சனி, 4 ஜனவரி, 2020

உயர் பாவை - 20 - சதாரா மாலதி

எப்பேர்ப்பட்ட வல்லவரையும் பொருள் சொல்வதில் தடுமாற வைக்கும் பாசுரம் இது. 


குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி 
கொத்தலர் பூங்குழல் நப்பின்னைக் கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் 
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை 
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண் 
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் 
தத்துவமென்று தகவேலோர் எம்பாவாய்.


தத்துவார்த்தத்துக்குள் புகுந்து குழப்பாமல் மேலிடக் கிடைக்கிற அர்த்தத்திலேயே விரசம் இல்லாத விளக்கத்தைத் தர ஆண்டாள் இடம் வைத்திருக்கிறாள். கூர்மையான கவிதையின் சக்தியே அது தானே! 


ஒரு தகுதியுள்ள படைப்பாளிக்கு ஒரு அரிய வெகுமதியைத் தர வேண்டும் என்று நிச்சயித்து விட்டால் 'விதிகளி'ல் [Rules and Regulations] எங்கெல்லாம் இடமிருக்கிறது என்று தேடுவான் ஆதிக்கத்துக்கு அணுக்கமான wellwisher. நடைமுறையில் எங்கெல்லாம் convention படி சிக்கலில்லாத வழியிருக்கிறது என்று பார்த்து அலைவான் மக்களுக்கு அணுக்கமான empathy உள்ள இன்னொரு wellwisher. இருவருமாகச் சேர்ந்து அருமையான படைப்பாளியைத் தூக்கிப் பிடிக்கப் பார்ப்பார்கள். 

அப்படி பகவத் ருசியுள்ள தகுதி பெற்ற ஒரு ஜீவனுக்கு அன்பு செய்ய பரமனும் பிராட்டியும் போட்டியிடுகிறார்கள். யார் முதலில் செய்வோம் என்பதில் இருவரும் சமமான ஆர்வம் காட்டுகிறார்கள். அது மட்டுமன்றி இருவரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர்கள் என்பதால் இவன் சொல்கிறான் என்று அவளும் அவள் சொல்கிறாள் என்று இவனும் பூரணமாக விரும்பி ஒரு ஜீவனுக்கு அருளைச் செய்ய முன்வருகிறார்கள். 


அப்படி அறைக்கு வெளியே நிற்கும் பெண்களுக்குக் கதவு திறக்க நீயா நானா என்று போட்டி நடக்கிறது உள்ளே. ஒரு மல்லுக்கட்டு போல physical ஆக ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கதவைத் திறக்க எழ முயன்றார்கள் தெய்வ தம்பதிகள். நப்பின்னை உடல்வலுவில் குறைந்தளாதலால் மார்போடு இறுக்கி அவளை எழவிடாமல் படுக்கையில் கிடத்தி அவள் மேல் தன் முழு பலத்தை வைத்து அவளிடமோ வெளியில் இருக்கிறவர்களிடமோ குரல் காட்டாமல் நேரம் கடத்தினான் கண்ணன். இது இயல்பான ஆண்தன்மை. என்ன செய்கிறார்கள் இந்தப் பெண்கள் என்று பார்க்கும் குறுகுறுப்பு. நப்பின்னைக்கோ பேச முடியவில்லை. நடப்பதைச் சொல்லமுடியவில்லை. தானும் எதுவும் செய்யவும் முடியவில்லை. மங்களகரமான தீபங்கள் எரிகின்றன. வீரபத்னியாகையால் குவலயாபீடத்து யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல் அழகு, குளிர்ச்சி, மென்மை, பரிமளம், மதிப்பு என்ற ஐந்தாலும் ஏற்றமுடைய படுக்கை [பஞ்சசயனம்] மீது படுத்திருக்கிறாள் நப்பின்னை. கொத்துகொத்தாய் மலரைச் சூடியிருக்கிறாள் அந்த நப்பின்னை. அந்த நப்பின்னையை அணைத்த அதனால் மலர்ந்த அழகிய மார்பையுடைய கண்ணன் அவள் மேல் தன் எடை அழுந்த படுத்திருக்கிறான். அப்போது கண்ணன் குரலெடுத்துப் பேசவில்லை. இது தான் பாசுரத்தில் வைக்கப் பட்ட சித்திரம். அதற்கு ஆய்ச்சியர்கள் ஒரு கண்டனத்தையும் வைக்கிறார்கள். 


இப்படிக் கண்ணனை வெளியில் இருப்பவர்களோடு பேசவிடாமல் எழுந்து கதவு திறக்கவிடாமல் பிடித்து வைத்திருக்கும் நப்பின்னையின் செயல் கண்டனத்துரியது என்று பெண்கள் நினைக்கிறார்கள். கடைசியில் உன் மைத்தடங்கண் கண்ணன் விஷயத்தில் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டதே என்று சொல்கிறார்கள். ஏனெனில் தான் எழ இருந்தபோது கண்ணன் மல்லுக் கட்டால் தடுத்து விட்டு, அந்த நிலையில் அவளிடம் தான் திறந்துவிடவா? என்று சாடையால் அனுமதி கேட்க அவள் மைத் தடங்கண்ணினால் 'கூடாது, நான் தான் திறப்பேன்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறாள். ஏனெனில் 'வந்து திறவாய் மகிழ்ந்து' என்று என்னைத் தானே சொன்னார்கள்?' என்கிறாள். அப்படியானால் நீயும் போய்த் திறக்க உன்னை விட மாட்டேன் என்று மேலேறிப் படுத்திருக்கிறான் கண்ணன். இதை வேறு மாதிரி யூகித்த கோபிகைகள், 'எங்களுக்குக் கருணார்த்தமாக நீ அணியும் மை எங்களுக்கே விரோதமாய்ப் போயிற்று பார்த்தாயா? அங்கே என்ன வார்த்தை யில்லாமல் சதி செய்கிறாய் நீ? இப்படிப் பிரியாமல், கண்ணனையும் செய்யவிடாமல் எங்களை வதைக்கிறாய். இது உன் தன்மைக்கும் சேர்ந்ததல்ல. எங்கள் நோக்கத்துக்கும் இசைந்ததல்ல.' என்று கடிந்து கொண்டார்கள். 


பதிம் விஸ்வஸ்ய என்றபடி உலக நாயகனை நீ உன் ஒருத்திக்கே சொந்தமாக்கிக் கொண்டு 'இறையும் அகலகில்லேன்' என்று சொல்லிக் கொண்டு இருப்பது உன் கருணைக்கும் சேர்த்தியில்லை உன் புருஷகாரத்துக்கும் சேர்த்தியில்லை. என்றார்கள். 


கிருஷ்ணனும் நப்பின்னையும் ஒரு படுக்கையில் இருப்பது என்றால் என்ன? பகவானும் பிராட்டியும் பரமபதத்தில் திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷப் படுக்கையிலிருக்கும் இருப்பையே இது காட்டுகிறது. கோபிகளே முக்தாத்மாக்கள். முக்த ஜீவன் அங்கு அந்த மண்டபத்தைக் கிட்டி ஆதிசேஷ படுக்கையை மிதித்து ஏறி பகவானுடைய மடியில் உட்கார்கிறான் என்று வேதம் சொல்கிறது. அதையே இங்கு ஆண்டாள் பிரார்த்திக்கிறாள். 


பகவான் ஹிதபரன் பிராட்டி பிரியபரை. அபராதம் செய்த ஜீவனும் வாழ்ந்து போகவேண்டுமென்று நினைப்பவள். அபராதம் செய்யாத ஜீவனே இல்லை என்று நினைப்பவள். 'மணற்சோற்றில் கல் ஆராய்வாருண்டா?' என்று வினவுபவள். எனவே அகில ஜகன் மாதாவாகிய நீ வேறு புகலில்லாத எங்களுக்கு இப்படிச் செய்யலாமா என்கிறார்கள். 


வெளிப்படையாக பார்ப்பதற்கு சேர்ந்து படுத்திருப்பது போல இருந்தாலும் கிருஷ்ணன் நப்பின்னையை சுயமாக எதுவும் செய்யமுடியாதபடி மல்லுக்கட்டியிருப்பது வெளியில் இருப்பவர்களுக்குப் புரிய நியாயமில்லை. நப்பின்னைக்குச் சொல்லவும் முடியவில்லை. 

இது தான் 'குத்து விளக்கெரிய' பாசுரத்தின் திவ்யமான சாராம்சம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக