புதன், 11 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 49 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்


அற்புதங்கள், ஆச்சர்யங்கள், அரங்கன்!

நிதியினைப் பவளத் தூணை
நெறிமையால் நினையவல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டு முன் அண்டமாளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி
என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகிலேனே!

(திருக்குறுந்தாண்டகம்)

திருமங்கையாழ்வாரின் அர்த்தம் செரிந்த அற்புதப் பாசுரம் இது! ‘‘எம்பெருமான், உன்னை எக்காலத்திலும் நான் வெளியே விடமாட்டேன்’’ என்று உறுதிமிக்க குரலில் ஓங்கி ஒலிக்கிறார் இந்தப் பாசுரத்தில்! அது சரி எம்பெருமான் எப்படிப்பட்டவனாம்? அவன் நமக்கு வைத்தமாநிதி போன்றவன். நிதி என்றால் நிரந்தரமாக நம்மிடையே தங்குவதுபோல எப்பொழுதும் இருப்பவனாம். அவன் பவளத்தூண்களைப் போன்றவன் என்றும் வர்ணிக்கிறார். அடுத்ததாக ‘நெறிமையால் நினையவல்லார் கதியினை’ என்ற பிரயோகத்தை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். தகுதியோடு, முறையோடு, அதாவது அவன் மேல் எல்லையற்ற பக்தி இருந்தால் அதற்கு நூறு மடங்காக நமக்கு அவன் அருள்புரிபவன், அந்தப் பரமாத்மாவான பரந்தாமன்! நெறி சார்ந்த வாழ்வு என்றால் என்ன? அடுத்தவருக்கு தீங்கில்லாத வாழ்க்கை. அதுவே நாம் அந்த மாலவனுக்குச் செய்கிற மாபெரும் தொண்டு. 

எம்பெருமானே கதி என்றிருக்கும் ஒரு பக்தர், அடியவர், அடுத்தவருக்கு எப்படி தீங்கு நினைப்பார்? எப்படி தீயதை எண்ண முடியும்? அதனால்தான் நெறிமையால் நினையவல்லாருக்கு அவர்கள் எண்ணுவதை எண்ணியபடி நித்யமும் எம்பெருமான் வாரி வழங்குவார். அப்படிப்பட்ட எம்பெருமான் கம்சனை அழித்து மக்களைக் காத்தவன். அப்படிப்பட்டவனை எப்படி என் மனதிலிருந்து அடிமன ஆழமான உணர்விலிருந்து எப்படி விடுவிப்பது? மதியினை, மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த சாதாரணமான ஒரு அறையில் பொருட்களை வைத்துவிட்டு, அறையைப் பூட்டி சாவியை எடுத்துச் செல்வதைப்போல இறைவனைத் தன்னுடைய மனஅறையில் வைத்து நாளும் பூஜிக்கிறார் திருமங்கையாழ்வார். எல்லையற்ற காதலும் பக்தியும் அன்பும் இருந்தால் தான் இதெல்லாம் சாத்தியமாகும். இவர் இப்படி என்றால் தொண்டரடிப் பொடி ஆழ்வார் எதிர் திசையில் பயணிக்கிறார்:

‘‘போதெல்லாம் போது கொண்டு உன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்;
அது தன்னாலே ஏதிலேனரங்கர்க்கு; எல்லே!
என் செய்வேன் தோன்றினே!’’
(திருமாலை)

திருமங்கையாழ்வாரோ தன் உள்ளத்தில் ஊறிய தேனைப் போன்ற இறைவனை வெளியே ஒருபோதும் விடமாட்டேன் என்று சத்யப்பிரகடனம் செய்கிறார்; அரங்கனைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்துப் பார்க்காத, ‘பத்தினி ஆழ்வார்’ என்று பெயரெடுத்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரோ அரங்கனே உன்னை என்னால் ஒரு நொடிப் பொழுதுகூட நினைக்க முடியவில்லை என்று சொல்லி அதற்கான காரண காரியங்களைப் பட்டியலிடுகிறார்: ‘‘திருவரங்கப் பெருமானே! காலமெல்லாம் மணம்மிக்க மலர்களைக் கொண்டு உன் அழகிய திருவடிகளை அலங்கரிக்கவில்லை. குற்றமற்ற தூய்மையான மொழிகளால் உன்னுடைய மேம்பட்டதான அழகிய கல்யாண குணங்களை எடுத்து இயம்பவில்லை. என்னுடைய உடல்மேல் அன்பு செலுத்துவதனால் உன்னை நினைக்க என் மனம் நாடுவதில்லை. 

காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்’’நான் என்னுடைய தேகத்தின்மீது மோகமும் காதலும் கொண்டுள்ளதால் உன் மீதான பக்தியும் காதலும் பிரேமையும் கேள்விக் குறியாகிப்போனது என்கிறார் பட்டவர்த்தனமாக! ஆழ்வார் என்னதான் நினைக்கிறார்? அழியக்கூடிய இந்த தேகத்திற்கு இத்தனை பாதுகாப்பா? நிரந்தரமாக பேரின்பம் அருளும் எம்பெருமானே, அரங்கனே உன் திருவடி தரிசனத்தின் மீது எனக்கு ஏன் நாட்டம் இல்லாமல் போயிற்று? ஆச்சரியமாக இருக்கிறது சதாசர்வ காலமும் அரங்கனே கதி, அவனே சர்வமும், அவனே சகலமும் என்று இருக்கிற ஆழ்வாரிடமிருந்தே இப்படி வார்த்தைகள் வருகின்றனவென்றால், நம்மை அரங்கன் மீது, அரங்க தரிசனத்திற்கு திருப்புகிறார். நம் மனதை மடை மாற்றம் செய்ய முற்படுகிறார் என்றுதானே பொருள்?திருவரங்கப் பெருமானுக்கு எல்லாமுமாகத் திகழ்ந்தவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார். இதே திருமாலையில் அர்த்தச் செறிவுள்ள பாசுரம் ஒன்று

‘‘வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழில் அரங்கத் தன்னுள்
கள்வனார் கிடந்த வாறும்
கமல நன்முகமும் கண்டும்
உள்ளமே! வலியைப் போலும்
ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன்
 கள்ளத்தே கழிக்கின்றாயே!

‘நெஞ்சமே’ என்றழைத்து நம் மனவயலை ஆழ உழுகிறார் ஆழ்வார். காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் நடுவே திருவரங்க மாநகரில் அரங்கன் துயில்கொண்டு அடியவர்களுக்கு நாளும் அருள்மழை பொழிந்து வருகிறானாம். ‘விரிபொழில் அரங்கம்’ என்கிறார் ஆழ்வார். சோலைகள் சூழ்ந்த அரங்க மாநகர் எத்தனை ஆழ்வார்கள், எத்தனை ரிஷிகள், எத்தனை எத்தனை சாதுக்கள் எல்லோரும் ஏற்றி, போற்றிய அமுதசுரபியாக மணக்கும் அரங்க மாநகர். அழகிய மணவாளப் பெருமாளாக அவன் பள்ளிகொண்ட கோலத்தை நாளும் நாளும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கலாமே!‘இவ்வளவு அற்புதங்கள், ஆச்சரியங்கள், பெருமைகள், சிறப்புகள் தெரிந்த பின்பும் உள்ளமே, அவன் ஒருவன்தான் சாஸ்வதமானவன் என்பதை நீ ஏன் இன்னும் உணராமல் இருக்கிறாய்?’ என்று தன் நெஞ்சுக்கு கேள்வி கேட்டு அடியவர்களுக்கு அரங்கனின் திருவடி தரிசனம்தான் பாவ விமோசனம் தரும் என்று நமக்கு சொல்லுகிறார். வீணாக எதில் எதிலோ காலத்தை அழிக்கும் மானுடர்களே, நெறி சார்ந்து வாழ்ந்து நமக்கு என்றும் பக்கபலமாக இருக்கும் அந்த பரமாத்மாவை நாடுங்கள். ‘எங்கனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே?’என்கிறார். ஏழை என்றால் பணத்தில் இல்லை, பக்தியில். திருமங்கையாழ்வாரும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரும் காட்டிய பாதையில் நாம் பயணம் செய்தால் வாழ்வு சிறக்கும், இனிக்கும். அடுத்தவருக்கு தீங்கு செய்யாத, ஆண்டவனிடம் சரண் அடைந்த வாழ்க்கைதான் எத்துணை மகோன்னமானது!

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக