ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி....
ஆச்சாரியனையும் பிராட்டியையும் கிட்டி அவர்களால் பூரணமாக அருள்செய்யப்பட்ட உயிர் அப்புறமும் பேறு என்பது பரமன் மனம் வைத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியது என்று அறிகிறது.
இந்த நிலையில் அவனே supreme என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற சரணாகதியைச் செய்கிறது.
அதுவே ஸ்வரூபக்ருத தாஸ்யம் என்கிற வகைச் சரணாகதியாக 21ம் பாசுரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பெருமாள் முன் நப்பின்னையும் ஆண்டாள் கோஷ்டியோடு சேர்ந்துகொண்டு சரணாகதி வழிபாட்டை ஏற்று நடத்திச் செல்ல வருகிறாள். எல்லாரும் கண்ணனைப் போற்றிப்பாட ஆரம்பிக்கிறார்கள். கண்ணன் ஆய்ச்சியர் மனசைத் தெரிந்துகொள்வதற்காக கண்மூடிப் படுத்திருக்கிறான்.
ஏற்றக் கலங்கள் எதிர் கொண்டு மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
கோகுலத்தில் பால் கறக்க வைத்த கலங்களெல்லாம் நிரம்பி வழிந்தன. சிறியது, பெரியது என்று கடலையே பாத்திரமாக்கி வைத்தாலும் அதுவும் நிறைந்து, கறக்கிற பால், பாத்திரத்துக்குள் புகுவதற்குப்பதிலாக மடிக்காம்புக்குத் திரும்பிப் பீய்ச்சும் அளவுக்கு, வேகமாக எதிரோட்டம் செய்கிறது. 'அந்த அளவுக்கு மலையருவிகள் போல இடைவீடு இல்லாமல் பாலைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் வள்ளல் தன்மைகொண்ட யானையொத்த பெரிய பசுக்களை மிகப் படைத்த நந்தகோபன் மகனே!' என்று கண்ணனை அழைத்தாள் ஆண்டாள்.
அடிப்பாடல்களில் நந்தகோபனின் கொடையும் வீரமும் சொல்லப்பட்டது போலவே இப்போது பால்வளம் மெச்சிக் கூறப்படுகிறது. இதைத் தந்தை வழியாகப் பெறவன்றோ நீ பரமபதம் விட்டு இங்கு ஆய்ப்பாடி வந்து சேர்ந்தது? 'பதிம்விஸ்வஸ்ய' என்ற ஐஸ்வர்யத்தைக் காட்டிலும் நந்தகோபன் ஐஸ்வர்யத்துக்கல்லவோ நீ இட்டுப் பிறந்தது? கோபகுலமும் கோபாலத்துவமும் நந்தன் பெற்ற ஆனாயனுக்கல்லவா கிடைக்கும்? நீ பிறந்த பிறப்பை நினைத்துப்பார் என்பது தொனிக்க 'ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்!' என்றார்கள்.
உன்னை யாராக நினைத்துக் கொண்டு இப்போது உறங்குகிறாய்? உன் ஐஸ்வர்யத்தை நினைத்து எங்களை நீ அலட்சியப் படுத்தக்கூடும். ஆனால் உன் பிறவியை புத்தி பண்ணினால் நாங்கள் சொல்வது உன் காதில் ஏறும்.
நாங்கள் பரமபதத்தில் வந்தோமா? வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமா? ஆனாயனிடம் வந்தோம். உனக்கு விழிக்கவோ ஏன் என்று கேட்கவோ தடையேன்ன?
பசுக்கள் ஊர் முழுக்க உண்டு கோகுலத்தில். அதில் என்ன எனக்கு விசேஷ ஏற்றம் என்று பேசாமல் கிடந்தான் கண்ணன். இப்போது உறைத்தது ஆண்டாளுக்கு.. இவன் காதில் போட்டுக் கொள்ளாவிட்டால் போய் புருஷார்த்தம் கொடு என்று கேட்க இன்னொரு புருஷன் இல்லையே என்பதும் இவன் கிட்டவில்லை என்று வந்த வழி திரும்ப முடியாது என்பதும் மனசில் அழுத்தி பாரம் கனத்தது. முதல் முறையாக அவனுடைய நிஜமான ஸ்வரூபத்தை மனசில் தியானம் செய்தாள்.
ஊற்றம் உடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் என்றாள்.
ஊற்றம் உடையாய் என்பதற்கு இரண்டு பொருள் சொல்லலாம். 'அடியாரைக் காப்பதில் சிரத்தை உடையவனே!' என்று ஒரு பொருள். 'வேதப்ரதிபாத்யனே! வேதத்தின்பருண்மையானவனே! வேதத்தின்பொருளாயிருக்கிற திண்மையுடையவனே! வேதத்தின் உள்ளீடானவனே!' என்று ஒரு பொருள். அடுத்து பெரியாய் என்பதற்கு எல்லாரிலும் மேலானவன் என்று ஒரு பொருள் பெருமையுடையவன் என்று ஒரு பொருள். ஆச்ரித ரட்சணத்துக்கு வேண்டிய முழுத் தகுதி உடையவன். அப்ராப்ய மனஸா ஸஹ என்று மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத பெரியவன் ஆர்த்த ரட்சணத்தில் பட்சபாதம் உள்ளவன். எப்படி பட்ச பாதம் உடையவன் என்கிற அர்த்தத்தைப் பெரியாய் என்ற சொல் தருகிறது என்று கவனிப்போம்.
ஒருவன் supreme authority என்றால் என்ன அர்த்தம்? அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டுவதில்லை என்பது தானே? அவன் வைத்தது சட்டம் என்பது தானே?
அவனே பல்கலைக்கழகம் என்ற போது அடிமுட்டாளுக்கு ஏதோ ஒரு பேர் சொல்லி டாக்டர் பட்டம் கொடுத்தால் அவனைக் கேட்பார் உண்டா? நாலாம் வகுப்பு படித்தவனுக்கும் முழு மெட்ரிகுலேஷன் தகுதியை அவன் கொடுத்தால் கேட்பாருண்டா?
இல்லை.
அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே ஏகாதிபத்தியன் என்று சொன்னதற்கு அவன் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல வல்லவன் என்பதும் அந்த ஒற்றைத் தகுதியை அவன் தன் அன்பர்களுக்கு எப்போதும் மிகச் சரியாகப் பயன்படுத்துகிறான் என்பதும் விளங்கும். அது தான் ஆச்ரித பட்சபாதம்.
ஒரு பெரிய அவையில் மிகப் பெரியதொரு வேள்வி நடத்தப்பட்டது. ஒரு லட்சம் முறை அத்யயனத்துக்காக தங்கக்காசுகள் ஒரு பெரிய கோடீஸ்வரனால் வித்வான்களுக்கு அள்ளிஅள்ளி வழங்கப்பட்டன. அப்போது மிகுந்த ஊக்கத்தோடும் பக்தியோடும் ஒரு இளைஞன் குழறிய குரலில் நூறுக்கும் குறைவான அத்யயனத்தை அரங்கேற்றுகிறான். அதுகண்டு மிக மகிழ்ந்து கோடீஸ்வரன் கைநிறைய பொன் நாணயங்களை அள்ளி அவனுக்குக் கொடுக்கிறான். லட்சம் அத்யயனம் பண்ணி சில காசுகளை வாங்கியவர்கள் உதறிக் கொண்டு போய் விடுவார்களா? அல்லது நூறுக்கும் குறைவான அத்யயனத்துக்குக் கொள்ளைக் காசைக் கொடுத்ததற்காக கோடீஸ்வரனை நடுவர் நியமித்து வழக்கு செய்யக் கூண்டிலேற்றி விடுவார்களா? மூச்சு விட மாட்டார்கள் அல்லவா? அப்போது கோடீஸ்வரன் செய்தது என்ன? ஆஸ்ரித பட்சபாதம். ஒருவனுக்கு ஒன்று இன்னொருவனுக்கு ஒன்று.
ஒரு சமயம் உதங்கர் 'கிருஷ்ணா, நீ எல்லோருக்கும் பொதுவான தெய்வமாயிருக்க பாண்டவர்களைக் காப்பாற்றி கெளரவர்களை அழித்தது நியாயமாகுமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன் 'பாண்டவர்கள் என்னைச்சரணடைந்தவர்கள். ஆகையினால் காப்பாற்றினேன்.' என்றான். 'அப்படி உன்னைச் சரண்புகும்படி தர்மபுத்தியை அவர்களுக்கு உண்டு பன்னினவன் நீ தானே? ஏன் அது போல துரியோதனன் கூட்டத்துக்கு நல்ல புத்தியை நீ கொடுத்திருக்கக் கூடாது?' என்று கேட்டார் உதங்கர். இதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ கன வேலை கவனிப்பது போலப் போய்விட்டான் கிருஷ்ணன். அவ்வளவு ஆச்ரித பட்சபாதம் உள்ளவன் கிருஷ்ணன். வேண்டியவர்களுக்கு விதி எல்லாம் மீறியும் நன்மை செய்யக் கூடியவன்.
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் - என்கிறபடி பிறப்பேயில்லாதவன். தன் இச்சையினால் பல அவதாரங்களைச் செய்து பிறக்கப் பிறக்க ஒளி கூடி ஜோதி போலவே நிற்பவன் என்று ஒரு அர்த்தம். தன் ஆச்ரித பட்ச பாதம் என்ற திவ்ய குணத்தை உலகெங்கும் பிரபலமாக்கி அதன் கீழ் அன்பர்கள் ஒதுங்கும்படி ஜ்வலிப்பவன் என்பது இன்னொரு அர்த்தம்.
அப்படிப்பட்ட உன்னைப் புகழ்ந்து பாடிக் கொண்டு பெரியாழ்வாரைப்போல வந்தோம். உனக்கு நல்லாரைப் போல போற்றியாம் வந்தோம் புகழ்ந்து. அல்லாரைப் போலவும் வந்தோம். ஆற்றாது வந்து மாற்றார் வலிதொலைந்து உனக்கு அடிபணியுமா போலவும் வந்தோம்.
பகைவர் போல வந்தோம் என்று ஏன் சொன்னாள் ஆண்டாள்?
கணவனைப் பார்க்க அலுவலகத்துக்கு ஒரு மனைவி வருகிறாள். அங்கு அவன் அறைக்குள் நுழைய அனுமதி இல்லை. 'உள்ளே வரக்கூடாது' என்று விளக்கு எரிகிறது. முக்கியமாக யாரிடமோ பேச்சு வார்த்தை நடத்துகிறான் என்று தெரிகிறது. அவனைக் குறை சொல்லும் கூட்டத்திடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று தெரிகிறது. மனைவி அவசரமாக தானும் அவனுடைய நேரடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவனிடம் பேசுகிறாள். உன்னை யார் விட்டது என்று கேட்க, அவள் சொல்கிறாள் உன்னைக் குறை சொல்லும் யூனியன் கூட்டத்தார் மத்தியிலாவது எனக்கு இடமில்லையா? என்று கேட்கிறாள். அதே தான் மேலே சொல்லப்பட்டது.
நீ அன்பரைப் பார்க்கமாட்டாயானால் அல்லாராக வருகிறோம். உன்னைக் குறை சொல்லிக் கொண்டு அல்ல. உன் வலிமைக்குத் தோற்று உன்னை விட்டு எங்களால் தரிக்கமுடியாததால் உன் பார்வையில் படவென்று எதிரிகள் போல வந்தோம் என்பது பொருள்பட, மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாதுவந்து அடிபணியுமாபோலப் போற்றியாம் வந்தோம் புகழ்ந்து. என்றாள் ஆண்டாள்.
பகவான் ஆண்டை நாம் அடிமை என்ற சம்பந்தத்தால் அன்பு பூணுவது ஸ்வரூப க்ருத தாஸ்யம். அவன் குணவான் அதனால் அடிமை நான் என்று அடிபணிவது குணைர் தாஸ்யம். ஒரு கம்பெனியில் வேலை செய்யும்போது boss என்று அவ்வப்போது சலாம் அடிப்பது முன்னது கம்பெனியை விட்டு தனித் தொழில் ஆரம்பித்த பின்னும் அதே பழைய boss க்கு எப்போதும் வணக்கத்துடன் இருப்பது பின்னது. லட்சுமணன் சொன்னான் இவன் என் அண்ணனாக இல்லாதிருந்தாலும் இவனுக்கு நான் இப்படியே அடிமை செய்திருப்பேன் என்று.
சீதை அனசூயையிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். 'என் கணவனை நான் காட்டுக்குப் பின் தொடர்ந்து வந்தது அவர் குணத்துக்கல்ல. அவர் அழகுக்கல்ல. எல்லாரும் மெச்சும் அவர் மேன்மைக்கல்ல. அவர் என் கணவர். நான் அவரன்றி வேறு யாரைப் பின் தொடர்வேன்?' என்றாள்.
இந்த சம்பந்தத்தை நினைத்துத் தான் ஆண்டாள் இந்தப் பாசுரம் வைத்தாள். கடியன் கொடியன் ஆகிலும் அவன் தான் அவன். அவன் பெரியான். அவனைத்தவிர யாருமில்லை என்று அவனுக்கு அடி பணிய வந்தாள். அடுத்து அவன் கைவிட்டு விட்டால் இன்னொரு இடம் தேடி போக முடியாதபடிக்கு தம் நிலை இருப்பதை உருக்கமாகச் சொல்லப் போகிறாள் ஆண்டாள்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நன்றி - திண்ணை ஜனவரி 2005