மறப்பு ஒன்று இன்றி மகிழ்வனே!
மலையதனால் அணைகட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே!
கலைவலவர் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!
சிலைவலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!
பெருமாள் திருமொழி
எங்கெங்கும் காணினும் சக்தியடா என்பதைப்போல் குலசேகராழ்வாருக்கு எல்லாமே எம்பெருமான் ஸ்ரீராமனாகத்தான் தெரிகிறது. பரந்துபட்ட பார்வையும், அன்பும், மோகமும், பாசமும் ஒன்றன் மீது நமக்கு ஏற்பட்டால் அது அப்பொருளின் மீது எல்லையில்லாத பரவச உணர்ச்சிகளை ஏற்படுத்தும். இது ஒரு உளவியல் உண்மை! குலசேகராழ்வார் திருவரங்கத்து அரங்கனையும் சரி, திருக்கண்ணபுரத்து செளரிராஜப் பெருமாளையும் சரி சாட்சாத் ராமனாகவே பார்த்ததால் அதில் ஏற்பட்ட பரவசத்தில் இந்தப் பாசுரத்தைப் படைத்திருக்கிறார்! ‘‘மலைகளைக் கொண்டு திருஅணை கட்டி கடலைக் கடந்து சென்று அரண்கள் சூழ்ந்த இலங்கை நகரை அழித்தவனே! ஆர்ப்பரிக்கிற கடல் அலைகளுக்கு நடுவே தேவர்களுக்கு அமுதத்தைத் தந்தவனே! இப்படிப்பட்ட ராமனே நீ எங்கு இருக்கிறாய் தெரியுமா? கலைகளைக் கற்று வாழும் பெருமக்கள் தங்கியிருக்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிறாய் என் கரிய மாணிக்கமே! வில்லாளனே!
பெருவீரனே! ராமபிரானே! உன்னைத் தாலாட்டுகிறேன் என்கிறார். தாலாட்டு என்பதே அன்பின் வெளிப்பாடு. ஊருக்கெல்லாம் அருளை வாரி வழங்குகிற காகுத்தன் ஸ்ரீராமனை நெகிழ்ச்சித் தன்மையோடு பார்க்க குலசேகராழ்வார் எந்தவிதமான மனநிலையைப் பெற்றிருக்க வேண்டும்! ராமாயணம், மகாபாரதம் என்பது பாரத தேசத்தின் இருபெரும் இதிகாசங்கள். நாட்டின் எந்த மூலையிலாவது இவையிரண்டும் ஒலிக்காத நாட்களே கிடையாது. இந்திய மக்களின் ஆன்மாவை ஊடுருவிய இந்த இரண்டு இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்து நிகழ்வை எல்லாம் எளிய இனிய தமிழில் பைந்தமிழ்ப் பாசுரங்களாக வார்த்தெடுத்திருக்கிறார் என்றால் ராமன் குலசேகராழ்வார் நெஞ்சில் முழுவதுமாக குடியேறி இருக்க வேண்டும். இல்லையெனில் பெருமாள் திருமொழிப் பாசுரத்தில் எம்பெருமான் ஸ்ரீராமனை இப்படிக் கொண்டாட அவரால் முடிந்திருக்குமா?
குலசேகராழ்வார் எல்லாவற்றிலும் ராமனைப் பார்த்தார் என்றால், ஞானத்தந்தையான நம்மாழ்வார் அதையும் ஒருபடி கடந்து நின்று அதாவது ஞானவெளியில் அதன் எல்லையில் நின்று கொண்டு பரம்பொருளான பரமாத்வாவைப் பார்க்கிறார். அவர் வழியாக அந்த அண்டசராசரங்களின் தலைவனான பரமாத்வை நம்மையும் பார்க்க வைக்க முயன்றிருக்கிறார். முதலிலே அவர் உள்வாங்கிக் கொண்டு அதை அப்படியே நமக்கு ஏற்றாற் போல் தந்திருக்கிறார்! கடல் போல் பரந்துபட்ட அவருடைய திருவாய்மொழிப் பாசுரத்தில் ஒரு தேன்துளிதான் அவரின் இந்தப் பாசுரம்!
சிறப்பில் வீடு சொர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி, என்றும் மகிழ்வனே!
திருவாய்மொழி
எம்பெருமானை நோக்கிய பார்வையில் நம்மாழ்வார் சொர்க்கம், நரகம் என்று எதுவானாலும் எனக்கு அமையட்டும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அதை ஒரு பொருட்டாகவே நான் கருதவில்லை. எனக்கு சொர்க்கம் கிடைத்தாலும் சரி, நரகமே வாய்த்தாலும் சரி, அதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏன் தெரியுமா? நம்மைப் போல பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு அற்றவனான அந்த ஆண்டவனை எம்பெருமானிடத்தில் என் மனம் லயித்துப்போய் விட்டது. அவனிடத்தில் நான் என்னை தஞ்சம் புகச் செய்தபின் வஞ்சகமான என் முன்வினைகள் என்னை என்ன செய்துவிட முடியும்? கேள்வி மேல் கேள்வி கேட்டு அதற்கான தக்க பதிலைத் தருகிறார் ஆழ்வார். எய்துக, எய்தற்க, எனக்கு கிடைக்கட்டும், கிடைக்காமல் போகட்டும். மறப்பு ஒன்று இன்றி, என்றும் மகிழ்வனே!
இந்த மயக்கும் தமிழில் உள்ள மந்திர வார்த்தைகளை நாம் சாதாரணமாக எண்ணி விடலாகாது. பலம் பலவீனமுள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சி. பகல், இரவு போல் வந்து வந்து போகும். ஆனால், நம்மாழ்வார் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? என்றும் மகிழ்வனே என்கிறார். அந்த பரமாத்மாவை அவன் திருவடியில் முழுவதுமாக இறக்கி வைத்த பிறகு நமக்கு துன்பம் எப்படி வர முடியும் என்கிறார். இது சாதாரண நம்பிக்கையல்ல, திட நம்பிக்கையும் கிடையாது. சரி வேறென்ன? பரிபூரண சரணாகதி, பகவானின் பாத கமலங்களை கெட்டியாகப் பற்றி கொண்டவர்களால் மட்டுமே இதை அனுபவிக்க முடியும், உணர முடியும். இந்த இறையுணர்வுப் பயணத்தில் ஓடக்காரனைப்போல நம்மை பக்தி ஆற்றில் நல்லவிதமாக கரை சேர்க்க முயல்கிறார், நம்மாழ்வார். பரம்பொருளை நினைத்து நினைத்து நெஞ்சம் கலங்குகிறார், நம்மாழ்வார்.
நாம் வறுமையில் இருந்தாலும் சாதாரண மானிடரை கவிஞர்களைப் பாடிப் பரிசுபெற என் மனம் ஒப்பவில்லை. உன்னைத் தவிர நான் கண்டவர்களைப் புகழ்ந்து, அதன் மூலம் பெறும் வருமானம் குப்பைக்குச் சமம். உயர்ந்த ஒன்றான உன்னை எப்படி நான் மறப்பேன்.‘நும் இன்கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே’’ திருவாய்மொழி என் திருமாலுக்கு என்கிறார். பெருமாள் அவருடைய திருமாலாம் என்ன ஓர் ஈர்ப்பு இருந்தால் வர்ணம் பூசாமலேயே வார்த்தைகளுக்கு வலிமையை, அழகை ஆழ்வார் கொடுத்திருக்கிறார் என்றால் ஆன்மாவோடு ஐக்கியமாகி இருக்கிறார். நம் இருட்டுப் பொழுதுகளில் வெளிச்ச ஊர்வலம்தான் ஆழ்வார்களின் திருப்பாசுரங்கள். ஆழ்வார்கள் தாள்கள் பணிவோம்.
நன்றி - தினகரன்