21
ஏற்றக் கலங்கள் எதிர் கொண்டு மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
புருஷாகார பூதை (கண்ணனையும் ஜகத்திலுள்ள வஸ்துக்களையும் இணைக்கக் கூடிய பாலமானவள்) நப்பின்னை, கோபியர்கள் மனக் கிடையை உணர்ந்து அவர்களோடு சேர்ந்து கண்ணனைத் துயிலெழுப்பி, அர்த்திக்கக் கடவோம் என்று கூறுகிறாள்.
கிருஷ்ணனுடைய அம்புகளுக்கு இலக்கானவர்கள். எப்படி அவன் காலடிகளில் விழுகிறார்களோ, அது போன்று அவனுடைய குண ஸ்வரூபத்துக்கு அடிமையாகி நாமும் அவன் காலடிகளில் சரணம் புகுவோம் என்று நப்பின்னை உட்பட்ட கோபியர் கூட்டம் முனைகிறார்கள்.
'ஏற்றக் கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப' - நிரப்புவதற்க்காக வைக்கப்படும் பாத்திரங்களிலே, எதிர்த்துப் பொங்கி வெளியில் ததும்பிடும் (பால்). பாத்திரம் எதுவானாலும் பால் சொரியும் பேதம் பசுக்களுக்கு இல்லை. பாத்திரம் நிரம்பி வழிவது பசுக்களின் குற்றமா?.
கண்ணனைப் போன்றே அவன் ஸ்பரிசத்தால் நெகிழ்ந்து வளர்ந்த பசுக்கள், அர்த்திக்க வரும் பக்தனுக்குள் பேதம் கொள்ளாமல் அருளை வாரி இறைத்திடும், அவனைப் போலவே, பாத்திரங்களுக்குள் பேதமில்லாமல் பாலை நிரப்பி வழியச் செய்திடுமாம். நந்தகோபனுடைய, வீரமும், தருமமும், புஜ பலமும் அவன் நாட்டின் பசுக்களிலும் நிறைந்து கிடக்கிறதென்பதும் குறிப்பு.
'மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்' - கலம் (பாத்திரம்) அடியில் வைக்காமல் போனாலும் மடி தணியாமல் இருப்பதனால் பால் சொரிகின்ற பசுக்கள். பெண்களுக்கும் பேதைகளுக்கும் கூட பயமில்லாது அணைத்துக் கொள்ளும் வண்ணம் அமைந்த சௌஜன்யமான வள்ளல்கள் போன்ற பெருமை மிகுந்த பசுக்கள்.
'வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல்' - 'எத்தைத் தா என்று கேட்டாலும் தந்திடும் குற்றமற்ற எங்கள் கண்ணன்', என்னுமாப் போலே.
'ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்' - ஆற்றல் மிகுந்த கிருஷ்ணனுடையது போன்ற தன்மைகள் கொண்ட நந்தகோபனின் மகன் என்ற கூற்று. மகனால் தந்தைக்கும், தந்தையால் மகற்கும் பெருமை.
'ஸமஸ்த கல்யாண குணாம்ருதோ அதி', 'அகில ஹேய ப்ரத்யநீக', 'அபரிமித குண கணவ் கமகர்ணவ்' என்பவை கிருஷ்ணனின் ஆற்றல்களின் எல்லைகள்.
சுயமாகவே பல செல்வங்களுக்குச் சொந்தமான நந்தகோபருக்கு, கண்ணன் பிறந்ததால் அவனே ஈடில்லாச் செல்வமாகி, இன்னும் பெருகியதாம்.
நீ எத்தனைச் செல்வனானாலும், அந்தச் செருக்கினால், எங்களை மறந்திடாமல் நினைவு கொள்வாய். எல்லாம் அறிந்து, உணர்ந்தவனையே 'அறிவுறாய்' என்று சொல்லும் படியாலே, அவனுக்குப் பிடித்தவர்களை மட்டும் பற்றிக் கொண்டு, மற்றவரை அவன் விட்டு விடக் கூடாதென்பது ஆயர் சிறுமியர்கள் கோரிக்கை.
'ஊற்றமுடையாய் பெரியாய்' - வேதங்களால் பலமுறை பல்லோர்களால் அர்ச்சிக்கப் பெற்று வன்மை பெருகியவன். 'நாராயண பரோ வேத:', 'வேத முதல்வன்', 'நான் மறைகள் தேடியோடும் செல்வன்', என்கிற வேதங்களின் உற்பத்திக்கு வித்தானவன்.
'உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே' வேறுபாடற்று யாரும் காணும் வண்ணம் நினைப்பவர்க்கு, அர்ச்சிப்பவருக்கு, நிந்திப்பவருக்குக் கூடத் தோற்றம் அளிக்கும் எளிதான சுடர் போன்றவனே.
விதிப் பயனால் தோன்றிடும் நாமெல்லாம், ஒவ்வொரு பிறவியிலும், அழித்தால் மாற்றுக் குறையும் தங்கமாய் மழுங்கிக் கொண்டே போகிறோம். அவனோ அனைவருக்கும் அனுக்ரஹ கார்யங்களே செய்வதனால், நெருப்பிலிட்ட மாணிக்கம் போலே சுடர்கிறான். 'பரவு தொல் சீர் கண்ணா என் பரஞ்சுடரே' என்று விளிக்கப் பெறுகிறான். உன்னுடைய கல்யாண சம்பத்துக் குணங்கள் பரிமளிக்கும் வண்ணம் விழித்திடாய்.
'மாற்றாருனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே ' - பரம ஸ்வரூபனனான மாலனுக்கும் எதிரிகள் உண்டோ?. பகவத விரோதிகள் அவனுக்கு எதிரிகள். அன்பர்களின் எதிரிகள் அவனுக்கு எதிரிகள்.
அவனால் அம்பு பட்டவர்கள் காலிலே வீழ்ந்தாவது பிழைத்துக் கொள்ளலாம், ஆனால், துர்க்குணம் கொண்டவர்களுக்கு விடிவில்லை.
உன்னோடு போரிட்டுத், தங்களுடைய வலிமைகளைத் தொலைத்து, ஓரிடத்திலும் புகலற்று, உன் வீட்டு வாசலின் கீழே வீழ்ந்து 'தமேவ சரணம் கத', என்று ராமனுடைய காலிலே வீழ்ந்த காகாசுரன் போல இருக்கை.
'போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் ' - பெரியாழ்வாரைப் போலப் பல்லாண்டு பாடிப், எங்களைத் தோற்கடித்த உன் விசேஷ குணங்களைப் பாடி புகழ வந்துள்ளோம், எழுந்திராய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்