“விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது பழுது ஏற்பட்டுவிட்டால், பயணிகள் அனைவரும் காற்றுப்பைகளை மாட்டிக்கொண்டு விமானத்திலிருந்து குதிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த சமயத்தில் யாராவது, தாம் எடுத்து வந்த உடைமைகளை உடலில் கட்டிக்கொண்டா குதிப்பார்கள்? எல்லாவற்றையும் விமானத்திலேயே விட்டுவிட்டு தன்னைத் தவிர எவ்வித பாரமும் இன்றி வெளியேறினால்தானே உயிர் தப்ப முடியும். அதே போல் மோட்சத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் உடமைகளை மட்டுமல்லாமல், மனதிலும்கூட எவ்வித பாரமும், அதாவது தீய எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே பகவானை அடைய முடியும்” என்றார், 'பழைய ஆச்சார்யர்களும் புதிய உபதேசங்களும்' என்ற தமது சொற்பொழிவில் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமி.
“முதலில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அறிவித்து விட்டு, அடுத்ததாக கைகேயியின் வரம் காரணமாக ஸ்ரீராமன் காட்டுக்குச் செல்லவும், பரதன் நாட்டை ஆளவும் உத்தரவாயிற்று. ராமர் பட்டாபிஷேகச் செய்தியைக் கேட்ட போதும் அதிகமாக சந்தோஷம் கொள்ளவில்லை. மாறாக, வனவாசம் செல்லும்படி உத்தரவானபோதும் கவலை கொள்ளவில்லை. அதே சமயம் லட்சுமணனால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. கோபத்தில் வெகுண்டெழுந்து வார்த்தை அம்பு அடைகளை சரமாரியாகத் தொடுத்தான். ஆனால், தர்மத்தின் வடிவமாகிய ஸ்ரீராமர் மிகவும் பொறுமையாக, 'அறத்தின்படி நாம் நடக்க வேண்டும். தந்தையின் வாக்கை மீறக் கூடாது. எல்லாம் இறைவன் செய்யும் ஏற்பாடு' என்று லட்சுமணனிடம் சொல்லிச் சமாதானப்படுத்தினார். லட்சுமணனின் கோபமும் மெல்லத் தணிந்தது.
ஸ்ரீராமர் காட்டுக்குச் சென்றதன் காரணமாக பல முனிவர்களையும், ரிஷிகளையும் சந்தித்து அவர்களிடம் பல அறிவுரைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். ஆக, வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாவற்றுக்குமே இறைவன் வகுத்த ஏதோவொரு அர்த்தம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழ்க்கைக்குள் சென்று விடாமல் வெளியே நின்று பார்வையாளராக நம்மை நாமே பார்க்கக் கற்றுக்கொண்டால் அதுவே யோகியின் அடையாளம்.
எந்தவொரு நல்ல செயலைச் செய்ய ஆரம்பிக்கும் போதும், முதலில் அங்கு சம்பந்தப்பட்ட மோசமான மனிதர்களை நமஸ்கரிக்கும்படி நமது ஆச்சார்யர்கள் உபதேசித்திருக்கிறார்கள். இப்படிச் சொல்லும்போது, உங்களுக்கு ஆச்சரியமாகவும், நெருடலாகவும் இருக்கலாம். இதைத் தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், 'ஐயோ, அந்த ஆளுக்கு ஒரு கும்பிடு. அந்த ஆள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு' என்பதாக சில பேர்களைப் பற்றிச்சொல்வோம். ஆக, நமஸ்காரம் என்பதை அந்த விதத்தில் பார்க்க வேண்டும். காரணம் என்னவென்றால், மோசமானவர்களுக்கு முதலில் மரியாதை தந்து விட்டால் அவர்கள் நாம் செய்யும் நற்செயல்களுக்கு பாதகமும், இடையூறும் விளைவிக்க மாட்டார்கள். தடையில்லாமல் செயல் நடைபெறும்.
ஆன்மீகச் சுற்றுலா போகும் போது சிலர் அவசரமாக பேருந்திலிருந்து இறங்கி கோயிலுக்குள் நுழைந்து முதலாவதாக இறைவனை தரிசனம் செய்து விடவேண்டும் என்று ஆர்வம் கொள்வார்கள். நான் ஒருமுறை, 'கடைசியாகப் பெருமாளை தரிசனம் பண்ணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். காரணம், முதலில் வரும் பக்தர்களையெல்லாம் பார்த்து ஆனந்தப்படும் பெருமாள், எல்லோருடைய பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அருள் பாலித்து விட்டு, அந்த திருப்தியுடனும், மந்தகாசப் புன்னகையுடனும் காட்சியளிப்பார்.
கடைசியாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த திருப்தியான புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும்' என்று சொன்னேன். இதைக் கேட்டவுடன் ஒரு பக்தர்கூட பேருந்திலிருந்து இறங்காமல், 'பரவாயில்லை , நீங்க போங்க. நான் அப்புறமா பார்க்கறேன்' என்று ஒருவருக்கொருவர் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எல்லோருக்கும் பெருமாளின் மலர்ந்த முகத்தைப் பார்க்க அத்தனை ஆசை!
ஒரு நல்ல தூதுவருக்கான லட்சணங்களை அனுமனைப் பார்த்து, அவரது செயலைக் கொண்டே அறியலாம். சீதா பிராட்டியைக் கண்டு வந்த ஆஞ்சனேயருக்கு, 'சீதையை நான்...' என்று கூறினால், ஸ்ரீராமருக்கு அடுத்ததாக தாம் என்ன சொல்லப்போகிறோமோ என்ற கவலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றியது. அதனால், 'கண்டனன்' என்று ஆரம்பித்தார் ஆஞ்சனேயர். அதனால், ராமருக்கு மனது கொஞ்சம் சாந்தமாகியது. 'கண்டனன் சீதையை' என்று சொல்லி முடித்த அனுமனை, மலர்ந்த முகத்துடன் சந்தோஷமாக வரவேற்றார் ஸ்ரீராமபிரான். 'தாங்கள் கொடுத்த கணையாழிதான் எனக்கு இத்தனை பெரிய செயலை செய்ய பலத்தை அளித்தது' என்று சொல்கிறார். ஆக, ஒரு நல்ல தூதருக்கான அத்தனை அம்சங்களையும் ஆஞ்சனேயரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு மகாராஜா நகர்வலம் சென்றார். தனியாகச் செல்லும் போதெல்லாம் பேச்சுத் துணைக்கு அரசவைக் கவிஞரையும் உடன் அழைத்துச் செல்வார். ஒருமுறை அப்படிச் செல்லும் போது நாடு முடிந்து, காடு வந்து விட்டது. சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள். எங்கு பார்த்தாலும் பட்சிகளின் இசை. அருவியின் இனிய ஓசை! அந்தக் குளிர்ந்த ரம்யமான சூழலில் அரசவைக் கவிஞர் தனது மனதைப் பறிகொடுத்து லயித்து நின்றார். ஆனால், ராஜாவுக்கோ பசிக்க ஆரம்பித்து விட்டது. அந்தி சாயும் நேரமும் வந்து விட்டது. 'வாருங்கள் போகலாம். அருகில் எங்காவது பசியாற உணவு கிடைக்கிறதா என்று பார்க்கலாம்' என்று ராஜா அழைத்தபோது, 'மன்னரே, எனக்கு இந்த இடத்தையும் சூழலையும் பார்த்தவுடன் கண் மூடி ராம நாம ஜபம் செய்ய வேண்டும் போலிருக்கிறது. சற்று நேரம் தியானம் செய்யட்டுமா?' என்றார். 'இது என்ன சோதனை' என்று நினைத்த ராஜா, 'சரி, நீங்கள் வேண்டுமானால் தியானம் செய்யுங்கள். நான் அருகில் எங்காவது உணவு கிடைக்கிறதா பார்க்கிறேன்' என்று கூறி தனியாகக் கிளம்பி விட்டார்.
அரச உடைகளும், ஆடம்பரங்களும் இல்லாமல் சாதாரணக் கோலத்தில் அரசர் சற்று தூரம் நடந்து சென்றார். வெகு தூரத்தில் ஒரு குடிசையில் சிறிய விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அங்கு வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரிடம் அரசர் தனது பசியைத் தெரிவிக்க, தான் செய்து வைத்திருந்த உணவில் கொஞ்சம் அரசருக்குக் கொடுத்தாள் மூதாட்டி. வயிறு நிறைந்தவுடன் மகிழ்ச்சியடைந்த மன்னருக்கு, உடன் வந்த கவிஞரின் நினைவு வந்ததால், 'இன்னும் கொஞ்சம் உணவு கிடைக்குமா? எனது நண்பர் அங்கிருக்கிறார்' என்று ராஜா கேட்க, மேலும் கொஞ்சம் உணவு தரப்பட்டது.
அதனைக் கொண்டு வந்து, கவிஞரின் தியானம் முடிந்தவுடன் கொடுத்தார் அரசர். கவிஞரும் சாப்பிட்டு முடித்தார். 'பாருங்கள் கவிஞரே, வெறும் ஜபம் செய்து கொண்டிருந்தால் போதாது. செயலில் இறங்க வேண்டும். நான் இத்தனை தூரம் நடந்து சென்று முயற்சி செய்ததால்தானே நமக்கு உணவு கிடைத்தது' என்று சொன்னார். பதில் சொல்லாது சிரித்த கவிஞர் மெதுவாக, 'மன்னரே, நான் சொல்வதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு மகாராஜாவான தங்களுக்கு நான்தான் நியாயமாகப் பணிவிடை செய்யும் விதமாகச் சென்று உணவு பெற்று வந்திருக்க வேண்டும். ஆனால், நான் சொன்ன ராமநாம ஜபத்தின் காரணமாக ஒரு மகாராஜாவே சென்று பக்தருக்கு உணவு கொண்டு வந்து தரும்படி நேர்ந்து விட்டது பாருங்கள். அதுதான் ராம நாம ஜபத்தின் மகிமை' என்றபோது, ராஜா இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.
(சொற்பொழிவை தொகுத்தவர் ஶ்ரீமதி ரவிச்சந்திரன்)
நன்றி - தீபம் ஜனவரி 2017