திங்கள், 6 ஜனவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 84

நான்காவது ஸ்கந்தம் – ஆறாவது அத்தியாயம்


(தேவதைகள் ப்ரஹ்மதேவனிடம் போவதும், ப்ரஹ்மதேவன் தேவதைகளுடன் ருத்ரனிடம் போய் அவனை ஸமாதானப்படுத்துதலும்)


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- அனந்தரம் (பிறகு) ருத்விக்குகளும் ஸபையிலுள்ள மற்ற அந்தணர்களும் ஸமஸ்த தேவதைகளும் ருத்ரனுடைய ஸைன்யங்களால் சூலம், பட்டயம், கத்தி, கதை, உழல், தடி, இரும்புத்தடி ஆகிய ஆயுதங்களைக் கொண்டு ஸமஸ்த அங்கங்களும் கிழிக்கவும் பிளக்கவும் பெற்றுத் தோல்வியடைந்து பயந்து வருந்தி ப்ரஹ்மதேவனிடம் சென்று வணங்கி இந்த வ்ருத்தாந்தம் முழுவதையும் விண்ணப்பம் செய்தார்கள். நாராயணனுடைய நாபிகமலத்தில் (கொப்பூழ் தாமரையில்) பிறந்தவனும் மஹானுபாவனுமானாகிய ப்ரஹ்மதேவனும் அனைவருக்கும் அந்தராத்மாவாகிய நாராயணனும் தக்ஷருடைய யாகம் த்வம்ஸமாகப்போகிறது (அழியப்போகிறது) என்பதை முன்னமே தெரிந்துகொண்டு அந்த தக்ஷருடைய யாகத்திற்குப் போகாமலே இருந்தார்கள். ப்ரபுவாகிய ப்ரஹ்மதேவன் தேவதைகள் அங்கனம் வந்து மொழிந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு இங்கனம் மொழிந்தான்.


ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- க்ஷேமத்தை விரும்புமவர், மிகவும் தேஜஸ்வியாகிய ருத்ரனிடத்தில் அபராதம் செய்வார்களாயின், பிறகு அவனை அவர்கள் எவ்வளவு அருள்புரியச் செய்யினும், அவன் பெரும்பாலும் அவர்களுக்கு மேன்மேலும் க்ஷேமத்தை விளைவிப்பவனாகமாட்டான். யாகத்தில் ஹவிர்ப்பாகம் (மந்த்ரத்துடன் அக்னியில் சேர்க்கப்படும் நெய் சேர்ந்த அன்னம்) பெறுதற்கு உரியவனாகிய ருத்ரனை அவனுக்கு பாகம் கொடுக்கலாகாதென்று அவமதித்தீர்களாகையால், நீங்கள் அவன் விஷயத்தில் பாபம் செய்தீர்கள். ஆயினும் நீங்கள் மனத்தில் கபடமில்லாமல் அவனுடைய பாதாரவிந்தங்களைப் பிடித்துக்கொண்டு அவனை அருள்புரியச் செய்வீர்களாக, “அவன் அபராதம் செய்தவர் விஷயத்தில் அருள்புரியமாட்டான் என்றீர். பாதங்களைப் பிடித்துக்கொண்டு அருள்புரியச் செய்யும்படி சொல்லுகிறீர். அவன் அவ்வளவில் அருள்புரிவானோ?” என்னில் சொல்லுகிறேன் கேளுங்கள். அவன் சீக்ரத்திலேயே அருள்புரியும் தன்மையன். ஆனால் மனத்தில் கபடம் (சூது) இருந்தால் எவ்வளவு அனுசரித்தாலும் அருள்புரியமாட்டான். மனத்தில் கபடமில்லாமல் (சூது இல்லாமல்) அவனுடைய பாதங்களைப் பிடித்துக்கொள்ளில், “காலைப் பிடித்தால் கடக்கலாகாது” என்பதை ஆலோசித்து விரைவில் அருள்புரிவான். நீங்கள் யாகத்தை மீளவும் ஒருவழியாய் நடத்திமுடிக்க வேண்டுமென்று விரும்புவீர்களாயின், எவன் கோபித்தால் திக்பாலர்களோடு (திசைகளைக் காக்கும் தேவதைகளோடு) கூடின உலகங்களெல்லாம் பாழாய்விடுமோ, அப்படிப்பட்டவனும் தக்ஷாதிகளின் துர்ப்பாஷணங்களால் (கெட்ட வார்த்தைகளால்) ஹ்ருதயத்தில் அடிக்கப்பெற்றவனும் இப்பொழுது பார்யையை (மனைவியை) இழந்திருப்பவனுமாகிய அந்த ருத்ரனைச் சீக்ரத்தில் அருள்புரியச் செய்வீர்களாக. “நாங்கள் அவனிடம் போக பயப்படுகின்றோம். நீரே இதற்கு ஓர் உபாயத்தை ஆலோசிப்பீராக” என்னில், சொல்லுகிறேன். ருத்ரனுடைய உண்மையையும் அவனுடைய பல வீர்யங்களின் அளவையும் நான் அறியவல்லனல்லேன். இந்த்ரனும் அதை அறியவல்லனல்லன். நீங்களும் அதை அறியவல்லரல்லீர். முனிவர்களும், இந்திரியங்களால் அறியமுடியாத வஸ்துக்களையும் மனத்தினால் கண்டறியும் திறமையுடைய மற்றுமுள்ள ப்ராணிகளும் அறியவல்லரல்லர் (அவன் ஸாக்ஷாத் பரப்ரஹ்மத்தின் ஆவேசாவதாரம் அவனுடைய மஹிமையை உள்ளபடி எவரும் அறியவல்லவல்லர்) பரமாத்மாவின் ஆவேசாவதாரமாகிய அந்த ருத்ரன் விஷயத்தில் தகுந்த உபாயத்தை எவன் செய்யமுடியும்? ஒருவனும் செய்ய முயலமாட்டான். (நீங்கள் நேரில் போய் அவன் பாதங்களைப் பிடித்துக்கொண்டு அவனை அருள்புரியச் செய்வது தவிர, மற்ற எவன் எந்த உபாயத்தைச் செய்ய முடியும்?).


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த ப்ரஹ்மதேவன் தேவதைகளுக்கு இங்கனம் ஆஜ்ஞாபித்து (கட்டளையிட்டு) அந்த தேவதைகளோடும் ப்ரஜாபதிகளோடும் பித்ரு தேவதைகளோடும் தன் ஸ்தானத்தினின்று (இடத்திலிருந்து) புறப்பட்டு ருத்ரனுக்கு ப்ரியமான (பிடித்த) வாஸஸ்தானமும்  (இருப்பிடமும்) பர்வத ச்ரேஷ்டமுமாகிய (சிறந்த மலையுமான) கைலாஸ பர்வதத்திற்குப் (மலைக்குப்) போனான். ஜன்மத்தினாலும் ஔஷதிகளாலும் (மூலிகைகளாலும்) தவத்தினாலும் யோகத்தினாலும் மந்த்ரங்களாலும் ஸித்திபெற்ற தேவஜாதிகளும், கின்னரர்களும், கந்தர்வர்களும், அப்ஸர மடந்தையர்களும் மற்றும் பலவகையர்களும் அந்தக் கைலாஸ பர்வதத்தில் (மலையில்) எப்பொழுதும் சூழ்ந்திருப்பார்கள். மற்றும், அந்தப் பர்வதத்தின் (மலையின்) சிகரங்கள் பலவகையான ரத்னங்கள் நிறைந்து ரத்னங்களால் ஏற்பட்டவை போன்றிருக்கும். அவற்றில் கைரிகம் முதலிய பலவகை தாதுக்களும், பலவகை மரம், செடி, கொடி, புதர்களும், பலவகை மிருகக்கூட்டங்களும். நிர்மலமான பலவகை அருவிகளும், பலவகை குகைகளும், பலவகைத் தாழ்வரைகளும் அமைந்திருக்கும். ஆகையால் அந்தப் பர்வதம் காதலருடன் கூடி விளையாடுகின்ற ஸித்த ஸ்த்ரீகளுக்கு மிகவும் மனக்களிப்பை விளைவிப்பதாயிருக்கும். மற்றும், அம்மலையில், மயில்கள் கேகாவென்று சப்தித்துக் கொண்டிருக்கும். வண்டுகள் தேன்களைப் பருகி மதித்துப் (மயங்கிப்) பாடிக் கொண்டிருக்கும். குரல் அழகாயிருக்கப்பெற்ற குயில் பறவைகள் கூவென்று நீட்டிக் கூவிக்கொண்டிருக்கும். மற்றுமுள்ள பற்பல பறவைகளும் ஆங்காங்கு அழகாய்க் குலாவிக்கொண்டிருக்கும். அங்குள்ள வ்ருக்ஷங்கள் (மரங்கள்) விரும்பின விருப்பங்களை எல்லாம் கைகூடுவிக்கும் திறமையுடையவை. அவை உயர்ந்த கிளைகளுடன் காற்றினால் அசைந்துகொண்டு வண்டுகள் ஒலிக்கப் பெற்றிருக்கையால் பக்ஷிகளை (பறவைகளை) “வாருங்கள்” என்று கையைத் தூக்கி அசைத்து அழைப்பவை போன்றிருந்தன. 


அன்றியும், அம்மலை நடந்துபோகின்ற யானைகளால் நடப்பதுபோலவும், மலையருவிகளின் கோஷங்களால் (சப்தங்களால்) ஸம்பாஷணம் செய்வது (பேசுவது) போலவும் தோன்றிற்று. அம்மலையில். மந்தாரமென்னும் கல்ப வ்ருக்ஷங்களும் (மரங்களும்), பாரிஜாதமென்னும் கல்ப வ்ருக்ஷங்களும் (மரங்களும்), பவளமல்லி மரங்களும் ஸரள மரங்களும், பச்சிலை மரங்களும், மராமரமென்கிற ஸால வ்ருக்ஷங்களும் (மரங்களும்) பனை மரங்களும், மலையகத்தி மரங்களும், வேங்கை மரங்களும், மருத மரங்களும், மாமரங்களும் கடப்ப மரங்களும், நீர்க்கடம்ப மரங்களும், சிறுநாக மரங்களும், புன்னை மரங்களும், செண்பக மரங்களும், பாதிரி மரங்களும் அசோக மரங்களும், மகிழ மரங்களும், குருந்த மரங்களும், மருதாணி மரங்களும், நிறைந்திருக்கும். மற்றும், அம்மலையில் ஸ்வர்ணமயமான இதழ்களையுடைய தாமரைகளும் சிறந்த ஏலக்கொடிகளும் ஜாதிமல்லிக் கொடிகளும், வெப்பாலை மரங்களும், மல்லிச்செடிகளும், முல்லைச்செடிகளும், அலங்காரமாயிருக்கும். பலாமரங்களும் அத்திமரங்களும், அரச மரங்களும், கலலாலை மரங்களும், ஆலமரங்களும், ஹிங்குமரங்களும், பூர்ஜமரங்களும், பலவகை ஔஷதிகளும் (மூலிகைகளும்) பாக்கு மரங்களும், ராஜபூக வ்ருக்ஷங்களும் (மரங்களும்), நாவல் மரங்களும், பேரீச்சை மரங்களும், ஆம்ராதக வ்ருக்ஷங்களும்,  (மரங்களும்) தேன் மாமரங்களும், முறளஞ்செடிகளும் இலுப்ப மரங்களும் மற்றும் பலவகை வ்ருக்ஷஜாதிகளும் (மர வகைகளும்) ஸாதாரண மூங்கில்களும் கீசக மூங்கில்களும் (காற்றினால் சப்திக்கின்ற மூங்கில்களும்) விளக்கமுற்றிருக்கும். ஆம்பல்களும், நெய்தல்களும், செங்கழுணீர்களும், தாமரைகளும் அங்கு ஸம்ருத்தமாயிருக்கும் (நிறைந்து காணப்படும்) அங்குத் தாமரையோடைகளில் பற்பல பறவைகள் கூட்டம் கூட்டமாய், கேட்பதற்கு இன்பமாகக் கூவிக்கொண்டிருக்கும். மான்களும், குரங்குகளும், பன்றிகளும், ஸிம்ஹங்களும், கரடிகளும், முள்ளம்பன்றிகளும், கவய ம்ருகங்களும், சரப ம்ருகங்களும், புலிகளும், கறுப்புச்சாரலையுடைய கலைமான்களும், கடாக்களும் மற்றும் பலவகை ம்ருகங்களும் அம்மலையில் உலாவிக்கொண்டிருக்கும். மற்றும், கோகர்ணங்கள் என்கிற ஊர்ணா ம்ருகங்களும் ஏகபதங்களான (ஒற்றைக் குளம்புடைய) குதிரை முதலியவைகளும் கஸ்தூரி ம்ருகங்களும் அம்மலையில் அபாரமாயிருக்கும். தாமரையோடைகளின் மணற்குன்றுகளில் வாழை மரங்கள் புதர் புதராயிருக்கும். மற்றும், அம்மலையில், ஸ்னானம் செய்த மாத்ரத்தில் புண்யத்தை விளைவிக்கும்படியான ஜலப்ரவாஹத்தையுடையதும் (நீரோட்டத்தை உடையதும்) நிர்மலமாய் (தூய்மையாய்) இருப்பதுமாகிய கங்காநதி சுற்றிலும் சூழ்ந்து பெருகிக் கொண்டிருக்கும். இங்கனம் இவ்வகைகளால் மிகவும் அழகாயிருக்கின்ற ருத்ரனுடைய வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) அந்தக் கைலாஸ கிரியைப் (மலையைப்) பார்த்து தேவதைகள் வியப்படைந்தார்கள். அந்த தேவதைகள் அம்மலையில் ருத்ரனுடையதான அலகையென்னும் பட்டணத்தைக் கண்டார்கள். அது மிகவும் அழகாயிருக்கும். அங்கு ஸௌகந்திகமென்னும் ஓர் வனத்தையும் கண்டார்கள். அவ்வனத்தில் ஸௌகந்திகமென்னும் தாமரை மலர் இருக்கின்றமையால் அதற்கு ஸௌகந்திக வனமென்னும் பேர் விளைந்தது. அந்த அலகாபுரிக்கு வெளியில், தீர்த்தபாதனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதாரவிந்தங்களில் (திருவடித்தாமரைகளில்) படியும் பராகங்களால் (மகரந்தங்களால், பாத தூளிகளால்) மிகவும் பரிசுத்தமான நந்தையென்றும் அலகநந்தையென்றும் இரண்டு நதிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. 


வாராய் விதுரனே! தேவஸ்த்ரீகள் தமது விமானங்களினின்று இறங்கி மன்மத க்ரீடைகளால் இளைப்புற்றவராகி இந்நதிகளில் இறங்கி தமது காதலர்களை ஜலங்களால் நனைத்துக்கொண்டு ஜலக்ரீடை செய்வார்கள். அந்த தேவஸ்த்ரீகள் ஸ்னானம் செய்யும்பொழுது அவரது தேஹங்களினின்று (சரீரங்களிலிருந்து) நழுவின புதிய குங்குமங்கள் பட்டு பொன்னிறமுடையதான இந்நதிகளின் ஜலத்தைக் (நீரைக்) கண்ட யானைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்னும் விருப்பம் இல்லாதிருப்பினும் அந்த ஜலத்தைத் (தண்ணீரைத்) தாமும் குடித்துத் தமது பெண்யானைகளையும் குடிக்கச் செய்கின்றன. அந்த அலகாபுரியில் வெள்ளியாலும் பொன்னாலும் விலையுயர்ந்த ரத்னங்களாலும் இயற்றின பற்பல விமானங்கள் ஆங்காங்கு நிறைந்திருக்கும். புண்ய ஜனங்களும் அவரது பெண்மணிகளும் அந்நகரியில் உலாவிக் கொண்டிருப்பார்கள். அத்தகையதான அந்நகரம் மின்னல்களும், மேகங்களும் சூழப்பெற்ற, ஆகாயம் போல விளங்கும். இப்படிப்பட்டதான அந்த குபேர பட்டணத்தைக் கடந்து அந்த ஸௌகந்திக வனத்தைக் கண்டார்கள். அவ்வனம் குயிலினங்களின் கண்ட ஸ்வரங்களுடன் (தொண்டையிலிருந்து வரும் இசையுடன்) கலந்து மிகவும் அழகாயிருக்கின்ற வண்டுகளின் பாடல்களை உடையதும் கலஹம்ஸங்களுக்கு (ஆண் அன்னங்களுக்கு) ப்ரீதியை விளைப்பதும் தாமரை மலர்கள் நிறைந்த ஜலாதாரங்களை (நீர் நிலைகளை) உடையதும் காட்டு யானைகளால் தமது தினவு அடங்க சொரியப்பெற்ற ஹரிசந்தன வ்ருக்ஷங்களில் (மரங்களில்) பட்டு பரிமளத்துடன் வீசுகின்ற மந்த மாருதத்தினால்  (மெல்லிய தென்றலால்) புண்ய ஜன ஸ்த்ரீகளின் (பெண்களின்) மனத்தை மன்மத விகாரமுற்று (காம உணர்ச்சி ஏற்பட்டு) மயங்கும்படி செய்வதுமாயிருந்தது. மற்றும், அவ்வனத்தில் வைடூர்யமணிகளால் இயற்றின படிக்கட்டுகளுடையவைகளும் நெய்தல் மலர்கள் வரிசை வரிசையாய் மலரப் பெற்றவைகளும் கிம்புருஷர்கள் நிறைந்திருப்பவைகளுமான நடை வாவிகள் (குளங்கள்) ஆங்காங்குத் திகழ்வுற்றிருக்கும். இங்கனம் அழகியதான அந்த ஸௌகந்திக வனத்தைக் கண்டு அதனருகாமையில் ஆலமரத்தைக் கண்டார்கள். அந்த ஆலமரம் நூறு யோஜனை (ஒரு யோஜனை = 12.8 கி.மீ) தூரம் உயர்ந்திருக்கும்; எழுபத்தைந்து யோஜனை தூரம் வளர்ந்த கிளைகளுடையதும் நாற்புறங்களிலும் என்றும் மாறாத நிழலுடையதுமாயிருக்கும். அம்மரத்தில் ஒரு பறவைக் கூடுகள் ஏதும் புலப்படாது. அம்மரத்தடியில் ஸூர்ய கிரணங்களால் விளையும் தாபம் (வெய்யில்) சிறிதும் உண்டாகாது. அம்மரத்தடியில் ஸூர்ய கிரணங்கள் எப்பொழுதும் நுழைந்ததில்லை. மற்றும், அந்த ஆலமரத்தின் கீழ் மஹாயோக நிஷ்ட்டர்களான புருஷர்கள் கணக்கின்றி நிறைந்திருப்பார்கள். ஆகையால் அம்மரம் முழுவதும் மஹாயோகமயமாயிருக்கும். அஜ்ஞானத்தினின்று (அறிவின்மையிலிருந்து) விடுபட விரும்பும் புருஷர்கள் ருத்ரனை உபாஸித்துக்கொண்டு அம்மரத்தின் கீழ் ஓயாது வசித்துக் கொண்டிருப்பார்கள். தேவதைகள் அத்தகையதான அந்த ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்திருப்பவனும் கோபத்தைத் துறந்த அந்தகன் (யமன், சாவு) போன்றவனுமாகிய சிவபெருமானைக் கண்டார்கள். அவன், மஹாஸித்தர்களும் (ஸித்தி பெற்றவர் அனைவரிலும் மேன்மையுற்றவர்களும்) சாந்தர்களுமாகிய (அமைதியுற்றிருப்பவர்களுமாகிய) ஸனக ஸனந்தனாதிகளாலும், யக்ஷர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும், ப்ரபுவும் தனக்கு நண்பனுமாகிய குபேரனாலும் உபாஸிக்கப்பெற்று வடிவில் சாந்தி (அமைதி) தோற்றும்படி சாந்த மூர்த்தியும் (அமைதியான உருவமும்) அபராதம் செய்த தேவதைகளிடத்திலும் வைரமின்றி (பகையின்றி) தயை (இரக்கம்) செய்பவனுமாயிருந்தான். மற்றும் அவன் ஜ்ஞானயோகம், கர்மயோகம் இவைகளால் உதவி செய்யப்பெற்ற பக்தியோகத்தில் நிலைநின்று அதனால் பகவானை ஆராதித்துக் கொண்டிருப்பவன்; “ஜங்கம ஸ்தாவரங்களான (அசையும் மற்றும் அசையாத) பூதங்களெல்லாம் (உயிர் வாழும் ப்ராணிகளெல்லாம்) பகவானுடைய சரீரமே. ஆகையால் அவற்றிற்கெல்லாம் நான் ப்ரதிகூலனாகாமல் (விரோதியாக இல்லாமல்) அனுகூலனாகவே (நண்பனாகவே) இருக்கவேண்டும்” என்னும் நினைவினால் ஜகத்திற்கெல்லாம் அனுகூலனாயிருப்பவன் (நண்பனாயிருப்பவன்); ஆகையால் வாத்ஸல்யத்தினால் (பரிவினால்) உலகங்களுக்கெல்லாம் நன்மையையே ஆசரித்து (செய்து)க் கொண்டிருப்பவன்; ஸந்த்யாகால (காலையிலோ, மாலையிலோ பகலும் இரவும் சந்திக்கும் நேரத்தில்) மேகம்போல் சிவந்திருக்கின்ற அங்கத்தினால் (உடலால்) தாபஸர்களுக்கு (தவம் செய்பவர்களுக்கு) இஷ்டமான (விருப்பமான) பஸ்மம் (சாம்பல்), தண்டம் (தடி), ஜடை (சடைமுடி), க்ருஷ்ணாஜினம் (மான் தோல்) இவைகளையும் சந்திரகலையையும் அவன் தரித்துக் கொண்டிருந்தான்; தர்ப்பத்தினால் இயற்றின ஆஸனத்தின்மேல் உட்கார்ந்து வினவுகின்ற நாரதருக்கு, ஸத்துக்களான ஸனந்தனாதிகள் கேட்டுக்கொண்டிருக்கையில், ஸனாதனமான ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) பொருளாகிய பரமபுருஷனை உபதேசித்துக் கொண்டிருந்தான். மற்றும், அவன் இடக்காலை வலத்துடையின் மேலும், வலது புஜத்தை இடது முழங்காலின் மேலும் அக்ஷரமாலையை (ஜப மாலையை) வலது மணிக்கட்டிலும் வைத்துக்கொண்டு வலக்கையில் ஜ்ஞான முத்ரையுடன் உட்கார்ந்திருந்தான். 


ஆநந்தரூபமான ப்ரஹ்மத்தை த்யானிக்கையாகிற ஸமாதியில் ஆழ்ந்திருப்பவனும் யோகமார்க்கத்தில் விசேஷமாய்க் (சிறப்பாக) கால் தாழ்ந்திருப்பவனும் (ஈடுபட்டிருப்பவனும்) முனிவர்களுக்குள் முதன்மையாயுள்ள முனிவனுமாகிய அந்த ருத்ரனைக் கண்டு லோகபாலர்களோடு கூடின முனிவர்கள் அஞ்சலி ஹஸ்தராய் (கூப்பிய கைகளுடன்) நமஸ்காரம் செய்தார்கள். அந்த கிரீசன் (கைலாய நாதன்), தேவதைகளாலும் தேவேந்த்ரனாலும் அஸுரர்களாலும் அஸுரேந்த்ரனாலும் வணங்கப்பெற்ற பாதார விந்தங்களையுடைய (திருவடித்தாமரைகளையுடைய) ப்ரஹ்மதேவன் அவ்விடம் வந்திருப்பதைக் கண்டு தான் உட்கார்ந்திருந்த ஆஸனத்தினின்று (இருக்கையிலிருந்து) எழுந்து வாமன அவதாரம் செய்த ஸ்ரீமஹாவிஷ்ணு தன் தந்தையான கச்யபரை நமஸ்கரித்ததுபோல், தலையை வணங்கி அந்த ப்ரஹ்மதேவனுக்கு நமஸ்காரம் செய்தான். (ப்ரஹ்மாவினிடத்தினின்றல்லவோ ருத்ரன் உண்டானான். ஆகையால் அந்த ப்ரஹ்மதேவனுக்கு நமஸ்காரம் செய்தான்). மற்றும், அவ்விடத்தில் அந்த ருத்ரனை உபாஸித்துக் கொண்டிருந்த சித்தர் கூட்டங்களும் மற்றுமுள்ள மஹர்ஷிகளும் அந்த ப்ரஹ்மதேவனை நமஸ்கரித்தார்கள், ப்ரஹ்மதேவனும் நமஸ்காரம் செய்து நிற்கின்ற சந்த்ரசேகரனைப் பார்த்துப் புன்னகையுடன் மொழிந்தான்.


ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- வாராய் ஜகதீசனான ருத்ரனே! ஜகத்தெல்லாம் சேதனா சேதன ரூபமாயிருக்கின்றதல்லவா? இந்த ஜகத்தின் (உலகத்தின்) ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) ப்ரக்ருதி க்ஷேத்ரம் (நிலம், பூமி) போலவும் ஜீவன் பீஜம் (விதை) போலவும் இருக்கின்றார்கள். உலகத்தில் க்ஷேத்ரத்தில் (நிலத்தில்) பீஜத்தை (விதையை) இட்டால் அது முளைத்து எப்படி வளர்ந்து பலிக்குமோ, அப்படியே இந்த ஜீவனாகிற பீஜம் (விதை) ப்ரக்ருதியாகிற க்ஷேத்ரத்தில் (நிலத்தில்) விழுந்து சரீர ஸம்பந்தம் பெற்று ஜகத்தை விளைவிக்கின்றது. அந்த ப்ரக்ருதி ஜீவர்களைக் காட்டிலும் பரமபுருஷன் விலக்ஷணமாயிருப்பான் (வேறானவனாயிருப்பான்). அவனே பரப்ரஹ்மமென்று கூறப்படுவான். 


அவன் ஸமஸ்த (எல்லா) வஸ்துக்களிலும் உள்புகுந்திருப்பவன் ஆகையால் ஜகத்தெல்லாம் தானேயாகித் தன்னைக்காட்டிலும் வேறுபட்ட வஸ்து எதுவுமே இல்லையென்னும்படி இருப்பான். அப்படிப்பட்ட பரமபுருஷன் நீயே. இது எனக்கு நன்றாகத் தெரியும், (ஜகத்தெல்லாம் பரமபுருஷனாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்குச் சரீரமாயிருக்கும் என்பது வெளிச்சமே. அந்த ஜகத்தில் ஒருவனாகிய நீயும் அந்தப் பரமபுருஷனுக்குச் சரீரமே. மற்றும் அந்த ஸர்வேச்வரன் உன்னிடத்தில் விசேஷமாக (முக்யமாக) ஆவேசித்து (உள் புகுந்து) துஷ்டர்களைச் (கெட்டவர்களை) சிக்ஷிப்பதும் (தண்டிப்பதும்) சிஷ்டர்களைப் (சாஸ்த்ரப்படி நடக்கும் நல்லவர்களை) பாதுகாப்பதுமாகிற கார்யங்களை நடத்திக் கொண்டிருக்கிறான். ஆகையால் நீ அந்தப் பரமபுருஷனே என்னும்படி விளங்குகின்றாய்). 


வாராய் பகவானே. நீயே உனது அம்சங்களான ப்ரக்ருதி புருஷர்களின் ஸம்பந்தத்தினால் விளையக்கூடிய இந்த ஜகத்தையெல்லாம் சிலந்திப் பூச்சிபோல் அனாயாஸமாகவே (கஷ்டமில்லாமல், எளிதாதகவே) ஸ்ருஷ்டிக்கின்றாய் (படைக்கிறாய்). ஸ்ருஷ்டித்த ஜகத்தைப் பாதுகாக்கின்றவனும் நீயே. அதைக் கடைசியில் அழிப்பவனும் நீயே. “பரமபுருஷனன்றோ ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைத்தல்) ஸ்திதி (இருப்பு, காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல் ஆகியவற்றை) நடத்துகின்றான். உங்களைப்போல் நானும் ஒரு ஜீவனல்லவா? என்னை இங்கனம் ப்ரமிப்பது யுக்தமன்றே (ஸரியன்றே)” என்னில், நீ சொல்லுவது சரியே. உனக்கு அந்தராத்மாவாயிருந்து எவன் ஜகத்தையெல்லாம் ஸம்ஹரிக்கின்றானோ (அழிக்கிறானோ), அந்த ஸர்வேச்வரனே ஜகத்தைப் படைப்பதையும் பாதுகாப்பதையும் செய்கின்றான். நீ உலகங்களை ஸம்ஹரிப்பது (அழிப்பது) அந்தப் பரமபுருஷனுடைய செயலேயென்றும், உனக்கு அதில் ஸம்பந்தம் நேராக இல்லையென்றும் நான் நன்றாகவே அறிவேன். ஆயினும், அந்தப் பரமபுருஷனுக்குச் சரீரமாகி அவனுக்குச் சேஷப்பட்டு (அடிமைப்பட்டு) உனக்குள்ள அந்நிலைமைகளை உள்ளபடி அறிந்து “அந்தப் பரமபுருஷனே நான்” என்று பாவித்து அவனை மறவாமல் எப்பொழுதும் த்யானித்துக் கொண்டிருக்கிறாயாகையாலும், அவனும் உன்னை விசேஷமாக (சிறப்பாக) அபிமானித்து (பெருமை செய்து) உன்னிடத்தில் “விசேஷமாக ஆவேசித்திருக்கின்றான் (உள் புகுந்திருக்கிறான்). ஆகையாலும், நீயே அந்தப் பரமபுருஷனென்று சொல்லும்படி விளங்குகின்றாய். ஆகையால் உனக்கு அந்தர்யாமியான ஸர்வேச்வரனைக் குறித்தே, “நீ ஸ்ருஷ்டித்தாய் (உலகைப் படைத்தது)” என்றும், “நீ பாதுகாக்கின்றாய்” என்றும்,  நீ ஸம்ஹரிக்கின்றாய் (அழிப்பது) என்றும் சொல்லுகின்றேனன்றி நான் ப்ரமித்துச் சொல்லவில்லை. ஜகத்தின் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்தும் மஹானுபாவனான பரமபுருஷனை மறவாமல் எப்பொழுதும் ப்ரேமத்துடன் (அன்புடன், பரிவுடன்) அவனையே த்யானித்துக் கொண்டிருக்கின்றாய். உன்னுடைய மேன்மையை நாங்கள் என்னென்று சொல்லுவோம். நீ உன்னைப் பணியுமவர்களுக்கு தர்ம அர்த்தங்களைக் தருகின்றாய். நீ, ஜனங்கள் புருஷார்த்தங்களைப் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்) பெறும்படி, சாஸ்த்ரத்தின் மூலமாய் அத்வரத்தை (யாகத்தை) படைத்தனை. புருஷார்த்தங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் ஸாதனமான தர்ம அர்த்தங்களை இன்னின்ன உபாயங்களால் ஸாதிக்கவேண்டுமென்று அவற்றிற்குரிய உபாயங்களை அறிவிப்பதான சாஸ்த்ரத்தை வெளியிட்டவன் நீயே. பகவானைச் சரணம் அடைந்தவன். ஆகையால் பரமபுருஷனாகிய அந்த பகவானுடைய மாயையால் நீ மதிகலங்கப் பெறாதவன்; ஆகையால் ஸமஸ்த (எல்லா) அர்த்தங்களையும் உள்ளபடி அறிந்தவன். அத்தகையனான நீ அந்த பகவானுடைய மாயையால் மதிமயங்கப் பெற்றவர்களும் கர்மானுகுணமாய்ச் செல்லும் மனமுடையவர்களுமாகிய அபராதி (தவறிழைத்த) ஜனங்களிடத்தில் அனுக்ரஹம் செய்வதே யுக்தம் (ஸரி). 


வாராய் ப்ரபுவே! உனக்கு அஸாத்யமானது (செய்து முடிக்க முடியாதது) எதுவுமே இல்லை. வாராய் ருத்ரனே! தக்ஷப்ரஜாபதியின் யாகத்தை, அது முடியாதிருக்கும் பொழுதே, நீ நடுவில் பாழ் (வீண்) செய்தாய். அந்த தக்ஷன் விதிப்படி யாகம் செய்யத் தெரியாதவர். ஆகையால் அவனை நான் குத்ஸிதனென்றே (இழிவானவனென்றே) நினைக்கின்றேன். ஏனெனில், யாகத்தில் ஹவிர்ப்பாகம் பெறுதற்கு உரியனாகிய உனக்கு பாகம் கொடுக்காமலே யாகம் நடத்தினானல்லவா? ஆனதுபற்றியே நீ அந்த யாகத்தை முடிக்கவிடாமல் இடையில் நாசம் செய்தாய். ஆயினும், பெரியோனாகிய நீ அவனிடத்தில் அருள்செய்து அந்த யாகத்தைக் காப்பாறுவாயாக. உன்னிடத்தில் அபராதப்பட்டமையால் பாழான (வேணான) அந்த யாகம் உன்னுடைய அனுக்ரஹத்தினால்தான் (ஆசியினால் தான்) நிறைவேறவேண்டும். இந்த யாகத்தைச் செய்யத் தொடங்கின தக்ஷன் பிழைக்கட்டும். பகன் கண்களைப் பெறுவானாக. ப்ருகுவுக்கு மீசை தாடிகளும், பூஷனுக்குப் பற்களும் முளைக்குமாக. இங்கனம் நீ அருள் புரிவாயாக. ஆயுதங்களாலும், கற்களாலும் அங்கங்களெல்லாம் முறியப்யெற்ற தேவதைகளுக்கும் ருத்விக்குகளுக்கும் சீக்ரத்தில் ஆரோக்யம் உண்டாகும்படி அனுக்ரஹம் செய்வாயாக. வாராய் ருத்ரனே! யாகம் செய்தபின்பு ஹவிஸ்ஸு எவ்வளவு மிகுகின்றதோ, அது உனக்கு பாகமாகட்டும். ருத்ரனே! யாகத்தை அழித்தவனே! இப்பொழுது உனக்கு பாகம் ஏற்பட்டமையால் இனி யாகம் நடக்கும்படி ஸங்கல்பிப்பாயாக. 


ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக