ஞாயிறு, 5 ஜனவரி, 2020

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 22 - கண்ணன் ரங்காச்சாரி

20


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய் 
செப்பமுடையாய் திறலாய் செற்றார்க்கு 
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய் 
செப்பென்ன மென் முலை செவ்வாய்த் திருமருங்குல் 
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை 
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்


முந்தைய பாடலில் 'நீ செய்வது சரியன்று, என்று நப்பின்னைப் பிராட்டியை ஏசிய கோபியர்கள், கண்ணன் தான் அவளை எழுந்திருக்க ஒட்டாதவன் என்பதைப் புரிந்து கொண்டு, இருவரையும் பாராட்டிப் பேசி எங்களை நீராட்டுவீர் என்று பணிக்கிறார்கள்.


'முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று' - முப்பத்து முக்கோடி இறப்பே இல்லாத அமரர்களுக்கும் / உன்னிடத்தில் வதமுற்றுப் போனவர்க்கும் ரக்ஷணை செய்கிறாயே கண்ணா!. சாகாதவர்க்கு உதவும் உன்னால் விரஹத்தால் சாகக் கிடக்கும் எங்களுக்கு உதவுவதில் தடை என்ன.


உன்னை ஈஸ்வரா என்று அழைப்போர்க்கு உதவும் நீ, உன்னடியார் எங்களுக்கு உதவக்கூடாதோ?. உன்னைப் போருக்கழைத்து அம்பிடுவார்களைக் கூட ரக்ஷிக்கிறாய். உன்னை அன்பு செய்யும் அபலைப் பெண்களான அடிமைகளான எங்களை ரக்ஷிக்கக் கூடாதோ கண்ணா?


சக்தி உள்ளவர்க்குத் தொண்டாற்றும் நீ அசக்தர்களுக்கு உதவக் கூடாதோ?. கூப்பிட்டவர்க்கு அருளும் குணாளானான நீ, உன் வாசலிலேயே கிடக்கும் எங்களுக்கு உதவ மாட்டாயோ?


'கப்பம் தவிர்த்த கலியே துயிலெழாய்' - ராக்ஷஸாதிகளால் வீடு வாசல் இழந்து நடுங்கிக் கிடக்கும் அமரர் கூட்டங்களுக்கு நிம்மதி தரும், நீ, எங்களை நடுங்க விடாதே. 'கப்பம்' - நடுக்கம், கலியே - மிடுக்கானவனே. தேவதைகளுக்குப் புகலிடமும், அவர்களுக்காக அம்புகள் கொள்ளவும் நீ செய்வதை நாங்கள் கேட்கவில்லையே. நாங்கள் உன்னையுணரும் போதில் நீ எங்கள் அருகில் இருப்பதே நாங்கள் வேண்டுவது.


'செப்பமுடையாய் திறலுடையாய்' - ரக்ஷனை செய்யும் வகையில், உன்னை வேண்டி நிற்பவர்களின் எதிரிகளை அழிக்கும் வல்லவனே! முகந்து எடுக்கும் பாத்திரத்தால், தண்ணீரை மேட்டில் ஏற்றுவதைப் போலே, உந்தன் நீர்மையான கருணையை எங்கள் பக்கம் ஏற்றக் கூடாதோ?


'செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்' - அவனிடம் போரிட்டவர்க்கு மனத்திலும் உடலிலும் பய ஜ்வரத்தினால் வெப்பம் கொடுக்கக் கூடியவனே!. அவன் போரிடுவது பக்தர்களின் எதிரிகளுடன் தான். 'ஸுஹ்ருதம் சர்வ பூதானாம்', என்று சத்ருக்கள் அற்றவன் அவன்.


வேண்டாதவர்க்குத் தன் கண்களை மூடாமல் முடிவு ஏற்படுத்தும் வண்ணம், அன்பருக்கு அருள் தருவதிலும் கண்கள் மூடாமல் கிடக்கும் விமலன்.


'செப்பென்ன மென்முலை' - எத்தனை பேசியும் பதில் சொல்லாத கண்ணனிடமிருந்து மாறி, பிராட்டியின் கருணையை வேண்டும் வகையினில், செப்பினால் செய்த ஆபரணம் எப்படி நினைத்த போதில், அணிய முடியாதோ, 'மா கடல் நீறுள்ளான், மலராள் தனத்துள்ளான்; என்னும், செப்பு ஆபரணம் போன்ற திருமுலை கொண்டவள் நெருக்கத்தில் அமிழ்ந்து கிடக்கும் கண்ணனைக் கொள்ள முடியாதோ என்னும் கிடக்கையில், கோபியர்கள் பேசுகிறார்கள்.


'செவ்வாய்த் திரு மருங்குல் நப்பின்னை நங்காய்' - சிவந்த உதடுகளைக் கொண்டு, கண்ணனைத் தன் வயப்படுத்திய, சின்ன இடுப்பைக் கொண்டவளே', மேற் புறத்தையும், கீழ்ப் புறத்தையும் வைத்தே இடையென்று ஒன்று இருப்பதை அறிய வேண்டிய வகையில் உள்ள இல்லை என்னும் இடை கொண்டவளே!


கம்பன் சீதா பிராட்டியைப் பற்றி சொல்லுவான் 'பொய்யே எனும் இடையாளுடன், இளையானுடன் போனான்'


'நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்' - சகல சௌந்தர்யங்களால் பூரணமானவள். கண்ணனுடைய நெருக்கத்தால் துவண்டு கிடப்பவளே, உறக்கம் களைவாய்.


மிகவும் உயர்ந்த பதார்த்தத்துக்குப் பெயரில்லாமல் போவதாய், வார்த்தைகளுக்குள் கட்டுப்படாத சௌந்தர்யை. திருமாலைச் சொல்லும் போதினிலே 'ஸ்ரீய ஸ்ரீய' என்று திருவுக்கே அழுத்தம்.


'உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை' - விசிறி ஆற்றி, கண்ணாடி காட்டி உன் மணாளனை இப்போதே துயில் எழுப்பிடுவாய். உன் புருவத்தின் அசைவைக் கொண்டே காரியம் ஆற்றிடும் கண்ணனை நீ எழுப்பிடுவாய்.


'இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்' - விரஹத்தால் தவித்துக் கிடக்கும், எங்களை உடனே நீராட்டிடு. நீயும் அவனும் நீராடத் தயார் ஆன வென்னீரால் எங்களையும் நீராட்டிடு.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக