மார்கழி நீராட்டம் - கோவை எஸ். திருமலை

மார்கழி நீராட்டம் என்பதன் விசேஷம் என்ன? அதை, ஒரு 'பிரம்மானுபவம்' என்கிறார்கள் பெரியோர். அதன் பொருள்தான் என்ன?

அந்த பிரம்மானுபவம் யாருக்கு வாய்க்கிறது? ஏன் வாய்க்கிறது? எப்படி இருந்தால் வாய்க்கிறது என்பதை திருப்பாவை வழியில் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அற்புதங்களை அனுபவிக்க முடியும். 

செய்யும் கிரிசைகள், செய்யாதனசெய்யோம் என்பது என்ன? நமது அன்றாடக் கடமைகளைச் செய்வதுடன் பரமனைப் பாடுதல், எல்லாரும் நற்கதி பெற பகவானை வேண்டுதல் போன்ற நற்காரியங்களைச் செய்வது 'செய்யும் கிரிசைகள்.'

பொய் கூறுதல், தகாதன செய்தல், பெரியோர்கள் தவறு என்று கூறியதைக் கேட்காமல் இருத்தல், விரத, பாவை நோன்புக் காலங்களில் விலக்கவேண்டியவற்றை விலக்காமல் தவறு செய்தல் போன்ற காரியங்களே 'செய்யக் கூடாதவை.' அதையே, 'செய்யாதன செய்யோம்' என்கிறாள் ஆண்டாள்.


ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி என்பது, துறவிகளுக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் உணவு கொடுத்தலும், தேவைப்படுவோருக்குப் பொருளுதவி செய்தலையும் குறிக்கிறது. ஒருவரால் அப்படி உதவ இயலவில்லையென்றால், அந்த உதவி எங்கே கிடைக்கும் என்று தேவையில் இருப்போர்க்கு கைகாட்டி, அதாவது ஆற்றுப்படுத்தி, உதவி, வேண்டியவர்களும் உதவுவோரும் உய்யுமாறு, புண்ணியம் அடையுமாறு செயல்பட்டு நாமும் நற்கதி பெற வேண்டும்.

கடல் நீர் ஆவியாகி, வானில் கருமேகங்களாகக் கூடி, இடித்து, மின்னி, சரமழையாய் நமக்கே மீண்டும் பெய்யும் என்பது அறிவியல் விஷயம். இதைக் குறிப்பிடும் திருப்பாவை, மேகங்களை திருமாலின் நிறத்தோடும், மின்னல், இடி, மழையை ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து, சார்ங்கம் போல் சரமழை என்று வருணிப்பதே தமிழின்பம். இவை திருமாலின் ஆயுதங்கள். அது மட்டுமா? மழை பொய்த்தும் கொடுக்கும். அதிகம் பெய்தும் கெடுத்து விடும். அதனால் மக்கள் நன்கு வாழத் தேவையான அளவு, 'வாழ உலகினில் பெய்திடாய்' என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் என்னும் வரிகட்கு ஆசார்யர்களின் விளக்கம் அற்புதமானது. நமக்கு மேல் யாருமில்லை என்னும் கர்வம் அழிந்து பகவானின் திருவடிகளே கதி என்று சரண் அடைந்து விட்டால், நாம் செய்த, செய்கின்ற பாபங்கள், தீயினால் பொசுங்கி அழிந்து போகும்; தூசு போல் தானே அழிந்து போகுமாம்!

நோன்பு, விரதம் என எத்துணைப் பெயரிட்டு அழைத்தாலும் அதன் நோக்கம் பிறவித்துன்பங்களிலிருந்து விடுபட்டு, அந்த ஜீவாத்மா பரமாத்மாவை, அதாவது மோட்சத்தை அடைவதே ஆகும். அதற்கு அந்த ஜீவாத்மா புனிதமானதாக அமைய வேண்டும். அதுவே நோன்பு. இதையே மாலே மணிவண்ணா பாசுரம் விளக்குகிறது.

குற்றேவல், பறை தா என்பன தொண்டு, சேவை, கைங்கர்யம் ஆகும். பகவானை அடைய அவருக்குத் தொண்டு செய்வதே குற்றேவல், பறை ஆகும்.

நெய்யுண்ணோம், பால் உண்ணோம் என இரண்டாவது பாசுரத்தில் பாடிய ஆண்டாள், ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த, தயிர் அரவம் என்று அடுத்த பாசுரங்களிலேயே கூறுவதன் உட்பொருள் என்ன? விரதம் இருப்போர் இவற்றிலிருந்து விலகி நிற்கட்டும். முதியோர், குழந்தைகள், விரதம் இல்லாதவர்கட்கு இவை வேண்டுமே! அதனால் எவருமே தன் அன்றாடக் கடமைகளை விடாது, பிறருக்காகவாவது செய்திட வேண்டும். யசோதை தினமும் தயிர் கடைந்து பிறருக்கு உதவுவாராம். அது மட்டுமல்ல; செய்யாமல் இருந்துவிட்டால் பால், வெண்ணெய், தயிர், நெய் எனத் தேடிவரும் கண்ணனுக்கும், அவரது சீடர்களுக்கும் அவை கிடைக்காமல் போய்விடுமே! அதனால் பாகவத, பகவத் அபசாரம் எனப்படும் தொண்டர்கட்கு இழைத்த குற்றம், பகவானுக்கு இழைத்த குற்றம் என்னும் தவறுகள் நிகழ்ந்துவிடுமே! அதனால் தயிர் கடையும் தொழில் விரத காலத்திலும் நடக்கிறதாம்! கலியுகம், கடுமையான யுகம் ஆயிற்றே! இந்த யுகத்தில் கடைத்தேறுவது எப்படி? அதற்கும் திருப்பாவையாம் ஆண்டாளே வழிகாட்டுகிறார்.

பாற்கடலுள் பையத்துயின்ற பரமனை, ஓங்கி உலகளந்த உத்தமனை, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க வேண்டும். கேசவனை, முகில்வண்ணனை, மனத்துக்கு இனியானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை, பங்கயக் கண்ணனை, மாற்றாரை மாற்றழிக்கவல்ல மாயனை துயிலெழப் பாடி பறை கொண்டு நாம சங்கீர்த்தனம் செய்ய, பஜனை செய்ய, பாசுரம் பாட, ஆசார்ய அடியார்கள் வழிசென்று வேதமோத, கலியுகமும் நல்ல யுகமாகி நற்கதி, நற்பலன்களைத் தரும்.

'கூடாரை வெல்லும்' என்னும் பாசுரம் உயிர் நாடி போன்ற பாசுரம். ஆசார்யன், வேதம், பிரபந்தம், சாஸ்திர சம்பிரதாயம், நல்லோர் ஆகியவற்றுடன் கூடாதவரை, மக்களுக்காக வெல்பவன் கோவிந்தன்.

கூடியிருந்து, குளிர்ந்து என்றால், ஆசார்ய புருஷர்கள் மூலம் பகவானோடு கூடியிருக்கும் மோட்சம் பெறுதல் என்பதாகும். பல்கலனும், ஆடையும் என்பன ஞானம், தொண்டு மனப்பான்மையைக்
குறிக்கும். இப்படிப் புரிந்து செய்தால், இதுதான் மார்கழி நீராடல்!.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - தீபம் டிசம்பர் 2013

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை