந்த ஆட்சேபம் என்ன? ப்ரஹ்மம் படைக்கிறது, காக்கிறது, அழிக்கிறது என்றால் எப்படிச் செய்ய முடியும்? மூன்றும் முரண்பட்டவைகளாயிற்றே! ஆகவே, படைக்கும் ப்ரஹ்மம் வேறு. காக்கும் ப்ரஹ்மம் வேறு. அழிக்கும் ப்ரஹ்மம் வேறு – என்று மூன்று ப்ரஹ்மங்களை ஒத்துக் கொள்வீர்களா? என்ற கேள்வி எழலாம். இது அறியாமை. மூன்று ப்ரஹ்மங்கள் ஒரு நாளும் கிடையாது. ப்ரஹ்மம் படைக்கும் போதேவா அழிக்கிறது? படைப்புக்குக் காலமே வேறு. காக்கும் காலமே வேறு. அழித்துத் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் காலமே வேறு. ஆக வெவ்வேறு காலங்களில் ப்ரஹ்மம் படைத்து, காத்து, அழிக்கிறபடியால், ஒரே ப்ரஹ்மம் முத்தொழில்களையும் செய்வதில் ஒரு குறையும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆக, ப்ரஹ்மம், ஜகத் காரணமே; ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று வெவ்வேறு கோணத்தில் இருந்து நாம் கண்டோம். நான் உங்களைச் சில கடினமான விஷங்களைக் கூறி கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இருந்தாலும் சொல்லியாக வேண்டிய தேவை உள்ளது. நாம் அனைவரும் மூல தத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்டால்தானே, ஜகத் காரணமான அந்த ப்ரஹ்மத்தைத் தியானித்து முக்தி பெற முடியும்? நாம் சேர்ந்து முயற்சி செய்து ப்ரஹ்மத்தைப் பற்றி மேலும் அறிவோம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை