சனி, 4 ஜனவரி, 2020

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 21 - கண்ணன் ரங்காச்சாரி

19


குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி 
கொத்தலர் பூங்குழல் நப்பின்னைக் கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் 
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை 
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண் 
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் 
தத்துவமென்று தகவேலோர் எம்பாவாய்.


கோபியர்கள் நப்பின்னையை எழுப்பிடவும், கண்விழித்தவளை, மல்லுக்கட்டாய் படுக்கையில் கிடத்தி, அவள் ஸ்பர்சித்த சுகத்திலே உறங்கினவான கண்ணனை, மறுபடியும் நப்பின்னையின் வழியாகத் துயிலெழுப்ப கோபியர்கள் முயல்கிறார்கள்.


'குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்' - நந்தகோபனின் திரு மாளிகையைச் சுற்றிலும் நிலை விளக்குகள் எரியத் துவங்கி விட்டன. கண்ணன் படுத்துக் கிடந்த கட்டிலின் கால்கள், கண்ணன் போரிட்டு வென்ற குவலயா பீட யானையின் தந்தத்தால் செய்யப்பட்டிருந்தன.


தூக்கம் விழித்த நப்பின்னை பிராட்டி கண்ணனின் கட்டிலில் அவளே ஒரு நிலை விளக்காய் அமர்ந்து கிடக்கிறாள். 'நள்ளிருள் கண் என்னை உய்த்திடுமின்' என்ற வண்ணம் விளக்கொளியில் கண்ணனைப் பார்த்துக் கிடக்கிறாள். அந்த ஐஸ்வர்யத்தைப் பார்த்த கோபியர்கள் வார்த்தை மறந்து திகைத்திருக்கிறார்கள்.


'மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி' - தர்ச நீயம் (அழகு), சீத பரிஹாரம் (சரியான குளிர்ச்சி), உஷ்ண பரிஹாரம் (சரியான வெம்மை), பரிமளத்வம் (நல் மணம்), விஸ்தார பாண்டரோ பேதம் (சரியான நீள விஸ்தாரங்கள்) என்னும், ஐந்து வித நிறம் மற்றும் குணங்கள் பொருத்திய சுகமான கட்டில் மெத்தையின் மேல், திருவடி இட்டு ஏறி, பைந்நாகப் பஞ்சணையான திருவனந்தாழ்வான் மேல் படுத்துக்கிடந்தே, தர்சனம் செய்தவர்களுக்கு, எம்பெருமான், ஐஸ்வர்யங்கள் மிகுந்த பஞ்ச சுகமான, கட்டிலின் மேல் திருப்பாதங்கள் பதித்து ஏறக் கண்டது அற்புதமானது.


'கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த' - எப்படிக் கொடியில் உள்ள மலர்கள் புதுமை மாறாமல் இருக்கிறதோ, அது போலே நப்பின்னையின், திரு முடி ஸ்பர்சத்தாலே, அவள் சூடிக் கிடந்த கொத்தான பூக்களும், மலராதிருந்ததாம்.


மலரிட்டு நாம் முடியோம் என்று கோபியர்கள் கொண்ட சபதத்துக்கு, விரக நெருப்பால், சூடிய பூ வாடிப் போகும் என்பதும் காரணமாம்.


நப்பின்னையை மல்லுக்கட்டி திரும்பவும் கட்டிலில் மேல் கிடத்தி, அவள் ஸ்பர்ச சுகத்தில் அமிழ்ந்து கிடந்தான். இவன், அவள் திரு முலைத் தடத்தில் தன்னைப் பதித்துக் கொண்டதாகவும், அவள், இவன் மேல் தன் திரு முலைத் தடங்களைப் பதித்தாகவும், குறிப்பு.


'மலர் மார்பா வாய் திறவாய்' - ஸ்பர்ச சுகத்தாலே மலர்ந்து, அகன்ற மார்பினன், வாய் திறந்து பேசுவாய் என்று கோபியர்கள் விளிக்கிறார்கள். உன் கம்பீரமான வாயைத் திறந்து வார்த்தை ஒன்று சொல்லாயோ. உன்னுடைய அகன்ற மார்பினை அவளுக்குக் கொடுத்த போதினில், வார்த்தையாவது எங்களுக்குக் கொடுக்க மாட்டாயோ என்கின்றனர் கோபியர்.


'மைத் தடங் கண்ணினாய்' - மையிட்டதால் பெரிதான தோற்றம் தரும் கண்கள். அவனுடைய அகன்ற திரு மார்பினை ஒரு சேர நோக்கிக் கிடந்தே, அகன்று போன கண்கள். கண்ணனின் அழகிய கண்ணின் மைத் தடம் இவள் மேல் படர்ந்ததோ?. 'மையிட்டு எழுதோம்' என்று சபதம் கொண்ட கோபியர்கள், கண்ணனைப் பெற்றதனால் வேறெதுவும் வேண்டாமல், ஸ்வதந்த்ரத்தோடு மையிட்ட கண்களைக் கொண்ட நப்பின்னையை ரசிக்கிறார்கள்.


'நீ உன் மணாளனை' - உன்னை அவன் விடான், நீ அவனை விட மாட்டாய்; 'கோபி ஜன வல்லபன்', லோக பர்த்தாராம்' என்கிற பொதுவான கண்ணனை உனக்கு மட்டும் கொள்கிறாய் என்பதை நப்பின்னை உணர வேண்டும் என்பதற்காக கோபியர் சொன்ன மொழிகள்.


'எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்' - கலவிச் சுகம் பிரியக் கூடாது என்பதனால், அவனைத் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க விட மாட்டாய்.


'எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்' - நாங்கள் என்ன சொன்னலும் நீ அவனைப் பிரிய விடப் போவதில்லை. பிரிந்தால் நீ வாழ மாட்டாய். நீ அவனைப் பிரிய வேண்டாம். எங்களை உன்னோடு இணைத்துக் கொள், அவனைப் பிரியாதிருக்கும் செயலுக்குத் துணையாக,


'தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்' - இது உனக்கு ஏற்ற செயல் அல்ல. உன் சொரூபத்துக்குத் தகுந்த செயல் இல்லை. 'ஈஸ்வரீம் சர்வ பூதானாம்' என்று உனக்கு முதன்மை இடம் நாங்கள் கொடுத்திருக்கும் போது, கண்ணனை எங்களுக்குக் காட்டாது, கண்ணனை நீ மட்டும் பிரியாதிருப்பது உகந்த செயல் அல்லவே. முதன்மைப் பிராட்டியான உன் புருஷாத்காரத்துக்கும் (எம்பெருமானோடு உலகத்தாரை இணைக்கும் செய்கை), கிருபைக்கும் ஏற்ற செயல் அல்லவே.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக