உயர் பாவை - 24 - சதாரா மாலதி

உயர் பாவை - 24 - சதாரா மாலதி

மாரிமலைமுழைஞ்சில்.... 


பலமுறை பார்த்துப் பழகின கோபிகைகள் இந்த முறை நடந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது கண்ணனுக்கு. குழந்தைப் பெண்களாக இருந்தவர்கள் பெரிய பெண்களைப் போலப் பேசுகிறார்கள். இன்னமும் குழந்தைத்தனம் மாறாத வார்த்தைகள் வருவது வேறு விஷயம். வெண்பல்தவத்தவர், கிரிசைகள், போதருமா போல, மேலயார் செய்வனகள், இதைப்போல் எவ்வளவோ அசல் வெளிப்பாடுகளை அறியாச்சிறுமிகளுக்கே உரிய முறையில் ஆண்டாள் சொல்லியிருக்கிறாள். இந்த முறை முதலிலிருந்தே பீடிகை பலமாக இருக்கிறது. காதலின் பேரால் எதைக் கேட்கப் போகிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது கண்ணனுக்கு, அப்படியே அவர்களின் பிரேமையின் உருக்கமும் கொல்கிறது. அவன் நிலையும் அதுவே அல்லவா? எனினும் காட்டிக் கொள்ளாமல் 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். 


அத்தோடு அன்பர்களின் ரட்சணம் என்பது தன் தலையாய கடமை என்று நினைப்பவனாகையாலே தானாகப் பார்த்துச் செய்யவேண்டியதை அவர்களாக வந்த பிறகாவது பிற்பாடின்றி செய்யவேண்டும் என்கிற ஆற்றாமையுடன் என்ன தேவை என்று விசாரித்தான்.


அதை இந்தப் பள்ளியறையில் வைத்துச் சொல்லமுடியாது. எல்லாரையும் சாட்சி வைத்து பெரிய சபையில் அத்தாணி மண்டபத்தில் தான் சொல்வோம் என்றார்கள். நீ நடந்து வா அத்தாணி மண்டபத்து ஆசனத்தில் இருந்து நாங்கள் சொல்வதைத் தீர யோசித்து முடிவு செய்வதற்கு, என்றார்கள். 


இங்கே கிடையழகு பார்த்தோம். எங்கள் முன் நடந்து அத்தாணிமண்டபத்துக்குப் போ. உன் நடையழகு பார்க்கிறோம் என்றார்கள். 


மாரி மலை முழிஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து  
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு 
போதருமாப் போலே பூவைப் பூவண்ணா உன் 
கோயிலின்றி (அ)ங்ஞனே  போந்தருளி 
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த காரியம் 
ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்


மாரிக்காலம். மழைபெய்து மலைப்பாதைகள் வழுக்கலுடன் புழக்கத்துக்கு சிரமம் கொடுப்பனவாக இருப்பதால் அரசர்கள் போர்ச்சவால் எதையும் ஏற்காமல் புதிதாக வந்த பகைகளைக் கூட கண்டும் காணாதது போல மழைக்காலம் போகட்டும் என்ற முடிவோடு படைவீடுகளை மூடிவிட்டு அந்தப்புறத்துக்குள் முடங்கும் காலம். சிங்கம் பிறப்பிலேயே ஆளப்பிறந்தது. காட்டுத் தலைவன். ஒரே ஒரு கர்ஜனையில் அவ்வளவு மிருகங்களும் மூச்சின்றி அடங்கும் அளவு ஆளுமை வாய்ந்தது. அதுவும் தன் துணையோடு மழைக்காலத்தில் மலைக்குகைக்குள் பிணைந்து படுத்துத் தூங்கும். பார்க்கும்போது பெண்சிங்கமும் ஆண்சிங்கமும் இருப்பது தெரியாது. ஒரே சிங்கம் என்று நினைக்கும்படி ஒன்றோடொன்று இணைந்து கிடக்கும். பயமென்பது கிடையாது என்பதால் உறக்கத்திலும் பிற மிருகங்களைப் பயமுறுத்தும்படி வீரத்தோடு வீசு வில்லிட்டு எழுப்பினாலும் எழுந்திருக்காமல் படுத்திருக்கும். காலையானதும் அல்லது மாலையானதும் அந்தந்த நேரத்துப் பூக்கள் மலர்வது போல மாரிக்காலம் முடிந்து மழையொழுக்கு நின்றவுடனே அந்தச்சிங்கத்துக்கு விழிப்பு கண்டுவிடும். எழுந்தவுடனேயே அது அருகாமைச் சத்தங்களைக் கிரகித்து நெருக்கத்தில் யானையோ வேறு மிருகமோ நடமாடுவது புரிந்தால் தீ உமிழும் பார்வையை வீசியபடி மேலெழும். முதல் விழிக்கு அதன் பேடை கூடப் பக்கத்தில் நிற்காது பயந்து முடங்கும். உடம்பை சோம்பல் தீர ஒரு உலுக்கு உலுக்கி வாசனையுள்ள பிடரியின் உளைமயிர்களை உதறி முதுகை வாகாக ஒரு நிமிடம் ஒடுக்கிப்பின் எல்லாத்திசைகளிலும் அவயவங்களை நீட்டி இயக்கத்துக்கு ஏதுவாக்கி ஒரு கர்ஜனை வைக்கும். அந்த கர்ஜனையைக் கேட்ட மாத்திரத்தில் வனத்தில் வெவ்வேறு இடங்களில் அலைந்துகொண்டிருக்கும் எல்லா மிருகங்களும் கல்லாங்காயாக இருந்த இடத்திலேயே பயத்தால் அடங்கிவிடும்.

அரசனுக்கு எவ்வளவு ஆளுகைக்குள் இருந்தாலும் திருப்தி கூடாது. இன்னும் இன்னும் என்று ஆதிக்க வெறி இருந்தாகவேண்டும். அப்படியே சிங்கராஜனும் வேண்டுமோ வேண்டாமோ முடங்காமல் வேட்டையைத் தேடிக்கொண்டேயிருக்கும். அது மழைக்கால மலைக்குகையில் உறங்கி முடித்து எழும்போது அதன் வேட்டை மனோபாவம் இன்னமும் விரிந்து பரந்ததாய் இருக்கும். அதன் முன் எந்த மிருகமும் நிற்க முடியாது. அப்படி 'சீரிய சிங்கம்', மிருகராஜன், மிருகேந்திரன், யசோதையிளஞ்சிங்கம், சிற்றாயர் சிங்கம், அறிவுற்று [அடியோடு அறிவில்லாததற்கு அறிவு புதிதாய் வந்தது போல, பொம்மைக்கு உயிர் வந்தது போல] 'தீவிழித்து' ஆய்ச்சியர் கூக்குரல் கேட்டு 'என் பிரியமான கோபிகைகளை வதைத்தவர் யார்?' என்று அனல் கக்கின பார்வையைப் பார்த்துக்கொண்டு குரல் கொடுத்தபடியே நப்பின்னையின் அறை விட்டு கண்ணன் வெளியே வரவேண்டும் என்றார்கள். 

நானென்ன சிங்கமா? அப்படியா பயங்கரமாயிருக்கிறேன்? என்றான் கண்ணன். அல்ல அல்ல. உன் வலிமைக்கும் ஆளுமைக்கும் உதாரணமாகச் சிங்கத்தைச் சொன்னோம். மற்றபடி நீ காயாம்பூ வண்ணன் உன் வடிவழகும் நிறமும் சிங்கத்துக்கு உண்டா? என்றார்கள்.


நரசிங்கத்தை நினைத்துக் கொண்டு விட்டார்களோ? பல பேரை அழிக்க எப்போதும் ஒரு அவதாரம் எடுக்கும் நான் ஒரே ஒருவனை அழிக்கவென்று கடந்த, நிகழ், எதிர் என்ற முக்காலங்களிலும் நிற்கிற முடிவில்லாத எண்ணற்ற அவதாரங்களை கலந்துகட்டி சிங்க உருவில் எடுத்து ஒரே ஒரு சின்னக்குழந்தையை பிரகலாதனின் நம்பிக்கையை நிருபித்தேன் அதைச் சொல்கிறீர்களா? என்று கேட்டான்.


அதுவல்ல. இது சீரிய சிங்கம். அது கலந்துகட்டி சிங்கம். அந்தப் பல அவதாரத்தில் ஒரே ஒரு தூணில் இருந்த ஒரே ஒரு நரசிங்கம் மட்டுமே வெளிவந்தது. மற்ற எல்லா நரசிங்கங்களும், அன்று எந்தத் துரும்பை இரண்யன் தொட்டுக்காட்டிக் கேட்பானோ 'எங்கே ஹரி' என்று காத்திருந்த, எல்லா நரசிங்கங்களும் அப்படியே உறைந்து இன்னமும் இருக்கின்றன. அது தெரியும் எங்களுக்கு. நீ சீரிய சிங்கமாக வா போதும். தேவராலும் மனிதராலும் மிருகத்தாலும் ஆயுதத்தாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டகத்திலும் புறத்திலும் எங்கும் எப்போதும் மரணமில்லாத வரமுள்ள ஹிரண்ய நிபந்தனைகளை மீறிச் செலுத்துகிற உன் அவதார தந்திரங்கள் இங்கு அவசியமில்லை. நரசிங்கத்துக்கு இங்கு தேவையில்லை. நீ வா சிங்க நடை நடந்து அத்தாணி மண்டபத்துக்கு வந்து சேர். அங்கு எங்கள் காரியத்தை ஆராய்ந்து அலசி ஒரு முடிவெடு என்றார்கள்.

எங்கள் ஆசாபாச அனையை அடக்கும் அற்புதச் சிங்கமாக, கோசலை குகை விடுத்த ரகு சிங்கமாக, பாற்கடல் பாம்பு விடுத்த யதுசிங்கமாக, அஹோபிலம் விடுத்த நரசிங்கமாக யோகநித்ரை விடுத்த பிரும்மமாக வா என்றார்கள். வனமில்லாத இடத்திலே சிங்கமில்லை. பக்தரில்லாத இடத்திலே பகவான் இல்லை. இப்போது நீ வா. 


உன் எதிரிகளும் கண்டு மயங்கும் பூவைப்பூ வண்ண வடிவத்தோடு கிளம்பி வா. உன் பேச்சு படுக்கையறைப் பேச்சாகப் போய்விடக்கூடாது. ஏதோ பெண்கள் வந்தார்கள் பள்ளியறையில் வைத்துப் பேசினார்கள். எதையோ பெற்றார்கள் என்கிறபடி பதிவு வரலாகாது. உன் முடிவு தேர்த்தட்டில் நின்று அர்ச்சுனனுக்குச் சொன்ன வார்த்தைகள் போல நிலை பெற்று நிற்கவேண்டும். கடற்கரையில் நின்று வானரர்கள் முன் விபீஷணனுக்குத் தந்த உத்தரவாதம் போல நிலை பெற வேண்டும். நீதிபதி ஆசனத்திலிருந்து சொல்லப்படும் ஆணை எப்படி அவராலேயே மாற்றப் பட முடியாதோ உன் வாக்கை நீயே மீற முடியாதபடி அமைந்த நியாயாசனத்திலிருந்து உன் முடிவைச் சொல்லு என்றார்கள்.


இந்தப்பாசுரம் முதல் 5 பாசுரங்கள் கைங்கர்யம் என்கிற இறைத் தொண்டு பற்றிச் சொல்பவை. அந்த ஐந்தில் முதல்படியாக கடவுள் அருளை வேண்டும் பாசுரம் இது. அவனருளாலே அவன் தாள் நினைந்து என்பது போல அவன் தன்னை அமைத்துக் கொடுத்தாலேயன்றி யாருக்கும் தொண்டு செய்யக் கழியாது என்பதை வலியுறுத்தி அதற்காவன செய்யும் பாசுரம் இது. 


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை