23
மாரி மலை முழிஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமாப் போலே பூவைப் பூவண்ணா உன்
கோயிலின்றி (அ)ங்ஞனே போந்தருளி
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
இப்பாடல் 'வசஸாஸாந்த் வயித்வைனம்' என்று துயறுற்று, நம்மைக் காண வந்திருப்பவரிடம் மதுரமான வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்விப்பது என்கிற சித்தாந்தத்தை உள்ளடக்கியது.
பனியும் குளிரும் பாராது, வீடு வீடாகச் சென்று, அனைவரையும் துயில் எழுப்பி, திருவாசல் காத்திருக்கும் முதலிகள், நந்தகோபன், யசோதை நப்பின்னை முதலாய்த் தன்னையும் துயில் எழுப்பி, தானே முன்னர் சென்று இவர்கள் காரியங்களை நடத்தாமல் துயருறச் செய்தேனே என்று கண்ணன் வருந்தி, இவர்களிடம் மதுரமான வார்த்தைகள் பேசுகிறான்.
கோபியர்கள் நெகிழ்ந்து போய் கண்ணனின் திருவடிகளில் கிடந்து 'சரணாகதம்' வேண்டுகிறார்கள்.
கிடாம்பி ஆச்சான் என்னும் ராமனுசருடைய சிஷ்யர் ஸ்ரீ ரெங்கநாதனின் திருவடிகளில் விழுந்து 'அகதிம் சரணாகதம்' - நான் உங்கள் அடிமை; சரணாகதம் அடைகிறேன்', என்றவுடன், அழகிய மணவாளரான அரங்கன் 'நீர் ராமனுசருடையவராக இருந்து நம் முன்னே இப்படிச் சொல்லப் பெறாய்' என்று சாதிக்கிறான்.
'மாரி மலை முழைஞ்சில்' - தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் காலத்தில், பகைவர்களோடு கூடப் போரிடாமல், ராஜாக்கள் வெளியில் செல்லாமல், தங்களுடைய அரண்மனைகளில், நான்கு மாதங்கள் தமக்கு உகந்த காரியங்களில் ஈடு பட்டிருப்பது போலே,
பிரிந்தார் கூடும் காலம், கூடினார் போக ரசம் அனுபவிக்கும் காலம், பெண்களைப் பேசவிடாமல் ஆகாயம் ஒலித்துக் கொண்டிருக்கும் காலம், என்னும், தொடர் மழைக் காலத்தில், வேழங்கள் பிளிறுதலையும் கூடப் பொருட்படுத்திடாது, சிம்மங்கள், தமக்கு எதிரிகள் யாருமில்லை என்று மலைக்குகைகளில் அடைந்து கிடக்குமாம்.
கண்ணனும் அது போல நப்பின்னைப் பிராட்டியின் மலை ஒத்த திருமுலைச் (நீளா துங்க ஸ்தன கிரி) சாரலிலே ஒதுங்கிக் கிடந்தான்.
'மன்னிக் கிடந்து' - எந்தக் கூவலையும் பொருட்படுத்தாது, மலையினிடையே ஒரு வடு போல, மிடுக்கோடு தன் பெண் பேடையோடே, ஈருடல் ஒன்றாய்த் தெரியும் வண்ணம் படுத்துக் கொண்டிருக்கும் சிங்கங்கள்.
கண்ணனும் 'நப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன்' எனும் வகையில் நப்பின்னைப் பிராட்டியோடே இரண்டறக் கலந்து கிடந்தான்.
'உறங்கும்' - பிராட்டியின் ஸ்பர்ச சுகத்தினால் ஏற்படுத்திய மயக்கம் அல்லாமல், தமோ குணம் (சோம்பல்) ஏற்படுத்திய உறக்கம் அல்லவே.
'சீரிய சிங்கம்' - யாரும் முடி சூட்டிடாமலேயே, தன் பிறப்பாலும் ஸ்வரூபத்தாலுமே ம்ருகங்களின் அரசனான சிறப்பான சிங்கம் போலே
'அறிவுற்றுத் தீ விழித்து' - யாரும் எழுப்ப வேண்டாம், எழுப்பிடும் துணிவும் யாருக்கும் இல்லாத போது, காலம் அறிந்துத் தானே விழித்திடும் சிங்கம் போலே, பக்தனனின் குரல் கேட்ட நொடியிலேயே ஷீராப்தி சாகரத்தில் திருச்சயனத்திருந்து கிளம்பித் தூணைப் பிளந்து கிளம்பிய நரசிம்மம். காலத்திற்கேற்பத் தானே உணர்ந்து பூத்திடும் மலர் போலே.
'வேரிமயிர் பொங்க' - பரிமளம் மணக்கும் உடலின் முடிகள் சிலிர்த்து நிமிர்ந்திருக்க, 'சர்வ கந்த:' என்று எப்போதும் கண்ணனின் உடலில்திருத் துழாயின் நறுமணம் சூழ்ந்திருக்குமாம்.
'எப்பாடும் பேர்ந்துதறி' நான்கு பக்கத்திலும் அதிர்ந்து விரிசல் காணும் வண்ணம் வேகத்தோடு விழித்து நிமிர்ந்து. உறங்கிக் கிடக்கும் சமயம், அடங்கிக் கிடக்கும் அங்கங்களைப், உதறிப் பிரித்து
'மூரி நிமிர்ந்து' - எழுந்து நடப்பதற்குத் தயாராகும் வண்ணம் நிமிர்ந்து
'முழங்கிப் புறப்பட்டு' - கர்ஜனையோடு புறப்படும் சிங்கம் போலே, கண்ணனுடைய முழக்கம், எதிரிகள் கவிழ்ந்து மண்ணைக் கவ்வ வைத்து, பெண்களை மலர்ச்சியோடு எதிர் கொள்ளச் செய்யுமாம்.
'போதருமாப் போலே' - சிங்கமாய்க் கிளம்பிப் புறப்படு கண்ணா, என்ற கோபியர் வேணுகை.
'பூவைப் பூ வண்ணா' - இதுவரை உன்னுடைய கம்பீரத்துக்குச், சிங்கத்தை உபமானம் ஆக்கினோம். ஆனால் வண்டுகள் மொய்க்கும் காயம் பூவின் நிறம் கொண்ட கண்ணனே, உனக்கு யாரும் எதுவும் இணையாகுமோ?
சிசு பாலாதிகள் போன்ற எதிரிகளின் முன்னால் கூட புதுமையும் மலர்ச்சியும் மாறாமல் நிற்கும் கண்ணனே என்று விளிக்கிறார்கள்.
'உன் கோயிலின்றி (அ)ங்ஞனே போந்தருளி' - உன் கோயிலுக்கு இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்து, ரிஷபத்தினுடைய நடைச் செருக்கும், யானையுடைய மதிப்பும், புலியுனுடைய நிமிர்த்தியும், சிங்கத்தினுடைய இயற்கையான சாமர்த்தியத்துடனேயும் எழுந்தருளி, எங்கள் கண்களுக்கு உன் நடையழகின் ஸ்வரூபத்தைக் காட்டிடு. படுக்கையில் இருந்து கொண்டே பேசாமல், மண்டபத்திற்கு எழுந்தருள்வாய்.
'ஆயர் பாடி கவர்ந்துண்ணும் காரேறு', 'வாரணம் பைய நின்று ஊர்வது போல்', நடையழகினன்
'கோப்புடைய' - கோர்வையோடு உபய விபூதியில் உண்டான பொருட்களையெல்லாம், கிரமத்தோடு வரிசைப் படுத்தி அடுக்கி வைத்ததுபோல்
'சீரிய சிங்காசனத்திருந்து' - சிறப்புள்ள உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்து, இந்த ஆசனத்தில் அமர்ந்த போது கண்ணன், பெண்களுக்குப் பொய் வாக்குறுதிகள் தர மாட்டான்.
'யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள்' - நாங்கள் வந்திருக்கும் காரணத்தை ஆராய்ந்து அறிந்து கொள்வாய். இதற்குப் பிறகு வேண்டக் கூடிய 'சிற்றஞ் சிறுகாலே' பாசுரத்தின் 'குற்றேவலையும்', 'பறை வேண்டுதலையும்' ஆராய்ந்து அருளுவாய் கண்ணா
ஆண்டாள் திருவடிகளே சரணம்