சனி, 4 ஜனவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 82

நான்காவது ஸ்கந்தம் – நான்காவது அத்தியாயம்

(ஸதிதேவி கணவனின் வார்த்தையைக் கடந்து தந்தையின் யாகத்திற்குப் போதலும், தந்தை அவமதித்தலும், அவள் அதைப் பொறுக்காமல் உடலைத் துறத்தலும்.)

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- சங்கரன் இவ்வளவே மொழிந்து, “இவள் யாகத்திற்குப் போனால் அங்கு தந்தையால் அவமதிக்கப்பெற்று ப்ராணன்களை விடுவது நிச்சயம். போகாதிருப்பினும் நம்மைப் போகவொட்டாமல் தடுத்தானேயென்றும், பந்துகளைப்பார்க்க நேராமல் போயிற்றேயென்றும், உலகத்தவர்கள் எல்லோரும் போய்ப் பார்க்கும்படியான நமது தந்தையின் யஜ்ஞ மஹோத்ஸவத்தை (யாகத்தை) நாம் பார்க்க நேராமல் போயிற்றேயென்றும் வருந்தி இவள் ப்ராணன்களை விடுவது நிச்சயம். ஆகையால் இவளுக்குப் போக அனுமதி கொடுப்பினும் போக வேண்டாமென்று தடை செய்யினும், இரண்டு விதத்திலும் இவள் சரீரத்திற்கு நாசமே நேரும்” என்று சிந்தித்து வெறுமனே (அமைதியாக) இருந்தான். அப்பால் அந்த ஸதீதேவி, தன் தாய் தந்தை முதலிய பந்துக்களைப் பார்க்கவேண்டுமென்னும் விருப்பமுற்று, க்ருஹத்தினின்று வெளிப்புறப்பட்டு மீளவும் ருத்ரனிடத்தில் சந்தித்தவளாகி கணவனின் வசனத்தைக் கடந்து போவேனாயின், என்ன கெடுதி வருமோ? என்று சிந்தித்தவளாகிப் போகவும் போகாதிருக்கவும் மன உறுதி உண்டாகப் பெறாமல் இரண்டு விதமாகவும் மனம் நடையாடப் பெற்றிருந்தாள். கணவன் போகவேண்டாமென்று தடுக்கையால் நண்பர்களைப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பம் தடைபட்டு மனவருத்தமுற்று பந்துக்களிடத்தில் அன்பினால் வருத்தம் செய்து கொண்டு கண்ணீர்த் துளிகளால் மிகவும் தழதழத்திருக்கின்ற ஸதீயானவள் கோபத்தினால் சரீரம் (உடல்) நடுங்கப் பெற்றவளாகி எல்லாம் பரப்ரஹ்ம ரூபங்களேயென்று நினைத்து எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையனாகையால் எவரையும் தனக்குச் சத்ருக்களாக (பகைவர்களாக) நினையாதவனாகிய ருத்ரனைத் தன் கண்களால் எரித்து விடுவதுபோல் பார்த்தாள். பிறகு அவள், “இவன் நமக்குப் போக அனுமதி கொடுக்கமாட்டேன் என்கிறானே” என்னும் வருத்தத்தினால் பெருமூச்செறிந்து, ஜ்ஞானத்தை விரும்புமவர்க்கு ப்ரியனும் ப்ரேமத்தின் மிகுதியால் தனக்கு சரீரத்தின் பாதியைக் கொடுத்தவனுமாகிய அந்த ருத்ரனைத் துறந்து ஸ்த்ரீ ஸ்வபாவத்தினால் மதி மயங்கப்பெற்றவளாகி, பந்துக்களைப் பார்க்க நேராமல் போகிறதேயென்னும் சோகத்தினாலும், போகலாகாதென்று தடுக்கையால் உண்டான கோபத்தினாலும் “கணவனைக் கடந்து போவேனாகில் என்ன கெடுதி நேருமோ” என்னும் பயத்தினாலும் மனவருத்தமுற்றவளாகவே தாய் தந்தைகளின் க்ருஹத்திற்குப் போனாள். “இந்த க்ஷணமே அவ்விடம் போய்க் குதிக்கமாட்டேனா” என்னும் குதூஹலத்தினால் தனியாகவே மிக்க விரைவுடன் நடந்து செல்கின்ற அந்த ஸதீதேவியை, ருத்ரனுடைய ப்ருத்யர் (சேவகர்கள்) பலரும் பின்தொடர்ந்து சென்றார்கள். மணீமன், மதன் முதலியவர்களும் நந்திதேவனை முன்னிட்டுக் கொண்டு பலிஷ்டர்களாகையால் (பலம் உள்ளவர்களாகையால்) சிறிதும் பயமின்றி, “ருத்ரன் கூடப்போகாமையால் இவள் தனியே போகின்றாளே, நடந்து போவது இவளுக்குத் தகுமா?” என்று மன வருத்தமும் “கணவனின் வசனத்தைக் கடந்துபோகின்றாளே, என்ன அனர்த்தம் (கெடுதி) விளையுமோ” என்ற பயமும் உண்டாகப்பெற்று அவளைப் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் ஓடிச்சென்று அந்த ஸதீதேவியை பலாத்காரமாக நந்தியின்மேல் ஏற்றிக்கொண்டு சாரிகை (படிக்கும் திறமையுடைய ஓர் பக்ஷி), பந்து, கண்ணாடி, தாமரைமலர், வெண்குடை, விசிறி, பூமாலை முதலியவற்றோடும் வீணை, வேணு முதலிய ஸங்கீத வாத்யங்களோடும் சங்கு, துந்துபி முதலிய வாத்யங்களோடும் கூடி மிக்க அலங்காரத்துடன் போனார்கள். அந்த ஸதீதேவி இங்கனம் சென்று நாற்புறங்களிலும் வேதகோஷங்கள் அமைந்திருப்பதும் யாகத்திற்குரிய பசுவை வெட்டும் இடமுடையதும் ப்ரஹ்மரிஷிகளால் சூழப்பெற்றதும் தேவதைகள் நாற்புறத்திலும் நிறைந்திருப்பதும் மண் முதலியவற்றால் இயற்றின பாத்திரங்களை உடையதுமாகிய யாகபூமிக்குப் போய்ச்சேர்ந்தாள்.


அங்கனம் அவ்விடத்திற்கு வந்த ஸதீயை அவளுடைய மாதாவும் கூடப்பிறந்தவர்களும் தவிர மற்ற எவர்களும் ஆதரிக்கவில்லை. ஏனெனில், நாம் இவளை விசாரித்தால், யாகம் செய்கின்ற தக்ஷர் கோபித்துக் கொள்வாரென்னும் பயத்தினால் அவளைப் பார்த்தும் “நீ எப்பொழுது வந்தாய்? க்ஷேமமா?” என்று ஒன்றும் விசாரிக்கவில்லை. அங்கனம் அவமதிக்கப்பெற்ற அவளை அவளுடைய உடன் பிறந்தவர்கள் ப்ரீதியின் மிகுதியால் கிளம்பி வருகின்ற கண்ணீர்களால் தொண்டை தடுக்கப்பெற்றவராகி ஆலிங்கனம் செய்தார்கள். அவளுடைய தந்தையாகிய தக்ஷரும் அவளை விசாரிக்கவில்லை. அதனால் அவள், மாதாவும், உடன் பிறந்தவர்களும் மேலாஸனம் (உயர்ந்த ஆசனம்) அளித்து வெகுமதிப்பினும், தனது உடன் பிறந்தவர் ப்ரேமத்துடன் (அன்புடன்) க்ஷேமம் விசாரித்து கௌரவிக்கினும், அவற்றில் எதையும் அங்கீகரிக்கவில்லை. தன் தந்தையாகிய அந்த தக்ஷர் தன் கணவனான ருத்ரனுக்கு ஹவிர்ப்பாகம் (யாகத்தில் தேவதைகளுக்காக அக்னியில் கொடுக்கப்படும் நெய்யுடன் சேர்ந்த சாதம்) கொடுக்காமல் யாகம் செய்வதையும், தேவதைகளுக்கெல்லாம் ப்ரபுவான ருத்ரனை அழைக்காமல் அவமதித்ததையும் ஆலோசித்துப் பார்த்து, தானும் யாகஸபையில் அவமரியாதை செய்யப்பெற்றவளாகி ரோஷத்துடன் உலகங்களை தஹிப்பவள் போன்று கோபாவேசமுற்றாள். அவள் கோபாவேசத்தினால் தழதழத்த குரலுடன், ருத்ரனை அவமதித்தமை முதலியவற்றால் கோபித்து தக்ஷரை வதிக்கமுயன்ற பூதகணங்களைத் தன்பலத்தினால் தடுத்து, தூமாதி மார்க்கத்தைக் (மோக்ஷம் தவிர்த்த மற்ற ஸ்வர்கம் முதலிய பலன்களை அடையச் செல்லும் வழியைக்)  கொடுக்கும் தன்மையுள்ள கர்மங்களில் கஷ்டப்படுகின்றவராகி அதனால் “தனக்கு நிகர் எவருமே இல்லை” என்று கர்வமுற்றவரும் சிவனை வெறுப்பவருமாகிய தக்ஷரை, ஜனங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கையில் இங்கனம் நிந்தித்தாள்.

ஸதீதேவி சொல்லுகிறாள்:- ருத்ரன் அனைவர்க்கும் அந்தராத்மாவான பரமாத்மாவினிடத்தில் மிகுந்த பக்தியுடையவன். அவனுக்கு ப்ரியனும் (அன்புக்கு உரியவனும்) இல்லை. அப்ரியனும் (அன்பு அற்றவனும்) இல்லை. இவ்வுலகத்திலுள்ள ப்ராணிகளுக்குள் அவனைவிட உயர்ந்தவன் எவனுமே இல்லை. அவன் ஸர்வாந்தர்யாமியான பகவானையே மிகுந்த பக்தியுடன் பணிகின்றவனாகையால் எல்லாவற்றையும் ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே பாவிக்கின்றவன். ஆகையால், உலகத்தவர் ஒருவனை ப்ரீதியுடன் ஆதரிப்பதும், ஒருவனை வெறுப்பதும் போல், அவன் ஒருவனிடத்தில் ப்ரீதியையும் ஒருவனிடத்தில் வெறுப்பையும் காட்டமாட்டான். அவன் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையன். ஆகையால் அவனுக்கு ப்ரியனாவது, பகைவனாவது எவனுமே இல்லை. இப்படி எவரிடத்திலும் பகைமையில்லாதவனும் ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனும் அனைவருக்கும் ஆத்மாவைப் போல் ப்ரீதிக்கிடமாய் இருப்பவனுமாகிய ருத்ரனிடத்தில் உன்னைத் தவிர எவன்தான் எதிரிடையாக நடப்பான்? அந்தணனே! உன்னைப்போன்ற சில துஷ்டர்கள் (கெட்டவர்கள்) தன்னைத் தவிர மற்றவர்களின் குணங்களையும் தோஷங்களாகவே (குறைகளாகவே) நினைக்கின்றார்கள். பிறரிடத்தில் குணங்கள் இருப்பினும் அவற்றில் சிறிதும் கண்வைக்காமல் தோஷங்களையே (குறைகளையே) வெளியிடுவது மாத்ரமேயன்றி இல்லாத தோஷங்களையும் (குறைகளையும்) ஏறிடுகின்றார்கள். இவர்களே அஸாதுக்களென்று (நல்லவர்களன்று என்று) கூறப்படுவார்கள். எவர்கள் பிறருடைய தோஷங்களை (குறைகளை) நினைக்காமல் அவர்களிடத்தில் ஏதேனும் சிறிது குணம் இருப்பினும் அதையே வெகுவாகக் கொள்கின்றார்களோ, அவர்களே மஹானுபாவர்கள்; ஸாதுக்களாவார்கள். ருத்ரன் அப்படிப்பட்ட மஹானுபாவர்களில் தலைவனாயிருப்பவன். நீ அத்தகைய ஸாதுக்களிடத்தில் அபராதம் செய்தனை. சவம் (பிணம்) போன்ற சரீரத்தையே ஆத்மாவாக ப்ரமித்து அங்கனமே வாயால் பேசுகின்றவருமான உன்னைப்போன்ற துஷ்டர்கள் (கொடியவர்கள்) எப்பொழுதும் பொறாமையுடன் பெரியோர்களைப் பழிப்பது ஆச்சர்யமன்று. அங்கனம் நிந்திக்கப் பெற்ற (பழிக்கப்பட்ட) ஸாதுக்கள் தம்மை நிந்திக்கிறவர்களைப் (பழிப்பவர்களைப்) பற்றி ஒன்றும் நினைக்கமாட்டார்களாயினும், அந்த மஹாபுருஷர்களின் பாதாரவிந்தங்களில் படிந்த பாகங்கள் அப்படி நிந்திப்பதைப் பொறாமல் நிந்திப்பவருடைய தேஜஸ்சைப் (புகழை) பாழ் செய்யும். அத்தகைய துஷ்டர்களுக்குப் (கொடியவர்களுக்குப்) பெரியோர்களைப் பழிப்பதே உரியதன்றி, பழியாதிருக்கை அவர்க்குப்பொருந்தாது. தான் பெரியோர்களிடத்தில் என்ன அபசாரப்பட்டேன் எனில், சொல்லுகிறேன், கேட்பாயாக! 

ருத்ரனுக்கு இரண்டு எழுத்துக்கள் அடங்கின “சிவ”னென்னும் ஒரு பேர் உண்டல்லவா. அதை ஏதேனும் ஒரு ஸமயத்தில் ஒருக்கால் வாக்கினால் எவரேனும் மொழிவார்களாயின், அவர்களுடைய பாபத்தையெல்லாம் அது போக்கி விடுகின்றது. (பகவானுடைய நாமத்தை உச்சரித்தால் உண்டாகும் பலன் அந்த பகவானிடத்தில் பக்தி அமைந்த  பெரியோர்களின் நாமத்தை உச்சரிப்பதனாலும் உண்டாகுமென்பது யாவர்க்கும் தெரிந்த விஷயமே). அவனுடைய கட்டளை ஒருவர்க்கும் மீறத்தகாதது. அப்படிப்பட்ட மஹானுபாவனாகிய அந்தச் சிவபெருமானை அமங்கள (அசுத்தம்) ஸ்வபாவனாகிய நீ த்வேஷிக்கின்றனை (வெறுக்கிறாய்). இப்படியும் சிலர் த்வேஷிப்பவர் (வெறுப்பவர்) உண்டோ? ஆ! என்ன வருத்தம்? பெரியோர்களின் மனங்களாகிற வண்டுகள் ப்ரஹ்மானந்தமாகிற மதுவைப் பானஞ்செய்ய விரும்பி, தன்னைப் பணிந்து வேண்டுவோர்களின் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் தன்மையுடையதால், எந்த ருத்ரனுடைய பாதாரவிந்தத்தைப் பணிகின்றனவோ, அப்படிப்பட்ட, உலகுக்கே நண்பரான ருத்ரன் விஷயத்தில் நீ த்ரோகம் (கெடுதி) செய்கின்றனை. “அவன் அமங்களமான ஆசாரமுடையவனாகையால் அவனுடைய நாமத்தை நெஞ்சாலும் நினைக்கலாகாது” என்கிறாயோ? சொல்லுகிறேன். கேள். 

ருத்ரன் மயானங்கனில் ஜடைகளை விரித்துக் கொண்டு அங்கு எரிந்து கிடக்கிற ப்ரேதங்களின் (பிணங்களின்) பூமாலைகளையும் சிதையிலுள்ள சாம்பலையும் ப்ரேதங்களின் மண்டையோடுகளையும் தரித்துப் பிசாசங்களோடு வாஸம் செய்தானென்றும் அதனால் அவன் அமங்களாசாரனென்றும் (அசுத்தமான நடவடிக்கை உடையவன் என்றும்) பிதற்றுகின்றனையே; அப்படிப்பட்ட அமங்களனான (அசுத்தனான) ருத்ரனுடைய பாததூளியை ப்ரஹ்மதேவன் முதலாக உன்னையொழிந்த மற்ற மரீசி முதலிய ப்ரஜாபதிகள் தமது சிரங்களால் தரிக்கின்றார்களே, அவர்களுக்கு அவனுடைய அமங்களாசாரம் (அசுத்தமான நடவடிக்கை) தெரியாதோ? உனக்கு மாத்ரம்தான் தெரியுமோ? அவனை எல்லோரும் சிவனென்றே (மங்களமானவன், மங்களம் செய்பவன் என்றே) பேசுகிறார்களன்றி அசிவனென்று (மங்களமற்றவன்) எவரும் பேசுகிறதில்லை. ஆனால் அந்த மயான வாஸம் எதுக்காக வெனில், அது இந்த உலகத்தையும், சரீரத்தையும் ஒரு பொருட்டாக மதிக்கக்கூடாது என்று உணர்த்துவதற்காகவே. அதுவே சிறந்த செயலென்று அவன் செய்கிறானல்லன். 

ஸ்ரீபகவான் பௌத்தாவதாரம் செய்து சிலரை மதிமயக்கினாற்போல், இவனும் சில பாபிஷ்டர்களை மதிமயக்குவதற்காக அங்ஙனம் செய்கிறானன்றி அதுவே அவனுக்கு இயற்கையென்று கொள்ளலாகாது. அவன் தர்மத்தைப் பாதுகாக்கின்றவன் ; ஸர்வேச்வரனுடைய அம்சாவதாரம்; மஹானுபாவன், அப்படிப்பட்ட அவன் விஷயத்தில் துர்ப்புத்திகள் (கெட்ட புத்தியுடையவர்கள்), எவரும் தடுப்பாரின்றி அவமதிக்கும் பேச்சுக்களைப் பேசுவார்களாயின், ஸாதுவாயிருப்பவன். அதைக் கேட்கும்படி நேரப்பெற்றால், தான் அந்த துஷ்டர்களைத் தண்டிக்கத் திறமையற்றிருப்பானாயின், காதுகளை மூடிக்கொண்டு அவ்விடத்தினின்று புறப்பட்டு அப்புறம் போகவேண்டும். தண்டிக்கும் திறமையுடையவனாய் இருப்பானாயின், பெரியோர்களைப் பழிக்கின்றமையால் துஷ்டமாகிய (கொடுமையான) அந்த நாக்கைத் தோண்டி அறுக்கவேண்டும். பிறகு தானும் ப்ராணன்களைத் துறக்கவேண்டும். அதுவே தர்மமாகும். ஆகையால் சங்கரனை வெறுப்பவனாகிற உன்னிடத்தினின்று உண்டான இந்த சரீரத்தை நான் வைத்துக்கொள்ள மாட்டேன். தெரியாமையால் அசுத்தமான அன்னத்தைப் புசிப்பானாயின், அதை வாந்தி செய்கையே மீளவும் சுத்தியென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள், “ஏன் இப்படி வீணாக ஆக்ரோஷப்படுகின்றாய் (உயர்ந்த குரலில் கத்துகிறாய்)? ருத்ரன் அமங்களன் (அசுத்தமானவன்), வைதிகமார்க்கத்தை (வேதத்தில் சொல்லப்பட்டதை) அதிக்ரமித்து (மீறி) நடக்கின்றான். ஆகையால் வைதிகமார்க்கத்தை அனுஸரித்து நடக்கின்றவனும், ச்ரேஷ்டனுமாகிய (உயர்ந்தவனுமாகிய) நான் அவனை ஆக்ஷேபித்தேன்” என்கிறாயோ? அப்படியே உன்னிஷ்டப்படி வைத்துக்கொண்டு பார்க்கிலும், நீ செய்தது யுக்தமன்று (ஸரியன்று). மாக கமலத்தில் வீற்றிருப்பவனும் பரிசுத்தமான மனஸ்ஸினால் அறியக்கூடியவனுமாகிய பரப்ரஹ்மத்தினிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி ஆனந்தத்தை அனுபவிக்கின்ற ருத்ரனுடைய புத்தி யாகாதி கர்மங்களைப் புகழ்ந்து சொல்லுகிற வேதத்தின் அர்த்தவாதங்களைத் தொடர்ந்து செல்லாது. நிவ்ருத்தி மார்க்கத்தில் (உலக விஷயங்களிலிருந்து விலகும் பாதையில்) நிலைநின்றவனுக்கு ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் (உலக விஷயங்களில் ஈடுபடும் பாதையில்) ருசி உண்டாகாதல்லவா? ஆகையால் நிவ்ருத்தி மார்க்க நிஷ்டனாகிய ருத்ரன் ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் மனம் செல்லப் பெறுகிறதில்லை. இதை அறியாமல் அவன் வைதிக மார்க்கத்தை (வேத மதத்தை) உல்லங்கனம் செய்கிறான் (மீறினான்) என்பது யுக்தமன்று (ஸரியன்று). ப்ரவ்ருத்தி மார்க்க நிஷ்டர்களுடைய ஆசாரமும் நிவ்ருத்தி மார்க்க நிஷ்டர்களுடைய ஆசாரமும் ஒன்றோடொன்று பொருந்தாது, வெவ்வேறாகவே இருக்கும். எப்படி தேவதைகளுடைய கதியும் (போக்கும்) மனுஷ்யர்களுடைய கதியும் (போக்கும்) ஒன்றோடொன்று பொருந்தாமல் வெவ்வேறாகவே இருக்குமோ, அங்கனமே இதுவும் வெவ்வேறாயிருக்கும். 

தேவதைகளுக்கு ஆகாயத்தில் மாத்ரமே கதி (போக்கு). மனுஷ்யர்களுக்கு பூமியில் மாத்ரமே கதி (போக்கு). அங்கனமே ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் வேதத்தில் விதித்த கர்மங்களில் மாத்ரமே கால் தாழ்த்திருப்பார்கள் (முழுவதும் ஈடுபட்டிருப்பார்கள்). நிவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் அந்தக் கர்மங்கள் ஸம்ஸாரத்தை வளர்க்கும் பலன்களைக் கொடுப்பவையென்றும் ச்ரமஸாத்யங்களென்றும் (மிகவும் கஷ்டப்பட்டு அடையப்படக்கூடியவை), ஸ்வரூபத்திற்கு இணங்காதவைகளென்றும் அவற்றில் கண் வைக்காமல் பகவானையே சரணம் அடைந்து அவனுடைய பாதாரவிந்தங்களையே த்யானித்துக் கொண்டிருப்பார்கள். கர்மங்களைத் துறந்து பகவானை சரணம் அடைகையே மேலான தர்மமாகையால் அதுவே அந்த வேதத்தின் உட்கருத்து. அதை அனுஷ்டிப்பவர்களே வைதிகோத்தமர்களாவார்கள். கேவல கர்மங்களை அனுஷ்டிப்பவர் வேதத்தின் கருத்தை அறியாதவர்களே. ஆகையால் அவர்களை வைதிகர்களென்றே சொல்லலாகாது. அங்கனம் கேவல தர்மங்களை ஆசரிக்கின்ற (செய்கின்ற) நீ வைதிகனாகமாட்டாய். உன்னிஷ்டப்படி நீயே வைதிகனும் ச்ரேஷ்டனுமாயிருப்பாயாக. ஆயினும், மேன்மையுடையவன் தன் தர்மத்தில் நிலை நின்றவனாகிப் பிறன் அற்பனாயினும் (தாழ்ந்தவனாயினும்), அவனை நிந்திக்கலாகாது. இதுவே தர்மமாம். “ப்ரவ்ருத்தி தர்மமும் வேதத்தில் விதிக்கப்பட்டதேயன்றி வேறன்று. ஆகையால்,  அந்த ப்ரவ்ருத்தி தர்மத்தை ருத்ரன் ஏன் அனுஷ்டிக்கிறதில்லை?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. 

ஸ்வர்க்காதி பலன்களை விரும்பிச் செய்யும் கர்மம் ப்ரவ்ருத்தி கர்மமென்றும், எவ்வகைப் பலன்களையும் விரும்பாமல் செய்யும் கர்மம் நிவ்ருத்தி கர்மமென்றும் கூறப்படுகின்றன. ஸ்வர்க்காதி பலன்களை விரும்புகையும் பலனையே விரும்பாமையுமாகிய இவையே ப்ரவ்ருத்தி கர்மத்திற்கும் நிவ்ருத்தி கர்மத்திற்கும் அடையாளங்களாம். இதை ஏற்பவருக்கு ப்ரவ்ருத்தி தர்மமென்றும் நிவ்ருத்தி தர்மமென்றும், ப்ரவ்ருத்தி மார்க்கமென்றும் நிவ்ருத்தி மார்க்கமென்றும் கூறப்படுகின்றன. இவ்விரண்டு மார்க்கங்களையும் வேதம் நன்றாகப் பிரித்து விவரிக்கின்றது. அவ்விரண்டும் ஒன்றோடொன்று விருத்தங்களாகையால், அவற்றை ஒரே ஸமயத்தில் ஒருவன்  அனுஷ்டிக்க முடியாது. ஆகையால் ப்ரஹ்மஜ்ஞானத்திற்கு ப்ரவ்ருத்தி கர்மம், நிவ்ருத்தி கர்மம் ஆகிய இவையிரண்டும் ஸாதனமாகமாட்டாது. நிவ்ருத்தி கர்மம் மாத்ரமே ஜ்ஞான மார்க்கத்திற்குப் பொருந்தும். அந்த நிவ்ருத்தி கர்மத்தைச் சிவனும் அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றான். ப்ரவ்ருத்தி கர்மத்தை உன்னைப்போன்ற மூடர்கள் கைப்பற்றி வருந்துகிறார்கள். 

வாராய் பிதாவே! நாங்கள் கைப்பற்றியிருக்கிற அணிமாதி ஸித்திகள் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன- 
1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 
2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 
3. லகிமா - லேசாகச் செய்தல் 
4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 
5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 
6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 
7. ப்ராப்தி - நிணைத்த பொருளைப் பெறுதல் 
8. ப்ராகாம்யம் - நிணைத்தவிடம் செல்லும் வல்லமை) உங்களுக்குக் கிடைக்கமாட்டாது. 

“எங்களுடைய ஸித்திகளும் உங்களுக்கு நேரமாட்டாது” என்கிறாயோ? ஸ்வர்க்காதி பதவிகள் அல்லவோ உங்களுடைய ஸித்திகள்? தூமாதி மார்க்கத்தைக் (மோக்ஷம் தவிர்த்த மற்ற ஸ்வர்கம் முதலிய பலன்களை அடையச் செல்லும் வழியைக்) கொடுப்பவைகளான யஜ்ஞாதி (யாகம் போன்ற) கர்மங்களை அனுஷ்டிப்பவர்களும் யாகத்தில் சமைத்த அன்னத்தைப் புசித்து அவ்வளவில் த்ருப்தி அடைந்தவர்களுமாகிய ப்ராணிகளே அந்த ஸ்வர்க்காதி பதவிகளை ஸ்தோத்ரம் செய்வார்கள். அதுவும் அந்த யாகசாலைகளிலிருக்கும் வரையிலுமேயன்றி அதை விட்டு வெளியே போவார்களாயின், அவர்களுக்கு அந்த புத்தியும் மாறிப்போம். நாங்கள் கைப்பற்றியிருக்கிற அணிமாதி ஸித்திகளோவென்றால், பிறர்க்கு அறிய முடியாத அடையாளங்களையுடையவை. ஜரா மரணாதியான ஸாம்ஸாரிக தர்மங்களையெல்லாம் (பிறப்பு, இறப்பு போன்ற உலக வாழ்க்கை வழிகளை) துறந்த பெரியோர்களால் அங்கீகரிக்கப் பெற்றவை. ஆகையால் ப்ரவ்ருத்தி மார்க்கத்திற்கும் நிவ்ருத்தி மார்க்கத்திற்கும் பலத்திலும் அனுஷ்டானத்திலும் மகத்தான வைலக்ஷண்யம் (வேறுபாடு) உண்டு. ஆகையால் பெரியோர்களுக்கு ப்ரவ்ருத்தி தர்மத்தில் ருசியே உண்டாகிறதில்லை. இங்கனம் நிவ்ருத்தி மார்க்கத்தில் நிலைநின்ற மஹானுபாவனாகிய ருத்ரனை த்வேஷிக்கின்ற (வெறுக்கின்ற) உன்னுடைய சரீரத்தினின்று உண்டான இந்தப் பாபிஷ்ட ஜன்மத்தினால் எனக்கு என்ன ப்ரயோஜனம்? இந்த சரீரத்தினால் கிடைத்த ப்ரயோஜனம் என்ன?  என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. 

துர்ப்புத்தியாகிய உன்னுடைய ஸம்பந்தத்தினால் நான் வெட்கமுற்றிருக்கின்றேன். பெரியோர்களுக்கு அப்ரியத்தைச் (பிடிக்காத்தைச்) செய்கின்ற பாபிஷ்டனிடத்தினின்று (பாவம் செய்தவனிடத்தினின்று) உண்டான தேஹத்தைச் சுடவேண்டுமல்லவா? நீ மேன்மையுடைய ருத்ரனைப் பழிக்கின்றனையாகையால் பாபிஷ்டன் (பாபம் செய்தவன்). ஆகையால் உன்னுடைய சரீரத்தினின்று உண்டான என் சரீரத்தை நான் துறந்து விடுகிறேன். மற்றும், எருதுக் கொடியனான ருத்ரன் பரிஹாஸ காலங்களில் என்னை “தாக்ஷாயணி!” (தக்ஷரது புதல்வீ) என்று உன் ஸம்பந்தத்தை உட்கொண்ட நாமத்தினால் அழைப்பானாயின், அப்பொழுது நான் பரிஹாஸமும் புன்னகையுமின்றி மிகவும் மனவருத்தம் அடைகின்றேன். ஆகையால், உன்னிடத்தினின்று உண்டானதும் பிணம் போன்றதுமாகிய இந்த தேஹத்தை நான் நிச்சயமாய் விடப்போகின்றேன். இதில் ஸந்தேஹமில்லை.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் சத்ருக்களை அழிக்கும் திறமையுடைய விதுரனே! இங்கனம் ஸதீதேவி யாகத்தில் தக்ஷரைப் பார்த்து மொழிந்து வட திசையில் சென்று வாக்கு (சொல்) முதலியவற்றையும் மனத்தையும் அடக்கிக்கொண்டு உட்கார்ந்தாள். அங்கு ஆசமனம் செய்து கண்களை மூடிக்கொண்டு உடுத்திருந்த பொன்னிறமான பட்டு வஸ்த்ரத்தோடு கூடவே, யோகிகள் சரீரத்தை விடுவதற்கு எங்கனம் செய்வார்களோ, அங்கனமே செய்யத்தொடங்கினாள். நிந்தைக்கு இடமில்லாத அந்த ஸதீதேவி, நெடுநேரம் உட்கார்ந்திருப்பினும் சிறிதும் வருத்தம் உண்டாகாதிருக்குமாறு ஆஸனத்தை ஜயித்து மேலே செல்லும் தன்மையுள்ள ப்ராண வாயுவையும் கீழே செல்லும் தன்மையுள்ள அபானவாயுவையும் மேலும் கீழும் போகவொட்டாமல் ஒரே நிலையாயிருக்கும்படி நாபி சக்ரத்தில் நிறுத்தி அந்த நாபி சக்ரத்தினின்று உதான வாயுவைக் கிளப்பி புத்தியுடன் மெல்ல மெல்ல ஹ்ருதயத்தில் நிறுத்தி மார்பிலிருக்கின்ற அந்த உதான வாயுவைக் கண்டத்தின் வழியாய் புருவங்களினிடையில் கொண்டு போய்ச் சேர்த்தாள். 

பெரியோர்களனைவரிலும் மிகுந்த பெருமை அமைந்தவனாகிய ருத்ரன் அடிக்கடி தன் மடியில் ஏற்றிக் கொண்டு புகழ்ந்ததாகிய தன் சரீரத்தை இங்கனம் தக்ஷரிடம் கோபத்தினால் துறக்க விரும்பி, நினைத்தபொழுது மரணம் அடையும்படி ஸ்வதந்த்ரையாகையால் (தன் விருப்பப்படி செய்யக்கூடியவளாகையால்) ருத்ரனுடைய பத்னியாகிய அந்த ஸதீதேவி அங்கங்களில் அநிலாக்னிதாரணையென்னும் (அநில - வாயு; அக்னி - நெருப்பு; தாரணை - ஒருமுகப்படுத்துதல் - concentration) தாரணையைச் செய்தாள். அப்பால், ஜ்ஞானத்தை விரும்புவோர்க்கெல்லாம் குருவும் தன் கணவனுமாகிய ருத்ரனுடைய பாதாரவிந்தங்களைப் பனிகையால் உண்டாகும் ஆநந்தத்தை அனுபவித்துக்கொண்டு அதனால் சிறிதும் பாபமற்றவளாகி கணவனைத் தவிர மற்றெதையும் சிந்திக்காதிருந்தாள். அவளுடைய சரீரம் அந்த க்ஷணமே ஸமாதியால் விளையும் அக்னியால் எரிந்து போயிற்று. பூமியிலுள்ளவர்களும் ஆகாயத்திலுள்ளவர்களும் அந்த ஆச்சர்யத்தைக்கண்டு “ஆ! ஆ!” என்று பெருங்கோஷம் செய்தார்கள். மற்றும், அந்த ப்ராணிகள் “தேவச்ரேஷ்டனாகிய ருத்ரனுடைய அன்பிற்கிடமான பார்யை (ஸதீ) தக்ஷரால் கோபம் விளையுமாறு அவமதிக்கப் பெற்றவளாகி ப்ராணன்களைத் துறந்தாள். ஆ! ப்ரஜாபதியான தக்ஷருடைய தௌர்ஜன்யத்தைக் (கொடுமையை) காண்பீர்களாக. இவர்க்கு ஏன் இப்படி புத்தி கெட்டுப்போயிற்றோ? இப்பொழுது இவர் செய்த கார்யத்தைக் கண்டீர்களா? இப்படியும் செய்யலாகுமா? ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஜகத்தெல்லாம் தன் ப்ரஜைகளைப்போல் எவனுக்கு மிகவும் ப்ரீதிக்கு இடமாயிருக்கின்றதோ, அப்படிப்பட்ட ருத்ரனுடைய மனைவியாகிய ஸதீதேவி தக்ஷரால் அவமதிக்கப் பெற்று ப்ராணன்களைத் துறந்தாள். ஜகத்தையெல்லாம் தன் ப்ரஜைகளைப்போல் பார்க்க வேண்டியவரான இந்த தக்ஷர் தன் வயிற்றில் பிறந்த புதல்வியை இங்கனம் அவமதிப்பது யுக்தமா (ஸரியா)? இவர் ஸதீயை அவமதித்தமையால் ருத்ரனொருவனுக்கு மாத்ரமே மனஸ்தாபமில்லாமல் (மன வருத்தம் இல்லாமல்) ஜகத்திற்கெல்லாம் மனஸ்தாபமேயல்லவா (மன வருத்தமேயல்லவா)? ஏனென்னில், ஜகத்திற்கெல்லாம் ப்ரியனான ருத்ரன் மனவருத்த முறுவானாயின், அவனுடைய “ப்ரஜைகள் போன்ற ஜகத்தும் மன வருத்தம் உறுமல்லவா? இப்படி உலகமெல்லாம் வருந்தும்படியான கெடுதியை இவர் செய்யலாகுமா? ஸதீதேவி இவருக்குப் புதல்வி. மற்றும் அவள் கம்பீரமனமுடையவள்; மிகுந்த குணங்கள் அமைந்தவள். ஆகையால் அடிக்கடி வெகுமதி செய்யத் தகுந்தவள். அப்படிப்பட்டவளை இவர் மஹர்ஷியாயிருந்தும் அவமதித்தமை அழகன்று. இவருடைய ஹ்ருதயம் மிகவும் பொறாமையுடையது. ப்ராஹ்மணனென்று வ்யாஜமே (பெயரளவிற்கே) ஒழிய ப்ராஹ்மணர்க்கு இயற்கையில் ஏற்பட்ட குணங்கள் இவருக்கு எவையுமே இல்லை. இந்த தக்ஷர் உலகமெங்கும் அபகீர்த்தியையும் (பழியையும்) கடைசியில் நரகத்தையும் பெறுவாரென்பதில் ஸந்தேஹமில்லை. ஏனெனில், இவர் தன்னுடைய அங்கத்தினின்றுண்டான புதல்வி தன்னுடைய அபராதத்தினால் மரணம் அடைவதாக முயற்சி கொள்ளுகையில், சிவனிடத்திலுள்ள த்வேஷத்தினால் (வெறுப்பினால்) அவளை வேண்டாமென்று தடுக்காமல் வெறுமனே இருந்து விட்டாரல்லவா?” என்று பலவாறு மொழிந்தனர். 

இங்கனம் தக்ஷரது புதல்வியாகிய ஸதீதேவி ப்ராணத்யாகம் (உயிரை துறத்தல்) செய்ததைக் கண்டு ஜனங்கள் இவ்வாறு மொழிந்து கொண்டிருக்கையில், ருத்ரனுடைய அனுசரர்களாகிய ப்ரமதகணங்கள் தக்ஷரைக் கொல்வதற்காக ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். நாற்புறத்திலும் கிளம்பி வருகின்ற பாரிஷதர்களின் (ப்ரமதகணங்களின்) வேகத்தைக் கண்டு, மஹானுபாவராகிய ப்ருகுவானவர், யஜ்ஞத்திற்கு (யாகத்திற்கு) விக்னம் செய்பவர்களை அழிக்கும் திறமையுடைய யஜுர்வேத மந்த்ரத்தினால் தக்ஷிணாக்னியில் ஹோமம் செய்தார். அது மிகவும் ஆச்சர்யமாயிருந்தது. அந்த தக்ஷருடைய யாகத்தில் அத்வர்யுவாயிருந்த ப்ருஹு மஹர்ஷி இங்கனம் ஹோமம் செய்கையில், எவர் தவமஹிமையால் ஸோமயாகங்களில் கொடுக்கிற ஹவிர்ப்பாகத்தைப் பெற்று புசிக்கும்படியான மேன்மையை அடைந்து ருபுக்களென்னும் பேரால் வழங்கி வருகின்றார்களோ அந்த தேவதைகள் மிகுந்த ஒளியுடன் ஆயிரமாயிரமாய்த் தோன்றிக் கிளம்பினார்கள் அவர்களெல்லோரும் கொள்ளிக்கட்டைகளையே ஆயுதமாகக் கொண்டிருந்தார்கள். தக்ஷரை வதிக்க வந்த ப்ரமதகணங்களும் யக்ஷர்களும் ப்ரஹ்மதேஜஸ்ஸினால் ஜ்வலிக்கின்ற அந்த ருபுக்களென்னும் தேவதைகளால் தஹிக்கப்பெற்று (எரிக்கப்பட்டு) எல்லா திசைகளிலும் பறந்தோடினார்கள். 

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக