ஆண்டாளின் அவதாரம்
பூமிப் பிராட்டியார் திருமாலிடம் வேண்டி திருமாலடியராக, ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பூந்தோட்டத்தில், திருத்துழாயின் அடிவாரத்தில் சிறு பெண் குழந்தையாக, நளவருஷம் ஆடி மாதம் பூர நன்னாளில் அவதாரம் செய்தார்.
"இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்- குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகந்தனை யிகழ்ந்து
ஆழ்வார் திருமக ளாராய்"
(உபதேச ரத்ன மாலை - 22)
பூந்தோட்டத்தில் தோன்றிய ஆண்டாளை எடுத்துச் சென்று கோதையென்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பெரியாழ்வார். கோதைக்குத் திருமால் பற்றிய வரலாறுகளை சொல்லிக் கொடுத்தார். திருமாலை அடைய பாவை நோன்பை நோற்று, திருப்பாவையைப் பாடினாள். தக்க பருவம் அடைந்ததும் கோதையின் திருமணத்தைப் பற்றிப் பேசினார் பெரியாழ்வார். ஆண்டாளோ தான் மானிடரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன், திருமாலையே திருமணம் செய்துகொள்வேன் என்று கூறி, எப்பொழுதும் திருமாலின் நினைவாகவே இருந்தாள். ஆனால் திருமாலோ ஆண்டாளுக்குக் காதல் வேட்கையைத் தோற்றுவித்து காலந்தாழ்த்தினார்.
நாச்சியார் திருமொழி - முதல் திருமொழி
பாசுரம் - 1
"தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித்து அனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கு என்னை விதிக்கிற்றியே"
ஓ காமதேவனே ! மார்கழி மாதம் முழுவதும் ஒரு மாத காலம் பாவை நோன்பு நோற்றிருந்தோம். இனி இத் தைமாதத்தில் ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளும் இடத்தைச் சோதித்து, வண்ணங்களுடன் அழகான கோலமிட்டு அலங்கரித்தோம். மாசி மாதம் முதல் 15 நாட்களில் எம்பெருமான் அழகுக் கேற்ப
நுண்ணிய மணலைக் கொண்டு, அவன் எழுந்தருளும் தெருவை மிகவும் அழகாக அலங்காரம் செய்து வாழக் கூடுமோ? என்னும் ஆசையாலே காமதேவனாகிய உன்னையும், உன் தம்பியான சாமனையும் வணங்கினேன். எனவே, கருணைமிக்க மன்மதனே எம்பெருமானுக்கு மாறுபாடானவர்கள் மீது தீயை உமிழும் சக்கரத்தாழ்வானைத் திருக்கையிலே ஏந்தியிருக்கும் திருவேங்கடமுடையானுக்கு அனைத்து தொண்டுகளையும் செய்யும்படி என்னைக் காக்கவேண்டும்.
திருவேங்கடவன் அருள்பெறாமையால் தன் உள்ளமும், உடலும் ஒருங்கே வலிவிழந்து, தொண்டுக்கு இடையூறு நிகழாமல் இருக்கத் தன்னைக் காக்கும்படி, ஆண்டாள் காமனை வேண்டினாள்.
பாசுரம் - 3
"மத்தநன் நறுமலர் முருக்க மலர்
கொண்டுமுப் போதும் உன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகஎன்னை விதிக்கிற்றியே"
ஓ காமதேவனே ! நறுமணம் மிக்க ஊமத்த மலர்களையும், முருக்க மலர்களையும் மூன்று காலமும் உன் பாதங்களை வணங்கி, உன்னை வழிபடுகின்றேன். நான் உன்னை வழிபட்டதற்குப் பலனாக என் மன விருப்பத்தை நீ நிறைவேற்றாமல் போனால், என் உள்ளம் மிகவும் கொதிப்படைந்து, மன்மதன் உண்மையில் பலன் தரும் தெய்வமல்லன், பொய்த் தெய்வம் என்று நாட்டு மக்கள் அனைவரும் அறியும்படிச் செய்து, உன் பெருமைக்கு இழுக்கை உண்டாக்குவேன். அப்படி நீ இழுக்கை அடையாமல், தப்பாமல் புகழ் பெற முயற்சிப்பாய்.
மன்மதனே நீ எனக்குச் செய்ய வேண்டிய செயலைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் மலர்களாகிய அம்புகளை, வில்லில் தொடுத்துக்கொண்டு, எங்களைக் காப்பதற்காகவே எழுந்தருளியுள்ள கோவிந்தன் என்கின்ற பெயரை என் நெஞ்சிலே எழுதி என்னைத் திருவேங்கடமுடையானிடத்தில் சேர்க்க வேண்டும்.
வேறு பொருள் : மன்மதனே! என்னைப் புறக்கணித்து நிற்கும் திருவேங்கடவன் மேல், உன் வில்லில் மலர்களாகிய அம்புகளைத் தொடுத்துச் செலுத்தவேண்டும். அதற்கும் அவன் முகங்காட்டவில்லையென்றால், இந்த கோவிந்தன் ஒரு பெண்ணை ஆதரிக்காமல் துன்புறுத்துகிறான் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்தி, அவன் பெயருக்கு களங்கத்தை உண்டாக்குவேன். கோக்களையும், கோபியர்களையும், கோபர்களையும், கோகுலத்தையும் காத்ததாலன்றோ இவனுக்கு கோவிந்தன் என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆனால், கோவிந்தன் என்று பெயர்பெற்ற இந்த திருவேங்கடவன் ஒரு பெண்ணின் துயரத்தைப் போக்காமல் துன்பப்படுத்துகின்றான். எனவே இவனுக்கு கோவிந்தன் என்ற பெயர் எப்படிப் பொருந்தும் என்று எல்லோரிடமும் கூறி அவன் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவாயாக. இப்படியெல்லாம் சொல்வேன் என்று அவனை பயமுறுத்தி அவன் என் மீது அருள்புரியவும், யான் அவனோடு சேரவும் எனக்கு உதவிபுரிவாயாக. அல்லது உனது அம்பிலே அவன் கோவிந்த நாமத்தை எழுதி, அதனை என்மீது செலுத்தி, என் நெஞ்சம் அவனிடத்தில் செல்லவும், நான் அவனுடன் கூடவும் செய்வாயாக.
இராமபிரானுடைய ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே சென்றதால்தான், அனுமன் விண்ணில் பறந்து கொண்டு சென்று கடலைக் கடந்து, இலங்கையில் சீதையைக் கண்டு துாதுச்செய்தியைச் சொல்லி கணையாழியைக் கொடுத்தான். எனவே நீ அவனது திருநாமத்தை எழுதிய உன் பாணத்தை என் மீது எய்தி, என்னை அவனுக்கே அடிமையாக்குவாயாக. பிராட்டி ராம நாமத்தைக் கேட்டு, கணையாழியைப்பெற்று, பிரிவுத் துயர் நீங்கி மகிழ்ந்ததைப்போல யானும் அவனது கோவிந்த நாமத்தைக் கேட்டு மகிழ்வேன் என்று மன்மதனிடம் கூறினாள் ஆண்டாள்.
நான்காம் திருமொழி
பாசுரம் - 2
"காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னொடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே"
ஓ கூடல் தெய்வமே!
இராமபிரான் தண்டகாரண்யத்தில் ரிஷிகளுடன் கூடியிருந்து வனவாசம் அனுபவித்ததைப் போலவும், கண்ணபிரான் பிருந்தாவனத்தில் கோபியருடன் கூடியிருந்ததைப் போலவும், இராமபிரான் திருவயோத்தியில் அனைவருடன் கூடியிருந்து நகர வாழ்க்கையை
அனுபவித்ததைப்போலவும், கண்ணபிரான் திருவாய்பாடியிலே யாதவப் பெண்களுடன் கூடியிருந்ததைப் போலவும், திருக்கண்ணபுரத்திலே வீற்றிருப்பவனும், நகரகானகவாசம் இரண்டையும் ஒன்றாகக் கருதி இனிதாகக் கொள்ளும் மனப்பான்மையுடையவனும் தேவர்களுக்காக பரமபத உயர்ந்த நிலையை விட்டுத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு வாமனனாக அவதரித்து மாவலியிடம் மூவடி மண் வேண்டி, அனைத்து உலகங்களையும் தமது திருவடியால் அளந்தருளியவனும் ஆகிய எம்பெருமான் மிக்க கருணையோடு ஓடி வந்து எனது கையைப் பிடித்து அணைத்துக் கொள்வானாகில் நீ கூடவேண்டும். அதாவது அவன் எழுந்தருளி என்னைக் கூட்டிக்கொள்ளும்படியாக, நீ உதவி புரிய வேண்டும்.
கூடல் இழைத்தல்
நினைத்த காரியம் நிறைவேறுமா என்பதையறிய கண்ணை மூடிக்கொண்டு வட்டம் போட்டால், வட்டம் கூடினால் காரியம் நிறைவேறும் என்றும், வட்டம் கூடவில்லையென்றால் காரியம் நிறைவேறாது என்றும் நம்பிக்கை கொள்வர்.
இதைப் போலவே, திருவேங்கடவன் தன்னை வந்தடைவானா என்பதை அறிய ஆண்டாள் கூடலிழைத்தாள் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஐந்தாம் திருமொழி
பாசுரம் - 2
"வெள்ளை விளிசங்கு இடக்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டு காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடும் குயிலே
மெள்ள விருந்து மிழற்சி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்."
இப்பாசுரத்தில், வேங்கடவனிடம் சென்று அவன் தன்னிடம் வரும்படிக் கூப்பிடும்படி குயிலினை வேண்டுகின்றாள் ஆண்டாள்.
தேன் ஒழுகும் செண்பகப் பூவிலே உள்ள சாரமான தேனை உண்டு மகிழந்து, உன் இனிமையான குரலால் இசைபாடும் குயிலே! நீ எனக்கு ஒரு நல்ல செயல் செய்யவேண்டும். வெண்மையான திருச்சங்காழ்வான் கார்முகில் போன்ற திருமேனியுடைய திருமாலின் இடக்கையில் இருந்து கொண்டு, என்னைப்போலே நீங்களும் பகவத் தொண்டு செய்ய வாருங்கள் என அனைவரையும் அழைக்கும். அத்தகைய திருச்சங்கினை ஏந்தியுள்ள திருவேங்கடவன், அவனைக் காணப் பேராவல் கொண்டுள்ள எனக்கு, அவனது திருவுருவைக் காட்டாமல் மறைக்கின்றான். அவன் காட்டாமையால், அவன் திருவுருவை மறந்து பிழைக்க நினைத்தாலோ மறக்கவும் முடியவில்லை. என் உள்ளத்தில் வந்து புகுந்து, நினைக்கும்போதும், அவன் பெயரைச்சொல்லும்போதும், உள்ளம் ஒடிந்து உருகும்படிச் செய்கின்றான். அத்தளர்ச்சியால் உயிரை விடும் நிலையை அடைந்தேன். இவளை இப்படிப் பிழைக்கவிடலாமா? விடக்கூடாது இன்னும் நெடு நாட்கள் துன்பப்படுத்தவேண்டும் என்று நினைத்து, மறுபடியும் உயிர் தலையெடுக்கச் செய்கின்றான்.
பழையபடி உள்ளம் துன்புற்று துடிக்கச் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டுள்ளான். நான் இப்படி துன்பப் பட்டுக் கொண்டிருக்க, நீ மட்டும் மகிழ்வோடு இனிமையாகப் பாடிக் களித்து பொழுது போக்கலாமா? இது உனக்கு நியாயமா? எனவே நீ திருவேங்கடவனிடம் சென்று, என் நிலையை எடுத்துச் சொல்லி அவன் இரக்கப்பட்டு என்னிடம் வரும்படிச் செய்வாயாக என்று குயிலிடம் வேண்டுகின்றார் ஆண்டாள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்