ஞாயிறு, 5 ஜனவரி, 2020

உயர் பாவை - 21 - சதாரா மாலதி

முப்பத்துமூவர் அமரர்க்கும் முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்....


ஊரார் இசைவு வேண்டாதே, விடிகிறதே என்ற பயமின்றிக்கே, இருள் தேடவும் வேண்டாதே, பகலை இரவாக்கவும் வேண்டாதே, விளக்கிலே பஞ்ச சயனத்தில் படுத்து கண்ணனைப் பார்க்கக் கொடுத்துவைத்த நப்பின்னையை 'தத்துவமன்று தகவு' என்று கடிந்து சொல்லிவிட்டார்கள்.


அசோகம், அரவிந்தம், மா, நவமல்லிகை மற்றும் கருநெய்தல் பூக்களால் ஆன படுக்கையாயிருக்கலாம் பஞ்சசயனம் என்பது. தளிர், மலர், பஞ்சு, பட்டு, மென்கம்பளம் சேர்ந்து பஞ்சசயனமாகலாம். அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயில்தூவி, சேர்ந்து பஞ்சசயனமாகலாம். 

இப்படி வார்த்தை வார்த்தையாக விவரித்தால் திருப்பாவையை விடியவிடியச் சொல்லலாம். 
ஆனால் இந்தக் கட்டுரை வரிசையின் நோக்கமே திருப்பாவையில் இருக்கும் கட்டுமானத்தையும் எல்லாகாலத்துக்கும் எல்லா மேம்பாட்டுக்கும் அடியான முயற்சியுடைமையையும் தெரியப் படுத்துவது ஒன்றே. இந்து மதத்தைப் பரப்பு என்று எந்த கட்டளையும் இல்லை. அதைப் பரப்ப வேண்டிய அவசியமும் இல்லை. சும்மா இருந்தாலே போதும் என்று தான் சகலமும் புத்தி சொல்கிறது. மானிடம் எதையாவது ரசிக்கவேண்டுமே அதற்காக எதையாவது உருவகம் பண்ணி எதையாவது கற்பனையில் வளர்த்தி உணர்வு ரீதி சந்தோஷத்தை அடைகிறோம். அது நமக்கு பக்கவிளைவில்லாத ஒரு உல்லாச மார்க்கம். அவ்வளவே என்று எடுத்துக் கொண்டு ஆனந்தமாக இறைக் கற்பிதத்தையும் நெறிவகுபாட்டையும் மேற்கொள்ளலாம். அல்லது படித்து விட்டுவிடலாம். இவ்வளவு சுதந்திரமுள்ள மார்க்கத்தில் நாம் இருக்கிறோம். அது தான் காட்டுச்செடி போன்ற வளர்ச்சிக்குத் தேவையானது.

கீழ்ப்பாட்டில் கட்டில் காலே முதற்கொண்டு எல்லாவற்றுக்கும் தத்துவார்த்தம் வைக்கிறார்கள். உட்பொருள் - குத்துவிளக்கெரிய - ஆசார்யோபதேசம் கோட்டுக்கால்கட்டில் - தர்மார்த்த காம மோட்ச நான்கு புருஷார்த்தங்களைப் பற்றிய பிரபஞ்சம் பஞ்சசயனம் - இச்சை, பிரயத்தினம், லீலாரசம் அனுபவிக்கும் விருப்பம் என்ற அற குணங்களால் ஆன பிரபஞ்சம் மேலேறி - தேவ, திர்யக் மனுஷ்ய, ஸ்தாவர அப்ராணி ரூபமான ஜீவவர்க்கமாம் படிகள் மேலேறி அவற்றுக்கு மேற்பட்டவராய் கொத்தலர்பூ - குழாம் குழாமாய் மகிழ்ந்திருக்கும் நித்யசூரிகளுக்கும் மேற்பட்ட முக்தாத்மாக்கள் நப்பின்னை கொங்கைமேல்வைத்துக்கிடக்கும் மலர்மார்பன்.... பிராட்டி மேலான புருஷோத்தமன். ஒரு உதாரணத்துக்காக கீழ்ப்பாட்டு தத்துவார்த்தம் சொன்னேன். பிராட்டியின் roleஐப் புரிந்து கொள்வதில் இந்தப்பாட்டு முழுமை வைக்கவில்லை. 


'முப்பத்து மூவர் பாட்டில் ஒரு முழுமை கிடைக்கிறது. பெறப் படும் செய்தி என்னவென்றால் பிராட்டிக்கும் யதேச்சாதிகாரம் எதுவும் கிடையாது. அவளும் மற்ற ஜீவன்களைப்போல பெருமாள் கை பார்த்திருப்பவள் தான். தானாக எதையும் செய்யக் கூடியவளல்ல வைணவத்து சம்பிரதாயப்படி. பின் ஏன் அவள் முன்னிலையில் தான் அருள் பெறவேண்டும் அவளின்றி இயலாது இத்யாதி… எனில் அவள் ஒரு இலக்கமாவது பெருமாள் சேர்த்தியில் தான். அவள் சேர்த்தியில்லை என்றால் பெருமாள் முழுமையற்றவன், அப்படியானால் பிராட்டி பூஜ்யமா? இல்லை. அவள் இலக்கத்தை plus figure ஆக்குபவள். நான் முன்பே சொன்னபடி எங்கே தன் கடுமையான கட்டுத்திட்டத்தில் empathy factor ஐத் தொலைத்து விடுவோமோ என்று அஞ்சி பிராட்டி மூலம் விஷயங்களை vetting செய்வித்து [legal vetting, accounts vetting போல] ஏற்புடையதாக்குகிறான் பெருமாள். அருகதை இல்லாத வழக்குகள் பிராட்டிவரை வராது. முழுசரணாகதிக்கு எவ்வளவு அகம் தொலையவேண்டும்? லேசில் ஆகிற விஷயமா அது?. எப்போதும் உடனிருப்பவள் என்பதால் கிட்டத்தட்ட NO.2 role ஐச் செய்கிறாள். பெரும்பாலும் NO2 இடத்துக்காரர்களின் அதிகாரம் பற்றி நமக்குத் தெரியும். பிராட்டி அதிகாரத்துக்கு அலைபவளில்லை. ப்ரேமையில் அவள் பெருமாளோடும் ஜீவர்களோடும் சமமாக ஈடுபட்டிருக்கிறாள். ஆனந்தமாக இருக்கிறாள். 


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய் 
செப்பமுடையாய் திறலாய் செற்றார்க்கு 
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய் 
செப்பென்ன மென் முலை செவ்வாய்த் திருமருங்குல் 
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை 
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

பகவான் கேட்பாரில்லாத சுயேச்சையாளன் ஆதலால் சமயம் பார்த்துச் சொல்ல வேண்டுமென்று நப்பின்னை ஆய்ச்சிகள் விஷயத்தில் மெளனமாக இருந்தாள். குழந்தை இடறி விழுந்து தாய் முதுகில் ஒரு குத்து வைப்பது போல கோபிகைகள் 'தத்துவமன்று தகவு' என்று கடிந்து பேசி விட்டார்கள். இந்தப் பாசுரத்தில் கண்ணனைப் புகழ்ந்து பாடிப் பின் அவன் மகிழுமாறு நப்பின்னையையும் வேண்டிப் பேசி மீண்டும் சிபாரிசுக்கு இழுக்கிறார்கள்.


அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ நீராட்டுதி என்று காலில் விழுந்தார்கள். மீண்டும் இதிலும் கண்ணனின் இரு குணங்களான பக்தரைப் பேணும் தன்மையும் எதிரிகளை அழிக்கும் தன்மையும் சொல்லப்பட்டன. இரண்டுக்கும் வேண்டிய இரு அடிப்படைகள் செப்பமுடைமை, திறலுடைமை. செப்பம் என்றால் செவ்வி. [ஏறத்தாழ perfection என்று கொள்ளலாம்] அந்த செவ்வி வரவேண்டுமானால் திறல் என்ற தகுதி வேண்டும். அதாவது சாது ரட்சணமும் சத்ரு நிக்ரஹமும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. இரண்டாவதின்றி முதல் தொழிலில் வெற்றிபெற முடியாது. [செப்பமுடையாய் திறலுடையாய்] சாது சம்ரட்சணை தான் அவனுடைய செவ்வி.


பகைத்தவருக்கு பகீர் என்னும்படி பயஜ்வரமாக இருப்பவன். அப்படி பயங்கரமானவன் விமலன், அதாவது அப்பழுக்கற்றவன். எனில் அநாவசியமாக யாரையும் பயமுறுத்துபவனல்ல என்பது பொருள்.

[செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா] பகத்தாரைத் தேவைப்பட்டபோது பயமுறுத்துவது செவ்விக்கான திறல். 


முப்பத்து முக்கோடி தேவர் கூட்டம் என்ற சொல் 'த்ரயத் த்ரிம்சவை தேவா' என்ற வேத வாக்கியப்படி தமிழ்மொழிபெயர்ப்பு.


ஏகாதச ருத்ரர் 11பேர், துவாதச ஆதித்யர் 12 பேர், அஷ்டவசுக்கள் 8 பேர், அசுவினி தேவர் 2 பேர், இப்படி 33 தேவர்களின் வம்சாவளி தான் முப்பத்துமூன்று கோடி தேவர். அந்த முப்பத்து முக்கோடி பேருக்கும் ஒரு ஆபத்து வரும்முன்னே ஓடிப்போய் அதைத் தீர்த்துவைத்து அவர்கள் நடுக்கத்தைத் தவிர்ப்பவன் திருமால். அது அவனுடைய கடமை என்பதால். அதை நக்கல் செய்கிறார்கள். 

வீடுகளில் பெண்கள் கணவன்மார் எப்போதும் ஊர் சேவையில் ஆர்வம் காட்டி வீட்டுக்காக நேரம் ஒதுக்காமலிருப்பதைச் சொல்லிக்காட்டுவது போல. தேவர்களுக்கும் தமக்குமுள்ள வித்யாசத்தைப் புரிய வைக்கிறார்கள். தேவர்கள் ஆண்புலிகள் நாங்கள் அபலைப் பெண்கள். அவர்கள் மிடுக்குடையார்கள். நாங்கள் பலவீனர்கள்.


அவர்களுக்குக் குடியிருப்பு வேண்டும், அமிர்தம் வேண்டும். மற்றிவையும் பதவியும் வேண்டும். எங்களுக்கு உன்னையன்றி வேறெதுவும் வேண்டாம். தேவர்கள் உன்னை எழுப்பி உன்னை அம்புக்கு இலக்காகி உன்னால் பிரயோசனம் பெற்று உன்னையே எதிர்த்துக் கொள்வார்கள்.


தேவமாதா குண்டலத்தை மீட்டுக்கொடுக்கவென்று நரகாசுரவதம் செய்து சத்யபாமையுடன் திரும்பும்போது பாரிஜாதத்தை பாமா ஆசைப்பட மானிடப் பெண் அதை அணியக்கூடாது என்று இந்திரன் சற்று முன் கிருஷ்ணன் செய்த உபகாரத்தை மறந்து பேசியிருக்கிறான்.


சீதையை இராவணன் தூக்கிப் போனதில் பிரபஞ்சமே சோகமயமாக இருக்க தேவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள் அந்த நிகழ்ச்சியை. தங்கள் நோக்கம் நிறைவேறப்போகிறது, இராவண வதம் நடக்கப்போகிறது என்று. இப்படிப்பட்ட அயோக்கியருக்கா காரியம் செய்து கொடுப்பது ஓடி ஓடி? இந்தக் கருத்தில் தான் முப்பத்து மூவர் அமரர்க்கும் முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய் என்றது. அமரர்கள் என்று வார்த்தை போட்டதற்கு அவர்களென்னவோ சாகாதவர்கள், அவர்களை நீ என்ன அப்படித் தாங்கிப் பிடிக்கிறாய்? என்கிறதாகும். எங்களைப் பார், எங்களைத் துயராற்ற வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? என்பது உட்கிடக்கை. 


அடுத்து நப்பின்னையைக் கொண்டாடி இரு வார்த்தை சொன்னார்கள். செப்பன்ன மென்முலைச்செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய் ஆபரணத்தைச் செப்பில் போட்டு வைப்பார்கள். அப்படி உன் மார்பில் கண்ணனை வைத்துப் பூட்டிக்கொண்டு கருவூலம் காத்து அமர்ந்திருக்கிறாய் நீ. உன் மிருதுவான் ஸ்தனமும் உன் அழகிய சிவந்த அதரங்களும் நுண்ணிய இடையும் உன் புருஷகார உறுப்பான ஸ்த்ரீத்வ பூர்த்திக்கு இயல்பான ஆதாரமாய் உள்ளன. சொல்லிச்சொல்லாத செளந்தர்யங்கள் எல்லாவற்றிலும் பூர்த்தியானவளே! நங்காய்! அழகு அவளாலே, குணங்கள் அவளாலே, மேன்மை அவளாலே, நீர்மை அவளாலே, அப்படி திருவுக்கு நிகரானவளே! திருவே! நீ எழுந்து உக்கம் [ஆலவட்டம்] தட்டொளி [கண்ணாடி] போன்ற மங்கள உபகரணங்களை உன் கையால் கொடுத்து கிருஷ்ணனோடு எங்களை நீராட்டவேண்டும் என்று இறைஞ்சினார்கள். நப்பின்னையையும் எழுப்பிக் கொண்டாயிற்று. 


இப்படி 20வது பாட்டோடு 'நெறி' சொல்லி முடிக்கப்பட்டது. அடுத்து தங்கள் சித்தோபாய முனைப்பை இரு பாடல்களில் சொல்லி தங்கள் தகுதியை நிலை நாட்டப் போகிறாள் ஆண்டாள். 


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக