ஶ்ரீமத் பாகவதம் - 83


நான்காவது ஸ்கந்தம் – ஐந்தாவது அத்தியாயம்

(ருத்ரன் தன் பத்னியாகிய ஸதீதேவியின் தேஹத்யாகத்தைக் (உயிர் துறத்தலைக்) கேட்டுக் கோபத்தினால் தக்ஷரது யாகத்தை த்வம்ஸம் செய்தல்)

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- ருத்ரன், தன் பத்னியாகிய ஸதீ தக்ஷ ப்ரஜாபதியால் அவமதிக்கப்பெற்று மரணம் அடைந்ததையும், தக்ஷரை வதிக்க முயன்ற தன் ப்ரதம ஸைன்யம்           (முதன்மை படை) முழுவதும் தக்ஷரது யாகத்தைச்சேர்ந்த ருபு தேவதைகளால் துரத்தப்பெற்று ஓடிப்போனதையும் நாரதமுனிவர் மூலமாய்க் கேள்விப்பட்டுப் பெறுங்கோபாவேசமுற்றான். அப்பால் அந்த ருத்ரன் பயங்கரனாகிக் கோபாவேசத்தினால் உடம்பு தெரியாமல் உதட்டை நன்றாகக் கடித்துக்கொண்டு, மின்னல்கள் போலும் அக்னி ஜ்வாலைகள் போலும் பயங்கரமான ஒளியுடைய ஜடையைப் பிடுங்கிக்கொண்டு எழுந்து பெரிய ஸிம்ஹ நாதத்துடன் (சிங்கத்தின் கர்ஜனையுடன்) அந்த ஜடையைக் கீழே போட்டான். உடனே அதினின்று பெரிய தேஹமுடைய வீரபத்ரன் தோற்றினான். அவன் தன் சரீரத்தினால் ஆகாயத்தை அளாவி மீளவும் உயர்த்தி உடையவனாயிருந்தான். மற்றும், காள மேகத்தின் நிறம் போன்ற நிறமும் ஸூர்யன் போல் ஜ்வலிக்கின்ற மூன்று கண்களும் பயங்கரமான கோரைப் பற்களும் எரிகின்ற அக்னியைப் போன்ற தலைமயிர்களும் உடையவன்; மண்டையோடுகளை மாலையாகத் தரித்திருப்பவன்; பலவகை ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருந்தான். அவன், “என்ன செய்யவேண்டும்?” என்று மொழிந்து கொண்டு ருத்ரனுக்கெதிரில் அஞ்சலி ஹஸ்தனாய் (கூப்பிய கையுடன்) நின்றான். பூதங்களுக்கு நாதனாகிய ருத்ரன் அவ்வீரபத்ரனைப் பார்த்து “நீ என்னுடைய அம்சமேயாகையால் நீயும் ருத்ரனே. நீ யுத்தத்தில் ஸாமர்த்யமுடையவன். நீ இங்கிருந்து புறப்பட்டுப் போய், தக்ஷருடைய யாகத்தையும், தக்ஷரையும் த்வம்ஸம் செய்து (அழித்துவிட்டு) வருவாயாக” என்று மொழிந்தான். 

கோபாவேசமுற்றிருக்கின்ற ருத்ரனால் இங்கனம் ஆஜ்ஞை (ஆனை) செய்யப்பெற்ற அவ்வீரபத்ரன் அவனை ப்ரதக்ஷிணம் செய்து (வலம் வந்து), அப்பொழுது, தடையில்லாத வேகத்துடன் கூடி, மிகவும் பலிஷ்டர்களுடைய (பலஸாலிகளுடைய) பலத்தையும் பொருட் செய்யாமல் யுத்தம் செய்யும் திறமை தனக்கு உண்டென்று நினைத்தான். ப்ரதம கணங்களால் (முதன்மை படைகளால்) பொறுத்துக்கொள்ள முடியாத மஹாபலமுடைய ருபு தேவதைகளையும் தான் அனாயாஸமாகவே ஜயித்து விடலாமென்று நினைத்துக்கொண்டான்). அப்பனே! அவ்வீரபத்ரன், ஸிம்ஹநாதம் (சிங்கத்தின் கர்ஜனை) செய்கின்ற ப்ரதமகணங்களால் சூழப்பட்டு மிகவும் பயங்கரமாகத் தானும் ஸிம்ஹநாதம் (சிங்கத்தின் கர்ஜனை) செய்தான். அப்பால் அவன், ஜகத்தையெல்லாம் ஸம்ஹாரம்  செய்கின்ற (அழிக்கின்ற) ம்ருத்யுவையும் (யமனையும்) ஸம்ஹரிக்கும்படியான (அழிக்கும்படியான) சூலாயுதத்தை ஏந்திக்கொண்டு வீரத்தண்டை முதலிய ஆபரணங்களால் ஒலிக்கின்ற பாதங்களை உடையவனாகி தக்ஷருடைய யாக பூமியைக் குறித்துப் புறப்பட்டுப் போனான். பிறகு தக்ஷருடைய யாகத்தில் ருத்விக்குகளும், யஜமானராகிய தக்ஷரும் மற்றும் ஸபையிலுள்ள ப்ராஹ்மணர்களும் அவரது பத்னிகளும் வடதிசையில் தூள் கிளம்புவதைக் கண்டு “இதென்ன? இருட்டா?” என்று ஸந்தேஹித்து, “இது இருளன்று. தூளே” என்று தெரிந்து கொண்டு “இந்த தூள் எதனால் உண்டாயிற்று” என்று ஆலோசித்தார்கள். “காற்றும் பலமாக வீசவில்லை. பெருங்காற்று வீசுமாயின், தூள் கிளம்பக்கூடும். அதுவும் இல்லை. திருடர் முதலியவர்களுக்கும் ப்ரஸக்தி இல்லை. ஏனென்னில், கொடிய தண்டனை செய்யும் தன்மையுள்ள ப்ராசீனபர்ஹியன்றோ (இது ராஜாவின் பெயர்) இப்பொழுது மன்னவனாய் இருக்கின்றான். அவன் ஜீவித்திருக்கையில், திருடர் முதலிய துஷ்டர்கள் தலைகாட்டமாட்டார்கள். ஆ! இதென்ன? பசுக்களை வேகமாகத் துரத்தினால் தூள் உண்டாகக்கூடும். அதுவும் இல்லை. ஆகையால் இந்த தூள் எங்கிருந்து உண்டாயிற்று? இப்பொழுது உலகமெல்லாம் நசிக்கும் போல் தோற்றுகிறது. ஒரு காரணமும் இல்லாமல் திடீரென்று தூள் கிளம்புகிறது. இது உத்பாதமாய் (ஆபத்தை முன்னதாகக் குறிக்கும் நிகழ்ச்சியாய், எல்லோருக்கும் கெடுதி தரும் நிகழ்ச்சியாய்) இருக்க  வேண்டும். ஆகையால் உலகங்களுக்கு ப்ரளயமே நேரும்போல் தோற்றுகிறது” என்றார்கள். 

தக்ஷரது பத்னியாகிய (மனைவியாகிய) ப்ரஸூதியும் மற்றுமுள்ள பெண்களும் பயந்த மனமுடையவராகி “இந்த ப்ரஜாபதியாகிய தக்ஷர், பெண்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கையில், ஒரு அபராதத்தையும் அறியாத புதல்வியாகிய ஸதீயை அவமதித்தார். அந்தப் பாபத்தின்பலனே இது. ருத்ரன் ப்ரளயகாலத்தில் ஜடைகளை விரித்துக்கொண்டு தன் சூலத்தின் நுனியில் திக்கஜங்களைக் (திசைகளை காக்கும் யானைகளைக்) குத்திக் கோர்த்து கொடி பிடிப்பது போல், அஸ்த்ரங்களை இரண்டு கைகளிலும் உயர ஏந்தி பெரிய அட்டஹாஸங்களாகிற (உரத்த சிரிப்பாகிற) கர்ஜனங்களால் திசைகளெல்லாம் பிளந்து போகும்படி ஸந்தோஷத்துடன் நர்த்தனம் செய்பவன்; எப்படிப்பட்டவர்க்கும் பொறுக்க முடியாத தேஜஸ்ஸுடையவன். அப்படிப்பட்ட ருத்ரனைக் கோபிக்கும்படி செய்தார். ருத்ரன் கோபமுறுவானாயின், அவனைக் கண்ணெடுத்து பார்க்கவும்கூட முடியாது. புருவ நெரிப்புக்களாலும் பயங்கரமான கோரைப்பற்களாலும் நக்ஷத்ரக் கூட்டங்களையெல்லாம் உதறி விடுவான். அப்படிப்பட்ட ருத்ரனுக்குக் கோபம் விளைவித்தவன் ப்ரஹ்மாவாயினும், அவனுக்கு என்ன க்ஷேமம் உண்டாகும்? அழிந்துபோக வேண்டுமேயன்றி எவ்வித க்ஷேமமும் உண்டாகாது. ப்ரஹ்மாவுக்கே இந்த கதியானால் மற்றவனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?” என்றார்கள். இங்கனம் ஜனங்கள் பயம் வழிகின்ற கண்ணோக்கமுடையவராகிப் பலவாறு பேசிக்கொண்டிருக்கையில், நிலைகின்ற மனமுடைய தக்ஷருக்கும் பயத்தை விளைவிக்கும்படியான பற்பல பெரிய உத்பாதங்கள் (ஆபத்தை முன்னதாகக் குறிக்கும் நிகழ்ச்சிகள், எல்லோருக்கும் கெடுதி தரும் நிகழ்ச்சிகள்) ஆகாயத்திலும் பூமியிலும் நாற்புறங்களிலும் உண்டாயின.

விதுரனே, அப்பால் ருத்ரனுடைய ப்ருத்யர்களாகிய (சேவகர்களாகிய) வீரபத்ரன் முதலியவர், தக்ஷர் செய்கின்ற மஹத்தான யாகத்தைத் தகைந்து (கலைத்து) நாசம் செய்தார்கள். அவர்கள் பலவகை ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருந்தார்கள். மற்றும், அவர் மிகவும் குள்ளர்களும் பொன்னிறமுடையவர்களும் மகரமீனுடைய உதரம் (வயிறு) போன்ற உதரமும், முகம் போன்ற முகமும் அமைந்து பயங்கரமாயிருந்தார்கள். அவர்கள் நாற்புறங்களிலும் ஓடி அந்த யாகத்தை த்வம்ஸம் (நாசம்) செய்தார்கள். அந்த ருத்ரனுடைய ப்ருத்யர்களான (சேவகர்களான) ப்ரதமகணங்களில் (முதன்மை படைகளில்) சிலர் ப்ராசீன வம்சத்தையும், சிலர் பத்னி சாலையையும் சிலர் யஜ்ஞசாலைக்கு முன்னேயிருக்கிற ஸதஸ்ஸென்னும் மண்டபத்தையும், சிலர் ஆக்னீத்ர சாலையையும், சிலர் யஜமான க்ருஹத்தையும், சிலர் யாகசாலையையும், சிலர் போஜன சாலையையும், சிலர் யாகத்திற்கு வேண்டிய பாத்ரங்களையும் முறித்தார்கள். சிலர் யாகத்தின் அக்னிகளை அணைத்தார்கள். சிலர் அக்னி குண்டங்களில் மூத்ரம் (சிறுநீர்) பெய்தார்கள். சிலர் உத்தர வேதியிலுள்ள ஸீமாஸுத்சங்களை அறுத்தார்கள். சிலர் ரிஷிகளைப் பிடித்துப் பீடித்தார்கள். சிலர் அவரது பத்னிகளை (மனைவிகளை) விரட்டினார்கள், சிலர் பயந்து ஓடிப்போகின்ற தேவதைகளைத் துரத்திக்கொண்டு ஓடிப்போய்ப் பிடித்துக் கொண்டார்கள். ருத்ரனுடைய ப்ருத்யர்களில் (சேவகர்களில்) தலைவனாகிய மணிமா என்பவன் ப்ருகுவைப் பிடித்துக் கட்டினான். வீரபத்ரன் தக்ஷப்ரஜாபதியைப் பிடித்துக்கட்டினான், சண்டீசன் பூஷதேவதையையும், நந்திகேச்வரன் பகதேவதையையும் பிடித்துக்கொண்டார்கள். ஸமஸ்தமான தேவதைகளும் யாகஸபையிலுள்ள மற்ற பராஹ்மணர்களும் ருத்விக்குகளும், ருத்ரனுடைய ப்ருத்யர்களால் (சேவகர்களால்) ப்ருகு முதலியவர் வதிக்கப்படுவதைக் கண்டு தாம் கற்களால் அடிக்கப்பெற்று பலவாறு ஓடிப்போனார்கள், ஸ்ருவமென்கிற ஹோமபாத்ரத்தைக் கையில் கொண்டு ஹோமம் செய்கின்ற ப்ருகுவின் மீசை தாடிகளை வீரபத்ரன் பிடுங்கினான். ஏனென்னில். அந்த ப்ருகு முன்பு ஸத்ரயாகத்தில் தக்ஷர் சிவனைப் பழிக்கும் பொழுது மீசை தாடிகளைக் காட்டிக்கொண்டு சிரித்தாரல்லவா? ஆகையால் அவருடைய மீசைதாடிகளை வேரோடு பிடுங்கினான். மஹாபலமுடைய அவ்வீரபத்ரன் முன்பு தக்ஷர் நிந்திக்கும் பொழுது அவரை பகன் “இன்னும் நடக்கட்டும். நன்றாக நடக்கட்டும்” என்று கண்களால் தூண்டினானாகையால், மிகுந்த கோபத்துடன் அவனை பூமியில் தள்ளி அவனுடைய கண்களைப் பிடுங்கினான். முன்பு தக்ஷர் மஹானுபாவனாகிய ருத்ரனைப் பழிக்கும் பொழுது பூஷன் தனது பற்களைக் காட்டிக்கொண்டு சிரித்தானாகையால், பலதேவன் களிங்கதேசத்து ராஜாவின் பற்களை உதிர்த்தாற்போல், அந்தப் பூஷனுடைய பற்களை உதிர்த்தான், அப்பொழுது அவ்வீரபத்ரன் தக்ஷருடைய மார்பில் காலை வைத்து அழுத்திக்கொண்டு மிகுந்த கூருடைய கத்தியினால் அவர் தலையை அறுக்கப் பார்க்கிலும், அதை அறுக்கவல்லனாகவில்லை. 

பசுபதியாகிய அவ்வீரபத்ரன், கேவல ஆயுதங்களாலும் மந்த்ரங்களோடு கூடின ஆயுதங்களாலும் அந்த தக்ஷருடைய தோலைச் சிறிதும் அறுக்க முடியாதிருக்கக் கண்டு மிகவும் ஆச்சர்யமுற்று, “இவன் தலையை அறுக்கும் உபாயம் என்ன?” என்று நெடுநேரம் ஆலோசித்தான். அந்தப் பசுபதி, யாக பசுவைக் கொல்வதுபோல் இவனை வதிக்க வேண்டுமென்று ஆலோசித்து, அங்கனமே அந்த தக்ஷருடைய சரீரத்தினின்று சிரசை (தலையை) அறுத்துத் தள்ளினான். அப்பொழுது பூதம் ப்ரேதம் பிசாசம் முதலியவை அவ்வீரபத்ரன் தக்ஷருடைய தலையைச் சேதித்த கார்யத்தைப் புகழ்ந்துகொண்டு “நல்லது நல்லது” என்றார்கள். மற்றும், ப்ராஹ்மணர் முதலிய மற்றவர் அதற்கு விபரீதமாக “இப்படியும் ஒரு கோபம் உண்டோ?” என்று நிந்தித்தார்கள். மிகவும் கோபாவேசமுற்றிருக்கிற அவ்வீரபத்ரன் அந்த தக்ஷப்ரஜாபதியின் தலையை யாகத்தைச் சேர்ந்த தக்ஷிணாக்னியில் போட்டான். இங்கனம் அவ்வீரபத்ரன் தக்ஷருடைய யாகத்தை நாசம் செய்து யக்ஷர்களின் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமான) கைலாஸ பர்வதத்திற்குப் போனான். 

ஐந்தாவது அத்யாயம் முற்றிற்று.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை