செவ்வாய், 7 ஜனவரி, 2020

உயர் பாவை - 23 - சதாரா மாலதி

அங்கண் மாஞாலத்தரசர்....


ஆய்ச்சிகள் மனக்கிடக்கை இன்னும் பரிபூரணமாகத் தெரியவரவில்லை என்று கண்ணன் கண் மூடியே கிடக்கிறான். ஆண்டாள் தன் அநன்யார்ஹ சேஷத்வத்தைப் பிரகடனம் செய்து விண்ணப்பிக்கிறாள். 


காதலிக்கிற பெண் காதலன் கை விட்டால் இன்னொருவனைக் கைபிடித்து விட மாட்டேன். என்றைக்கானாலும் அவனே தான் கணவன் என்று சொல்வது தான் அநன்யார்ஹ சேஷத்வம். 
அந்தப்பிரகடனத்தை எப்படி செய்கிறாள் என்பதே இந்தப் பாசுரம். 


இங்கு நள்ளிரவில் உடுத்திய உடையோடு காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறின பெண் ஏதோ காரணத்தால் காதலனால் நிராகரிக்கப்பட்டால் எப்படி மீண்டும் வீட்டுக்குத் திரும்பிப் போக முடியாதவளாக இருப்பாளோ அந்த நிலையில் தான் இருப்பதை விவரிக்கிறாள்.


நாங்கள் உடலடியான [இரத்த சம்பந்த] உறவுகளை எல்லாம் விட்டு வந்தோம். நீ எங்களை ஏற்றுக் கொண்டால் புகழ் உன்னுடையது. இல்லாவிட்டால் நாங்கள் விட்ட இடத்திற்குத் திரும்பிப் போகப் போவதில்லை. என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறாள். 


எங்கள்பாபபலன்தொலைந்தது, மாயனை, வடமதுரைமைந்தனை, யமுனைத்துறைவனை, தாமோதரனை, போற்றிப்பாடியதால். எங்கள் மீது சாபமின்னும் தொடர்கிறதோ? சாபம் நீங்க உன் பார்வை எங்கள் மேல் பட வேண்டும். நாங்கள் உன் காலடிக்கு வந்து சேர்ந்து விட்டோம். விழுந்தவர்கள் இனி எழுந்திருக்கப் போவதில்லை. 'வந்து தலைப்பெய்தோம்' என்ற ஒரு வார்த்தையால் வந்தது வந்தது தான் இனி போகப் போவதில்லை என்பதைத் தெரிவிக்கிறாள். 


ஈ எறும்பு முதல் பிரம்மா வரை அனைத்துப் படைப்புகளுக்கும் அததற்கான இடத்தையும் உணவையும் வைத்திருக்கும் இந்த உலகத்தில் 'தாம், தமது' என்ற கர்வத்துடன் அநேக அரசர்களாட்சி செலுத்தினார்கள். அவர்கள் உயர உயர கர்வமும் வளர்ந்தது. கர்வம் வளர வளர எதிரிகள் அதிகரித்தார்கள். எதிரிகள் துன்பம் கொடுக்கக் கொடுக்க அரசர்களின் கர்வம் அடிபட்டது. கர்வம் தொலைந்தபின் உயரத்திலிருந்து தாழ விழுந்த அவமானம் தாங்க முடியாமல் தாம் ஒருகால் அடைந்திருந்த பதவியையும் கர்வத்தையும் வெறுத்து இகழ்ந்து உன்னுடைய சன்னிதியில் உன் கட்டில்காலைக் கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக விழுந்து கிடக்கிறார்கள். அவர்களைப் போலவே நாங்களும் எங்கள் ஸ்த்ரீத்துவ அபிமானத்தை விட்டு உன்னை வந்தடைந்து விட்டோம். இனி கலந்தாலும் விலக்கினாலும் போக முடியாதவர்களாகிவிட்டோம். 


அந்நலமுடையொருவனை அணுகினன் நாமே என்றபடி வந்து தலைப் பெய்தோம். இனி எங்களுக்குத் துயரில்லை என்று சொல்கிறாள். நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டு என்று நம்மாழ்வார் சொன்னது போல ஜீவ பரம சம்பந்தம் சரீர இருப்பினால் புலப்படுவதில்லை. அது புலப்பட்டு சரீரத்தோடு கண்ணனைப் பிரேமையினால் கிட்டி விட்டதை நினைத்து மகிழ்கிறாள் வந்து தலைப்பெய்தோம் என்ற வார்த்தையால். இனி அவன் பாடு நாம் செய்வதைச் செய்தாயிற்று, என்றபடி. 


Pursuit, Persuasion என்பதெல்லாம் ஆண்டாளின் நிறப்புக் குணங்கள் ஆதலால் அத்தோடு நிறுத்தவில்லை அவள்.


உன்னைக் கிட்டும் அளவுக்கு எங்கள் தகுதி இல்லாதிருந்தும் உன் கருணையால் உன்னைக் கிட்டப் பெற்றோம். அப்படி வந்தவர்களை நீ பார்க்கவேண்டும். ஒரேயடியாக கோடையோடின பயிர்மீது ஒரு பாட்டம் மழை கொட்டியது போலப் பார்க்கவேண்டாம். நாங்கள் நனைய நனைய மெதுவாக கிண்கிணி வடிவச் சதங்கைத் தாமரையின் இதழ்கள் விரிந்தும் விரியாமலும் சதங்கையிடும் உள்பரலைக் கிலுக்கிக் கொண்டு கீழே நழுவவிடாமல் சிரித்து கலகலக்கும் அல்லவா அது போல அழகான உன்னிரண்டு கண்களால் நாங்கள் பொறுக்கப் பொறுக்கப் பார்க்கவேண்டும்.


அந்தப் பார்வை எப்படி இருக்கும் என்றால் திங்களும் செங்கதிரும் ஒரே சமயத்தில் உதித்தது போல இருக்கும். தாமரை சூரியனுக்கு அலர்ந்து சந்திரனுக்குக் கூம்பும். சூரிய சந்திரர் ஒரே சமயம் வந்துதித்தால் தாமரை என்ன செய்யும்? அப்படி நீ எங்கள் குறைகளுக்காக மூடியும் உன் கருணைக்காகத் திறந்தும் உன்கண்களை அமைத்துக்கொள். 


கிண்கிணி போலத் தாமரை, தாமரை போல அங்கண், அது திங்களும் ஆதித்தியனும் எழுந்தக்கால் ஏற்படுத்தும் எதிர்விளைவு என்று உவமை அடுக்கு சொல்லப் பட்டிருப்பது இதில் சிறப்பு. உவமையிலும் நீட்டம் நெடுக்கு குறுக்காகப் பாய்ந்திருப்பது ரசிக்கத் தக்கது.


யாராலும் சாபம் அழியக்கழியாது என்றிருப்பதை மாற்றி உன் பார்வையால் எங்கள் மீதான சாபம் ஏதும் உண்டேல் அதையும் கழியப் பண்ண வேண்டும் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.


'மறந்தும் புறந்தொழாள்' என்றபடி அவன் கை விட்டால் வேறு அடைக்கலம் நாடாத முழு சரணாகதியைச் சொல்லி இந்தப் பாசுரம் முடிந்தது. 


கர்வம் தொலைந்த அரசர்கள் கிருஷ்ணாவதாரத்தில் உண்டா அவர்கள் கண்ணன் வாசலில் வந்து நின்றார்களா என்று கேட்டால் ஆமாம். ஜராசந்தனால் அடக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட அரசர்கள் ஜராசந்தன் தோற்கடிக்கப் பட்டவுடன் விடுவிக்கப் பட்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் தங்கள் ராஜ்யத்துக்குத் திரும்ப மறுத்து கண்ணனின் தலைமையை முழுதுமாக ஏற்றுக் கொண்டார்கள். அதையே இந்தப் பாசுரத்தில் குறிப்பாக்கினாள் ஆண்டாள். 


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக