22
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து உன் பள்ளிக் கட்டின் கீழ்
சங்கம் இருப்போர் போல் வந்து தலைப்பெய்தோம்;
கிண் கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
கோபியர்களும் நப்பின்னையும் அவனுடைய பேர் பாடிக் கேட்டிருந்தும் வாய் திறவாத கண்ணன், இவர்கள் இன்னும் என்னவெல்லாம் மனதில் கொண்டார்களோ சொல்லட்டும் எனக் காத்துக் கிடந்தான். கோபியர்கள், கண்ணா உன்னை நாங்கள் காண வந்தது எங்கள் இல்லத்தவருக்கு முற்றிலும் ஏற்புடையது அல்ல. நீ புகழ் தரவில்லை என்றால் எங்களுக்கு வேறிடம் இல்லை. அரக்கன் ராவணனுடைய சம்பந்தங்களை விட்டு வந்த விபீஷணாழ்வான், என்ன ஆனாலும் பரவாயில்லை, தின்பதையோ மற்றுமெதையோ வேணும் போது தேடித் கொள்ளலாம் என்னும் உறுதியுடன் பிறப்பு சம்பந்தங்களையும் கூட நீக்கி விட்டு, வந்து விட்டேன், என்னை ஆட்கொள்வாய் ராமா என்று சரணம் புகுந்ததை போலே.
'அங்கண் மா ஞாலத்து அரசர்கள்' - அழகிய பல நாடுகளின் அரசர்கள், இவர்கள் கண்ணனின் முன்னில் தங்களின் பெருமைகளை மற்றும் ஆணவத்தை அடக்கிக் கொண்டிருப்பவர்கள். 'ஈஸ்வரோ சர்வ பூதானாம்' என்ற கண்ணனின் முன்னால், 'ஈஸ்வரோம்' என்றுப் பிரார்த்தித்துக் கிடப்பவர்கள்.
'அபிமான பங்கமாய் வந்து' - இது நாள் வரை இவர்கள் இயற்கை அமைத்த உலகத்தில் ஒரு பகுதிக்கு நானே தலைவன் என்ற அபிமானத்துடன் இருந்தார்கள். கண்ணனைப் பார்க்க வந்தவுடன், சர்வ லோஹங்களுக்கும் அவன் தான் சுவாமி என்று அறிந்து, தத்தம் நாடுகளின் மேல் இருந்த அபிமானத்தை ஒழிந்திட நின்றார்கள். அவர்கள் தன்னுடையது என்று எண்ணிக் கிடந்த அபிமானங்களுக்கு, பங்கம் ஏற்பட்டது.
'நின் பள்ளிக்கட்டின் கீழ்' - பல மன்னர்கள் கண்ணா உன்னுடைய சிம்ஹாசனத்தின் கீழ், விழுந்து கிடக்கிறார்கள். உன்னுடன் போராடித் தோற்று, தெளிவு கொண்டு, இன்னொரு முறை உன்னோடு எதிர்க்கும் நிலை கூடாதென்பதால். உங்கள் நாடுகளைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள் என்றாலும் உன்னை விட்டு அகலாமல் நிற்கின்றார்கள். இவர்கள் போலவே,
'வந்து தலைப் பெய்தொம்' - உன் மேல் உள்ள அபிமானத்தால், எங்களுடைய பெண்மை அபிமானங்களையும் எங்களுடைய இல்லங்களில் கிடைத்த போகங்களை எல்லாம் விலக்கி வைத்து, உன்னுடைய அம்புக்குத் தோற்றவர்கள் போலே உன் அழகுக்குத் தோற்றுப் போய் வந்துள்ளோம்.
'கிண் கிணி வாய்ச் செய்த தாமாரைப் பூப் போலே' எப்படி சூரியனைக் கண்டால் தாமரை மலர்கிறதோ அது போல, அறியாத கோபியர் சிறுமிகளின் ஆற்றாமையின் சத்தம் கிண் கிணி என்னும் மணி போல ஒலித்து, கண்ணனின் திரு நயனங்களை மலரச் செய்திடும்.
'செங்கண் சிறிச் சிறிதே' - கோபியர்கள் வாத்சல்யத்தினால் சிவந்து போன கண்களால், எப்படி சூரியனுடைய வெம்மை, அரும்பிய தாமரைக்குச் சிகப்பு நிறம் கொடுக்குமோ அது போலே. கண்ணனின் மேல் கொண்ட அபிமானத்தால் அவனுடைய கண்கள் சிறிது சிறிதாக சிவந்து மலர்வதை ஆசையுடன் கண்டு களிக்கிறார்கள்.
'எம்மேல் விழியாவோ' - காய்ந்த பயிர்களின் மேல் விழும் மழையைப் போலே, விரஹத்தாலும் ஆற்றாமையாலும் காய்ந்து கிடக்கும் எங்கள் மேல் கடைக்கண் தாராயோ?
'திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல' - திங்கள் உதிக்கும் போதில் சூரியன் உறங்கச் செல்வான். சூரியன் உதிக்கத் துவங்கியதும், சந்திரன் மறையத் துவங்கும். இரண்டையும் ஒன்று சேர உதிக்கக் காண்பது அரிதன்றோ? அது கண்ணனின் தரிசனத்தின் வழியாக கோபியருக்குக் கிடைக்க இருக்கிறது. அன்பர்க்கு கருணைக் குளிர்ச்சியும், எதிரிகளுக்கு வெம்மையும் கொடுக்கும் 'கதிர் மதியனன்றோ அவன்'.
'அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' - 'அதீவப் ப்ரிய தர்சனம்' என்னும் வகையில் இரண்டு கண்களால் காணும் போதில் முழுப் பார்வை கிடைக்கப் பெறுகிறது. கண்ணனுடைய விசேஷ குணம், ப்ரஹலாதனனுக்கு குளிர்ந்த பார்வையும், ஹிரண்யனை வதைத்த பார்வையும் ஓன்று சேரச் செலுத்தியது.
'சிம்மம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமாப் போலே' என்று பட்டர் அருளிச் செய்தார். இரு மாறுபட்ட குணங்களை ஓன்று சேரப் பிரகடனம் செய்வது ஈஸ்வர குணம்.
'எங்கள் மேல் சாபம்' - உன் தீக்ஷண்யத்தால் மற்றவர்கள் சாபங்கள் விலகிப் போகும். எங்களுக்கோ உன்னுடன் அனுபவிக்கையாலே மட்டும் விலகிப் போகும். துர்வாசருடைய சாபத்தை, மாலனின் மார்பிலுள்ள லக்ஷ்மியின் கடாக்ஷம் தீர்த்தது, கௌதமனின் சாபம் மாலனின் காலின் தூசி தீர்த்தது. தக்ஷணனுடய சாபம் தடாகத்தில் முழுக்குப் போட்டதால் தீர்ந்தது. எங்களுக்கோ கண்ணனின் பூரண அனுபவத்தால் மட்டுமே நாங்கள் கொண்ட பிறவிச் சாபம் தீர வல்லது.
ஆண்டாள் திருவடிகளே சரணம்